பணியையும் பணியாளர்களையும் உயிராக மதித்த சேரன்!


மாவீரர் நிசாம் / சேரன்

வீரப்பிறப்பு:14.03.1963   வீரச்சாவு: 13.05.2009

கோப்பாய் பூதர்மடம் ,யாழ். மாவட்டம்"நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள். என்ற நூலில்   நிலா  தமிழ்  எம் முன் வைக்கும் வரலாற்றுப் பக்கத்தில் ஒன்பதாவது மாவீரர் நிசாம் / சேரன் பற்றிய பதிவை  புரட்டுவோம்»


கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி 2009 மே 18 இற்கு பிறகு சுடுகலன்கள் பேசாநிலைக்கு வந்த எமது மறப்போராட்ட வரலாறானது அளப்பரிய ஈகங்களையும் வரிகளில் வரித்திட முடியாத அர்ப்பணிப்புக்களையும் கொண்டது. எமது மாவீரச் செல்வங்கள் வியப்புமிக்க மகத்தான வீரகாவியங்களைப் படைத்தனர். அந்த மகத்தான மாவீரர்களின் குருதியால் எழுதப்பட்டது தான் எமது வீரம் செறிந்த போராட்ட வரலாறு. அவர்கள் எமது மக்களுக்காகவே குருதி சிந்தினார்கள், மக்களுக்காகவே மடிந்தும் போனார்கள். எமது மக்களினதும் மண்ணினதும் விடுதலைக்காகவே எமது மாவீரர்கள் தங்களது இன்னுயிரை ஈந்தார்கள். அவர்கள் என்றும் எமது மக்களின் விடுதலைப்  போராளிகள். அவர்களின் குருதி சிந்திய போராட்ட வரலாறானது எமதும் எமது மக்களினதும் வீர வரலாறு. அவர்களின் வீர வரலாறானது மறக்கப்படாமல்/மறக்கடிக்கப்படாமல், எஞ்சியிருக்கும் நாம் நினைவுகூர்ந்து ஆவணப்படுத்த வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும். அந்த வகையில் தன் இளமைக் காலக் கனவுகளைத் துறந்து, எமது போராட்டத்தில் இணைந்து சுதந்திரத் தமிழீழம் என்ற பெருங்கனவோடு வாழ்ந்து இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட எமது விடுதலைப் போராட்ட அமைப்பின்  உறுப்பினரும் தமிழீழ நிதித்துறையின் மூத்த உறுப்பினருமான மாவீரர் நிசாம்/சேரன் அவர்களைப் பற்றி நினைவுகூர வேண்டியது எமது கடமையாகும்.

யாழ் மாவட்டத்திலே கோப்பாய் பூதர்மடம் எனும் ஊரில் நிசாம் அவர்கள் அம்பிகைபாகன் விசாலாட்சி இணையருக்கு 14.03.1963 அன்று தவநேசன் எனும் இயற்பெயருடன் நிசாம் அண்ணா பிறந்தார். இரு சகோதரிகள் மூன்று சகோதரர்களுடன் பிறந்த தவநேசனை வீட்டில் செல்லமாக ராசன் என அழைத்தனர். அவரது மூத்த சகோதரன் உடல்நலக் குறைவால் இறந்து விட, குடும்பத்தில் மூத்த ஆண்மகனாக மிகவும் செல்லமாக ராசன் வளர்ந்து வந்தார். அவரது குடும்பம்  இந்த மண்மீட்புப் போராட்டத்திற்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்திருந்தது. அவர் சிறுவயது முதல் படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை நீர்வேலி இந்துக் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கோப்பாய் கிறித்துவக் கல்லூரியிலும் பயின்று க.பொ.த சாதாரணதரத்தில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் பயின்றார். அவர் கணித பாடத்தில் இயல்பாகவே மிகச் சிறந்த புலமையும் ஆர்வமும் கொண்டு விளங்கியமையினால் க.பொ.த சாதாரண தரத்தை நிறைவு செய்தவுடன், தனக்கு கீழ் வகுப்புக்களில் பயின்ற மாணவர்களுக்கு கணித பாடம் கற்பித்து வந்தார்.

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளம் தலைமுறையின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆகவே எமது இளம் தலைமுறையினரை அறிவுள்ளவர்களாகவும் ஆற்றல் மிகுந்தவர்களாகவும் பொறுப்புணர்வு கொண்டவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாய தேவை உண்டு. எனவே அதற்கேற்ற வகையில் இளஞ்சிறார்களுக்கு கல்வியூட்டக் கூடிய வகையில் அவர்களின் நலன் கருதி எமது தேசியத்தலைவரின் ஆணைப்படி தமிழீழ கல்விக் கழகம் உருவாக்கப்பட்டு கிராமம் தோறும் வகுப்புக்கள் நடாத்தப்பட்டது. அதில் ராசன் அவர்களும் க.பொ.த உயர்தரம் பயின்று கொண்டிருக்கும் போதே பகுதி நேர வகுப்புகளில் கணிதபாட ஆசிரியராக இலவசமாக மாணவர்களுக்கு கற்பித்துத் தனது தேசத்திற்கான ஆரம்ப பணியை ஆரம்பித்தார்.

