தனித்தவில் அல்ல; இது தப்புத் தாளங்கள்!


தனித்தவில் அல்ல; இது

தப்புத் தாளங்கள்!

-பரம சிவன்

 

அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை நல்ல கண் வைத்திய நிபுணரிடமும், காது வைத்தியரிடமும் யாராவது அழைத்துச் செல்வது நல்லது என்றே எண்ணத்  தோன்றுகிறது. இக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் முள்ளிவாய்க்கால் மற்றும் அன்னைபூபதி நினைவேந்தல்களை தாம் கைப்பற்ற வேண்டுமென .பி.சியின் நேர்காணலில் தெளிவாகத் தெரிவித்திருந்தார். அவர் சுயநினைவுடன் தான் பேசுகிறார் என்பதை உணர முடிகிறது. ஆனால் இதனை மறுக்கும் வகையில் கஜேந்திரன் தமிழ்த்தேசிய முண்ணனியில் இருந்து யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை என்கிறார். அதாவது இந்தக் கருத்தை சொன்னவர் தற்பொழுது தங்கள் முண்ணனியில் இல்லை; சிலவேளை அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்சில் தான் அங்கம் வகிக்கிறார் என நிறுவ முற்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.

பிரபாகரன் தனித்தவில் வாசிக்கவில்லை; அவருடன் இலட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். அறவழியிலோமறவழியிலோ ஈகம் செய்யத் தயாரென திலீபன், அன்னைபூபதி மற்றும் மாவீரர்கள் தெளிவான செய்தியைச் சொல்லியுள்ளனர். அவரது தலைமையை ஏற்கிறோம் என்று சொன்ன ஏனைய இயக்க மற்றும் கட்சிகளைச் சார்ந்த 22 பேரை மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். பெண்டாட்டி, பிள்ளையைப் பார்க்கப் போவதை தேசியத்திற்கான பயணமாக காட்டி தண்டல் செய்வோரை தலைவரோடு ஒப்பிடுவது அவரை அவமதிப்பதாகும். களத்திலே மனைவி, பிள்ளைகளை இழந்தவரெங்கே? மாட்சிமை தங்கிய எலிசெபத் மகாராணியின் பிரஜையாகத் தான் தனது வாரிசு பிறக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயற்படுபவரெங்கே? தமிழரின் வரலாற்றில் ஒருவன் தனது பெண்டாட்டி பிள்ளையைப் பார்க்கப் போவதை தேசியத்திற்கான யாத்திரை என தப்புத்தாளம் போட்டு நிதி சேகரிப்பதை என்னவென்று சொல்வது?

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் .பி.ஆர். எல். எப் உடன் கூட்டு ஏற்படுவதற்கான பேச்சு நடந்தது. அக்காலத்தில் உயிரிழந்த அனைத்து இயக்கத்தவருமே மாவீரர்நாளில் நினைவு கூரப்படவேண்டியவர்களே என  தமது கட்சியினர் ஏக மனதாக முடிவெடுத்ததாக கஜேந்திரகுமார் தெரிவிக்கும் காணொளி ( காலம் தாழ்த்தி) வெளிவந்தது. .பி.ஆர் எல் சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிட மறுத்ததால் சினமடைந்த இவர்கள் அவர்களை மண்டையன் குழுவினர் என திட்டித்தீர்த்தனர். 2004 தேர்தலில் அதே குழுவினரும் பெயரிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டுத் தெரிவானதை மறந்து விட்டனர். எதற்கெடுத்தாளும் இவர்கள் மற்றவர்களை பதின்மூன்றாவது சட்ட திருத்தத்தை ஏற்றவர்கள்; அதனை ஏற்காத தாங்கள் தான் சுத்தமான சூசைப்பிள்ளைகள் என்பார்கள். பதின்மூன்றாவது சட்ட திருத்தத்தின்  விளைவே மாகாண சபைகள். அதன் அதிகாரத்தின் கீழே வரும் உள்ளூராட்சிச்சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தப் புனிததீர்த்தத்தை எடுத்து தமது வேட்பாளர்களுக்குத் தெளித்தார்களோ தெரியவில்லை. போராளிகள் எங்களுக்கு படிப்பிக்கத் தேவையில்லை என்று திமிருடன் சொன்ன ஆசிரியர்சங்கப் பிரமுகரை யாழ் மாநகரசபையின் மேயர் வேட்பாளராக நியமித்துள்ளனர்.இதற்குள் தாங்களே புலிகளின் ஏகவாரிசுகள்; சகல நினைவேந்தல்களையும் தாங்களே கைப்பற்ற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.

      தங்களுக்குப் பிடிக்காதவர்களை இந்தியக்கைக்கூலிகள் என்று திட்டித்தீர்ப்பது இவர்களின் வழமை. தற்பொழுது பல்கலைக்கழக மாணவர்களையும் அவ்வாறே கூற முனைகின்றனர். மீனவர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வர முயற்சியெடுத்த போது இந்தியத் தூதுவர் தொலைபேசி மூலம் ஏதோ சொன்னதைக் கேட்டு நடுநடுங்கி தமது முயற்சியைக் கைவிட்டவர்கள். இவர்களையெல்லாம் தலைவர் பிரபாகரனோடு ஒப்பிடுவதை இந்திய இராணுவ காலத்தில்  களமாடி உயிர்நீத்தவர்களின் ஆன்மாக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டா .

இன்னும் சில நாட்களில் சட்டத்தரணி சுகாஷ் அவர்கள் கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் பெயர்களுக்கு முன்னால் `மேதகு` என விழித்துப்  பெருமைப் பட்டுக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை .

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post