முள்ளிவாய்க்காலுக்கு வருமா காலிமுகத்திடல்? --- புகழ்

முள்ளிவாய்க்காலுக்கு வருமா

 காலிமுகத்திடல்?

-      புகழ்

 இதுகளுக்கு இதே தான் தொழில். பிரபாகரன் செத்தநேரமும் இப்பிடித்தான் மேசை முழுக்க கிரிபத் பரவி வெட்டி கட்டசம்பலோட றோட்டால போய்வந்தவைக்கு குடுத்தவ. அப்பவும் ஜெயவேவா தான் இப்பவும் ஜெயவேவா தான்.

 அண்மைய நாட்களில் இலங்கையில் பரபரப்பாக நடைபெறும் காட்சிகளும் அதனைத் தொடர்ந்து பல்வேறு  தரப்பினரும் அமைப்புக்களும் நிலைமையின் விபரீதத்தைப் புரியவைக்க முயன்று வருகின்றனர்.*எள்ளுக்காயுது எண்ணெய்க்கு; எலிப்புழுக்கை என்னத்துக்கு காயுதுகூடக்கிடந்த குற்றத்துக்கா" என்று சொல்வார்கள்.இதே போலத்தான் தமிழர் தரப்பில் பந்தம் பிடிக்கும் நடவடிக்கைகளை அதாவது தீப்பந்த ஊர்வலம் போன்றவற்றை ஏற்பாடு செய்கிறார் சுமந்திரன்.காலிமுகத்திடல் போராட்டத்துக்கு வடகிழக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறார்.அவருக்கென்ன அவருக்கும் துணைவியாருக்கும் பல்வேறு வழிகளில் வருமானம் வருகிறது.அவர்களைப்பொறுத்தவரை பொழுது போக்கவும் பிரபலத்தைக் கூட்டவும் இது நல்ல சந்தர்ப்பம்.அவரைத் தலையில் வைத்துத்  தூக்கி ஆட சில ஊடகங்களும் உள்ளன.

இந்தப் பொருளாதாரப் நெருக்கடியில் தமது குடும்பத்தின் நெருக்கடிகளுக்கு மத்தியில் குறிப்பாக அரசியல் கைதிகள் - காணாமற்போனோர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமது வேலைகளை விட்டுவிட்டு கொழும்புக்கு போகவேண்டுமா?

***

2018 ம் ஆண்டு 24 - 30 ஒக்டோபர் வெளியான எதிரொலி பத்திரிகையின் இரண்டாம்பக்கத்தில் " பிரபாகரன் இல்லாத  தமிழினம்" என்ற தலைப்பில் அவதானி என்பவர் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளைத் தருகிறோம்.

 "அரசியல் கைதிகள் விவகாரம் - நாளிதழ் ஒன்றைப் புரட்டியவாறே

திறப்பு என்னிடமில்லைஎன அலட்சியமாகப் பதிலளித்தார் சம்பந்தன் ஜயா.

மகசின் சிறைக்குச ; சென்ற சுமந்திரனிடம்  எங்களது குடும்பத்தினர்

சிரமப்படுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகளிடம் தொடர்புகொண்டு வாழ்வாதாரத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்என வேண்டினர்கைதிகள். அலட்சியமான பதில் கிடைத்தது அவரிடமிருந்து.

 முந்தி இயக்கம் இருந்தது. கேட்டவுடன் கொடுப்பார்கள். இப்ப அப்படி இல்ல. எங்கட கட்சியிலயும் நிதி இல்லை. போன எலெக்சனில செலவுக்குக் கூடகாசு இல்லாமல இருந்தனாங்கள்"என்று பதிலளித்தார் அவர். தேர்தலுக்கு நிதி இல்லையென்பதையும் வறுமையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்ப நிலையையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பவர் தான் இன்று தமிழரின் அரசியல் போக்கைத் தீர்மானிப்பவராக உள்ளார்.

அத்துடன் கேட்காத விடயங்கள் பலவற்றுக்கும் தன்னிலை விளக்கமளித்தார். “ நான் கிரிக்கெட் விளையாடினதைப்பற்றிக் கதைக்கினம். அதெல்லாம் ஒரு ராஜதந்திரமஎன்று இவர் சொன்னதைக் கேட்டு தலை சுற்றியது அரசியல் கைதிகளுக்கு. தான் கோத்தபாயவுடன் டின்னர் சாப்பிடுவதையும் பெருமையாகப் பேசிக் கொண்டார். 2012இல் இச் சந்திப்பு நடந்தது. 2018 வரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவுமில்லை.

