-அவதானி
யோகன் கண்ணமுத்து எழுதும் களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
என்ற தொடரின் வெலிக்கடை
சிறைக்குள் நடந்த படுகொலைகளும் ,சிறைக்கு வெளியே நடந்த படுகொலைகளும் , மட்டக்களப்பு சிறை உடைப்பும்… (12- 13
பாகங்கள் )பற்றிய விமர்சனம்
வரலாற்றைத் தூக்கிலிடுவதில் தம்மை புத்தி ஜீவி என்றும் சித்தாந்தவாதியெனவும்
கருதிக்கொள்ளும் சிலர் போட்டிபோடுகின்றனர். இதில் முதன்மையானவர் அசோக் என அழைக்கப்படும் யோகன் கண்ணமுத்து. வாழ்க்கையில்
ஒரு துப்பாக்கி ரவையையோ,கைக்குண்டையோ எதிரி மீது பாய்ச்சி அறியாதவர்.கேட்டால்மணிக்கணக்கான
சித்தாந்த விளக்கம் அளிப்பார். எழுதினால் பக்கம் பக்கமாக புலிகள் பாசிசவாதிகள்; தானும்
தன்னைச் சேர்ந்தவர்களுமே தற்கொடையாளர்கள் என்று
கிறுக்கித் தள்ளுவார்.
"பத்துப் பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிக்
காட்டினாளாம்" என்று குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மண் சுமந்த மேனியர் நாடகத்தில்
ஒரு வசனம் வரும். மட்டக்களப்புச் சிறை உடைப்பைப் பொறுத்த வரை மலடி முக்கிக் காட்டினமாதிரி
இவர் வரலாற்றைப் பதிய முனைகிறார்.இந்த நடவடிக்கைக்கு புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப்,தம்பாப்பிள்ளை
மகேஸ்வரன் அணி ஆகிய மூன்று அமைப்புக்களும் உரிமைகோரின.இம் மூன்று அணியினருமே பரமதேவாவின்
பங்களிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டனர்.ஆனால்
யோகன் கண்ணமுத்துவோ இவற்றைத் தணிக்கை செய்துள்ளார்.அல்லது இவருக்கு இது பற்றி எதுவும்
தெரியாது. கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது போல வரலாற்றைத் திரிக்க முற்படுகிறார்.
பொதுவாக
மட்டக்களப்பில் விடுதலைப் போராட்ட இயக்கங்களை
தொடங்கியவர்கள் பற்றிய விடயங்களைத் தணிக்கை செய்கிறார் அல்லது ஆயுதப் போராட்டம் தொடர்பான
வரலாறு இவருக்கு தெரியவில்லை.
குறிப்பாக தமிழீழ கழுகுகள் படையை நிறுவிய ராஜ்மோகனை யோகன் கண்ணமுத்து,ஞானம்,சீவரத்தினம்
ஆகியோர் அங்கம் வகித்த புளொட் இயக்கமே கொலை செய்தது என்பதை இவர்கள் சுட்டிக் காட்டுவதில்லை.
ஆனால் புளொட் முன்னாள் உறுப்பினர் வெற்றிச் செல்வன் ராஜ்மோகனின் மரணம் பற்றிக் குறிப்பிடுகையில்
தமிழகத்தில் புளொட் செய்த முதல் படுகொலை இதுதான் எனச் சுட்டிக்காட்டுகிறார்.
முன்னாள் சிறைச் சாலை உத்தியோகஸ்தர் கிருஷ்ணமூர்த்தி என்பவர்
புளொட்டில் சேர்ந்த பின்னர் மட்டுநகர ஈ.என்.டி.எல்.எப் பொறுப்பாளராக இருந்து இந்தியப்
படையின் காலத்தில் கட்டாய ஆட்சேர்ப்பினை நடைமுறைப் படுத்தியவர்.இந்தியப் படையின் வெளியேற்றத்தின்
பின்னர் புலிகளுடனான மோதலில் இவர் உயிரிழந்தார்.ஆனால் யோகன் கண்ணமுத்துவோ ஏதோ வீட்டில்
தூக்கத்திலிருந்த கிருஷ்ணமூர்த்தியை புலிகள் சுட்டுக் கொன்றுவிட்டதாக காட்ட முனைகிறார்.
