ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை !

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை !

-மெய்ப்பொருள்

தமிழ்த் தேசிய அரசியலிலும்,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபைப் பேணுவதிலும் எனைய எல்லோரையும் விடத் தாங்களே அதி விசுவாசிகள் என்று காட்டுவதில் சிலர் முனைப்பாக உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க ஊடகவியாளர்களும் உள்ளனர். புலிகளின் கட்டமைப்பு மற்றும் வரலாறு தொடர்பாக எதுவும் தெரியாது; விறாந்தையில் கூட நிற்காத இவர்கள் தமிழ்த்தேசியம் எனும் வீட்டுக்கு அத்திவாரம் இட்டதே தாங்கள் தான் எனக் காட்டத் தலைகீழாக நிற்கின்றனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் படையணிகள் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துபோயின. இதில் உள்ள போராளிகள் வீரச்சாவடையும்போது அவர்களுக்கான நிலைகளை வழங்குகையில் மேஜர் என்ற தரத்தை அறிவிப்பது வரை மட்டும் சிறப்புத் தளபதிகளால் முடியும். சுமார் நான்கு ஆண்டு காலத்தின் பின்னர் இயல்பாக மேஜர் ஒருவர் லெப்டினன்ட் கேணல் என்ற நிலைக்கு வரமுடியும் என்றாலும் அது சம்பந்தமாக தலைமைச்செயலகம் ஊடாகத் தேசியத்தலைவரின் முன் அனுமதியை சிறப்புத் தளபதிகள் பெறவேண்டும். கேணல்,பிரிகேடியர் போன்ற நிலைகள் கண்டிப்பாக தேசியத் தலைவரினால் மட்டுமே வழங்க முடியும். உயிரையும் உதிரத்தையும் கொடுத்து வளர்த்த ஆயுதப் போராட்டத்தின் உணர்வு பூர்வமான இந்த விடயங்களை எந்த ஒரு தனிநபரையோ முன்னாள் போராளிகளையோ கொச்சைப்படுத்தப் பயன்படுத்த முடியாது.போராட்டத்தில் நேரடியாக பங்களித்த எவரும் இவ்வாறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். மாவீரர் குடும்பத்தினராயின் இது பற்றிச்  சிந்திக்கவே மாட்டார்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வொன்றைச் சாட்டக வைத்து விடுதலைப் புலிகளின் ஆரம்பகால போராளியான காந்தன் என்பவரை கொச்சைப்படுத்தவும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீதான வெறுப்பை உமிழவும் தம்மை ஊடகவியலாளர்கள் என அழைத்துக் கொள்ளும் சிலர் தலைகீழாக நிற்கின்றனர். காந்தனை பிரிக்கேடியர் என்று கிண்டல் செய்கின்றனர்.அல்லது தம்மை தேசியத்தலைவரின் நிலையில் வைத்துப் பார்க்கின்றனரோதெரியவில்லை. லெப்.கேணல் முதல் பிரிக்கேடியர் நிலை வரை தலைவரே வழங்க முடியும் என்ற நிலையில் காந்தனுக்கு பிரிக்கேடியர் நிலை வழங்குவதாக காட்டிக்கொள்வது இயக்கத்தின் கட்டமைப்புக்களைக் கொச்சைப்படுத்தும் செயலே அன்றி வேறேதும் இல்லை. கருணாவின் பிளவுக்கு பின் ஊடகவியலாளர்கள் சிலருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதியதால் அவ்வாறானவர்களுக்கு சில ஏற்பாடுகளையும் உறுதிப்படுத்தல்களையும் செய்ய வேண்டிய நிலை அரசியல் துறைக்கு ஏற்பட்டது. இதன் மூலம் அரசியற் தஞ்சம்  கோரும் விண்ணப்பம் உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டது.  எனினும் விதைநெல்லுடன் சில பதர்கள் கலந்திருப்பதை அரசியல் துறையினரால் கண்டு பிடிக்க முடியாமற் போயிற்று என்பது கசப்பான உண்மை.

 உதாரணமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பான விடயத்தை எடுத்துக்கொள்வோம். தமிழர் அரசியலின் போக்கைத் தீர்மானிப்பதில் புலிகளின் பங்கு - தீர்மானம் என்பது பற்றி இங்குள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் தெரியும். அதை விடுத்து கூட்டமைப்பின்  உருவாக்கத்துக்கும்  புலிகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை; கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கமே இதனைப்  பூர்த்தியாக்கியது. சும்மா போகிற போக்கில்  புலிகளிடம் இதனைத் தெரிவித்து வைத்தோம் என நிறுவுவதற்கு சிலர் தலைகீழாக நின்றனர்.