அனுராதபுரத்துக்கு வந்த வன்னி  மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன்உங்கட விடயம்  சுமந்திரனிடந்தான் ஒப்படைச்சிருக்கு.அவருக்கு இப்ப கொஞ்சம் வேலை கூடஎன்றார். “ஓமோம் கூடத்தான்: கிரிக்கெட்பயிற்சியெடுக்கிறது தொடக்கம் வேலை கூடத்தான்என்று கைதிகள் சொல்ல நினைத்தாலும் சொல்லவில்லை. ஏற்கெனவே ஒரு எம்.பி. “ "இவங்கள்  கொஞ்சக்காலம்  உள்ளுக்கை இருக்கட்டும்  வெளியில வந்தா அரசியலைக் குழப்பிப்போடுவாங்கள்" என்று சொன்னதாக அவர்களுக்குத் தகவல்கிடைத்திருந்தது. விசர் நாய்களுடன் பழகுவதும் அரசியல் வாதிகளுடன் தொடர்பில்  இருப்பதும் ஒன்று தான் என எண்ணி அப்போது அமைதி காத்தனர் அரசியல் கைதிகள்.

 2012 ஆம் ஆண்டிலிருந்து 2018 இன் தற்போதைய இறுதிக்காலம் வரை தமிழ் அரசியல்வாதிகளின் முயற்சியால் எந்த ஒரு அரசியல் கைதியும் விடுதலையாகவில்லை. வழக்கைச் சந்தித்து நீதிமன்றம் மூலம் விடுதலையாகினர் சிலர்.ஆனால் தமது முயற்சியின் பயனாகவே விடுதலையாகினர் என்று கூசாமல் சொன்னார் சுமந்திரன்.  நன்னடத்தை அரசாங்கம் ஒன்றை உருவாக்க சந்திரிக்காவுடன் கைகோர்த்தது ஜே.வி.பி. நல்லாட்சி அரசைப் படைக்க சிறிசேனாவுடன் கூட் டுச் சேர்ந்தார் சம்பந்தன். ஜே.வி.பி. சந்திரிக்காவுடன் இணையும்  போது சிறையில் இருந்த ஜே.வி.பியினர் விடயத்தில் பொது மன்னிப்பு, சட்டமா அதிபர், நீதியமைச்சர், பிரதமருடனான சந்திப்பு,  ஆலோசனை வழிமுறை பற்றி எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. ஏதோ ஒரு மந்திரத்தின் மூலம் அனைத்து ஜே.வி.பியினரும்விடுதலையாகினர்.

 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தனை இழுத்தடிப்பு, ஆராய்வு, சந்திப்பு வாக்குறுதி தொடர்ந்து அரசைப் பகைக்க விரும்பவில்லை என செய்திகள் வெளியாகின்றன. பிச்சைக்காரனின்  புண்போல இப்பிரச்சனைதொடர்ந்து இருக்க வேண்டுமென தமிழ்த் தலைமை நினைக்கிறது போல உள்ளது.

 ஆணைப் பெண்ணாக மாற்ற முடியாது. பெண்ணை ஆணாக மாற்ற முடியாது. இதனை விட மற்ற எல்லா அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டுஎன்றார் ஜே.ஆர். ஆனால் சுமத்திரன் விசுவாசிகளோ ஜனாதிபதி நினைத்தால் கூட அரசியல்கைதிகளை விடுவிக்க முடியாது என பேசுகிறார்கள; எழுதுகிறார்கள ; பேரம்பேசக் கூடிய சந்தர்ப்பங்களையும் கோட்டை விட்டதற்கு காரணமான அடிமைப் புத்தி அப்படியே தமிழ் அரசியல்வாதிகளிடம் உறைந்து விட்டதே காரணம்.  பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அரசியல் கைதிகளின் விடுதலை முதலான கோரிக்கைகளை ரணில் ஏற்க வேண்டும் என சிறிதரன் எம்.பி மீசையை  முறுக்கினார் என செய்திகள் வெளியாகின. ஆனால் எந்த நிபந்தனையும நாம் விதிக்கவில்லை என ஒற்றை வரியில்பதில்   சொன்னார் சுமந்திரன்.

