கல்குடாத் தொகுதியில் மீராவோடை, ஓட்டமாவடி, வாழைச்சேனை என்ற முஸ்லிம் கிராமங்களும் அதே பெயருடனான தமிழ்க் கிராமங்களும் பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. விடுதலையின் பெயரால் நிகழ்ந்த எத்தனையோ வேண்டத்தகாத சங்கதிகளில் தமிழ் முஸ்லிம் உறவும் பாழ்பட்டுப் போனது. எந்தவொரு தமிழ் இயக்கத்தாலும் குட்டுப்படாத முஸ்லிம்களைக் காண்பதரிதாகப் போனது. இவற்றையெல்லாம் வரலாற்று இரீதியாக சொல்லிக் கொள்வதற்கான இடம் இதுவல்ல என்பதினால் ஒரு குறிப்பை மட்டும் இங்கே தமிழ் முஸ்லிம் மக்களிடம் முன் வைக்கிறேன்.
1950களின்
ஆரம்பம். மீராவோடை தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த அண்ணாவி, முருகன், மார்த்தாண்டன், வேலன் என்போரும் மீராவோடை முஸ்லிம் பகுதியைச் சேர்ந்த எனது தகப்பனார், வாப்பிச்சி,
பக்கீர் முகைதீன் (ஓடக்கரை) இவர்கள் அனைவரும் அதிகாலை வேளையில் தங்களுடைய தொழிலுக்காக கல்குடா கரை வலைக்கு கால்நடையாகப்
போவார்கள். மீராவோடை கறுவாக்கேணி வீதியால் சென்று பெரிய பங்கில் இறங்கி, கைகாட்டி மரத்தைக் கடந்து கல்குடா ஸ்டேஷனால் திரும்பி கடற்கரையை அடைவார்கள். காலை 10 மணியளவில் கரை வலை தட்டியதும்
மீன்கள் நிரம்பிய இரண்டு கூடைகளும் தோளில் நின்று கூத்துப்போட, குருத்து மணலில் அவர்கள் ஓடியோடி நடந்து வரும் காட்சி இன்னும் மனதில் அப்பிக் கிடக்கிறது. இப்பொழுது கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள காணிகளில் மீராவோடை தமிழ் முஸ்லிம் மீனவர்கள் குடியேறியிருந்தார்கள். எங்களுக்கும் ஒரு துண்டுப்பூமி வீதியோரமாக
இருந்தது. சின்னகுடிலும் கொத்து வேலியும். பாடசாலை விட்டு வந்ததும், எங்கள்
தகப்பன்மாருக்கு பகற்சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கறுவாக்கேணியிலிருந்த அந்தக் குடிலுக்குள் காத்திருப்போம்.
பகல்
1 மணியளவில் கரை வலையிலிருந்து தகப்பன்மார்
கரையேறுவார்கள். இந்தக் காலகட்டத்தில் வாழைச்சேனையில் மங்களராம விகாரை கட்டப்படுகிறது. இது இப்படியிருக்க, ஓட்டமாவடியின்
பிரதான சாலையை அண்டியும் புகையிரத வீதியைக் கடந்த ஆற்றங்கரை ஓரமாகவும் தமிழர்கள் குடியேறியிருந்தார்கள். தாழ்த்தப்பட்ட தமிழர்கள் என்பதைக் கவனத்திற் கொள்க. இப்பொழுதெல்லாம் அவர்களை நாங்கள் தலித்கள் என்று அழைக்கிறோம். வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடைப் பகுதிகளில் அந்த நாட்களில் வாளிக்
கக்கூசி புழக்கத்திலிருந்தது. இவற்றைத் துப்புரவு செய்யும் தொழிலாளிகளும் சலவைத் தொழிலாளிகளுமே இந்த இடங்களில் முதன்
முதலில் குடியேறினர்.
இவர்களைத்
தொடர்ந்து இந்தக் கால கட்டத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள்
இந்த நாட்டின் கைத்தொழில் அமைச்சராகப் பதவி வகிக்கிறார். ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களால்
ஆரம்பித்து வைக்கப்பட்ட எத்தனையோ தொழிற்சாலைகளில் வாழைச்சேனை காகிதாலையும் ஒன்று. யாழ்ப்பாணத்திலிருந்து தொழிலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் உத்தியோகம் பெற்று இங்கு வருகிறார்கள். இவர்களில் சிற்றூழியர்கள் பலரும் நான் மேலே சொன்ன
ஓட்டமாவடியின் புகையிரத நிலையத்திற்குச் சொந்தமான ரிசர்வேஷன் காணியில் ஆற்றங்கரை ஓரமாகவும் குடியேறுகிறார்கள். என்னுடைய ஊகம், இந்த மக்களும் யாழ்ப்பாணத்திலிருந்த
தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்குமோ நானறியேன். இதைப் படிக்கும் பாக்கியம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்த மூர்த்தி
அவர்களுக்குக் கிட்டுமானால் இந்த ரிஷி மூலத்தை
அவர் விடுவிக்கலாம். ஏனெனில், அவ்வாறு தொழில் பெற்று வந்தவர்களில் அவருடைய தகப்பனாரும் ஒருவர். அவரும் இந்த இடத்திலேயே குடியமர்ந்தார்.
ஜெயானந்த மூர்த்தியின் மூத்த அண்ணன் தியாக மூர்த்தியும் அவரது அக்கா சுகிர்தராணியும் என் கூட ஓட்டமாவடி
மகா வித்தியாலயத்தில் படித்தவர்கள். ஐம்பதுகளின் மத்தியில், பிறைந்துறைச்சேனையில் மங்களராம விகாரை கட்டப்படுகிறது.
1960களின்
ஆரம்பத்தில் கோறளைப்பற்று டி.ஆர்.ஓவாக
க.சண்முகலிங்கம் அவர்கள் கடமை புரிகிறார்கள். விகாரையைச்
சுற்றி பெரும்பான்மையின மக்களை குடியேற்றும் நடவடிக்கை பிரதம மந்திரி அவர்களின் காரியாலயத்தினூடாக முடுக்கி விடப்பட்ட போது, சண்முகலிங்கம் ஐயா அவர்கள், எங்கள்
பகுதி முஸ்லிம் பிரமுகர்களை அழைத்து, இந்த விடயத்தை முன்
வைக்கிறார்கள். உடனடியாகவே எமது பகுதி மக்களுக்கு
ஒரு வேண்டுகோளையும் முன் வைத்தார்கள். “இப்பொழுது
ஓட்டமாவடியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் அவர்களுடைய குடிப்பரம்பல்களுக்கு போதிய நிலம் இல்லாமல் போகும். இதனால், மீராவோடையிலிருந்து கறுவாக்கேணியில் காணி பிடித்துள்ள முஸ்லிம்கள்
கறுவாக்கேணிக் கிராமத்தை தமிழர்களுக்கு வழங்கி விட்டு, முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிறைந்துறைச்சேனையில் குடியேறுங்கள்” என்று
பணித்தார்கள். அந்த வேண்டுகோளை அனைவரும்
ஏற்று நடைமுறைப்படுத்தினர். பிறைந்துறைச்சேனையில் பெரும்பான்மையின மக்கள் குடியேறுவது சாதுரியமாக தடுக்கப்பட்டது. அந்தக் காரியத்தைச் செய்த திரு சண்முகலிங்கம் ஐயா
என்றும் இப்பகுதி மக்களின் சங்கைக்குரியவராகிறார். பின்னர், படிப்படியாக ஓட்டமாவடியில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் காணிகளை நல்ல விலைக்கு முஸ்லிம்களுக்கு
விற்பனை செய்து விட்டு கறுவாக்கேணியில் குடிபெயர்ந்தனர். இதுவே உண்மை.
ஓட்டமாவடியில்
வாழ்ந்த தமிழ் மக்களை முஸ்லிம்கள் ஒரு போதும் விரட்டியடிக்கவில்லை.
