இந்தியாவின் இசைக்குயில் என்று அழைக்கப்பட்ட லதா மங்கேஸ்கர் (செப்டெம்பர் 28, 1929 – பெப்ரவரி 06, 2022) காலமானார். இவரது தந்தையார் பெயர் தீனநாத் மங்கேஷ்கர், அவர் கோவாவை சேர்ந்த மராத்தி மொழி பேசும் நாடக நடிகராக திகழ்ந்தார்; இவரது தாயார் பெயர் செவந்தி; அவர் குஜராத் மொழி பேசும் மஹாராஷ்ரக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை வழிப் பேரனான கணேஷ் பட் நவதே ஹர்டிகர் கோவாவிலுள்ள ஸ்ரீ மங்கேஷ் சிவன் ஆலயத்தில் சிவலிங்கப் பெருமானுக்கு அபிசேகங்கள் செய்து வந்தவராவார். லதா மங்கேஸ்கர் திருமணம் செய்யாமல் தமது வாழ்வை முழுமையாக கலைப்பணி செய்வதற்கே அர்ப்பணித்திருக்கிறார். பிரபல ஹிந்தித் திரையுலகப் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே இவருடைய சகோதரி ஆவார்.
1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய லதா மங்கேஷ்கர், முதன் முதலாக மராத்தி மொழிப் படமொன்றில் பாடினார். தனது 60 ஆண்டுகளாக தொடர்ந்த கலையுலக வாழ்க்கையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், தமிழ், கன்னடம், அசாம் போன்ற 36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை செய்துள்ளார். இவரது பாடல்கள் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகள்; மலேசியா, சிங்கப்பூர், தாய்லந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகள்; மத்திய கிழக்கு நாடுகள்; தென்னாபிரிக்கா; ரிறினிடாட் போன்ற மேற்கிந்தியத் தீவுகள்; கயானா (தென்னமெரிக்கா) போன்ற நாடுகளில் இன்றும் விரும்பி கேட்டு ரசிக்கப்படுகின்றன.
Post a Comment