நிர்மலாவின் அறையை உடைத்து மீடடெடுக்கும் பொறுப்பு பின்னாளில்
யோகன் கண்ணமுத்து போன்றோரால் தளபதி என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட மாணிக்கம்தாசன்
வசமே ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தான் தப்பினால் போதும் என்று கருதிய மாணிக்கம்தாசன்
அப் பொறுப்பை அலட்சியப் படுத்தி விட்டு வெளியே சென்று விட்டார்.இன்றும் உயிருடன் இருக்கும்
டக்ளஸ் தேவானந்தா, பனாகொட மகேஸ்வரன்,டாக்டர் ஜெயகுலராஜா.நித்தியானந்தன்,நிர்மலா போன்ற
அனைவருக்கும் நன்கு தெரியம்.இந்த தப்புக்கு பரமதேவா,வாமதேவன் ஆகியோரை குற்றம் சொல்வது யோகன் கண்ணமுத்துவின் வடிகட்டிய
அயோக்கியத்தனமே. தான் விடுதலையாக சில நாட்களே இருந்த போதும் தான் ஏற்றப் பொறுப்புக்களைக் கருதி சிறை உடைப்பில் தான் வெளியில்
வந்தார் பரமதேவா. இவர் முன்னரே பிணையில் வெளிவந்து விட்டார் என்பது யோகன் கண்ணமுத்துவின்
மன அழுக்கை வெளிப்படுத்துகிறது.வணபிதா சிங்கராயர் இச் சிறைத் தப்பித்தலின்பின்னர் புலிகளால்
மேற்கொள்ளப்பட்ட நிர்மலா சிறை மீட்பின்போதும் தான் திருச்சபைக்கு கட்டுப்பட்டவர் என்பதால்
வெளியில் வரப்போவதில்லை என எழுத்து மூலம் அறிவித்தார்.இவர் மட்டுமல்ல டாக்டர் தருமலிங்கம்,கோவை மகேசன் போன்றோரையும் பிணையில்
வந்ததாக குறிப்பிடுவது தவறு.
மட்டு.சிறை உடைப்புப் பற்றி தயாளன் என்பவர் "கூட்டமைப்பு
உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது" எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை யாழ், புதுவிதி
மற்றும் ஈழநாடு பத்திரிகைகளில் வெளிவந்த சில பகுதிகளை கீழே தருகிறோம்.
முதல் அடியை எடுத்துவைத்த பனாகொடை!
மட்டு.
சிறையிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் காப்பாற்றி அழைத்துச் செல்லப்பட்டமை.முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களைத் திரும்பவும் தென்னிலங்கைச் சிறைச்சாலைக்கு மாற்றப்போவதாகச் சில கதைகள் நிலவின.
சில வேளை இது வதந்தியாகவும்
இருந்திருக்கலாம்.இதை அடுத்து பனாகொடை
மகேஸ்வரன் தான் சிறையிலிருந்து தப்பப்போவதாகவும்
தனக்கு இதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் பரமதேவாவிடம் வேண்டினார். மட்டக்களப்புச்சேர்ந்த தீவிரவாத இளைஞர்களில் பரமதேவாவின் பெயரே முதலில் இருந்தது. அந்தவகையில் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் சக்திகளின் தொடர்புகள் அவருக்கு நிறைய இருக்கும் என்பது இவரது கணிப்பு. அது சரியானதுதான். இவர்
பனாகொடை முகாமிலிருந்து தப்பிச் சென்றவர் என்ற வகையில் இவரது
தந்தையான தம்பாப்பிள்ளை என்பதற்குப் பதிலாகப் தப்பிய முகாமின் பெயரே இவருக்கு அடைமொழியாயிற்று. பிரபலமான ஒரு விடயத்தைச் செய்தால்
அது அவர்களது பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொள்வது
வழக்கம்தானே.
சித்தாவின் பங்களிப்பு !
பார்வையாளர்
நேரத்தில் தன்னைச் சந்திக்க வந்த சித்தாவிடம் இந்த
விடயத்தைச் சொன்னார் பரமதேவா. இது தொடர்பாக வரதன்
என்பவர் சித்தாவை வந்து சந்திப்பார் என்றும் கூறியிருந்தார். இம் முயற்சி வெற்றிபெற்றால்
நிச்சயம் ஏனைய அரசியல் கைதிகளை
தென்னிலங்கையில்
உள்ள சிறைக்கு மாற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
இதில் பரமதேவாவுக்குப் பிரச்சினை இல்லை. ஏனெனில் அவரது தண்டனைக்காலம் இன்னமும் சில
நாட்களில் முடிவடைய இருந்தது. ஆனால் ஏனையவர்களின் நிலைதான் அவருக்குக் கவலையாக இருந்தது.
சித்தா
ஈழ மாணவர் பொதுமன்றத்துடன் (Guess ) தொடர்புபட்டிருந்தார். தொடர்ந்து அவர்களின் சித்தாந்தங்களால் கடுப்பேறி ஒதுங்கியிருந்தார். இவரைப்போலவே வந்தாறுமூலையைச்
சேர்ந்த பாலா என்றழைக்கப்படும் பாலச்சந்திரனும்
"கோழைத்தனங்களைச் சித்தாந்தப் போர்வை கொண்டு மறைக்கின்றனர்" என்று கூறிச் சில காலம் ஈ.பி. ஆர்.எல்.எவ் விலிருந்து
விலகியிருந்தார்.
பரமதேவாவின் வேண்டுகோளை ஏற்றுச் சித்தாந்தங்களைத் தூக்கியெறிந்து விட்டு செயலில் இறங்குவது சித்தாவுக்குப் பிடித்திருந்தது. சித்தாவை அவரது வீட்டில் வந்து சந்தித்தார் வரதன்.
