மீள் பதிவு 25 may 2015 வெளிவந்த கட்டுரை இது
தமிழர்
அரசியலின் சோகம்.
-அருணா
நீதித்துறையில்
சில மரபுகள் உள்ளன. ஒருவரை நீதிபதியாக நியமிப்பதற்கு முன்னர் அவர் திருமணமானவராக இருக்க
வேண்டும். அவரது குடும்ப வாழ்வு சிக்கலில்லாததாக இருக்க வேண்டும். குழந்தைகள் இருக்க வேண்டும். என்பன முக்கிய தகுதிகளாகக் கருதப்படும். அத்துடன் ஊனமுற்றவராக இருத்தல் கூடாது என்பதுவும் கவனத்தில் கொள்ளப்படும். இவை சட்டங்களாக அமையாவிட்டாலும்
கவனத்தில் கொள்ளப்படும்.
விதிவிலக்காக
ஊனமுற்ற ஒருவரை அவரது மேலதிக தகுதிகளின் நிமித்தம் நீதிபதியாக நியமிக்கப்படுவதுண்டு. இவையெல்லாம் ஒருவர் எல்லா விடயங்களையும் தெரிந்திருத்தல் சகிப்புத்தன்மை அனுபவஅறிவு என்பனவற்றின் அடிப்படையில் நீதி வழுவாது தீர்ப்பு
வழங்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டவை. ஊனமுற்றவராக இருத்தல் கூடாது என்பதும் விசாரணைக்கு வரும் ஒருவர் கம்பீரமாக நடந்து வரும் போது நீதிபதியின் மனதில்
அவருக்கெதிரான உணர்வு தோன்றிவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டுதான் விடுதலைப் புலிகளின் நீதித்துறையிலும் ஆரம்ப காலத்தில் திருமணமாகாதவர்களே கணிசமானளவினராக இருந்தனர். எனினும் சில காலத்திலேயே யதார்த்தத்தைப்
புரிந்து கொண்டு சில மாற்றங்களைச் செய்தனர்.
குடும்ப வழக்குகளைக் கையாள திருமணமான ஆண் பெண் போராளிகளே
குடும்ப நல ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.
இலங்கை
அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக பௌத்த துறவிகளே உள்ளனர். இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியாமல் தத்தளிப்பதற்கு
குடும்ப வாழ்வியலைப் புரிந்து கொள்ளாத சகிப்புத் தன்மையுடன் அயலவருடன் வாழ்ந்து பழகாத பௌத்த பிக்குகளே காரணம் என்றால் மிகையில்லை. இந்த நாட்டின் பிரதமரையே
சுட்டுக் கொல்லுமளவுக்கு வெறிபிடித்தவர்களே காவிகளுக்குள் இருந்தனர். தமிழ் மக்கள் மீது மட்டுமல்ல முஸ்லிம்கள்
மீதான வன்முறைகளுக்கும் பொதுபல சேனாவைச் சேர்ந்த பிக்குகளே காரணம்.
துரதிஸ்டவசமாக
தமிழருக்கும் இந்த நிலை உருவாகிவிட்டது.
தன்னை ஒரு துறவி என்று
சொல்லிக் கொள்ளும் ஒருவர் பிக்குகளின் அச்சொட்டாகவே இருந்து வருகிறார்.