அவர் துடுப்பாட்ட விளையாட்டிலும்  (Cricket)  மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது பாடசாலை துடுப்பாட்ட அணியில் சிறந்த துடுப்பாட்ட வீரனாக தெரிவு செய்யப்பட்டு மிகத் திறமையாகச் செயற்பட்டார். பிற்காலத்தில் கட்டடப் பொறியியலாளராக (civil engineer ) வரவேண்டும் என்பதே அவரது இலட்சியமாக இருந்தது. ஆனால் 1983 இல் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றும் சிறிலங்கா அரசினால் தமிழ் மாணவர்கள் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட கல்வியில் தரப்படுத்தலின் விளைவாக ஏற்பட்ட வெட்டுப்புள்ளிச் சிக்கலால் அவரது பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வாய்ப்பானது தட்டிப் போய்விட்டது. இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

பின்பு காலத்தினது தேவை கருதியும் எமது போராட்டத்தினது முதன்மை கருதியும் 1985 இல் தன்னை முழு நேரப் போராளியாக இணைத்து "சாவா 1" பயிற்சி முகாமில் பயிற்சியினை நிறைவுசெய்து கொண்டு "நிசாம்" எனும் பெயர் சூடி வரிப் புலியாகினார்.

 1985 -  1986 காலப்பகுதிகளில் கேணல் கிட்டு அண்ணா மற்றும் தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணா ஆகியோருடனும் இணைந்து யாழ் கோட்டை போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணிபுரிந்து தனது தேசத்திற்கான பணியினையாற்றினார்.

"களத்தில் எதிரியோடு போராடுவதுடன் மட்டுமல்லாது மக்களின் சமூக பொருண்மிய வாழ்வினை மேம்படுத்துவதிலும் எமது அமைப்பு அயராது உழைத்து வந்தது. மக்களின் அரசியல் விடுதலை மட்டுமன்றி அவர்களது சமூக பொருண்மிய விடுதலையும் எமது இலட்சியம் என்பதை எமது அமைப்பு செயல் மூலம் நிரூபித்து வந்தது. அந்தவகையில் நிசாம் அண்ணாவும் லெப்.கேணல் சரா அண்ணாவுடன் இணைந்து யாழ்.திருநெல்வேலிப் பகுதிக்கு பிரதேசப் பொறுப்பாளராக 1985-1987 காலப்பகுதிகளில் மக்களோடு மக்களாக அர்ப்பணிப்புடன் அரசியல் பணியாற்றினார். பொதுமக்களுக்கு நியாய விலையில் பொருட்களை வழங்குவதற்கு மக்கள் கடை, அந்தப் பகுதியில் இயங்கிவந்த வியாபார நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை ஒன்றுகூடல்கள் வைத்து தீர்த்துக் கொடுத்தல், இளைஞர்களுக்கு உள்ளூர் பயிற்சியளித்து பிறகு தகுதியானவர்களைத் தெரிவு செய்து போராளிகளாக்குதல், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான முதலுதவி வகுப்புக்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்தல், அமுதம் சவர்க்கார உற்பத்தியகம் என்ற ஒரு உற்பத்தியகத்தை நடத்தி அதன் மூலம் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தல் போன்ற பல பணிகளை நிசாம் அண்ணா மிகத் திறமையாக மேற்கொண்டார்.

அந்தக் காலப்பகுதிகளில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பிரதேசப் பொறுப்பாளராக இருப்பவர்கள் அரசியல்பணி மட்டுமல்ல அந்தந்த பகுதிகளில் ஏற்படும் சிறிலங்கா இராணுவத்தினரின் சிறு சிறு முன்னகர்வுகளின் போது ஏற்படும் சிறிய மோதல்களை தடுத்துநிறுத்தி களப்பணிகளையும் அவர்களே மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் நிசாம் அண்ணாவும் திருநெல்வேலிப் பகுதிக்கான அரசியல்பணி,   யாழ் கோட்டைக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் களப்பணி இரண்டையும் மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டார்.

மேலும் அந்தப் பகுதியில் ஏற்படும் மிகப் பெரிய மோதல்களின் போது சண்டையணிகளுக்குத் தேவையான உணவு ஒழுங்குகள், பின்னணி வழங்கல் உதவிகள், காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு பின்னகர்த்துதல் போன்றவற்றினையும் நிசாம் அண்ணா திறம்பட மேற்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு உறுப்பாகத் திகழ்ந்த மகளிர் படையணியின் வளர்ச்சிப் பாதையில் பல ஆண் போராளிகளின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அந்த வகையில் நிசாம் அண்ணாவின் பங்களிப்பும் மிகச் சிறப்புமிக்கது. மகளிர் படையணியின் ஆரம்ப காலப்பகுதியில் பெண் அடிமைத்தனத்தில் ஊறியிருந்த எமது மக்கள் பெண் போராளிகளை ஏற்றுக் கொள்ளாது விட்டாலும் தலைவரின் சிந்தனைக்கு வடிவமைத்துக் கொடுத்து மகளிர் படையணியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவராக நிசாம் அண்ணா காணப்பட்டார். அந்தக் காலப்பகுதியில் மகளிர் படையணிக்கு தேவையான வழங்கல் (அடிப்படைத்தேவைப் பொருட்கள்) பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதுடன் அவர்களுக்கான வெளிநிருவாகப் பணிகளை செய்வது என அனைத்து உதவிகளும் செய்துவந்தார்.