பனாகொடையைச் சிறையிலிருந்து
விடுவிப்பது எப்படிச் சாத்தியமாகலாம் என இருவரும் கலந்தாலோசித்தனர்.
அடுத்த சந்திப்பு இன்னொரு வீட்டில் இடம்பெற்றது. புல்மோட்டையில் பனாகொடை
கைதாகும் போது தப்பிச் சென்ற
பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயா, மற்றும் மனோ, சிங்கன் , வரதன்
ஆகியோருடன் இச்சந்திப்பு நடந்தது. " சிறையிலிருந்து வெளியே வந்தால் நாங்கள் பத்திரமாகக் கூட்டிச்செல்வோம். அதற்குரிய ஏற்பாடுகளை பனா கொடையையே செய்யச்
சொல்லுங்கள். வெளியிலிருந்து உள்ளே சென்று இவரை அழைத்து வருவது
சாத்தியமில்லை" என அவர்கள் சித்தாவிடம்
தெரிவித்தனர். அவர் அதைப் பரமதேவாவிடம்
போய்ச் சொன்னார்.
விடுதலைக்கு உதவிய சிறைக்காவலர் கிருஷ்ணமூர்த்தி!
பரமதேவாவும்
பனாகொடையும் சிறைக்காவலர் கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புகொண்டனர். அவர் சிறையின் வெளிக்கதவின்
திறப்பை எடுத்து சவர்க்காரத்தில் அழுத்தி அதைச் சித்தாவிடம்
கொண்டுவந்து கொடுத்தார். சித்தா
அதனைக் கொண்டு போய்த் திறப்புச் செய்பவரிடம் கொடுத்து நகல் ஒன்றைச் செய்து
கொண்டு வந்தார். அது கனகச்சிதமாக பொருந்தியது
என்பதை கிருஷ்ணமூர்த்தி
உறுதிப்படுத்தினார். அதை பரமதேவா பனாகொடையிடம்
கொடுத்தார் .
இவர்கள்
ஏதோ திட்டம் போடுகிறார்கள் என்பதை ஊகித்த சக
கைதிகள் அதை
உணர்ந்து விட்டனர். பனா
கொடையுடன் முரண்பட்டனர். இரவும் பகலும் முறை மாற்றி ( டேன்
போட்டு ) அவரின்
நடவடிக்கைகளைக் கண்காணித்தனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பரமதேவா ஒவ்வொரு இயக்கத்தின் முக்கியஸ்தர்களைகளையும் கண்டு ஒரேயடியாக எல்லோரும் தப்பிப் போக ஏற்பாடு செய்வோம்
என்றார்.
சிறை தப்பித்தலுக்கு உரிமைகோரிய மூன்று இயக்கங்கள்!
ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரச்சினை
இல்லை. டக்ளஸ் சொன்னால் அனைவரும் கேட்பர். புளொட்டைக் கையாளுவது சற்றுச் சிரமம். ஒரே உறையில் இரு
வாள்கள் பரந்தன் ராஜனும் , மாணிக்கம் தாசனும். இதற்கு ஒரே வழி பரமதேவாவின் புகழால்
தன்னைப் பிரபல்யப்படுத்திக்கொண்ட வாசுதேவாவிடம் சொல்லி வெளியே வருவோரைச் கூட்டிச்செல்ல ஏற்பாடுகளைச் செய்யச்
சொல்வதுதான்.பரமதேவாவின் அண்ணன்தான் வாசுதேவா. இவர்
ரிவோல்வரைச் சுற்றிக்காட்டி விலாசமடித்துத் திரிந்தாலும் ஒரு வாகனத்தை ஒழுங்கு
பண்ணித் தருவதாக வாக்களித்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் இவர்களுடன்
செல்வதாக ஏற்பாடு இருந்தது. டெலோவினர் மட்டக்களப்பில் தமக்கு எவருமே இல்லை என்று சொன்னபடியால் புளொட் . ஈ.பி.ஆர்.எல். எவ் வுடன்
போகச் சொன்னார் பரமதேவா.
புலிகளிடம் ஆயுதம் கோரிய கொமாண்டர் குன்சி
வெளியே
செல்பவர்களுக்குப் பாதுகாப்பின் நிமித்தம் ஆயுதங்கள் தேவை. புலிகளின் பிரதிநிதி ராமுவிடம்
ஆயுதங்கள் கோரப்பட்டன. பொதுவாகவே புலிகள் ஆயுதவிடயத்தில் மிகக் கண்டிப்பானவர்கள். அவர்களிடம் பலஸ்தீனப் பயிற்சி பெற்ற ஈ.பி. ஆர்.எல்.எவ் வின் கொமாண்டரான குன்சி ஆறு
எஸ்.எல்,ஆர் ..... என்றொரு
ஆயுதங்களின் பட்டியலைக் கொடுத்தார். திருநெல்வேலிச் சமரில் எடுத்ததே ஆறு எஸ்.எல்.ஆர் தான்.