திருஸ்டி
பரிகாரத்துக்கும் பூசனிக்காயை நாடுவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பூசனிக்காய்க்குப் பதிலாக யோகேஸ்வரன் என்றொருவரைத் தேடிப் பிடித்துள்ளனர். சட்டைக்குள் விடப்பட்ட தேளாக இவர் செய்யும் லொள்ளுகளுக்கு
அளவேயில்லை. தமிழர் விடுதலைப் போராட்ட வரலாறும் தெரியாத தியாகம் என்றால் என்ன, போராட்டப் பங்களிப்பு என்றால் என்ன என்று புரியாத
ஒருவரை தமிழர் அரசியலுக்குள் இழுத்து வந்ததற்கான முழுப் பாவத்தையும் பொறுப்பையும் தற்போது தமிழரசுக் கட்சியின் செயலாளராக உள்ள கி.துரைராஜசிங்கமே
ஏற்க வேண்டும். அவரைச் சாமியாராகவே இருக்க விட்டிருந்தால் துறவு வாழ்க்கையும் அவர் பூரணப்படுத்தியிருப்பார். எல்லாவற்றையும் துறந்த அவரால் பதவி மோகத்தை மட்டும்
துறக்க முடியாமல் இருப்பதற்கான பாவத்தைத் துரைராஜசிங்கம் பொறுப்பேற்றே ஆக வேண்டும்.
நான்
துறவி. மரணச் சடங்குகளுக்கு நான் செல்வதில்லை என்பது
யோகேஸ்வரனின் வாதம். சுடலையை விட மோசமான நாடாளுமன்றத்துக்குப்
போகும் இவர் மரணச் சடங்குகளைத்
தீட்டாகப் பார்க்கிறார். இவரது தொகுதியில் உள்ள சித்தாண்டியில் அண்மையில்
ஒரு மரணச் சடங்கு நடைபெற்றது. கடந்த 22 வருடங்களாக சிறையில் வாடும் செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற அரசியல் கைதியின்
தாயார் காலமாகிவிட்டார். பல வழியிலும் இவருக்கு
செய்தி அனுப்பப்பட்டது. அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று
இவரிடம் கோரிக்கை விடப்பட்டது. துறவி உதவி செய்வதையும் தீட்டாகப்
பார்த்தார். மரணச் சடங்கிலும் கலந்து கொள்ளாததைப் போலவே உதவுவதைப் பற்றியும் சிந்திக்க இவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் தமிழர் போராட்ட வரலாற்றில் இவரது பங்களிப்போ அதைப் புரிந்துகொள்ளும் ஆற்றலோ இல்லாதது தான். நாடாளுமன்ற அரசியலுக்கு வருவதற்கு முன்னர் எந்தப் பங்களிப்புமே செய்யாத இவர் தீடீரென்று தான்
ஏதோ கரும்புலியாக இருந்தவர் போலப் படம் காட்டுகிறார். ஓமக்குச்சி
நரசிம்மன் கதாநாயக வேடம் போட்டது போல கோமாளித்தனமாக இருக்கிறது
இவரது நடவடிக்கைகள்.
கிழக்கு
மாகாணத்தின் முதல் போராளி யோகன் பாதர் (பாலிப்போடி சின்னத்துரை) பாசி என்று தமிழ்
இளைஞர் பேரவையினரால் ( மாவை. காசி உட்பட ) அழைக்கப்படுபவர்.
விடுதலைப்
புலிகளின் முதல் மூன்று முகாம்களிலும் பயிற்சி பெற்ற மட்டக்களப்பு--அம்பாறை மாவட்டப் போராளிகள் பாசியின்
தொடர்பில் இருந்தவர்களே. கருணாவைக் கூட பாசிதான் இயக்கத்தில்
சேர்த்தார். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னதாக 1977 பொதுத் தேர்தல் நடைபெற்ற போது தமிழ்த் தேசியத்தை
வலுப்படுத்த இவர் ஆற்றிய பங்களிப்பு
காத்திரமானது. அந்தக் காலத்தில் யோகேஸ்வரன் தாயாரின் துணையில்லாமல் இயற்கை அழைப்புகளுக்குப் போயிருக்கமாட்டார். இவர் இப்போது பாசி
மீது அரசியல் அடைக்கலம் பெற்ற தனது அடியாள் மூலம்
சேறு பூச முனைந்தார். கடைசியில்
நேரடியாகவே களத்தில் இறங்கி விட்டார்.பாசி இறுதிக்கட்ட போரின்
பின்னர் தடுப்புக் காவலில் இருந்தார். 50 வயதுக்கு மேற்பட்டோரை விடுவிக்க ஒரு முகாமில் முடிவெடுத்தனர்.