2000 ஆண்டு பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. தமிழர் தரப்பு வாக்களிப்பில் போதிய அக்கறை காட்டாமையே இதற்குக் காரணம் என்று  தமிழீழ பொருமின்  மேன்பாட்டு  நிறுவனப் பொறுப்பாளராக விளங்கிய ரூபனை (ஆத்மலிங்கம் ரவீந்திரா ) அழைத்து நிலைமைகளை விளக்கினார் தலைவர். இந்த அரசு நீடிக்காது; விரைவில் அடுத்த தேர்தல் வரும்; அதற்கிடையில் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை திருமலை மக்களிடம் விளக்கி மீண்டும் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பெறும் நிலையை உருவாக்குவது உங்களது பொறுப்பு எனக் குறிப்பிட்டு அனுப்பிவைத்தார். 2001 ஜனவரி முதல் ரூபன் இப்பணியை மேற்கொண்டார். 22.ஒக்டோபர் 2001 அன்று ஓய்வு பெற்ற கிராமசேவை அலுவலர் குணநாயகம் என்பவர் சம்பந்தன் ஐயா புலிகளைச் சந்திக்க வேண்டுமென்று கேட்கிறார் என தெரிவித்தார். இதற்கு திருமலை அரசியல் துறைப் பொறுப்பாளர் என்ற வகையில் ரூபன் சம்மதித்தார். அடுத்த நாள் (23ம் திகதி) சேனையூரில் ஒரு அரச அலுவலர் இல்லத்தில் இச் சந்திப்பு நடைபெற்றது.அடுத்து வந்த தேர்தலில் (5 December 2001)சம்பந்தன் ஐயா தெரிவானார்.

தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்ட  சிவசிதம்பரம் ஐயாவின் மறைவைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு திரு.துரைரத்தினம் ஆசிரியர்  நியமிக்கப்பட வேண்டுமென்ற ரூபனின் கோரிக்கையை நிறைவேற்ற என்ன செய்யவேண்டுமோ அதனை தலைமையும்,அரசியல் துறையும் செய்தன.

தாங்களே கூட்டமைப்பைப்  பிரசவித்தோம் என்று கூறுபவர்கள் எந்த வலியையும் அனுபவிக்கவில்லை. இந்த விடயம் எதுவும் அவர்களுக்குத்  தெரியாது. இதற்கு முன்னதாக சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் புலிகளுடனான பேச்சு வார்த்தை என்று ஆரம்பித்த போது அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் தராக்கியிடம் ஏனைய இயக்கங்களுடன் பேச்சை ஆரம்பிக்கும் பணியை ஒப்படைத்தனர் புலிகள். இது சந்தியில் பாய் போட்டு கதைக்கும் விடயமல்ல. சந்திப்பில் கலந்து கொள்வோரின்  உயிருடன் சம்பந்தப்பட்டது. பண்டார நாயக்கவின் மகள் எப்படி நடந்து கொள்வார் என்று ஊகித்த படியால் கமுக்கமாக விடயங்களைப்  பேணினார் தராக்கி.

இதற்காக தராக்கியின் சட்டையை எடுத்துக் கொடுத்தேன்; பிரஸில் பேஸ்ட் வைத்துக்கொடுத்தேன்;ஆகையால் கூட்டமைப்பின் உருவாக்கிகள் நாமே என்று கதைவிட்டால் தமிழினம் ஏமாந்து போகும் என கனவு கண்டவர்களின் பிழைப்பில் மண்ணைப் போட்டவர்  காந்தன் என்பதால் தான் அவர் மீது இந்த ஊடகவியலாளர்களுக்குக்  கடுப்பு

இவர்கள் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்குப்  புலிகளைப் பயன்படுத்தினர் என்பது உண்மைக்கு மாறானது. அரசியல் தஞ்சகோரிக்கையாக புலிகளைப்  பயன் படுத்தினோம் என்று சொன்னால்  அது நூறு வீதம் உண்மை.

தலை முழுவதுமாகவோ, கன்னப்பக்கமாகவோ முடி நரைப்பதால் மட்டும் ஒருவர் மூத்த ஊடகவியலாளர் ஆகி விட முடியாது. ஊடக ஒழுக்க நெறி குறித்து அக்கறையுடன் செயற்படுபவரே சிறந்த ஊடகவியலாளர். எப்படி செய்தி வெளியிடுவது என்பதை விட எப்படி வெளியிடக்கூடாது என்பது பற்றியே கோபு ஐயா போன்ற ஊடக ஜாம்பவான்கள் புதிய செய்தியாளர்களுக்குச் கற்றுக்கொடுப்பர்.