றிப்பிட்டர் ,எஸ் .எம் .ஜி
(உப இயந்திரத் துப்பாக்கி) குண்டுகள் என
மேலும் சில கைப்பற்றப்பட்டு இருந்தாலும் இவர்களை
நம்பி எப்படி ஆயுதங்களைக் கொடுப்பது ? இரகசியத் தன்மையோ அக்கறையோ இல்லாதவர்கள் இவர்கள்.
குறிகாட்டுவானில்
சக வீரர்களைப் படகில் ஏற்றுவதற்காக வந்த கடற்படைச் சாரதி ஸ்ரேறிங்கில்
தலை வைத்துப் படுத்திருக்கும் போது அவரது தலையில்
சுட்டு விட்டு சுரிகுழல்
துப்பாக்கியைக் கைப்பற்றியிருந்தது புளொட். அதனைக் களவு சம்பந்தமான
விசாரணைக்காக வந்த பொலீசாரிடம் பறிகொடுத்தது.
ஒரு சமரிலோ, முற்றுகையிலோ ஆயுதங்களைப் பறிகொடுப்பதென்பது வேறு விடயம். எனவே இந்த விடயம்
பரிசீலனைக்குரியதல்ல என்று பதிலளிக்கப்பட்டது.
வெளியேற மறுத்த வண பிதா சிங்கராயர்
அடுத்தது
புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் சிறையில் இல்லாவிடினும் நித்தியானந்தன் ( பல்கலைக்கழக விரிவுரையாளர்) நிர்மலா நித்தியானந்தன்(ஆசிரியை), அருட் தந்தையர்கள் சிங்கராஜா, சின்னராஜா, போதகர் ஜெயதிலக ராஜா , அவரது அண்ணன் டாக்டர் ஜெயகுலராஜா, ஆகிய
புலிகளின் ஆதரவாளர்கள் இருந்தனர். இவர்களில் வண. பிதா சிங்கராஜா
தான் கத்தோலிக்கத் திருச்சபைக்குக் கட்டுப்பட்டவர் என்றும் சட்டப்படிதான் நிரபராதி என நிரூபித்தே வெளியில்
வரப்போவதாகவும் தெரிவித்து விட்டார். ஏனையோர் தப்பிச் செல்லச் சம்மதம் தெரிவித்தனர்.
இவர்களில்
நிர்மலா எப்போது சுதந்திரப் பறவையாவேன் - பூவரச
மரங்களை, இலைகளை எப்போது காண்பேன்
எனத் துடித்துக்கொண்டிருந்தார்.
புலிகளைச்
சார்ந்தோரைக் கொண்டுசெல்லும் பொறுப்பைப் பரமதேவா ஏற்றுக்கொண்டார். இதில் பிரபாகரனுக்குத் திருப்தி. பரமதேவாவும் பிரபாகரனும் சந்தித்திருக்கா விட்டாலும் அவரது துணிச்சல், நேர்மை
முதலான
விடயங்களை ஏற்கெனவே அறிந்திருந்தவர் என்ற வகையில் பரமதேவா மீது பெருமதிப்புப் கொண்டிருந்தார்.
நிர்மலாவை தோளிலேனும் தூக்கி வருவேன் என்ற மாணிக்கம் தாசன்!
அடுத்து
தப்பும் திட்டம் - மடக்கப்படும் சிறைக் காவலர்களைக் கட்டி வாயில் பிளாஸ்டர் போடும் வேலை புலிகளைச் சார்ந்தோருக்கு
வழங்கப்பட்டது. நிர்மலாவை மீட்கும் பொறுப்பு புளொட்டைச் சேர்ந்த மாணிக்கம் தாசனிடம் கொடுக்கப்பட்டது. இப் பொறுப்பைக் கையளிக்கமுன்னர்
இதில் ஏதும் நடைமுறைச் சிக்கல் இருக்கிறதா என அவரிடம் வினவப்பட்டது
. அதற்கு அவர் " நான் நிர்மலா அக்காவை
தோளிலேனும் தூக்கிக்கொண்டு வருவேன்" என உறுதியளித்தார்.
இவ்வாறாக ஒவ்வொரு பகுதியினருக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. புலிகள் சார்பானோரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வினரும் தமது
கடமையைச் சரியாகச் செய்தனர். நிர்மலாவை மீட்கும் பொறுப்பை ஏற்ற மாணிக்கம் தாசன்
தான் வெளியில் போனால் போதும் என்று ஓடிவிட்டார் . நிர்மலாவை நினைக்கவே இல்லை. அந்த முயற்சியில் இறங்கிப்
பயனளிக்க வில்லை என்றால் மற்றவர்கள் உதவிக்கு வந்திருப்பர். ஏற்பாட்டின்படி புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ வாகனத்தில்
சென்றுவிட்டனர்.