அவர்கள் வாழ்ந்த நிலங்களை அபகரிக்கவுமில்லை. விடுதலைப் போராட்டம் தொடங்கிய 1978 இலிருந்து மெல்ல மெல்ல கசப்புகள் உருவாகத் தொடங்கின. எல்லாத் தமிழ் இயக்கங்களும் முஸ்லிம்களையும் நெருக்கத் தொடங்கினார்கள். 1985இல் கிழக்கில் இடம்பெற்ற
தமிழ்-முஸ்லிம் இனச்சங்காரம் இந்தக் கசப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. எல்லாத் தரப்பினரதும் உடமைகளும் உயிர்களும் அழிக்கப்பட்டன. இதில் முஸ்லிம்கள் நல்லவர்கள், தமிழர்கள் துரோகிகள் என்ற பேச்சுக்கு இடமில்லாமல்
அவரவர் பங்குக்கு ஈவிரக்கமில்லாமல் அப்பாவித் தமிழர்களையும் முஸ்லிம்களையும் கொன்று குவித்தனர். இந்தச் சண்டை பெரும்பான்மையினருக்கு வாய்ப்பாக அமைந்தது. ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும் ஆங்காங்கே தாய் தகப்பன் சொல்லுக்குக்
கட்டுப்படாத தறுதலை இளைஞர்கள் சிலர் அரச ஆயுததாரிகளுடன் இணைந்து
செயல்பட்டனர். இவர்களைப் பொறுத்த வரையில் பெயர் மட்டுந்தான் ஒரேயொரு முஸ்லிம் அடையாளம். மற்றப்படி அவர்களுக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பெயரைக்
கொண்டு மட்டும் ஒருவனை முஸ்லிமாக நாங்கள் ஏற்றுக் கொள்வதுமில்லை. இவ்வாறான இளைஞர்களைத்தான் இன்று வரையிலும் தமிழர் தரப்பு, முஸ்லிம் இயக்கங்கள் என்று பெயர் குறிப்பிடப்படாமல் விமர்சனம் செய்து வருகிறது.
தமிழர்களுக்கு
அநீதி இழைத்ததாக ஆண்டு தோறும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது. தங்கள் தரப்பைச் சேர்ந்த விடுதலை இயக்கங்களும் தனி நபர்களும் முஸ்லிம்களுக்குச்
செய்த அநீதிகளை இவர்கள் சொல்லுவதேயில்லை. நான் மீண்டும் ஓட்டமாவடிக்கு
வருகிறேன். தமிழர்களுக்குரிய அனைத்துக் காணிகளும் விற்ற நிலையில், கோயில் காணி மட்டும் ஓட்டமாவடியில்
மிஞ்சிக் கிடந்தது. பரீதா மர ஆலை உரிமையாளர்
அல்ஹாஜ் புஹாரி அவர்கள் அரை ஏக்கர் நிலத்தையும்
1989.07.20ம் திகதி ரூ.75,000.00க்கு வாங்கினார்கள். இதை
அறிந்த விடுதலைப் புலிகள் அவரை இரவோடிரவாக கடத்தி
கறுவாக்கேணியில் அடைத்து வைத்தார்கள். அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் கறுவாக்கேணியில்
விடுதைல் புலிகளை நான் சந்தித்து, நடந்த
விடயங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்தி அவரை விடுவித்ததுமல்லாமல் கறுவாக்கேணி முத்துமாரியம்மன்
ஆலய பரிபாலன சபையிடமிருந்து இவ்வாறான ஒரு கடிதத்தையும் பெற்றுக்
கொண்டேன்.
1989.07.25ம்
திகதி எமது கோயில் பரிபாலன
சபையின் கூட்டம் தலைவர் எம்.மகாதேவன் தலைமையில்
நடைபெற்றது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஓட்டமாவடி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம் அமைந்திருந்த காணியை சதாசிவம் கனகசூரியம், கதிரவேல் சீனித்தம்பி, நல்லதம்பி சிவலிங்கம் ஆகியோரின் தந்தைமார் கையேற்றதன் பிரகாரம், மேற்கூறப்பட்டவர்களின் பிள்ளைகள் என்ற முறையில் அக்காணியை
விற்று, இப்பணம் முழுவதையும் கறுவாக்கேணி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய நற்பணிக்காக, மேற்படி
ஆலய நிருவாகத்துடன் இணைந்து செலவு செய்வதற்கு எங்களுக்கும் இப்பரிபாலனத்திற்குட்பட்ட மக்களுக்கும் சம்மதம் என்பதை சா. ரவீந்திரன் பிரேரிக்க,
ந.குமரய்யா என்பவர் ஆமோதித்தார். சபை ஏகமனதாக ஏற்றுக்
கொண்டது.
இத்தீர்மானம்,
25.07.1989ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் முதலாவது தீர்மான உண்மைப் பிரதி என்பதை உறுதிப்படுத்துகிறோம். காரியதரிசி – தலைவர் எம். மகாதேவன் இது
தான் ஓட்டமாவடியில் நடந்தது. யுத்தம் ஆரம்பித்ததும் மீராவோடை தமிழ்ப் பகுதியில் துறையடிச் சார்ந்த பிரதேசத்தில் மூன்று இராணுவ முகாம்கள் இருந்தன. குடியிருந்த மக்களோ சொற்பமானவர்கள். கிழக்குப் பக்கம் ஆறு, மேற்குப் பக்கம்
மீராவோடை தமிழ்-முஸ்லிம் எல்லை வீதி. 85ம் ஆண்டு ஏற்பட்ட
இனக்கலவரத்தைத் தொடர்ந்து மீராவோடை முஸ்லிம் கிராமத்தைத் தாண்டி செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை தமிழ் மக்களுக்கு
ஏற்பட்டது. கிண்ணையடியைச் சுற்றி கறுவாக்கேணியை அடைந்து அங்கிருந்தே வாழைச்சேனைக்கு அவர்கள் செல்ல வேண்டும். தங்களுடைய அன்றாடத் தொழில்களை சரிவரச் செய்ய முடியாத சூழலில் பெரும் அல்லல் பட்ட அம்மக்கள், வாழைச்சேனை
தமிழ் கிராமத்திற்கு அண்மித்த பண்டிமடு தோட்டத்தில் குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய நிலமும் காத்தான்குடி முஸ்லிம் தனவந்தர்களுக்குரியது. அங்கு அரச பூமியும் கிடந்தது.
அங்கு குடியேறிய மக்களுக்கு எல்லா வசதிகளும் கிட்டியது. பாடசாலை, குடிமனைகள், ஓரளவு பாதுகாப்பு என்று அவர்கள் சிறப்பாகவே வாழ்ந்தார்கள். யுத்தத்திற்குப் பிறகு மீண்டும் அவர்கள் இப்பொழுது மீராவோடை கிராமத்தில் குடியேறத் தொடங்கியிருக்கிறார்கள்.
மீராவோடை
முஸ்லிம்கள் இவர்களுக்கு அநீதியிழைத்தார்கள் என்ற குற்றச்சாட்டை நான்
முற்று முழுதாக நிராகரிக்கிறேன். இந்தப்பகுதி மக்களுக்கு இப்பொழுது இரண்டு இடங்களிலும் காணி பூமியும், இருப்பதற்கு
வீடு வாசலும் கிடைத்திருக்கிறது. ஒரு வகையில் இவர்கள்
அதிர்ஷ்டசாலிகள். இந்த உண்மைகளையெல்லாம் ஆழப்
புதைத்து விட்டுத்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தம்பி ஜெயானந்த மூர்த்தி, “முஸ்லிம்கள் பறித்த தமிழ் கிராமம்” என்ற பெயரில் மீராவோடை
கிராமத்தையும் சேர்த்துக் கொண்டார். நாம் இன்னும் ஒருவரையொருவர்
குற்றம் சொல்லிக் கொண்டு வாழ்வதில் அர்த்தமேயில்லை. நடந்தவைகளை மறந்து விட்டு நல்லவைகளை வேண்டி நிற்பதுதான் நமது எதிர்கால சந்ததியினருக்கு
நாம் செய்யும் நற்காரியமாகும். ஒரு இனத்தை அழித்து,
இன்னொரு இனம் எப்படியும் வாழ
முடியாது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ்
முஸ்லிம் உறவு என்று வரும்
பொழுது முஸ்லிம் தரப்பிலிருந்தே அந்தக் கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
தமிழர்
தரப்பிலிருந்து பகிரங்கமாக யாரும் பேசுவது கிடையாது. ஒரு காலத்தில் தமிழர்
தலைவர்களில் ஒருவரான திரு. நாகநாதன் அவர்கள் கூறிய வார்த்தை என் நெஞ்சில் இப்பொழுதும்
நிழலாடுகிறது. “நீங்கள் தராசுப் படியோடும் முழக்கோலோடும் வந்தவர்கள். நாங்கள் வாளுடன் வந்தோம். நாங்கள் கேட்பதோ அரியாசனத்தில் பங்கு. நீங்கள் கேட்பதோ அங்காடியில் இடம். நீங்கள் மாளிகைகளில் வாழ்ந்து கொண்டு பள்ளிக்கூடங்களை மாட்டுத் தொழுவங்களாகப் பாவிக்க, நாங்கள் மண் குடிசைகளில் வாழ்ந்து
கொண்டு பள்ளிக்கூடங்களை மாளிகைகளாக மாற்றியுள்ளோம். நாங்கள் அரசாங்கத்தின் நிருவாகத் துறைகள் தோறும் உரிமை கேட்கிறோம். நீங்கள் இஸ்தல ஆட்சியோடு நின்று விடுகிறீர்கள். எங்களுக்கும் உங்களுக்கும் எப்படி சமநிலை ஏற்பட முடியும்?” முஸ்லிம்களை நோக்கிய மிகக் காட்டமான இந்த விமர்சனத்தை சகித்துக்
கொண்டு தமிழ் மக்களோடு பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம். மட்டக்களப்பு மாநிலத்தின் குடிப்பரம்பல் நிலம் 2000 சதுர மைலுக்கும் மேற்பட்டது.
ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி என்ற மூன்று முஸ்லிம்
கிராமங்களும் 25 சதுர மைல் பரப்பளவிலேயே
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த அநீதியைச் சொல்ல
தமிழர் தரப்பில் யாரும் முன் வருவதில்லை. கல்குடாத்
தொகுதியில் முஸ்லிம்களிடமிருந்து பறிபோன கிராமங்களை நான் குறிப்பிட்டே ஆக
வேண்டும். எமது மூதாதையர்கள் கண்டியிலிருந்து
குடியேறியவர்கள் என்று என்னுடைய மூத்தவாப்பா எனக்கு கதைகதையாகச் சொல்லியிருக்கிறார். அதுவும் அக்குறனை பிரதேசத்திலிருந்து வந்தவர்கள்.
அக்குறாணை
கிராமந்தான் கல்குடா முஸ்லிம்களின் தொன்மமிகு கிராமம். அந்தக் கிராமம் முற்றாகக் கைவிடப்பட்டது. அதே போல், கள்ளிச்சை,
வாகனேரியில் ஊரடிமுனைத் திடலில் முஸ்லிம்களே முதன் முதலில் குடியேறினர். குளத்தைச் சுற்றி மீன்பிடித் தொழிலும் விவசாயமும் செய்தவர்களும் முஸ்லிம்கள்தான். அங்கிருந்த முஸ்லிம்கள் யானைகளின் அட்டகாசம் பொறுக்க முடியாமல் ஓட்டமாவடி பாலத்தின் மேற்குக் கரைப்பக்கம் குடியேறினர். அதன் பின்னர் அங்கும்
யானைகளின் அட்டகாசம் பொறுக்க முடியாமல் ஆற்றைக் கடந்து வெள்ளமாவடித் துறைமுகத்தில் குடியமர்ந்தனர். இது தான் இந்தப்
பிரதேச முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றின் ஓர் எச்சம். இது
பற்றிப் பிறிதோர் இடத்தில் பேசலாம். இது போல், வாகரைப்
பிரதேசத்தில் ஒரேயொரு முஸ்லிம் கிராமம் மதுரங்கேணி. அங்கும் முஸ்லிம் பாடசாலையும் பள்ளிவாயலும் 100க்கு மேற்பட்ட முஸ்லிம்
குடும்பங்களும் இருந்தன. அவற்றை இன்று முற்றாக இழந்து நிற்கிறோம். இவற்றையும் தமிழ் மக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்தச் சிறு குறிப்பின் மூலம்
நான் ஓர் அடிப்படைவாதியாக அல்லது
ஓர் இனவாதியாக என்னை அடையாளங் காட்டியிருப்பதாக எனது நண்பர்கள் கருதினால்
அதற்கு என்னிடம் எந்தப்பதிலுமில்லை. மிகச் சமீபத்தில் மட்டக்களப்பில் என்னுடைய தமிழ் நண்பரின் வீட்டில் ஒரு பகற் பொழுதைக்
கழிக்க நேர்ந்தது. அப்பொழுது அவர் சொன்னார்: “இங்குள்ள
சில தமிழ் நண்பர்கள் உங்களை அடிப்படைவாதியென்றும் இனவாதியென்றும் விமர்சிக்கிறார்களே எஸ்ஸெல்லம்! நான் மறுத்தும் எனது
வார்த்தை எடுபடவில்லை”
என்றார். எனது ஊரிலோ, “நான்
தமிழனுக்கு —கொடுப்பவன்,
பெரும்புலி” என்று
கூறிக் கொள்வார்கள். தமிழர்கள் அவ்வாறு கூறுவதும், எனது இனத்தவர்கள் இவ்வாறு
கூறுவதும் தான் என் போன்றவர்களுக்கான
விதி போலும். இந்தச் சிறு குறிப்பைக் கூட
நான் இப்படியாகப் பட்டவர்களுக்குச் சமர்ப்பணம் செய்வதில் சந்தோஷப்படுகிறேன்.
நன்றி:
மருதோன்றி .இதழ் :4
கோ.ப.மே. ஓட்டமாவடி
பிரதேச செயலக வெளியீடு.
நன்றி-அபூ அம்மாரா
Post a Comment