மேலும் அந்தக் காலப் பகுதியில் எமது போராட்டத்தின் நிதித் தேவை கருதி எமது அமைப்பு எமது மக்களிடம் நன்கொடையாக ஒரு பவுண் தங்கத்தை பெற்றபோது அதனை சேகரிக்கும் பணியையும் மற்றும் அதன் போது தங்கத்தை தரம் பார்க்கும் பணியையும் கற்று அப்பணியையும் திறம்பட மேற்கொண்டார்.

பின்பு 1987 இல் இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் எமது போராளிகள் காட்டில் மறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். அக் காலப்பகுதியில் கிராம, நகரப்பகுதிகளில் அரசியல்பணி செய்வது என்பது மிகவும் உயிராபத்தானது. ஒவ்வொரு சந்தியிலும் இந்திய இராணுவத்தினன் நிற்பான், இரண்டகர்களின் காட்டிக் கொடுப்பார்கள். இவற்றிற்கு நடுவில் காட்டிலுள்ள  போராளிகளுக்கு மக்களிடமிருந்து உணவு சேகரித்துக் கொடுத்தல், சண்டையணிக்கு இராணுவத்தினரின் நகர்வுகள் பற்றிய தகவல்களை அறிந்து சொல்லுதல், மக்களுக்கு உணர்வூட்டும் வகையில் துண்டறிக்கைகளை வழங்கள் போன்ற மகத்தான பணிகளை நிசாம் அண்ணா தன்னுயிரை துச்சமென நினைத்து மேற்கொண்டார். மேலும் இந்திய வல்லாதிக்க படைகளுக்கு எதிராக ஆங்காங்கே நடைபெற்ற கரந்தடி போர் முறையிலான போர்களிலே இந்திய இராணுவத்தை நேரடியாக எதிர்கொண்டு பல முறியடிப்புகளைச் செய்தும், நகர்ந்து கொண்டும் பல போர்க்களங்களில் தீரமாகவும் சிறப்பாகவும் செயற்பட்டார்.

1987 ஐப்பசி மாதம் 10 ஆம் தேதி எமது போராளிகளைத் தேடி அழிக்கும் முயற்சியில் இந்திய இராணுவம் யாழ். நாவற்குழிப் படைத்தளத்திலிருந்து முன்னேறி வந்து கொண்டிருந்தது. எமது ஆண், பெண் போராளிகள் யாழ்.கோப்பாய் பகுதியில் வைத்து இந்திய இராணுவத்தினரை இடைமறித்து பெரும் போர்புரிந்து கிந்திய வல்லாதிக்கப் படையினருக்கு பாடம் புகட்டினர். இப்போரில் நிசாம் அண்ணாவும் மேஜர் முரளி அண்ணா தலைமையில் அவருடன் இணைந்து கிந்திய வல்லாதிக்கப் படையினருக்கு எதிராக திறமையாக போரிட்டார். இப்போரில் ஈழத்தின் முதல் பெண் மாவீர முத்தான 2ம் லெப்.மாலதி உட்பட பல மாவீரர்கள் உயிரீகம் செய்தனர்.

பின்பு 1987ஆம் ஆண்டு மக்களிற்குத் துண்டறிக்கை வழங்க நிசாம் அண்ணா அவரது உதவியாளருடன் சென்ற போது இந்திய இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை இந்திய இராணுவத்தின் சிறைச்சாலையில் 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் வரை மூன்று ஆண்டுகள் போர்க் கைதியாக தடுப்புக் காவலில் தனது வாழ்நாட்களைக் கழித்தார். அப்போது அவருடன் போர்க் கைதியாக நிதித்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவும் ஒன்றாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்பு நிசாம் அண்ணா இந்திய இராணுவம் ஈழத்திலிருந்து வெளியேறியபோது விடுதலை செய்யப்பட்டார்.