வாகனத்தில் செல்வோரைப் படகு மூலம் கொண்டு செல்வதற்குரிய ஏற்பாடுகளைப் பரமதேவா ஏற்கெனவே செய்திருந்தார். கல்லடி வாசிகளான சாந்தி , சூசைப்பிள்ளை, நாவலடியைச் சேர்ந்த யோகன் , சின்னவன் ஆகியோர் படகுகளுடன் தயாராக இருந்தனர்.
கல்லடிச் சாந்தி மட்டக்களப்பில் ஆரம்ப காலத்தில் நடைபெற்ற பஸ் எரிப்புப் போன்ற அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இவ்வாறான குற்றச்சாட்டில் பின்னாளில் பிரபல எழுத்தாளர் எஸ்.பொவின் மகன் Dr.அனுராவும் கைதாகி இருந்தார். அந்த வகையில் இவர்கள் எல்லோருமே பரமதேவாவுக்கு அறிமுகமானவர்கள். படகு தேவையென்ற பரமதேவாவின் கோரிக்கையைக் கல்லடிச் சாந்தியிடம் தெரிவித்தவர் சித்தா.
எனினும்
புளொட்டைச் சார்ந்த
காந்தியம் டேவிட் ஐயாவைக் கொண்டுசெல்லத் தவறிவிட்டனர்.
சிறைக்கு உள்ளே மட்டுமல்ல வெளியிலும் சொதப்பி விட்டனர் புளொட்டினர். சிறையிலிருந்து தப்பிய இயக்கம் சாராதோர், மீன் பிடிப்போர், கிருஸ்தவ
மத குருமார், இந்தியாவுக்குப் படகு ஓட்டுவோர். முதலானோர்
எனத் தொடர்ச்சியாகப் பலர் உதவியதால் டேவிட்
ஐயா இந்தியா போக
முடிந்தது. அண்மையில் இவர் கிளிநொச்சியில் காலமானார்.
ஆனந்தபுரத்தில் உள்ள
பொது நிறுவனமொன்று இறுதி
நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கே பி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், சித்தார்த்தன், முதலானோர் இதில் கலந்து கொண்டனர் . காந்தியம் மூலம் இவர் ஆற்றிய பணிகளைக்
கௌரவிக்கு முகமாக முன்னாள் போராளிகள் பலரும் நேரில் சென்று
அஞ்சலி செலுத்தினர்.
படுவான்கரைக்குச் சென்றோரைப் பொறுப்பெடுத்த தம்பிராஜா!
ஈ.பி.ஆர்.எல்.
எவ்ச் சேர்ந்த வரதராஜப்பெருமாள், சின்னவன், மற்றும் பனாகொடை,சுப்பிரமணியம்,காளி,வரதன்,ஜெயா,மனோ, சிங்கன் சித்தா,
பரமதேவா,புலிகளின் ஆதரவாளர்கள் ஆகியோர் முன்னர் தாங்கள் செய்த
ஏற்பாட்டின்படி தோணியில் பெரிய களத்துக்குச் சென்று அங்கிருந்து படுவான்கரைக்குப் போய்
விட்டனர். அங்கு அவர்களுக்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் தம்பிராஜா,
மற்றும் தவம் (நசார்) பாலிப்போடி செல்வநாயகம் (செல்வம் - யதுகுலன்) ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
மணல்பிட்டியில் மாணிக்கப்போடி கணபதிப்பிள்ளை அவர்களுக்குச் சொந்தமான கடை ஒன்று இருந்தது. அங்கே புலிகளின் ஆதரவாளர்கள் தங்கவைக்கப்பட்டனர்.பின்னர் தம்பிராஜா இவர்களைப் படகு மூலம்
திருக்கோவிலில் கொண்டு சேர்த்தார்.அங்கு கவீந்திரனும் பிரபலமான வணிகர் ஒருவரும் இவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்
சகோதரரான
இருவரும் ஒரே இடத்தில் நிற்கக்கூடாது.
ஒன்றாகப் பயணம் செய்யக்கூடாது. எதாவது நடந்தால்
இருவருக்கும் ஆபத்து எனக் கருதி டாக்டர்.
ஜெயகுலராஜா திருக்கோயில்
பகுதிக்கு அப்பால் சென்று விட்டார்.
பனாகொடை
முதலானோர் உன்னிச்சைக்குச் சென்றனர். சின்னவன் வரதராஜப்பெருமாளை படுவான்கரையிலிருந்து கூட்டிச் சென்றார். தம்பலகாமத்தைச் சேர்ந்த இவரே பின்னாளில் ஈ. பி. ஆர். எல். எவ் மேற் கொண்ட கிண்ணியா வங்கிக் கொள்ளையின் சூத்திரதாரி. காரைநகர் கடற்படைத்தளம் மீதான தாக்குதலில் இவர் உயிரிழந்தார்.இத் தாக்குதலில் சோபா என்ற தோழியும் உயிர் இழந்தார். ஆயுதப்போராட்ட வரலாற்றில் முதல் உயிரிழந்த தமிழ் பெண் இவராவர்.
