கட்சி விரோத செயலுக்காக சுமந்திரன்மீது நடவடிக்கை இல்லையா?

கட்சி விரோத செயலுக்காக  சுமந்திரன்மீது நடவடிக்கை இல்லையா?

-பாரி

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தந்தை செல்வாவின் காலத்தில் இருந்து அங்கம் வகித்தவர் பேராசிரியர் சி. .சிற்றம்பலம். புலிகளின் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தேசியப் பட்டியலுக்காகக் கொடுக்கப்பட் டோரின் பட்டியலில் இவரது பெயரும் இருந்தது. இவரை விட அனந்தி ,சிவகரன் ஆகியோருக்கும் எதிராக கட்சி ஒழுக்காற்று எடுத்தது.இந்த மூவரும் கட்சியிலிருந்து அகற்றப்பட்டனர்.இதில் பேராசிரியர் சி. சிற்றப்பலம் "புலிகளின் காலத்தில் எந்த எந்த விடயங்கள் குறித்து பேசப்பட்டதோ அந்த இடத்திலிருந்து பேச்சுவார்த்தை தொடர வேண்டும்" எனக் குறிப்பிட்டமை கட்சித் தலைவர் மாவைக்கு கடும்சினத்தை ஏற்படுத்தியது .

புலிகள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களில் இனிய வாழ்வு இல்லத்தைத் தவிர ஏனைய சகலவற்றையும் நொறுக்கித் தள்ளிவிட்டார் சுமந்திரன். கூட்டமைப்பைத்தான் உடைத்துவிட்டார்என்றால் கடைசியில் தமிழரசுக் கட்சியையே சிதறடித்து விட்டார் சுமந்திரன்.

   தமிழர்கள் நிர்வாகம் செய்வதற்குத் தகுதியற்றவர்கள் என்று உலகுக்குத் காட்ட வேண்டுமென்பதற்காக வடக்கு மாகாண சபை விவகாரத்தில் இவர் மேற்கொண்ட சதிகள் பற்றிய விபரம் பரவலாக வெளிவந்தன. அதிலும் யு.எஸ் ஹோட்டலில் சுமந்திரன் சார்பாக ஆர்னோல்ட் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டமை பற்றி விந்தன் கனகரத்தினம் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். உண்மையில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என்றும் சர்வதேச விசாரணையே இதற்குத் தேவை என   வடக்கு முதல்வர் தீர்மானம் கொண்டுவந்தமை சுமந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதற்காகவே இந்த நடவடிக்கை. இவர் யாருடைய நலனைப் பேணுகின்றார் என்பதற்கு வேறுவிளக்கம் தேவையில்லை. 15.03.2018 காலைக் கதிர் பத்திரிகை "சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்தவே முடியாது" என்ற தலைப்பில் இளங்கலைஞர் மண்டபத்தில் நிகழ்ந்த பத்திரிகை வெளியீட்டு விழாவில் இவர் ஆற்றிய உரையை வெளியிட்டது. மேலும் நடந்தது இனப்படுகொலைதான் என்று நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென்று சொல்லும் இவர் அந்த ஆதாரங்களைத் திரட்டும் பணி தங்கள் கட்சிக்குகுரியதுதான் என்பதை விஷமத்தனமாக மறைத்தார். அப்படி இல்லையெனில் ஏன் கூட்டமைப்புக்கு  மக்கள் வாக்களிக்க வேண்டும்?   

தன்னிச்சையாக இவர் எடுக்கும் முடிவுகள் பற்றி  ஊடகவியலாளர்கள் நன்கு அறிவார்கள்.கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது 70பது களிலேயே யாழ்.மாநகர சபையில் அங்கம் வகித்த சொலமன் சூ சிறில் போட்டியிட்டார். அந்த வகையில் அவரே யாழ்.முதல்வராக நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் "வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் உரையாடக்கூடிய ஒருவரே மேயர் "என்றார் இவர். அதாவது சொலமன் சூ சிறிலுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது இவரது அறிவிப்பின்  உட்கருத்து. தேர்தலின் பின்னர் தான் மேயர் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்ற  கட்சியின் முடிவை அறிக்கையாகத் தயாரிக்கும்போதே தன்னிச்சையாக வெளியில் வந்து  "ஆர்னோல்ட் தான் மேயர்"  என அறிவித்தார். இது தொடர்பாக தலைவரிடமும், செயலரிடமும் ஊடகவியலாளர்கள் கேட்ட போது "அவ்வாறு முடிவேதும் எடுக்கப்படவில்லை" என்றனர். இதனை ஊடகவியலாளர்கள் சுமந்திரனிடம் கேட்டபோது "அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் ஆர்னோல்ட் தான் மேயர்* என்றார். அதாவது கட்சியின் தலைமையின் முடிவை தான் பொருட்ப்படுத்தப் போவதில்லை; நாட்டாமையான தான் சொல்வதே தீர்ப்பு என்பது அவரது கருத்து.

