புகைப்படக் கருவிகள் சுமந்தவளை இன்று கண்ணீர் கடலில் சுமக்கின்றோம்...

இசைப்பிரியா போராளியாக இணைந்து  சில நாட்களில் புதிதாக சேர்ந்தவர்களை தற்காலிகமாக தங்க  வைத்திருந்த துணுக்காய், உயிலங்குளத்திலுள்ள   ராதா அக்காவின்  முகாம் ஒன்றிற்கு மருத்துவப் பரிசோதணைகள்  செய்வதற்காக  செல்கின்றேன்.

அவள் குதுகலமாக தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்தாள்... மழை அவளது நளினங்களைப் பார்த்து இன்னும் குதுகலமாய் கொட்டிக் கொண்டிருந்தது....

புதிதாக வந்திருந்தவர்களை மருத்துவப் பரிசோதனை முடித்து மிகுதி 10 பெயரையும்  பயிற்சி எடுப்பதற்கு இப்பேதே செல்வதற்கு தகுதியுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்திவிட்டு இசைப்பிரியாவை என்னருகில் வைத்திருந்தேன்.

பின் மெதுவாக அவர்களிற்கான  பொறுப்பாளரிடம் கூறினேன் "இப்போது பயிற்சிக்கு அனுப்ப முடியாது அக்கா "என்று காரணத்தையும் சேர்த்து  கூறினேன்.

அவளுக்கும் தெரியும் அவளது உடல் நிலமை ஆனாலும் இங்கு இப்படி நடக்கும் என்று அவளுக்கு தெரிந்திருக்க வில்லை வெளியில் அடைமழை பெய்து கொண்டிருந்து, அதற்கு மேலாக போட்டி போடுவதைப்போல் இவளது  கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் பெருகியது.

அருகில் அழைத்து ஆறுதல் சொன்னோம்.

இப்போது பயிற்சி எடுக்க முடியாவிட்டாலும் இன்றிலிருந்தே செய்வதற்கு நிறைய கடமைகள் உங்களிற்காய் உண்டு மருத்துவ சிகிச்சையின் பின்னர் பயிற்சி எடுக்கலாம் என்று கூறியபடியே

 மகளீர் மருத்துவ பொறுப்பாளருக்கு நிலமையை சொல்ல அவர் கையுடன் ஏற்றிவருமாறு சொன்னார். எல்லாரிடமும் அதற்கான அனுமதியைப் பெற்று எனது மருத்துவ முகாமிற்கு அழைத்துச்  சென்றேன்.

மறுநாளே மல்லாவியில் இருந்த அவள் குடும்பத்திடம் சென்று மருத்துவ சான்றிதல்கள் மற்றும் அண்மையில் அவள்  கொழும்பிற்கு சென்று எடுத்து வந்த பரிசோதனைகள்  முடிவுகளையும் மீண்டும் திருப்பி தருவதாக அவளது மூத்த அக்காவிடம்  கேட்டு வாங்கி சென்று,

எமது மூத்த மருத்துவர் சுஜந்தனிடம் காட்டிய, போது அவரும் பரிசோதனைகள் முடித்து பயிற்சிக்கு இப்போது  அனுப்ப வேண்டாம்  எம்முடனே வைத்திருக்குமாறு சொல்லிவிடவே எனது மருத்துவ முகாமிலே  வைத்திருந்தேன். நோயாளியாக இல்லை நோயாளிகளின் தோழியாக

அவர்களுடன் அன்புடன் பழகும் பக்குவமும், அத்தோடு எல்லோரும் விரும்பும் சிரித்த முகமும் சுறுசுறுப்புமாய் அந்த முகாமிற்குள் சிட்டு குருவியாய் சிறகடித்தவள்.

நோயாளிகளிற்கு

 தேவையான சிறு சிறு உதவிகளை விருப்புடன் செய்பவள்.அங்கிருந்த நாட்களில்

மருத்துவ பொருட்களிற்கு  பொறுப்பாகவும் இருந்தாள்,

அவளது கையெழுத்து கூட மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.