தமது
தரப்பினரைக் கொண்டுவரும் பொறுப்பைச் சந்தோசம் ,பசீர் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார் பிரபாகரன். திருமலைக்குச் சென்ற சந்தோசம் அப்போது ஆதரவாளராக இருந்த மனோ மாஸ்டரையும் அழைத்துக்கொண்டு
சென்றார். டாக்டர் ஜெயகுலராஜாவைத் தவிர ஏனையோரைத் திருமலை
வழியாகச் சந்தோசம் அழைத்துச் சென்றார்.
டாக்டரை பசீர் மட்டு.சிறைக்கு அண்மையிலுள்ள டானியலின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார் . அங்கிருந்து மன்னார் வழியாகப் பரப்புக்கடந்தானில் உள்ள தமது இல்லத்துக்குப் போகவேண்டும். மட்டுநகரிலிருந்து பேரூந்தில் பயணமாவதானால் யாருடைய கண்ணிலாவது சிக்க நேரிடும். எனவே சித்தாண்டிக்குச் சென்று அங்கு இரவு தங்கி விட்டு காலையில் அங்கிருந்து புறப்படுவது பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதினார்.
அங்கே
கிழக்கின் முதற் போராளி யோகனின் (பாலிப்போடி சின்னத்துரை) வீடு உள்ளது. அங்கே
இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கவிஞர் காசியானந்தனும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். தலைமன்னாரில் இருந்து கப்பல் மூலம் பயணமாவது அவரது திட்டம்.
இரு
பகுதியினரதும் ஐடியாவும் ஒரே மாதிரி அமைந்ததுதான்
சிக்கல்.காசி அண்ணா பிரபலமானவர்.
அவர் போகும் வண்டியைச் சோதனை செய்ய முயன்றால் இவர்களுக்கும்
சிக்கல் வந்துவிடும். எனவே நிச்சயமாக அவர்
போகும் பேரூந்தில் பயணிக்கக்கூடாது என பசீர்,யோகன்,
டாக்டர் என மூவரும் தீர்மானித்தனர்.
எனவே வவுனியாவுக்கான பேருந்தில் போக முடிவெடுத்தனர்.யோகன்
தனது தாயாரையும் இவர்களையும் அடுத்த நாள் காலை ஒரு
மோட்டார் வண்டியில் ஏற்றிக்கொண்டு வாழைச்சேனை வரை போய் அங்கிருந்து
வவுனியாவுக்கு வழியனுப்பி வைத்தார்.
மறு
நாள் பரப்புக்கடந்தானில்
இருந்து கல்லேற்றும்
லொறி, இ. போ. ச
பஸ், படகு என்பனவற்றில்
பயணித்து கேரதீவு வழியாக யாழ்ப்பாணத்துக்கு டாக்டரைக் கூட்டிச்
சென்றார் பசீர்.
எல்லாம்
முடிந்துவிட்டது. இந்தச் சாதனைகளுக்குச் சொந்தக்காரர் தாமே என புளொட்
அறிவித்தது. இல்லை இல்லை நாங்கள் தான் என்றது ஈ.பி.ஆர்.எல்.எவ். அடுத்துப் பனாகொடை
மகேஸ்வரனின் தமிழீழ இராணுவம் தாங்களே இந்தச் சாதனையாளர்கள் என்றது. மூன்று பகுதியினரும் பரமதேவாவுக்கு நன்றி தெரிவித்தனர். Iஎல்லா அறிக்கைகளும், உரிமை கோரல்களும், பேட்டிகளும் இந்திய , இலங்கைப் பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்குப்
பரபரப்பான தீனியாகின.
தமிழகத்தில் பேட்டியளித்த டக்ளஸ் தான் துண்டுப் பிரசுரம் வழங்குகையிலேயே கைதானதாகத் தெரிவித்தார். எல்லாவற்றையும் வாசித்த பரமதேவா புன்முறுவலுடன் அதைக் கடந்தார். தமிழகத்தில் மட்டு. சிறையின் பாரிய வரைபடத்தை வைத்து தாங்கள் எவ்வாறு அரசியல் கைதிகளை மீட்டோம் என்று கண்காட்சி யொன்றை ஏற்பாடு செய்து விளக்கிக்கொண்டிருந்தனர் ஈ.பி. ஆர்.எல்.எவ் வினர். பரமதேவா அங்கு சென்றார். தன்னைக் கண்டதும் அந்தச் சிறையிலிருந்து மீண்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப் பிரமுகர் ஒருவர் " நாங்கள் நிதி சேகரிப்புக்காகத்தான் இதனைச் செய்கிறோம்.தயவு செய்து இங்கு விளக்கமளிப்பவர்களிடம் கேள்வி எதுவும் கேட்டு விடாதீர்கள் " என்று தனது கையைப் பிடித்துக் கெஞ்சியதாகப் பரமதேவா புலிகள் இயக்கத்தவர் ஒருவரிடம் குறிப்பிட்டார். அவரது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து அங்கிருந்து திரும்பி வந்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்
சித்தா, தம்பிராஜா, தவம் (நாசர்) மாணிக்கப்போடி கணபதிப்பிள்ளை (லூக்காஸ்),
பாலிப்போடி செல்வநாயகம் (செல்வம் - யதுகுலன்) ஆகியோர் தமிழீழ இராணுவத்தில் சேர்ந்து கொண்டனர். இதே இயக்கம் கோடிக்கணக்கான
பணம் ,நகைகளைக் காத்தான்குடி மக்கள் வங்கியைக் கொள்ளையிட்டதன் மூலம் பெற்றுக்கொண்டது.
