கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாற்றில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் முஸ்லிம்கள்!

இந்த ஆலயத்தின் முக்கிய வரலாறு போர்த்துக்கீசர் ஆக்கிரமிப்பில் தொடங்குகிறது.வெள்ளை இராணுவ அதிகாரி விட்ட சவாலை வெற்றி கொள்ள, இங்குள்ள நந்தி வாய் திறந்து புல் உண்டு  வாலைக் கிளப்பி சாணமும் போட்ட எல்லோருக்கும் தெரிந்த அதிசயக் கதையில் பிரபல்யமடைந்தது.

எனது உம்மாவின் உம்மா தாயும்மாவின் தந்தையின் பெரியப்பா சேஹ் அபூபக்கர்( சேவப்பக்கர் ) இந்த கோயிலை புனரமைப்பு செய்வதற்காக அவரது வந்தாறுமூலை பல்கலைக் கழகத்துக்கு பின்னால் அமைந்திருக்கிற குருவிச்சந் தீவு- வேம்புட வெளி என்ற நெற்காணியில் இருந்து களிமண்ணை அகழ்ந்து கொக்கட்டிச் சோலைக்கு அனுப்பி வைத்தார்.இக்களி மூலம் அங்கு கல்லறுத்ததாக கதை விரிகிறது.

அக்காலத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலம் கட்டப்பட்டிருக்கவில்லை.இது 1924 இல் கட்டப்பட்டது என்று நினைக்கிறேன். 1908 ஆம் ஆண்டு எனது மூதாதையரால் ஆற்று வழியாக தோணியில் களிமண் அனுப்பப்பட்டது என்பதை நான் நான்கு வயது சிறுவனாக இருந்த போது தாயும்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இக்கோயிலில் வைக்கப்படும் ஏழு மடைகளில் முக்குவ மடையும் ஒன்றாகும். ஒரு நூறாண்டுக்கு முன்பு இம்மடையை ஏற்பவர்களாக எனது மூதாதையரே இருந்துள்ளனர். கிழக்கு முஸ்லிம்களும் முற்குகர் வழிவந்தவர்களாதலால்..

நேற்று கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்கு சில சந்திப்புகளைச் செய்தேன். 50 ஆண்டுகளாக இங்கு வழிபாட்டு சேவை செய்யும் அந்தணரின் உதவியாளரைச் சந்தித்து உரையாடினேன்.முன்பெல்லாம் இங்கு முஸ்லிம்களுக்காக பட்டாணி பூசையும் செய்யப்பட்டது,ஏனென்றால் அவர்களுக்கு பெண் கொடுத்தவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாகும். இப்போது இது வழக்கொழிந்திவிட்டது என்றார் அவர்.பட்டாணி பூசையை ஏற்போர் காத்தான்குடி முஸ்லிம்களாயிருந்தனர். ஏனெனில் அங்கு பெண்ணெடுத்தவர்களின் பரம்பரை காத்தான்குடியில் வாழ்வதாக நம்பப்பட்டது.

தாயும்மாவின் புகைப்படத்தை தேடினேன், கிடைக்கவில்லை அவவின் தங்கை சின்ன தாயும்மாவின்( உம்மாவின் சின்னம்மா- சாச்சி) படத்தை இங்கு தருகிறேன்.அக்காலத்தில் இவரைப் போன்றோரின் கையில் தங்கம் அல்லது வெள்ளி அரைக்கூடு அட்சரத் தகட்டை உட்புகுத்தி கறுப்பு நாடாவில் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும்.

தகவல்:Basheer Segu Dawood (faceboo)



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post