அடுத்த களமருத்துவ அணியுடன் கல்வியை தொடர்வதற்காக காத்திருந்த நாட்களிதான்...

அப்போது அரசியல் துறை மகளீர் பொறுப்பாளராக இருந்த லெப் கேணல் நிஷ்மியா அக்காவின் கண்களிற்குள் இவள் சிறைப்படுகின்றாள்,

சீருடையுடன் இல்லாது பாவாடை சட்டையுன்  நின்று பென்சிலின் ஊசியை கரைத்து கொண்டிருந்த இசைபிரியாவின்  நாட்டிய நடையையும் அசையும் கயல் விழிகளையும் துடிப்பான பார்வையும் கண்டு யார் இவள்?  என்ற விபரங்களை   நிஷ்மியா அக்கா கேட்டுக்கொண்டபின்...

இசைப்பிரிவை அழைத்து மாமரத்திற்கு கீழ் ஓர்  கதியிரையில் இருத்தி அன்றைய பத்திரிகையை கொடுத்து வாசிக்க விடுகின்றார்.

நாம் எல்லாம் சுற்றி நின்று பார்த்தோம் முதற்தடவையிலையே சிறப்பாக எல்லோர் மனம் கவர வாசித்து அசத்தினாள்.

அதன்பின்னர் இவளை செய்திவாசிப்பதற்கு  நிதர்சனத்திற்கு தருமாறு மருத்துவ பொறுப்பாளர் அமுதா அக்காவிடம் கேட்டுக் கொண்ட போது

 உடல்நிலையை கருத்தில் கொண்டு மூத்த வைத்தியரின் அனுமதிபெற்று தருவதாக சொல்லி அனுப்பிவைத்தார். அடுத்த நாள் காலையில் நிஷ்மியா அக்கா அழைத்தார் பதில் வந்துவிட்டதா? அழைத்துப்போக வரவா என்று..

மூத்த வைத்தியர் சுஜந்தனும் விடயத்தை அறிந்து மகிழ்வுடன்  ஒவ்வொரு மாதமும் கிளினிக் வருமாறு கொப்பி கொடுத்து அனுப்பி வைக்க அனுமதித்தார் அடுத்த நாட்களில் நிதர்சன பிரிவிற்குள் நுளைந்து கொண்டவள் தான்,

ஆனாலும் பின்னாளில் அவள் யாழினி ஒன்று பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்தாள்,

பயிற்சியின் போது பல சிரமங்களை எதிர்கொண்டாலும் தன் அடிப்படைப்பயிற்சியை  நிறைவு செய்ததாக அவளின் பாசறைத்தோழி சர்மிளா அவளைப்பற்றி நினைவு கூர்ந்தாள்

நிதர்சனப்பிரிவிற்குள் சென்றிருக்காவிட்டால் ஒரு மருத்துவப் போராளியாக இருந்திருப்பாள் ஆனாலும் பின்னாளில்  அவளது நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம் சரியான இடத்திற்கு சென்றிருக்கின்றாள் என்று மகிழ்ந்திருக்கின்றேன்.

 உலகமே அறிந்த தங்கை இசைபிரியா பின்னாளில் எங்கு கண்டாலும் ஓடி வந்து அக்கா என்று கட்டிப்பிடித்து  கொண்டு நின்று பேசுவாள், நோய் வருகிறதோ இல்லையோ நேரம் கிடைத்தால் மருத்துவ மனைப்பக்கம் வந்துதான்  செல்வாள்...

புகைப்படக் கருவிகள்  சுமந்தவளை இன்று கண்ணீர் கடலில் சுமக்கின்றோம்......

என் எழுதப்படாத நாட்குறிப்பிலிருந்து...

மிதயா கானவி

3.05.23,1am

 

 

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post