அப்போது
விடுதலைப் புலிகள் ரவி -- அரசியல்துறை மணியண்ணர் -- காப்பகம் டிஸ்கோ -- தமிழ்ச்செல்வனின் அண்ணா மூர்த்தி -- நிதித்துறை தொமஸ் -- போன்றோர் விடுதலையாகும் போது வயதின் அடிப்படையில்
இவரும் விடுதலை செய்யப்பட்டார். அந்தக் காலத்தில் உங்களது வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்.
உங்களது பாதுகாப்புக்கு நாம் எந்த வகையில்
உதவ முடியும் என்று மட்டக்களப்பில் இருந்து தெரிவான யோகேஸ்வரன் உட்பட எந்த எம்.பியுமே
பாசியைக் கேட்கவில்லை. குடும்பத்தின் வாழ்க்கைச் செலவு பிள்ளைகளின் கல்விச் செலவு என்பதெல்லாம்
வெறும்
புக்கைக்கட்டியுடன் முடிந்து போகும் விடயமல்ல என்பது குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களுக்குத் தான் புரியும். பாசியின் இந்த
அவல வாழ்வுக்கு புலம்பெயர்ந்த கிழக்கு மாகாணத்தவர்களும் காரணம். கிழக்கின்
முதல் போராளியின் பாதுகாப்பு குறித்து அவர்கள் எள்ளளவும் அக்கறை காட்டவில்லை. அனைவருமே தங்களுக்கான துணைவியரை மட்டும் மட்டக்களப்பில் இருந்து எடுத்து விடுவார்கள். சமாதான காலத்தில் சுவிஸிக்குச் சென்ற கருணா அங்கு அரசியல் வேலை செய்யும் அனைவரையும்
ஒரு கூட்டத்துக்கு அழைத்தார். ' இதில் எத்தனை பேர் மட்டக்களப்பு ? " என்று கருணா
கேட்ட போது ஒருவருமே அதில்
இல்லை. இது ஒரு கசப்பான
வரலாறு. இந்த நிலையில் எவருமே
எப்பாடுபட்டாவது பாசியைக் காப்பாற்ற கூட்டு முயற்சி கூட எடுக்கவில்லை. பாசியும்,
காசியும் இல்லாமல் போனால் கிழக்கின் தேசியத்தின் வரலாற்றைச் சொல்ல எவருமே இல்லை என்ற உண்மை எவருக்குமே
உறைக்கவில்லை. அதனால் தான் இன்று கரிச்சட்டிகள்
சந்திரனைப் பார்த்து உன்னில் களங்கம் உள்ளது என்று எள்ளிநகையாடுகிறார்கள்.
கிழக்கில் பாசியின் விடுதலைப் போராட்டத்தின் பங்களிப்பின் பெயரால் அரசியல் தஞ்சம் பெற்ற யோகேசின் அடியாள் ஒருவர் இணையத்தளம் ஒன்றில் போராளிகளைக் காட்டிக் கொடுத்தவர் பாசி என்று கூறுகிறார். ஒரு போராளியின்
பெயரைச் சொல்லட்டும் இவர் பாசியால் பாதிக்கப்பட்டவர்
என்று. வயதின்; அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்பதையே அறியாதவர்கள் அவர் மீது சேறு
வீசுகிறார்கள். இழப்பின் சோகங்கள் துயரங்களில் பங்கெடுக்காத யோகேஸ்வரனை அடுத்த தேர்தலில் மக்கள் தெரிவு செய்யமாட்டார்கள் என்பதே நிஜம்.
22 வருடமாக
சிறையில் வாடும் அரசியல் கைதியின் குடும்பத்துக்கு கேட்டும் உதவ மறுக்கும் இவரை
நம்மவராக மட்டக்களப்பு மக்கள் எப்படி ஏற்பர்.