 தலைவர் பிரபாகரன் காலத்தில் தான் பலத்துடன் பேச்சுவார்த்தைகள்  வார்த்தைகள் நடைபெற்றன. இதனைவிட தந்தை செல்வாவின் காலத்திலும்  எதை எதைப்  பெற்றுக் கொள்வது என்பது தொடர்பாகப் பேசினார்கள். இடைப்பட்ட காலத்திலும் தற்போதும் எதை எதை வீட்டுக்  கொடுப்பது என்ற நினைப்புடனேயே பேச்சுக்கள்தொடர்கின்றன.

*** 

மேற்குறிப்பிட்ட நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அன்று தனது ராஜதந்திரம் என்ற பெயரில் கிரிக்கட் ஆடியது போன்றே இப்போதும் பரபரப்புக்கு அலைகிறார் சுமந்திரன்.

தமக்கு அரசியல் நெருக்கடி நேரும்போது அல்லது தாங்கள் அடிவாங்கும் போது மட்டுமே சிங்களத்தின் ஏதோ ஒரு தரப்பு தமிழருக்கு கை நீட்டும். அந்தச் சகதியில் அகப்பட்டு  நிற்கும் தரப்புக்கு தமிழர் தரப்பு கை நீட்டினால் அவர்கள் (சிங்களவர்கள்) வெளியே வந்து விடுவார்கள்.நாங்கள் தான் சகதிக்குள் தள்ளப்பட்டிருப்போம்.

இதற்கு இரு ஜனாதிபதித் தேர்தல்கள் உதாரணம். டிங்கிரி பண்டா விஜேகோன் ஜனாதிபதியாக விளங்கிய காலத்தில் வாங்கிய அடிகளிலிருந்து தாம் தப்ப வேண்டும் என சிங்களத் தரப்பு எண்ணியது."சமாதானத்தைக் கொண்டுவருவேன் நான். ஆயுதங்கள் மூலம் எனது தந்தையையும் கணவரையும் இழந்தவள் நான்" என்றார் சந்திரிகா. சிங்களவருக்கும் அப்போது அது சரியாகத் தெரிந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் இருந்த தமிழர்கள் சந்திரிகாவுக்கே வாக்களித்தனர்.

தேர்தல் முடிவு அறிவிக்கபட்டவுடன் பி.பி.சி நிறுவனத்தின் சார்பில் ஆனந்தி அப்போது .தே.கட்சி பிரமுகராக இருந்த அஸ்வரிடம்  "சந்திரிகா வெற்றி பெற்று விட்டார்; தானே இனி சமாதானம் ஏற்படும் தானே? " எனக் கேட்டார்.அதற்கு அஸ்வர்  "தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் சந்திரிகா என்ன கூறினார் என்பதை அவதானித்து இருக்க வேண்டும் . `சமாதானம் தேவைதான்; அதற்காக எப்படியும் சமாதானம் என்று பொருளல்ல` என்றே அவர் கூறினார். " என தமது அவ நம்பிக்கையை வெளியிட்டார்.

பின்னர் சந்திரிக்கா காலத்தில் நடந்த குண்டு வீச்சுக்கள், செம்மணி முதலான படுகொலைகளைப் பட்டியலிடத் தேவையில்லைத்தானே.

இக் கால கட்டத்தில் நடந்த இன்னுமொரு விடயத்தையும் சொல்ல வேண்டும்.சந்திரிகா ஜனாதிபதியானதும் வாசுதேவ நாணயக்கார,பிக்குகள் ஆகியோருடன் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர என்றொரு எம்.பியும் வந்தார்.(ஹிருனிக்காவின் தந்தை - துமிந்த சில்வாவினால் சுட்டுக்கொல்லப்பட்டவர்) ஓமந்தைக்கு வந்த இவர்களைப் புலிகள் வரவேற்று கிளாலி நீரேரியூடாக படகில் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தனர். அங்கு சந்திப்புக்களை முடித்துவிட்டு வந்த இவர்களை அன்றிரவே ஓமந்தை ஊடக அனுப்பிவைத்தனர்புலிகள்.

அன்று யாழ்ப்பாணம் போவதென்பது பரபரப்பான செய்தி. இவர்களை வரவேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.அவர்களிடையே உரையாற்றிய பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர "யுத்தம் வேண்டும் என்று கூறுவோர் ஒரு முறை  யாழ்ப்பாணத்துக்குச் சென்று பார்க்க வேண்டும்" என்று கூறியதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன.