இதில் வரதனின் பங்களிப்பு மிகப்பாரியது. தம்மைக் காட்டிக் கொடுத்ததாக . இந்த இயக்கம் ஆரையம்பதியைச்
சேர்ந்த கோணா மலை என்பவரைச்
சுட்டுக்கொன்றது. மற்றொருவர் இறந்தவர்போல் நடித்து உயிர் தப்பினார். ஒருசில தாக்குதல்களை இந்த இயக்கம் மேற்கொண்டது.
யாழ்ப்பாணத்தில் சுவிப் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டது. ஒபரோய் தேவனால் ஆரம்பிக்கப்பட்டதமிழீழ விடுதலை இராணுவத்தைத் தான் தடை செய்வதாக
அறிவித்தது.
பின்னர் சித்தா ,தம்பிராஜா முதலானோர் தமிழீழ இராணுவத்தில் இருந்து விலகி புலிகளில் இணைந்து கொண்டனர். இவர்களில் மாணிக்கப்போடி கணபதிப்பிள்ளை (லூக்காஸ்) என்பவர் புளொட் மோகனால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாலிப்போடி செல்வநாயகம் (செல்வம் - யதுகுலன்) ஈ. பி.ஆர் எல் .எவ் இனரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
துன்னாலை
- கரவெட்டியைச்
சேர்ந்த ஜெயா , மனோ, ஆகியோர் புலம்பெயர்
நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்
வரதன்
கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கை
இந்திய ஒப்பந்தத்தின் பின் விடுதலையானார்.
வரதன்
1990 இல் புலிகளுடன் இணைந்து நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு சென்றார்.
ஏற்கெனவே
இவர் சிறையில் இருந்த போது பலதரப்பினரதும் தொடர்புகள்
இவருக்குக் கிடைத்தது. அவற்றைச்
சரியாகவே பயன்படுத்தினார். சிவராமை ஏதோ ஒருவகையில் புலிகளுடன்
தொடர்பு படுத்தியதில் இவருக்கும் பங்குண்டு. கொழும்பில்
அரசை அதிரவைக்கும் தாக்குதலொன்றை மேற்கொண்டார்.
இவரது மறைவின் பின் மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரன்,
காதர் முதலானோர் கைதாக நேர்ந்தது . 1983 ல் பண்டிதரின் தொடர்பு மூலமாகக் காதர் இந்தியாவுக்கு
சென்று புலிகளைச் சந்தித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
பரந்தன்
ராஜன் புளொட் டிலிருந்து விலகி உதிரிகளானோரால் உருவாக்கப்பட்ட ஈ.என்.டி.எல்.எவ் வின்
தலைவரானார் .சிறைக்காவலர் கிருஷ்ணமூர்த்தியும் புளொட்டில் இணைந்து பின்னர் ஈ என்.டி.எல்.எவ் என்று
போனார் .
சித்தா குச்சவெளி, ஏறாவூர் பொலீஸ் நிலையங்கள் உட்பட சில தாக்குதல்களில் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். இந்திய இராணுவ காலத்தில் மட் / அம்பாறை அரசியல்துறை பொறுப்பையும் சிறிது காலம் வகித்தார்.
தனது
மனதில் பரமதேவாவுக்கு உயரிய இடம் வழங்கிய பிரபாகரன்
பரமதேவா
புலிகளில் இணைந்து கொண்டார். அவருடன் கைதாகி ஏற்கெனவே விடுதலையாகியிருந்த பொத்துவிலைச் சேர்ந்த ரஞ்சனும் (சைமன்
)புலிகளுடன் இணைந்து கொண்டார் இவர் 13 /02 /1985 கொக்குளாய்
இராணுவ முகாம் தாக்குதலில் உயிரிழந்தார் இவர்
பொத்துவில் எம் .பி . கனகரத்தினத்தின்
மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பரமதேவாவுக்கு தனிச்
சிறப்பு உண்டு.தனது இயக்கத்தில் சேர்ந்தவர்களில்
இவருக்கு மட்டுமே தனி இயக்கம் நடத்த
அனுமதி வழங்கினார் பிரபாகரன். வேறு எவருக்கும் இந்த
அனுமதி கிடைக்கவில்லை. எனினும் பரமதேவா இதனை ஏற்கவில்லை " எனக்கு நீங்கள்
தான் சரியான தலைவராகத் தெரிகிறீர்கள். உங்கள்
தலைமையின் கீழ் போராடுவது எனக்குப்
பெருமைதான். அத்துடன் எனக்கும் உங்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு உண்டு. அது
எதிர்காலத்தில் என்னுடன் இணைபவர்களுக்கு
இருக்குமோ
தெரியாது. வீணான இரத்தக் களரி ஏன்“? என்று சொல்லி மறுத்து விட்டார்.