எமது தேசியத் தலைவர் எமது விடுதலை இயக்கத்தை உருவாக்கி, எமது மக்கள் பல நன்மைகளும் பயனும் பெறக்கூடியதுமான பல உட்கட்டமைப்புகளை உருவாக்கினார். அந்தவகையில் எமது போராட்டத்துக்கான நிதியினையீட்டிக் கொடுக்கவும் எமது மக்களை பட்டினிச்சாவிலிருந்து பாதுகாக்கவும் எதிர்கால தமிழீழத் திருநாட்டுக்கு ஏற்றவகையில் நாட்டை முன்னேற்றுவதற்குரிய பொருண்மிய முன்னேற்றத்திற்கான திட்டங்களை உருவாக்கி செயற்படுத்துவதற்காகவும் எமது தேசியத் தலைவனால் பெருங்கனவுடன் 1990 ஆம் ஆண்டு தமிழீழ நிதித்துறை என்ற பிரிவு தனியாக உருவாக்கப்பட்டது. எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கு நிதித்துறையின் திட்டமிடல் செயற்பாடுகளே மிகப் பெரிய பலமாக இருந்தது.

இதற்குப் பொறுப்பாளராக பிரிகேடியர் தமிழேந்தி அப்பா நியமிக்கப்பட்டார். இந்திய இராணுவத்தின் சிறைச்சாலையில் போர்க் கைதியாக தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் நிசாம் அண்ணாவின் திறமைகள் மற்றும் ஆளுமையான செயற்பாடுகளை கண்டறிந்திருந்தபடியால் தமிழேந்தி அப்பாவால் அவர் 1990 இல் நிதித்துறைப் போராளியாக உள்வாங்கப்பட்டார். அங்கு தமிழேந்தி அப்பாவின் மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும், செல்லப்பிள்ளையாகவும் அவரது அன்பான திட்டுக்கள் அன்பான அடிகள் வாங்கி அவரது எந்த வேலையென்றாலும் எதற்கெடுத்தாலும் "டேய் நிசாம்" என்று உரிமையுடன் அழைக்கப்படும் தமிழேந்தி அப்பாவின் ஒரு பிள்ளையாகவும் நிசாம் அண்ணா விளங்கினார். பின்னர் தமிழேந்தி அப்பா தமிழ் மேல் கொண்டிருந்த மொழிப்பற்றின் காரணத்தினால் நிசாம் அண்ணாவின் பெயரானது "சேரன்" என்று மாற்றப்பட்டது.

பின்பு தமிழீழ நிதித்துறையில் உறுப்பினர்கள் அதிகமாகிக் கொண்டு போனபோது நிசாம் அண்ணா நிதித்துறை ஆளுகைப் பொறுப்பாளராக தமிழேந்தி அப்பாவினால் நியமிக்கப்பட்டார். பின்னர் 1990 ஆம் ஆண்டு திரும்பவும் எமது மக்களிடம் தமிழீழ மண்மீட்பு நிதி மீளச் செலுத்தும் கடனாக பெறப்பட்டபோது அதிலும் தங்கத்தினை தரம் பார்த்தல் மற்றும் அதற்கான இடவசதியை ஒழுங்குபடுத்திக் கொடுத்தல் மற்றும் ஏனைய நிருவாக நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொண்டார்.

1992 ஆம் ஆண்டு நிதித்துறையில் மகளிர் இணைக்கப்பட்டபோது அவர்களுக்கான வழங்கல் (அடிப்படைத்தேவைப் பொருட்கள்) பெற்றுக் கொடுத்தல், முகாம் அமைத்துக் கொடுத்தல் என வெளிநிருவாகப் பணிகள் அனைத்தையும் கவனித்தார். அனைத்து பெண் போராளிகளையும் தனது சொந்த சகோதரிகள் போல நினைத்து பெயர் கூட சொல்லிக் கூப்பிடாமல் "தங்கச்சி" என அன்பாக உரிமையுடன் அழைப்பார். இதனால் எல்லா பெண் போராளிகளும் நிசாம் அண்ணாவை ஒரு மூத்த சகோதரன் போல நினைத்து தமது தேவைகளை உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவார்கள்.

பின்பு நிதித்துறையானது ஆயப்பகுதி, வருவாய்ப்பகுதி, வழங்கல்பகுதி, கணக்காய்வுப்பகுதி, வாகனப் பகுதி, தளவமைப்புப்பகுதி, உடமைப்பகுதி, தமிழீழ போக்குவரவுக்கழகம், பெருந்தோட்டப்பகுதி, வேளாண் பண்ணைகள், தையல்பகுதி, ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரி, நகைத் தொழிலகம், உணவு வழங்கல்பகுதி போன்றனவும் மற்றும் வாணிபங்களான சேரன் வாணிபம், பாண்டியன் வாணிபம், சோழன் வாணிபம், மருதம் வாணிபம், நகை வாணிபம், கால்நடை வாணிபம், இன்னும் பல வாணிபங்கள் மற்றும் வாகன திருத்த நிலையங்கள் பின்பு 1994 இல் தமிழீழ வைப்பகம் என பல பிரிவுகளை உள்ளடக்கி படிப்படியாக விரிவாக்கம் கண்டது.

இவற்றின் விரிவாக்கத்திற்கும் பாரிய வளர்ச்சிக்கும் திட்டமிடல் செயற்பாடுகளுக்கும் நிசாம் அண்ணா பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் வலது கையாக இருந்து உறுதுணையாக செயற்பட்டு அவற்றிற்கான முழுநிருவாகப் பணிகளினை மேற்கொண்டார். அத்துடன், யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியிலும் கணக்கியல் பகுதிநேரக் கற்கைநெறியினையும் மேற்கொண்டார். மேலும் முகாம்களில் நடத்தப்படும் வர்த்தகம், கணக்கியல் தொடர்பான சிறப்பு வகுப்புக்களிலும் கலந்துகொண்டு தனது அறிவாற்றலை வளர்த்துக் கொண்டார். முகாம்களில் நடாத்தப்படும் சிறப்பு வகுப்புக்கள் போராளிகளின் பணிகள் தடைப்படாமல் இருப்பதற்காக பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் நடைபெறும். இதன்போது சில சமயங்களில் உறக்கக் கலக்கத்தில் இருக்கும் நிசாம் அண்ணாவையே காண முடியும். பகலில் அதிக பணிச்சுமையின் காரணத்தினாலும் எந்நேரமும் தனது பணியைப் பற்றி அதைச் சரிவரச் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பதாலும் அவரது மூளையானது களைப்படைந்து வகுப்புக்கள் நடைபெறும் போது தன்னையறியாமல் தூங்கி விடும் பழக்கம் நிசாம் அண்ணையிடம் காணப்பட்டது.

1994 வைகாசி மாதத்தில் முதலாவது தமிழீழ வைப்பகம் யாழ்ப்பாணத்தில(கன்னாதிட்டி சந்தியில்) திறக்கப்பட்டது.உலகத்திலேயே காவலாளிகள் இன்றி கண்காணிப்பு கருவிகள் ஏதுமின்றி எந்தக் கொள்ளைகளுமின்றி இயங்கிய ஒரேயொரு வங்கியென்றால் அது தமிழீழ வைப்பகம் தான். இது மக்களுக்கு கடன் நடவடிக்கைகளுக்கான வட்டி வீதத்தை சிறிலங்கா அரசின் வர்த்தக ரீதியிலான வங்கிகளின் விகிதங்களின் சதவீத அளவை விட குறைவான அளவையே மக்களிடம் அறவிட்டது. மற்றும் சிறுவர்களுக்கென அமுதம் தேட்டக் கணக்கு எனும் சேமிப்புக் கணக்கை உருவாக்கி தமிழில் பெயர் சூட்டுவதையும் சேமிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ் பெயர் வைக்கப்படும் குழந்தைகளுக்கு தாமே முதல் வைப்புத் தொகையையிட்டு குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பித்து வைத்தனர். இதிலிருந்து எமது அமைப்பு இதிலிருந்து எமது அமைப்பு தொலைநோக்குடன் போராடியமை புலனாகும்.

இந்த முதலாவது தமிழீழ வைப்பகம் திறக்கப்பட்டபோது அதில் நிசாம் அண்ணாவின் பங்களிப்பானது அளப்பரியதாக இருந்தது. அதற்கான இட வசதிகளை ஒழுங்குபடுத்திக் கொடுத்ததுடன் அதற்கான முழு நிருவாகப் பணிகளினையும் அவரே திறம்பட மேற்கொண்டார்.

மேலும் 1994 இல் பணியாளர்களுக்கான கணக்காய்வு கற்கைநெறி பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கான முழு திட்டமிடல், நிருவாகப் பணிகளையும் நிசாம் அண்ணாவே மேற்கொண்டார்.

பின்னர் அவர் திருமண அகவையை அடைந்ததும், எமது அமைப்பின் அனுமதியுடன் 1997 ஆம் ஆண்டு பெண் போராளி ஒருவரை இணையேற்று 1998 இல் ஒரு பெண் குழந்தைக்கும் பின் 2002 இல் இன்னுமொரு பெண் குழந்தைக்கும் தந்தையானார். அவரது இல்லற வாழ்க்கை போராட்ட வாழ்க்கைக்குத் தடையாக அமையவில்லை இன்னும் உந்துகோலாகவே இருந்தது.

1997 இல் அவரது வணிகம் தொடர்பான அறிவு, அர்ப்பணிப்புடன் பணிபுரியும் பாங்கு என்பன இனங்காணப்பட்டு நிதித்துறையால் நடாத்தப்பட்ட வடிசாலைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்பு நிசாம் அண்ணாவின் விடாமுயற்சியினாலும் வணிகத் திட்டங்களாலும் வடிசாலையுடன் இணைந்து பல வணிக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. அதன் பின் சிறிய அளவில் நடத்தப்பட்ட வடிசாலையானது இளந்தென்றல் வாணிபம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் அடைந்தது. அதனுடன் சில இணை வாணிபங்களான மிகவும் தரம் வாய்ந்த நட்சத்திர விருந்தினர் மாளிகைக்கு ஒப்பான தளபாடங்கள், உணவகம், விருந்தினர் தங்குவிடுதி போன்ற வசதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய விருந்தினர் மாளிகை, எரிவாயு வாணிபம் என்பன உருவாக்கப்பட்டது. இவ் வாணிபங்களானவை எமது போராட்டத்திற்கான பெருமளவு நிதியினை ஈட்டித் தந்தன. அதற்கான பணியினை நிசாம் அண்ணா தன்னையும் தன் குடும்பத்தையும் கவனிக்காது மேற்கொண்டு, தனது வாணிபத்திற்கென்றே தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டார். அதற்குச் சான்றாக, நான் நேரில்கண்ட இரண்டு நிகழ்வுகளைக் கூறுகின்றேன்.