இதே பாரத லக்ஷ்மன்பிரேமச்சந்திர யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சிங்கக்கொடி ஏற்றிய பின் கொழும்புக்கு திரும்பிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தைக்கு மாலையிட்டு கட்டியணைக்கும் காட்சியினை ரூபவாஹினி ஒளிபரப்பியது. என்ன இருந்தாலும் அவர்கள் அவர்களேதான். 

 இதே சந்திரிகாவுடன் கூட்டுச் சேர்ந்து மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்க கூட்டமைப்பு தலைகீழாக நின்றது. மகிந்த மீதான வெறுப்பை வெளிப்படுத்த மைத்திரிக்கு வாக்களித்தனர் தமிழர்கள். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும். மைத்திரி தனது நன்றிக்குரியவர்களாக பிக்குகள்,றிசாட் ,ஹக்கீம் என வரிசையாக குறிப்பிட்டவர்களில் ஒரு தமிழரின் பெயர்  கூட இல்லை.

இது பற்றிக் குறிப்பிட்ட மனோகணேசன் "இது அவர்களது பரவணிப் புத்தி" என்றார். பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, பட்டம் பறிக்கப்பட்ட  பீல்ட் மார்சல் பொன்சேகா ஆகியவர்களுக்கு மீண்டும் அதே கௌரவம் அளிக்கப்பட்டது. (ஷிராணி பண்டாரநாயக்க பின்னர் ஒரு நாள் மட்டுமே பதவி வகித்து  விட்டு ராஜினாமா செய்தார்) தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் மந்திரத்தைதான் அனைவரும் மறந்து விட்டனர். ஜே.வி யினரை ஒட்டுமொத்தமாக விடுதலை  செய்த சந்திரிகாவும் இதனை வலியுறுத்தியதாக தெரியவில்லை.

இப்போதும் கோத்தபாய வீட்டுக்கு டின்னருக்கு போகமுடியும் சுமந்திரனால். மிருசிவிலில் சிறுவர்கள் உட்பட தமிழர்களை ஒவ்வொருவராக ரசித்து ரசித்து கொலை செய்த சுனில் ராஜபக்ச என்ற ராணுவ அதிகாரியை, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த துமிந்த சில்வாவை விடுதலை செய்ய என்ன மந்திரம் சொன்னீர்களோ  அதைப்  போல தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாம்தானே; நீங்கள் வாயால் சொல்வது தானே சுற்று நிருபம் என்று கேட்டிருக்கலாம் கோத்தபாயவிடம்.இதை விட நீதியமைச்சரும்,சுமந்திரனும் என்ன புதினம் காட்டப்போகிறார்கள்?

காலிமுகத்திடலில் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர் பொலீஸார். இவர்களுக்கு   உணு  உணு ரொட்டி கிடைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைத்து உண்ணா விரதமிருந்து உயிர்நீத்த   அன்னை பூபதியை நினைவு கூர  நீதிமன்றம் மூலம் தடை வாங்கினர் பொலீசார். அங்கு சென்ற கூட்டமைப்புப்  பிரமுகர்களை மிரட்டிக்  கலைத்தனர். இதைப் பற்றி காலிமுகத்திடலிலோ  பாராளுமன்றத்திலோ சுமந்திரன் ஏதும் சொன்னதாக செய்திகள் வெளிவரவில்லை. 

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் தலைவர் ஞானசாரதேரர் பற்றி சொல்ல வேண்டியதில்லை. நாம் ஒரே நாட்டவர் என்ற நினைப்பில் காலிமுகத்திடலில் உரையாற்றப்போய் பிக்குவிடம் ஒலிவாங்கியை பறிகொடுத்த லோசனோ, கம்பவாருதி  அணியினரோ எதிர்வரும் 18ம் நாள் முள்ளிவாய்க்காலுக்கு எத்தனை பேரூந்துக்களில் சமாதானம் வேண்டி நிற்கும் சிங்களவர்களை அழைத்து வரப்போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றோம் நாம்.

அவ்வாறு  யாரும் வந்தால் இங்கு இடம்பெறும் காணி அபகரிப்பு, ,தொல்பொருள் திணைக்களத்தால் தமிழர் ஆலையங்கள் விகாரைகளாக மாற்றப்படல் உட்பட பல விடயங்களை அவர்கள் உணர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கும்தானே.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post