சிலவிடயங்கள் பொதுவெளியில் வைக்க முடியாது. ஆனால் அது பற்றிய சந்தேகம் ஊடகவியாளர்களுக்கு இருக்கும். அது பற்றி சம்பந்தப்பட்டபிரமுகரிடம் கேட்பர் அவர்கள். எனவே சூழ்நிலையை விளங்குவதற்காக " off tha Record "என்று கூறிவிட்டு சில விடயங்களை வெளியிடுவர் அப்பிரமுகர்கள். கனவான்களாக விளங்கும் ஊடகவியலாளர்கள் இதனைக் கருத்தில் எடுத்துக்கொள்வார். பொதுவாக இவ்வாறான சந்தப்பங்களின்  மூலமே பிரமுகர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு மிடையில் நெருக்கம் ஏற்படுவதுண்டு. பாராளுமன்றத்திலும் சில விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபாநாயகர்  உத்தரவிடுவதுண்டு. அப்படியே நடைமுறைப்படுத்தவதுண்டு.

18.06.2022 அன்று சுவிஸில் மட்டு.எம்பி சாணக்கியனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இளைஞரான சாணக்கியன் அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலையாரால் ஏற்பட்டது.அப்போதைய நிலைமை எவ்விதம் இருந்தது என்று குறிப்பிட்ட காந்தன் ஒரு களையெடுப்புத் தொடர்பாக  தெரிவிக்க வேண்டி ஏற்பட்டது. அந்தச் சந்திப்பில் சுமார் 60 பேர் வரையில் மட்டும் பங்கு கொண்டனர். எனினும் காந்தன் முன்னைய நிலைமையை விளங்கச் சொன்ன விடயங்களை பற்றி எதுவும் வெளிவராமல் பார்த்துக்கொள்ளுமாறு சாணக்கியன் வேண்டிக்கொண்டார். ஆனால் ஊடக தருமமென்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய ஊடகவியலாளர்கள் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தி விட்டு காந்தன் புலிகளுக்கும் போராட்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டார் என்று மூத்த ஊடகவியலாளர்கள் கவலைப்படுவதாக நிலிக்கண்ணீர் வடிக்கின்றனர். ஊடக  ஒழுக்க  நெறி என்றால் என்ன என்ற அரிச்சுவடியைக் கற்காதவர்கள் ஊடகவியலாளராக மாறினால் இப்படித்தான். இவர்கள் வெளியிட்ட செய்தியானது குடிகாரர்கள் தண்ணியடிக்கும் போது கடிக்கும் Bytes போன்றதே தவிர வேறெதற்கும் பயன்படாது.

ஏற்கெனவே சாணக்கியனில் கடுப்பாக இருக்கும் இவர்களின் வெறும்வாய்க்கு அவல் கிடைத்ததாக கூத்தாடுகிறார்கள். விடுதலை இயக்க வரலாற்றில் காந்தனுக்கு முன்னரே ஆயுதப் போராட்டத்தில் கிழக்கின் ஆணி வேராக விளங்கிய யோகன் பாதர் அவர்களைப்பற்றி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துக்களை வெளியிட்டு மகிழ்ந்தனர் இவர்கள். யோகன்பாதர் எதிர்நோக்கிய சிக்கல்கள்,நிலைமைகள் சுலபமாக அரசியல் தஞ்சம் பெற்று புளிச்சல் ஏவறை  விட்டுக்கொண்டு  இருக்கும் இவர்களுக்குப்   புரிய நியாயமில்லை தான். குடும்ப வாழ்வு என்றால் என்ன யோகன் பாதரின் முக்கியத்துவம் எத்தகையது என்றெல்லாம் புரியாத அந்த திருமணமாகாத எம்.பி வாய்க்கு வந்ததைக் கூறியதை அப்போதைய களநிலைமை தெரியாமல் வெளியிட்டு மகிழ்ந்தனர் இவர்கள். இன்று பதவியை இழந்த இந்த முன்னாள் எம்.பி சாணக்கியனைக்  குறித்து வெளியிட்ட கருத்துக்களைப்பற்றி இங்குள்ள வாக்காளர்கள் கவலைப்பட மாட்டார்கள்.  வெப்பிசாரத்தில் வெளிவரும் உளறல்களாகவே எடுத்துக்கொள்வர். இன்று காந்தன் குறித்தும் அவர்வெளியிட்ட கருத்து பற்றியும் மூத்த ஊடகவியலாளர்கள் எனப் பிரகடனப்படுத்துவோர் குறிப்பிடுவது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையைத்தான் நினைவூட்டுகிறது.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post