அந்தத்  தேர்தலில் யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக விளங்கிய கலாநிதி மோகனதாஸ் அரியாலை கிழக்கு வட்டாரத்தில் போட்டியிட்டார். இவருக்கும் ஆங்கிலம் தெரியாது என்று சுமந்திரன் கருதியிருக்கிறார் போல உள்ளது. முதல்வருக்கு எதிரான சதியை முன்னெடுத்த ஆர்னோல்ட்டின் முன்னால்  சாதாரண உறுப்பினராக கலாநிதி மோகனதாஸ் நிற்பதா எனக் கோபமடைந்த அந்த வட்டாரமக்கள் விருப்பமின்றியே அவரைக் தோற்கடித்தனர். சுமந்திரனின் தன்னிச்சையான முடிவு அரசியல் அரங்கிலிருந்து துணைவேந்தராக இருந்த ஒருவரை விலகவைத்தது. ஆர் னோல்ட்டின் நியமனம். தன்னை அனுசரித்தால் தான் அரசியலில் உங்களுக்கான இடம் என்ற சுமந்திரனின் செய்தி தான். 

கடந்த பொதுத்தேர்தலில் ஒருவரை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு "சுமந்திரன் எங்களுக்கு வேண்டும்" என்று உரத்துக்கூறினார் சிறீதரன். பாலா அண்ணருக்கு நிகரானவர் இவர் என புகழ்ந்தார்.குதிரைக்கும் கழுதைக்கும் நாலு கால்கள்; இரண்டு செவிடுகள்; ஒரு வால்;  இரண்டுமே ஏதோ ஒரு வகையில் பயணத்துக்கு உதவுபவை  என்ற வகையில்  இரண்டும் சமமே என்று சொல்ல விளைந்தார் அவர்.

சர்வதேச நீதிமன்றத்தில் தமிழர் படுகொலை விடயம் கொண்டுசெல்லப்பட வேண்டுமென சிறீதரன் சொன்னதற்கு மறுப்பாகவே இளங்கலைஞர்  மண்டபத்தில் உரையாற்றினார்.நல்லாட்சி அரசின் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் " வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு நாம் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறோம்" என்று  சொன்ன போதும்" அப்படி எந்த நிபந்தனையையும் விதிக்க வில்லை" என்று மறுத்த சுமந்திரனுக்காகவே வக்காலத்து வாங்கினார் சிறீதரன்.   

வடமராட்சி பகுதியிலுள்ள பருத்தித்துறை , உடுப்பிட்டி என்பன சுமந்திரனின் தொகுதிகள். கிளிநொச்சி  தொகுதி சிறீதரனுக்கு உரியது என்றே கணிக்கப்பட்டன.இதன் படி நடந்த தேர்தல் முடிவுகளை நோக்குவோம்.

உடுப்பிட்டி,பருத்தித்துறை தொகுதிகளில் தமிழரசு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டமை   கவனத்துக்கு உரியது.

 தொகுதி          செல்லுபடியானவை          கூட்டமைப்பு                     எதிரானவை

கிளிநொச்சி           59,341 ,                                    31,156                                    28,185

உடுப்பிட்டி               22,935                                     3868                                        19,077  பருத்தித்துறை      23, 607                                     5803                                         17,804

தேர்தல் முடிந்ததும் யாழ் மாவட்டத்தில் சுமந்திரன் போதுமான வாக்குகள் பெறாததும், பின்னர் கிளிநொச்சி தொகுதி முடிவு வெளிவந்தபின் அவர் எம்.பி யாக தெரிவானார் என்பதும் இடைப்பட்ட நேரத்தில் நடந்த கூத்துக்கள் பற்றியும்  விபரிக்கத்  தேவையில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்த பின் வரம் கொடுத்த சிவனின் தலையிலேயே கைவைக்க முனைந்தவரின் வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் சுமந்திரன் நடந்துகொண்டுள்ளார். கட்சித் தலைமையை தான் கைப்பற்றுவதற்கு தடையாக இருக்கக் கூடியவர் என்று கருதப்படும் சிறீதரனின் செல்வாக்கை உடைக்க வேண்டும் என முடிவெடுத்து உள்ளுராட்சித்  தேர்தலில் தனக்குச் சார்பான அணியே களமிறங்கியுள்ளார். "நாம் சுமந்திரனின் ஆதரவாளர்கள் என்ற படியால் சிறீதரன் எம்.பி  தரப்பால் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.தமிழரசுக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களான நாம் மொத்தமாகக்  கட்சியில் இருந்து பிரிந்து தனியாகத் தேர்தலை  எதிர் கொள்கிறோம்" என அவர்கள் கூறிதாக  `உதயம்` ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

(இந்த அணிக்கும் தனக்கும் சம்பந்தமில்லையென சுமந்திரன் இதுவரை தெரிவிக்கவில்லை) இதன் மூலம் இதன் மூலம் கட்சி விரோத நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டமை தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

பேராசிரியர். சி . .சிற்றம்பலம் ,அனந்தி,சிவகரன், நீதியரசர் .சி வி .விக்கினேஸ்வரன் போன்றோருக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்த கட்சி தலைமை கட்சி விரோத செயல்களுக்காக சுமந்திரன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தயங்கினால்  வேண்டும். தலைவர் மாவை,செயலாளர் .சத்தியலிங்கம்,  முன்னாள் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தர் ஆகியோருக்கு பகிரங்க கடிதம் எழுத வேண்டும். சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிடில்  சுமந்திரனை விட  நீங்களொன்றும் பெரிய தவறு செய்து விடவில்லை. எனவே நீங்கள் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும் என்று பேராசிரியர் சி, சிற்றம்பலம்,அனந்தி, சிவகரன்,நீதியரசர் சி. வி . விக்கினேஸ்வரனுக்கும் அழைப்பு விட வேண்டும்.  மத்தியகுழுவில் உள்ள சட்டத்தரணி கே.வி தவராஜா முதல் நடவடிக்கை எடுப்பாரா?

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post