மல்லாவியில் வடிசாலை வாணிபம் இயங்கிய போது நிசாம் அண்ணாவின் வீட்டிற்கருகில் தான் எமது முகாம் ஒன்று இருந்தது. அவரின் வீடும் வடிசாலை வாணிபத்திற்கு அருகில் தான் இருந்தது. அதிகாலை 5 மணியளவில் நாம் வீதி வழியாக ஓட்டப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது தனது வீட்டிலிருந்து ஈருருளியில், வாயில் பற்தூரிகையினை வைத்தபடி ஒரு கையால் ஈருருளியின் கைப்பிடியை பற்றியபடி மறுகையால் பல்லினைத் துலக்கியபடி சாரமும் மேற்சட்டையும்அணிந்து வடிசாலை வாணிபத்தினை நோக்கிச் செல்லும் நிசாம் அண்ணாவைக் காணலாம். பல்லுத் துலக்கும் நேரத்தைக்கூட மிச்சப்படுத்தி அதிகாலையில் தனது வாணிபத்தின் பணியாளர்கள் பணியினைக்  கிரமமாக மேற்கொள்ளுகின்றார்களா என மேற்பார்வை செய்துவிட்டு பின் வீட்டுக்கு திரும்பி வந்து குளித்து ஆயத்தமாகி திரும்பவும் தன் வாணிபம் நோக்கிச்செல்வார்.

பின்பு கிளிநொச்சியில் இளந்தென்றல் வாணிபம் இயங்கிய போது அவரது இல்லமும் வாணிபத்திற்கு அருகே தான் இருந்தது. ஒரு நாள் நாம் அந்த வீதியால் செல்லும் போது நிசாம் அண்ணா காலில் பாதணி அணியாமல் வெறுங்காலுடன், மக்கள் நடமாட்டம் கூடுதலாகவுள்ள வீதியால் சிந்தித்தபடி தனது வாணிபம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்டு நாம் அவரை வழி மறித்து "என்ன நிசாம் அண்ணா காலில பாதணியும் இல்லாமல் போறீங்கள்" என்று கேட்டதும் தான் திடுக்கிட்டு நின்று தனது காலைக் கவனித்து "ஐயோ தங்கச்சி வாணிபத்தின் ஒரு சிக்கல் தொடர்பாகச் சிந்தித்துக்கொண்டு வந்ததில மறந்திட்டேன்" எனக் கூறி விட்டு காலில் பாதணி இல்லாததையும் பொருட்படுத்தாது வெறுங் காலுடனே நடந்து தன் வாணிபம் நோக்கிச் சென்றார். அந்தளவுக்கு எந்நேரமும் தனது பணியையே சிந்தித்து தன்னையும் கவனியாது எந்த ஆடம்பரமுமின்றி எளிமையாகச் செயற்படும் ஒரு உன்னதமான போராளி அவர்.

தனது வாணிபம் இலாபமீட்ட வேண்டும் என்ற குறிக்கோளில் எவ்வளவு சிக்கனமாக செலவுகளைக் குறைத்துச் செய்ய முடியுமோ என்று ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்து தான் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார். அவருக்கு கணக்கியல் தொடர்பான போதிய புலமை இல்லாத போதும் தனது பட்டறிவின் மூலம் (நடைமுறை அனுபவம்) நிதி நடவடிக்கைகளில் ஏற்படும் பிறழ்வுகளைக் கண்டு பிடித்து சீர் செய்யும் ஒரு தனித் திறமை அவரிடம் காணப்பட்டது. மிகவும் இயல்பாக, அமைதியாக, எளிமையாக, பழகுவதற்கு மிகவும் இனிமையானவராகக் காணப்படும் அவர் பணி என்று வந்து விட்டால் பணியாளர்கள் ஏதாவது தவறிழைத்தால் மிகவும் கடுமையாக கண்டிப்பாக நடந்தது கொள்வார். அதே நேரம் சிறிதுநேரத்தில் அந்தக் கோபத்தை மறந்து அமைதியாகி, அவர்கள்விட்ட தவற்றின் பாரதூரத் தன்மையை விளக்கி அவர்களைத் தனது நண்பர்கள் போல தோளில் தட்டிக் கொடுத்து பழகும் பாங்கும் அவரிடம் காணப்பட்டது. தனது ஒரு சிறு தவற்றின் மூலம் எமது போராட்டத்துக்கு அவப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்.

