குருதிக் குளியலான நாட்கள் - துரத்தும் நினைவுகள்!

குருதி நனைந்த கைகளுடன்  மக்களின்  உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி  செவ்வானத்தின்  உயிரையும் பறித்து போட்டது!! அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து மருத்துவமனன மீது போடப்பட்ட குண்டுகள்!

பல இடப்பெயர்வுகளையும் சந்தித்து அதிக மருத்துவ உபகரணங்களையும் இழந்து  வன்னிப் போரின் இறுதி நாட்களிலும் முள்ளிவாய்க்கால்  பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை அது.

அங்கு மண் போட்டால்... மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.

ஆனாலும், அதனைச் சமாளிக்கும் அளவிற்கு மருத்துவ துறையினரோ, வைத்தியர்களோ மற்றும் மருந்துகளோ இருக்கவில்லை! பீரங்கி வாயினில் புறா கூண்டினைக் கட்டி குடிபுகுந்து வாழ்வதைப் போலவே மருத்துவமனையின் சூழலும் இருந்தது!

மருத்துவமனையின் அமைதி காணாமல் போயிருந்தது. மக்களின் அலறல் ஒலிகள் காதைப் பிய்த்துக் கொண்டிருந்தன.! அந்தச் சோகக் குரல்கள் பீரங்கி வேட்டுக்களை விட மோசமாக மனதைத் தாக்கியது!

அதுவரை நோயாளிகளை  அனுமதிக்கும் பகுதியில் தனியொருவராக நின்று வேலைகள் செய்து கொண்டிருந்த  மருத்துவப்போராளி தகவல் அனுப்புகின்றார்.

அதிக மக்கள் காயமடைந்து கொண்டுவரப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்...!

சத்திர சிகிச்சை அறைக்கு முன்னால் மாமரத்தடியில் தறப்பாளினால் (Tent) போடப்பட்டும், சன்னங்களால் சல்லடையாக்கப்பட்டுக் கிடந்த நோயாளர்களை அனுமதிக்கும் பகுதியில் கால்களை வைக்கின்றோம்; நானும் செவ்வானம் அக்காவும்..வேறு சிலரும் ..

குழந்தைகளின் கெஞ்சுதல்கள் நெஞ்சறைக் கூட்டை கீறிப் பிளக்கின்றது!, "அக்கா இஞ்ச வந்து பாருங்கோ", "தம்பியைப் பாருங்கோ" யாரைப் பார்ப்பது? யாரை தரம்பிரித்து முன்னுரிமை கொடுப்பதென்றே அடையாளம் காணமுடியவில்லை....!

எங்கும் ஓரே ஒலம்! மருத்துவ போராளிகள் வேகமானார்கள்...

நடுத்தர வயது மதிக்கத்தக்க தாயொருவர் வயிற்றில் காயத்துடன் குடல்கள் வெளியில் கொட்டிக்கிடக்க கிடத்தப்பட்டிருந்தாள்..!

காயமடைந்த பலரையும்  தாண்டி ஆங்காங்கே கிடந்த இறந்தவர்களின் உடலங்களையும் கடந்து அந்த அம்மாவின் நிலமை மோசமாக இருக்கும் என எண்ணியவாறு அருகில் செல்கின்றேன்...

இறந்தவர்களின் உடலைக்கூட அகற்ற முடியாத சூழல். குண்டுகளும் சன்னங்களும்  இடைவெளியற்று தொடர்ந்து கொண்டிருந்தன

.யாரின் உயிருக்கும் உத்தரவாதம் இருக்கவில்லை.

.தமிழீழ காவால்துறையும் ,தமிழர் புணர் வாழ்வு கழகத்தினரும் அந்த கொடூரமான வேளையிலும் காயமடைந்த மக்களை மருத்துவ மனைவரை கொண்டுவந்து சேர்ப்பித்துக் கொண்டேயிருந்தனர்......

காயமடைந்.திருந்த நடுத்தரவயதினை உடைய ஒரு   அம்மாஎன்ர பிள்ளை", "பிள்ளைஎன்றே முனகிக்கொண்டிருந்தாள்.

குருதி அதிகளவு வெளியேறி உடம்பு விறைத்து வெளிறிக்கிடந்தது.

கை கால் குளிர்ந்து நடுங்கியது..!

மார்பை மறைக்க ஓர் கிழிந்த சட்டையும் உள்பாவாடையும் அணிந்திருந்தாள். கைகளில் மட்டும் ஒரு சிறிய பை  வைத்து இறுகப் பற்றியிருந்தாள். அதை என்னிடம் காட்டி ஏதோ சொல்ல துடித்தாள்; முடியவில்லை...

உடல் பலம் இழந்திருந்தது. எவ்வளவோ கதற முயற்சித்தும் குரல் வெளியே ஒலிக்கவேவில்லை.!