தையல்
உறவு தனக்கு வேண்டாமெனத் துறவு பூண்ட இவர் 2006 ஆம் ஆண்டு தையல்
இயந்திரம் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டுக் கொண்டார். அக் காலத்தில் திருமலை
மூதூர் ஈச்சிலம்பற்றையில் இவர் அரச ஊழியராக
இருந்தார். ஒரு சிறு விட்டுக்
கொடுப்பு சமாளிப்புக்கு முயற்சிக்காமல் விடுதலைப் புலிகளைத் திட்டித் தீர்த்தார். இவர் தற்போது பாசி
மீது குற்றங்கான முனைகிறார்.
இவர்
நாடாளுமன்றம் சென்றால் மஹிந்த உட்பட சுதந்திரக் கட்சி எம்.பிக்களை சந்திப்பதுண்டு.
இதற்குச் சாட்சியாக பல படங்கள் பத்திரிகைகளில்
வெளியாகியுள்ளன. ' நான் உங்களோட கோவம்.
நான் நூறு வீதம் தமிழ்த்
தேசியப் பற்றுள்ளவன். " என்று சிங்கள எம்.பிக்களுக்கு இவர்
சொன்னதாக இதுவரை எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. அண்மையில் வந்தாறுமூலையில் நடந்த நிகழ்வொன்றில் பங்குபற்றிய யோகேஸ்வரன் பாசியை மிகவும் மோசமாகச் சாடியுள்ளார். நாடாளுமன்றில் சிங்கள எம்.பிக்களுடன் கலந்து
பழகுவதை யாரும் தவறெனச் சொல்ல மாட்டார்கள். அது போல தான்
பாதுகாப்பாக உயிர் வாழ தானே விரும்பாத
சில நடவடிக்கைகளைச் செய்ய பாசி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். தடுப்புக் காவலில் இருந்தது போல துறவியான இவர்
மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் திருவிளையாடல் ராஜதந்திரம்
என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். பாசி ஏதாவது செய்தால்
அது துரோகத்தனம் என்பது இவரது விளக்கம்.
பாசியைக்
குறைகூற யோகேஸ்வரனுக்குத் தகுதி இல்லை. இப்போதைக்கு அவர் அவசியமாகச் செய்ய
வேண்டியது அரசியல் பதவியைத் திறக்க மனமில்லாத போலியான இந்தத் துறவு வாழ்க்கையைக் கைவிட்டு இல்லற வாழ்வில் இணைவது தான். அ ப்போது தான்
இழப்புக்களின் வலி தெரியும். சகிப்புத்
தன்மை விட்டுக்கொடுப்பு குடும்ப பாசம் எல்லாம் புரியும். இதற்குள்ளாலும் ஒரு போராளி வாழ்ந்திருக்கின்றான்
என்றால் அதன் மகத்துவம் என்னவென்பதை
இனியாவது உணரமுடியும். எல்லாவற்றுக்கும் முதலில் கிழக்கில் தமிழ்த் தேசியம் எப்படி வளர்க்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இப்போது இருப்பவர்கள் காசி
அண்ணாவும் பாசியும் தான். அடுத்த முறை தீர்த்த யாத்திரைக்கு
இந்தியா செல்லும் போது காசி அண்ணாவைச்
சந்திக்க அவர் முயற்சி செய்ய
வேண்டும். காசியிலே பாவத்தைக் கழுவுவார்கள். இந்தக் காசியைச் சந்தித்து தான் செய்த பாவத்தைப்
போக்கட்டும் யோகேஸ்வரன்.
***
இக்
கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன்
பின்னர் 27 ஆண்டுகளாக
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தனது
46 வது வயதில் 01 ஜனவரி 2020 அன்று சுகயீனம் காரணமாக சிறைச்சாலையில் சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment