உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சில வருடங்களுக்கு முன்னர் அண்ணன் Basheer Segu Dawood அவர்கள் எழுதிய பதிவு இது.
தாய்
மொழி தினம்.
—————————
இலங்கை
முஸ்லிம்களின் தாய் மொழி தமிழ்தான்
என்பதை அறிஞர் அஸீஸ் தலைமையிலான அன்றைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் கடும் விவாதங்கள், நிறுவுதல்கள் மூலம் நீரூபித்து பிரகடனம் செய்தனர். முஸ்லிம்களின்
தாய்மொழி- அரபுதான் என்றும் இல்லை அரபுத்
தமிழ் என்றும் இல்லவே இல்லை சிங்களமே என்றும் வாதிட்டோரும் அக்காலத்தில் இருந்தனர். இவர்களை எல்லாம் தோற்கடித்து தமிழ்தான் முஸ்லிம்களின் தாய் மொழி என்பதை
ஐயந்திரிபுற மகான் அஸீஸ் நிறுவினார்.
எங்கள்
காலத்தில், செல்லையா
என்ற சித்தாண்டியைச் சேர்ந்த எனது வாப்பாவின் நண்பரிடம்
" மச்சான் நீ நாளைக்கு 'அஸருக்குப்'
புறவு இஞ்ச வா, வந்து
'தைக்கா' 'றோட்டால' போனா ஒரு 'கிறவல்'
றோட் 'ஜங்க்ஷன்' வரும், அந்த
ஜங்க்ஷன்ல இடது பக்கம்
திரும்புன உடன ஒரு தகர
'கேற்' போட்ட ஊடு இரிக்கும் அதுதான்
ஓடாவியார் மச்சான்ட ஊடு அங்கதான் உன்ட
கதிர கிடக்கு, அத எடுத்திட்டுப் போ
" என்று வாப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். செல்லையா
என்ற தமிழருக்கு வாப்பா பேசிய அரபு மற்றும் ஆங்கிலம்
கலந்த தமிழ் மொழி துல்லியமாகப் புரிந்தது.
அந்த அரபு, ஆங்கிலச் சொற்களின் கலப்பு பழக்கத்தில் வந்து ஒட்டிக்கொண்தே அன்றி திட்டமிட்டு வலிந்து இலங்கை முஸ்லிம்கள் பேசிய தமிழில் கலக்கப்பட்டதல்ல.
நான்
ஏறாவூருக்கு வந்திருக்கிறேன். இன்று காலை எனது சகோதரர்
ஒருவர் என்னைக் காண தனது மகனின்
பெண் குழந்தை ஆயிஷாவோடு வந்திருந்தார்.ஆயிஷா தனது வாப்பாவின் வாப்பாவை
"அBபி வாப்பா" என்று
அழைப்பதைச் செவியுற்றேன்.அபி என்பது தந்தை
என்ற தமிழ்ச் சொல்லின் அரபுப் பதமாகும்.
எங்கள்
காலத்தில் தந்தையின் தந்தையர் வாப்பாப்பா, மூத்தாப்பா, மூத்த வாப்பா, அப்பா என்றே அழைக்கப்பட்டனர். தந்தையின் தாய் வாப்பம்மா, வாப்பாம்மா,வாப்பாடம்மா என்றும் உம்மாவின் வாப்பா- உம்மாவாப்பா, மூத்தாப்பா,அரிதாக தாய்வாப்பா என்றும் உம்மாவின் உம்மா- உம்மம்மா, உம்மாடம்மா, மூத்தம்மா, அரிதாக தாயும்மா என்றும் அழைக்கப்பட்டனர்.
எங்களது
பிள்ளைகள் காலத்தில் வாப்பா டெடா என்றும் உம்மா
மம்மி என்றும்கூட அழைக்கப்பட்டனர். டெடாம்மா டெடாவாப்பா, மம்மிம்மா மம்மிவாப்பா என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். இவர்கள் கொஞ்சம் அதிகம் கற்ற ஆங்கில மோகத்துக்கு
இடம் தந்த குடும்பத்தினராக இருந்தனர்.
தற்காலத்தில்
சில முஸ்லிம் குடும்பத்தில் தந்தையை அபி ( Abi ) என்றும் தாயை உம்மி என்றும்
அழைக்கக் குழந்தைகள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றனர்.
பெரும்பாலும் இவர்கள் ஏதோ ஒரு இஸ்லாமிய
இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அன்று தங்களை சமூகத்தில் உயர்ந்தவர்கள் எனக் காட்டுவதற்காக ஆங்கில
மோகத்துக்கு அடிமைப்பட்டவர்கள் போல இன்று அரபு
மற்றும் சமய மோகத்துக்கு ஆட்பட்டு
தமது மத தூய்மை வாதத்தை
நிரூபிக்கும் போக்கையும், அரபு மொழிப் பிரயோகம்
சொர்க்கம் கொண்டு சேர்க்கும் என்ற மூட நம்பிக்கையையும்
அவதானிக்க முடிகிறது.
எங்க
உம்மாவுக்கு அரபியில் பெயர் இருந்தது. அப்பெயர் பெரிதாக ஊரார் யாருக்கும் தெரியாது. "தங்கச்சிம்மா" என்ற தமிழ்ப் பெயரே
புளக்கத்தில் இருக்கிறது. இவ்வாறே அன்றைய வடகிழக்கு முஸ்லிம் ஆண்கள் பெண்களுக்கு பதிவுப் பெயர்கள் அரபி மொழியிலும் கூப்பிடு
பெயர்கள் தமிழிலும் இருந்தன. குழந்தம்மா, பூமா, தங்கம்மா,வெள்ளம்மா,வெள்ளிம்மா,ராணிம்மா, ராசாத்தி போன்ற கூப்பிடு பெண் பெயர்களும் சின்னவன்,
சின்னான்,மூத்தான், மூத்தவன், இளையவன், இளையான் தம்பியன்,மூத்தம்பி, இளையம்பி போன்ற கூப்பிடு ஆண் பெயர்களும் அக்காலத்தில்
புளக்கத்தில் இருந்தன.
அன்று
உள்ளே இருந்தவை அடக்கமான, ஆழ்மன இஸ்லாமாகவும்- வெளியே இருந்தவை பன்முக அடையாளம் கொண்ட இஸ்லாமாகவும் முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
இன்று,
தெற்காசியாவில் இஸ்லாமிய பிராந்திய பன்முக அடையாளத்தையும், இலங்கையில் சோனகம் என்கிற தேசிய பன்முக அடையாளத்தையும் தொலைத்ததன் ஊடாக பிராந்திய பன்மைத்துவத்தையும்
தேச பன்மைத்துவத்தையும் இலங்கை முஸ்லிம்கள் இழந்து நிற்கிறோம்.
முஸ்லிம்
சமூகத்தில் பன்முகத்தன்மை மையமும் அடொப்சனிச உளவியலும் மீளக்கட்டி எழுப்பப்படல் வேண்டும் என்பதை
இளையார் உணரும் வகையில் வேலைத் திட்டங்கள் அவசரமாக முன்வைக்கப்படல் வேண்டும்.
மீண்டும்
என் குடும்ப
அனுபவத்துக்கு வருகிறேன்.
சகோதரனின்
மகனே நீ எனக்கும் மகனே
என்பதனால் சொல்கிறேன் "அரபு தேசியவாதம் என்பது
இஸ்லாம் இல்லை என்பதை உணர்தல் உனது எஞ்சிய வாழ்வுக்கு
மிகவும் முக்கியமானது.
மகனே
நீ உனது மகளை இது
எனது மகள் ஆயிஷா என்று
எனது கையில் தூக்கித் தந்த போது அவளின்
முகத்தை முகர்ந்து ஏன் இப்பெயரைத் தேர்ந்தாய்
என்று உன்னைக் கேட்டேன். இப்பெயர் நபியின் இளைய மனைவியின் புனிதப்
பெயர் என்றாய். அப்போது, உனது மகள் ஆயிஷாவை
ஐந்தாவது வயதில் ஐம்பது வயது ஆணுக்கு திருமணம்
செய்து கொடுப்பாயா? என்று நான் கேட்டபோது நீ
கொடுப்புக்குள் சிரித்தபடி மறுதலித்து ஒடுங்கிய ஒடுக்கத்தை இன்றும் நினைக்கிறேன்.
மாற்றங்கள்
மனங்கொள்ளப்படல் வேண்டும் மகனே! மனிதம் காலத்துக்கு ஏற்ப புதியனயவற்றை ஏற்கிறது
மகனே!! பழையனவற்றில் சிலதை பெயரளவில் ஏற்று தான்
விரும்பாதவற்றை மெல்லெனப் புறந்தள்ளி அதைப் புரட்சி என பொய்யாய் கூறி
போகிற வாழ்வு ஏற்புடையதல்ல மகனே! உலகளவில் சிந்தனை செய்! ஊரளவில் செயல்படு!! குடும்ப அளவில் வெளிப்படையாய் இரு! உனதளவில் உண்மையாய்
இரு வாழ்வாங்கு வாழ்வாய்.
Post a Comment