அந்த அம்மாவின் குருதியை இரத்த வங்கிக்கு பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு வேகமானேன். மாமரக்கிளையொன்றில் சேலைன் போத்தலைக் தொங்க விட்டு  சேலைன்களை "வென்புளோன்" ஊசியுடாக வேகமாக ஏற்றி கொண்டிருக்க....

மெல்ல மெல்ல அம்மாவும் மீண்டும் உயிர்பெறத் தொடங்கினாள்..!

முனகிக்கொண்டிருந்த அம்மாவிற்கு சற்று உடலில் தெம்பு வரதங்கச்சி எனக்கு பக்கத்தில் மூத்த பிள்ளையின் உடல் சிதறிட்டு, என்ர மூன்று வயது பிள்ளையைக் காணவில்லை நான் காயப்பட்டவுடன் ஆரோ என்னை இங்கு கொண்டு வந்திட்டாங்கள்என அம்மா பல முறை  கூறினாள்.

ஆனாலும், அவளிற்கு ஆறுதல் கூற அங்கு யாரும் இருக்கவில்லை . எல்லோருமே அந்த நிலைமைதான். என்னாலும் நின்று கதைக்க முடியவில்லை; உயிருக்குப் போராடும் மற்றவர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது..!

அனைத்து இடங்களிலும் இதே ஓலம் தான்......!

அம்மாவை சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு கொண்டு செல்ல முனைந்தபோது..., அம்மா வரமறுத்தாள். "என்ர பிள்ளை வந்தால்தான் நான் வருவன்" என்று அம்மா கெஞ்சினாள்.

அப்போது சூரியன் உச்சத்தை தொட்டிருக்கவேண்டும் வெப்பம் எம்மை நெருங்கவேயில்லை; பல நூறு மக்களின் கண்ணீராலும், செங்குருதியாலும் மருத்துவமனை இயங்கிய இடம் நனைந்துகொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் "படார்" என்ற சத்தத்துடன் விழுந்த எறிகணையால் அந்த இடமே புகை மண்டலமாகியது; கண்களை மூடிக்கொண்டு விழுந்து படுக்கவும் அவகாசம் கிடைக்கவில்லை....!

இந்தச் சத்ததுடன் எம்முடன் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்த மருத்துவப் போராளி செவ்வானம் அக்காவின் உயிர் அடங்கியிருக்குமென்று நாம் நினைக்கவில்லை.

செவ்வானம்....  அவள் பெயரைப்போலவே மனமும் விசாலமானது எப்போதும் சிரித்த முகம்.. நெடிய உருவம். சுறுள் விழுந்த முடிகள். எப்போதும் சுறுசுறுப்பான செயற்பாடுகள். . நோயாளருடன் மட்டுமன்றி எல்லோருடனும் அன்பாக பழகும் ஒரு கருனை உள்ளம் .

தமிழீழ மருத்துவப் பிரிவின் மருத்துவ தாதியாக தன் கடமையை தொடங்கியவள் ..

2001 ஆண்டின் பின்னர் மக்களுக்கான மருத்துவ பணிக்கு தெரிவு செய்யப்பட்டு    தியாக தீபம்  தீலிபன்  மருத்துவமனை வைத்தியராக பணியாற்றினார் .  .நீண்ட காலம்  அங்கு நற்  சேவை செய்து

கிராம மக்களின் மனங்களில் ஆழமாய் பதிவாகின்றாள்.

இறுதியாக   மாஞ்சோலை மருத்துவமனை இயங்கிய பாடசாலையில் தூக்கம் துறந்து, உணவை மறந்து  மக்களின் உயிர்களை காப்பாற்ற ஓடி ஓடி உழைத்தாள்

.ஆனால்

குருதி நனைந்த கைகளுடன் ஓர் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த அவள் உயிரையும் பறித்து போட்டது!! அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து மருத்துவமனனமீது விழுந்த குண்டுகள்!

தொடையில் காயமடைந்து கொண்டுவரப்பட்ட ஒருவரின் குருதிப்பெருக்கை கட்டுப்படுத்தி கொண்டிருக்கையில், சரிந்துவிழுந்த செவ்வானம் அக்காவை காப்பற்ற முடியவில்லை. எத்தனையோ மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய அதே மருத்துவ மனை மண்  செவ்வானத்தின் செங்குருதியால் சிவந்து போனது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மனம் சின்னாபின்னமாகியிருந்தது. வேதனை, கோபம் மற்றும் உணர்ச்சிகள் ததும்ப கண்களில் வழிந்த நீருடன் மீண்டும் எம் கடமையைத் தொடர்ந்த நாட்களின் மறக்க முடியாத பல நினைவுகள்  இன்றும் எம்மைத் தூரத்துகின்றன.

மிதயா கானவி

எழுதப்படாத நாட்குறிப்பிலிருந்து




0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post