மேலும் தனது வாணிபத்தில் பணிபுரியும் பணியாளர்களின் நலனிலும் அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருந்தார். பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்காக துடுப்பாட்ட அணியினையும் (Cricket) பெண் பணியாளர்களுக்காக வலைப்பந்து அணியினையும் (netball) உருவாக்கி அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவித்து மாவட்ட மட்டப் போட்டிகளுக்கு அவர்களை அனுப்பி பங்குபெறச் செய்து அவர்கள் வெற்றிவாகை சூடி வருவதையிட்டு தானும் மகிழ்வார். மேலும் பணியாளர்களின் தனிப்பட்ட நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது வாணிபத்தில் பணிபுரிந்த குடும்பத்தினரின் ஆதரவில்லாமல் மிகுந்த வறிய நிலையில் இருந்த இரண்டு பணியாளர்களுக்கு அவரது தலைமையில் திருமணத்தை நடாத்திக் கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியிலே தனது மகிழ்ச்சியினைக் காண்பார்.

பின்பு 2003-2005 ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக் காலப்பகுதியில் தமிழீழ மீட்பு நிதிக்கடன் எமது அமைப்பினால் மக்களுக்கு மீளளிக்கப்பட்டது. பல இடப்பெயர்வுகளுக்குள்ளும் போர்ப் பாதிப்புக்களுக்குள்ளும் தமிழீழ மீட்பு நிதிக்கடன் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்து (அந்த காலப்பகுதியில் கணினி முறைப்படுத்தல் வசதியற்றிருந்த படியால் பணம், நகை வழங்கிய பற்றுச்சீட்டு வழங்கிய அடிக்கட்டை ஏடுகளும் கைப்பட பதியப்பட்ட பதிவு விபரங்களும் மட்டுமே இருந்தன). பின்பு அவற்றினைக் கணினிமயப்படுத்தப்பட்ட முறையிலான நிருவாகக் கட்டமைப்பினூடாக மீளளித்திருந்தமையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறையின் சிறந்த நிருவாக திட்டமிடல் கட்டமைப்பையே காட்டுகின்றது.

அதைவிட 2003 ஆம் ஆண்டு முகமாலைப் பகுதியில் தமிழீழ மீட்பு நிதி கடன் மீளளிப்பு பணி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஒரு பன்னாட்டு அரசசார்பற்ற நிறுவன (NGO) அதிகாரி ஒருவர் அதனைப் பார்த்து வியந்து "நான் இப்படி போராட்ட அமைப்புகளுள்ள நிறைய நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன் ஆனால் தனது சொந்த மக்களிடமே போராட்டத்துக்கு கடன் வாங்கி அதனை நேர்மையாக திருப்பிக் கொடுத்த ஒரேயொரு அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தான் பார்க்கிறேன் என்று பாராட்டினார். மேலும் எத்தனையோ மக்கள் பற்றுச் சீட்டினை தொலைத்தவர்கள், பெற்றோர் இறந்துவிட்ட பின்னுரித்தாளர்கள் என பல சிக்கல்களுடன் வந்தார்கள். அவற்றை பெருஞ் சிரமங்களுக்கு நடுவிலும் பதிவுகளை வைத்து சீராக ஆராய்ந்து கண்டு பிடித்து உரியவர்களுக்கு நிதி மீளளிக்கப்பட்டது. இதுவும் தமிழீழ நிதித்துறையின் சிறந்த நிருவாக கட்டமைப்பையே காட்டி நிற்கின்றது.

இப்பணியின் முதன்மை கருதி பெரும்பாலும் நிதித்துறைப் போராளிகளே இதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இதிலும் நிசாம் அண்ணாவின் பங்களிப்பு அளப்பரியது. தனது வாணிபங்களின் பணிச்சுமைக்கு நடுவில் இப்பணியிலும் ஈடுபட்டு தங்கம் தரம் பார்த்தல் மற்றைய நிருவாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொடுத்தல் என எல்லாவற்றிலும் தனது பங்களிப்பை திறம்பட நிசாம் அண்ணா மேற்கொண்டார்.

மேலும், அந்தக் காலப்பகுதிகளில் எமது போராட்டத்துக்கான வணிக நிதி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளில் கப்பல் மூலம் வணிக நடவடிக்கைகள், மற்றும் வேறும் பல வணிக நடவடிக்கைகளுக்காக போராளிகள் அல்லாத வெளிப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுவதுண்டு. அவர்கள் சிலநேரங்களில் இரண்டகர்களின் காட்டிக் கொடுப்புகள் மற்றும் பல காரணங்களினால் அந்தந்த நாட்டு அரசாங்கங்களினால் பிடிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தடுப்புக் காவல்களில் வைக்கப்படுவதுண்டு. அதனால் அவர்கள் விடுதலையாகி வரும் வரை அவர்களின் குடும்பத்தினருக்கான நிதி உதவிக் கொடுப்பனவுகள் தமிழீழ நிதித்துறையினாலேயே வழங்கப்பட்டன. அப்பணியையும் நிசாம் அண்ணாவே திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி செவ்வனே மேற்கொண்டார்.

