எம்மைப் பற்றி

 நமது நோக்கு

"உண்மை செருப்பை மாட்ட முன்னர் பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும்" என்று சொல்வார்கள்.ஊடக உலகிலும் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும் போல உள்ளது (குறிப்பாக 2009 இன் பின்னர்). கண்ணீரும் செந்நீரும் ஊற்றி வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியம் எனும் விருட்சத்தை வதந்தி மற்றும் பொய்யான  பரப்புரைகள் மூலம் அழிக்கப் பல்வேறு சக்திகள் முனைகின்றன.

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஜே.ஆர் அறிமுகப்படுத்திய போது "இந்த ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் என்ன"என்று அவரிடம் வினவப்பட்டது. அதற்கு "ஆணைப்பெண்ணாக மாற்ற முடியாது.பெண்ணை ஆணாக மாற்றமுடியாது. இதைத் தவிர மற்றெல்லா அதிகாரமும் இப் பதவிக்கு உண்டு" எனப் பதிலளித்தார்ஜே.ஆர். ஆனால் பெண்ணாக காட்சியளித்தேனும்  தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்ல ஒருவரும் அவரை வழிமொழிந்து விஷமத்தனமான பதிவுகளை இடவும் பரப்பவும் ஒரு சிறிய கூட்டமே  உள்ளது. இன்றைய இணைய உலகில் இளைய தலைமுறையினர் உண்மையைத் தெரிந்து கொள்ளாமலிருக்க திட்டமிட்டு  நேர்த்தியாக பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.

இந் நிலையில் உண்மையைத் உரத்துப் பேச வேண்டிய தேவை உள்ளது. இதற்காக நாம் இயன்றவரை முயற்சிப்போம்.விதையாக வீழ்ந்தவர்களின் கனவுகளை எம்மால் நிறைவேற்ற முடியுமோ இல்லையோ அவர்களின் வாழ்வையும் பணியையும் கொச்சைப்படுத்த முயலும் சகல சக்திகளின் முன்னே ஊடகம் என்ற வகையில் எம்மால் இயன்றதை செய்வோம்.

தமிழர் போராட நிப்பந்திக்கப் பட்டமைக்கான காரணங்களில் ஒன்று இனரீதியான தரப்படுத்தல் முறை.

இதற்கெதிராக உணர்வுகளுடன் தியாகவேள்வியில் குதித்த பரமதேவா போன்றோரின் பங்களிப்பை கேள்விக்குறியாக்கும் விதத்தில் அப்படியான ஒரு விடயம் நடக்கவே இல்லை என்று வாதிடும் முன்னாள் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்களிடம் இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலத்தைக்  கற்கும் சந்ததியினர் நிலை என்னாவது?

நாட்டில் பால்மா ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்கிறார் பிரதமர். அதே சமயம் நாட்டிலேயே அதிக பால் உற்பத்தி நடைபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைகளை வேறு மாவட்ட இனத்தினருக்கு வழங்குகின்றது அரச அதிகார பீடம். நாட்டின் தேசிய உற்பத்தியை விட அடுத்த தேர்தலில் அப் பகுதி குடியேற்றவாசிகள் மூலமாக பாராளுமன்றத்துக்கு பெரும்பான்மையின உறுப்பினரை தேர்வு செய்வதே அவர்களின் இலக்கு. இப் பாதகச் செயலை வழிமொழிய தயாராக இருக்கும் கூட்டத்தினர் அதற்கும்  ஒரு சமாதானம் சொல்வர். கிழக்கில் சிங்கள முதலமைச்சருக்காக ஏங்கும்  இக் கூட்டம்  பாதிக்கப்பட்டோர் நலன் தொடர்பாக சிந்திக்குமென எதிர்பார்க்க முடியாது.

எனவே களநிலவரம் தொடர்பான உண்மைத் தகவல்களுக்காகவும், போலிகளை அம்பலப்படுத்தவும், கிராமம் கிராமமாகக் சென்று வளர்த்த தமிழ்த் தேசிய உணர்வைத் தக்கவைப்பதற்காகவும் கூட்டாக உழைக்க உறுதியெடுத்துக்கொள்வோம் .