22 /09 /1984 இல்
களுவாஞ்சிக்குடித் பொலீஸ் நிலையத் தாக்குதலில்
உயிரிழந்தார். உயிரிழக்கும் தருணத்திலும் " அம்மாவிடம் போய்ச் சொல்லுங்கள் - நான் களத்தில்தான் இறந்தேன்
என்று. அண்ணன்
புளொட்டில் இருப்பதால் நாளைக்கு வேறு மாதிரிக்
கதைகள் வரலாம்“ எனக் கூறினார். போராட்டத்தின்
மேலும் இயக்கத்தின் மீதும் அவருக்கு இருந்த பற்றைக்கண்டு அவரைத் தூக்கச் சென்றவர் வியந்து
நின்றார்.
பயிற்சி
முடிந்து வந்த போராளிகளை அவர்களது
பெற்றோரைச் சந்திக்க வீட்டுக்கு அனுப்பிவைப்பது வழக்கம். பரமதேவாவைப் பொறுத்த வரை ஏற்கனவே பிரபலமானவர்.
இதனைவிட இவரது தாயார் கல்லடி பிரதான முகாமுக்கு அண்மையிலேயே
வசித்து வந்தார். அந்த வீடு அவரது
சகோதரிக்குச் சொந்தமானது. அந்த வீட்டில் தாயாரைச்
சந்திப்பது பல சிக்கல்களை உருவாக்கலாம். எனவே
அமிர்தகழியிலோ அல்லது வேறு இடத்துக்கோ அம்மாவை
வரவழைத்துச் சந்திக்கலாமே என இவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு
அவர் அளித்த பதில் " நான் போராட்ட வாழ்க்கையைத்
தேர்ந்தெடுத்த பின் எனது அம்மா
என்னைக் கைதியாகவே பார்த்துள்ளார் . இது வரை என்னை
ஒரு வீரனாகப் பார்க்க முடியவில்லை. மட்டக்களப்பில் மேற்கொள்ளும் ஒரு தாக்குதலில் நான்
பங்குபற்றி அதில் கைப்பற்றப்பட்ட ஆயுதமொன்றை ஏந்தியவனாகவே
அம்மாவைச் சந்திக்க விரும்புகிறேன்“.
இவ்வாறான கனவுகளுடன் இருந்தவரின் மறைவு தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பாதிப்பாக அமைந்து விட்டது .
கிழக்குக்கான
தலைமை அங்கிருந்தே உருவாக வேண்டும் என்பது பிரபாகரனின் எதிர்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் பொருத்தமானவராகப் பரமதேவா திகழ்ந்தார். அவருக்குச் சமர்க்களத்தில் ஓரிரு அனுபவம் கிடைத்தால் போதும். மிகுதியை அவரே பார்த்துக்கொள்வார். நிர்வாகத்திறன், இலட்சியத்தில்
பற்றுள்ளவர்களின் துணை, ஒழுக்கமான வாழ்க்கை எல்லாம் அவருக்கு இருந்தது .அதனால்தான் பல்வேறு வகையான சிந்தனை, நடைமுறைகளைக் கொண்டவர்களை ஒருங்கிணைத்துச் சிறையிலிருந்து
இவ்வளவு பேரைத்
தப்பவைக்க முடிந்தது என்பதைக்
கணித்திருந்ததால்தான் தனியாக இயங்குமாறு பரமதேவாவுக்குக் கூறியிருந்தார்.
ஒட்டுசுட்டான்
பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலில் பரமதேவா செயல்பட்ட விதம் குறித்து அறிந்ததும் அவரது நம்பிக்கை மேலும் வலுத்தது. கிழக்கில் நடந்த முதல் சமரிலேயே பரமதேவாவை இழந்ததால்தான் போராட்டம் பல சிக்கல்களைச் சந்தித்தது
.
கருணாவுக்காகப்
பிரபாகரன் பல்வேறு விட்டுக்கொடுப்புகளைச் செய்திருந்தாலும்,
அவரது ஆற்றல்களை உணர்ந்திருந்தாலும்
பரமதேவாவின் நிலையில் வைத்து அவரைப் பார்க்க வில்லை என்பதே நிஜம் .
"உண்மை காலில் செருப்பை மாட்டிக்கொள்ள முன்னர் பொய் உலகமெல்லாம் சுற்றி விட்டு வந்துவிடும்“ என்பதற்கு மட்டு. சிறை உடைப்பு நல்ல உதாரணம் .
Post a Comment