பின்பு அமைதிக்காலம் முடிந்து போர் மேகங்கள் மூண்ட போது அவரது வாணிபங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து விசுவமடு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மிகுந்த சிரமங்களுக்கு நடுவில் தனது வாணிபங்களையும் பணியாளர்களையும் இடம் நகர்த்தி ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்தி சீரமைத்து தனது பணியினை மேற்கொண்டார்.

முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் இறுதி வரை எமது நிதித்துறையின் செயற்பாடானது மக்களுக்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது. அதில் முதன்மைப் பங்காற்றியவர்களில் நிசாம் அண்ணாவும் ஒருவர். நிதித்துறையால் ஊர்திகளில் பொருத்தப்பட்ட நடமாடும் அரிசி ஆலை மூலம் நெல்லிலிருத்து அரிசி குத்தியெடுத்து கஞ்சி காய்ச்சி இறுதி வரை மக்களிற்கு வழங்கப்பட்டது. மேலும் ஊர்திகளில் பொருத்தப்பட்ட நடமாடும் வெதுப்பகங்கள் மூலம் காயப்பட்ட மக்கள், போராளிகளுக்கு வெதுப்பியும் காயப்பட்ட குழந்தைகளுக்கு வெதுப்பியில் மாஜரீன்,சீனி சேர்த்து ஒரு ஊட்டச் சத்து உணவு போலவும் வழங்கப்பட்டது. இவற்றில் நிசாம் அண்ணாவின் பங்களிப்பு போற்றுதற்குரியதாக இருந்தது. முள்ளிவாய்க்கால் இறுதிக் காலப்பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் அட்டூழியங்களால் மக்கள் படும் துன்பத்தினைப் பார்த்து அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இராணுவத்தினரின் அத்தனை கொத்துக் குண்டு வீச்சுக்கள், எறிகணை மழைகள், வான்குண்டுவீச்சுக்களுக்கு மத்தியிலும் தனக்கு ஏற்படப் போகும் உயிராபத்தை பற்றி சிந்திக்காது தனது மக்களுக்குப் பணிசெய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒரு உன்னதமான போராளியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். மேலும் தன் வாணிபப் பணியாளர்களை ஒழுங்கமைத்துக் கொண்டு போர் முன்னரங்கப் பகுதிகளுக்கு பதுங்கு குழி அமைத்தல், உணவு வழங்கல் போன்ற பணிகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டார்.

இறுதியில் 13.05.2009 அன்று, அவரது கையில் வாணிபத்தின் பணமானது மிகவும் சொற்பமான தொகை மட்டுமே காணப்பட்டதால் கடைசியாக நின்று பதுங்கு குழி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க அது காணாத படியால் முள்ளிவாய்க்கால் பகுதியில் அவரது வாணிபத்திற்கு சொந்தமான ஒரு பாரவூர்தியில் இருந்த உணவுப் பொருட்களை விற்று அதன் மூலம் வரும் பணத்தின் மூலம் பணியாளர்களுக்கான ஊதியத்தினை வழங்கலாம் என்ற எண்ணத்தில் கையில் இருந்த சொற்பமான தொகைப் பணத்தினையும் தனது மனைவியிடம் கொடுத்து தான் திரும்பி வராவிட்டால் அப்பணத்தினை பணியாளர்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு கூறிவிட்டு தனது மனைவி பிள்ளைகளின் நலனைக் கூட கருத்தில் கொள்ளாது இறுதி நேரத்தில் கூட தனது பணியாளர்களின் நலன் கருதி தனது பாதுகாப்பினையும் பொருட்படுத்தாது கடும் எறிகணை வீச்சுக்குள் பாரவூர்தியை நோக்கிச் சென்ற நிசாம் அண்ணா பாரவூர்திக்கருகில் சென்றடைந்ததும் அருகில் விழுந்து வெடித்த எதிரியின் எறிகணை ஒன்றினால் தன்னுயிரினை ஈந்து ஆயிரமாயிரம் மானமாவீரர்கள் வரிசையில் இணைந்து கொண்டு மாவீரர் நிசாம்/சேரன் ஆக முள்ளிவாய்க்கால் மண்ணில் தனது இறுதி மூச்சைக் கலந்து ஈழ மண்ணை முத்தமிட்டுக் கொண்டார்.

-நிலாதமிழ்-

தொடர்புக்கு::

niththiyananthan92@gmail.com

நிசாம்/சேரன் இந்த மாவீரருடைய வீரச்சாவு  முள்ளிவாய்க்காலில்  இறுதி நேரத்தில் நடைபெற்றபடியால் இராணுவத் தகுதிநிலை வழங்கப்படவில்லை என்பதை நிலாதமிழ் தனது முன்னுரையில் கூறியுள்ளார்..

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post