காலத்தால் உயர்ந்து நிற்கும் அம்மாவின் விடுதலைப் பணி !



தமிழ்
தேசியத்தினை ஆயுதப்போராட்ட வடிவில் முன்னெடுத்த போது தமது உயிரைப்  பொருட்படுத்தாமல் உச்சக்கட்டப்  பங்களிப்பை வழங்கிய அன்னையரின் பட்டியல் மிக நீண்டது. இவ்வாறானோரின் ஓருவரான திருமதி நல்லம்மா செல்வராசா (இராசம்மா) இம்மாதம் முதலாம் திகதி தமது 94 வது வயதில் தமது உறவுகளையும், இன விடுதலைக்காக தமது பங்களிப்பை வழங்கிய முன்னாள் போராளிகளையும் பிரிந்து இறைவனடி சேர்ந்தார். இவரும் இவரது கணவரும் சகல வழிகளிலும் போராட்டத்துக்குகாகப்   பங்களித்தனர்.
 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தலைவராக இருந்த இராசநாயகம் (முரளி) கிளிநொச்சிக்கான பிரதேச பொறுப்பாளராக விளங்கினார். முன்னர் உணர்வு பத்திரிகையின் ஏற்பாட்டாளர்களில் ஓருவராக விளங்கிய இவர் பின்னர் `விடுதலைச்சுடர்' எனும் பெயரிலான இதழ் ஒன்றினை வெளியிட ஏற்பாடு செய்தார். எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்த இதழ் வெளிவரவில்லை. எனவே அந்தப் பெயரில் ஒரு வாராந்த செய்தி இதழினை வெளியிட அந்தக்காலத்தில் (1984-1985) மட்டக்களப்பில் இருந்த போராளிகள் முடிவெடுத்தனர். அந்தக்காலத்தில் ரோணியோ இயத்திரம் மூலமே இதனை வெளியிட முடிந்தது. படுவான் கரைக்கு தோணி  மூலமே  செல்ல முடியும். நல்லம்மா அம்மாவின் கணவர் செல்வராசா  ஆரையம்பதியில் இருந்து சைக்கிளில் பயணித்து பின்னர் சைக்கிளையும் ஏற்றிக் கொண்டு வாவியைக் கடந்து சென்றார். அங்கு நீண்ட தூரம் பயணித்து ரோணியோ இயத்திரம் வைக்கப்பட்டிருந்த வயல்வாடிக்கு  சென்றார். இந்த இயந்திரத்தை இயக்குவது எப்படி எனப் போராளிகளுக்கு பழக்கியதுடன் முதல் இதழை அச்சடித்துக்காட்டினார். பாடசாலை அதிபராக அவர்  விளங்கியமையால் ரோணியோ இயத்திரத்தில் அவருக்கு பரிச்சையம் இருந்தது. விடுதலைப்போராட்ட இயக்கங்களால் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்தனவற்றுள் முதல் இதழ் என விடுதலைச் சுடரைக் குறிப்பிடலாம். இந்த வாடியில் இருந்த குடும்பத்தினரின் பெண் குழந்தை காணும் வேளையில் எல்லாம் சோளம் பொத்தியுடனே காணப்படும். எனவே எப்போதும் கலகப்பாக உற்சாகத்துடன் காணப்படும் சந்திரன் அண்ணா/மேஜர் வள்ளுவன் (காத்தமுத்து சிவஜெயம்  அமிர்தகழி  - காசி  ஆனந்தன் சகோதரர்) இந்த வாடிக்கு சோளன் பதிப்பகம் எனப் பெயரிட்டார்.
கணவர் ஆற்றைக்கடந்து விடுதலைக்கான அச்சிடல் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கையில் மனைவி நல்லம்மா போராளிகளுக்கு உணவு வழங்குவது உட்பட பலபணிகளை செய்து கொண்டிருந்தார். 02.09.1985 அன்று ஏறாவூர் பொலிஸ் நிலையம் மீது மேற்கொண்ட தாக்குதலில் மாத்தையா என்று அழைக்கப்படும் போராளி விமலநாதன்(மஞ்சந்தொடுவாய்) காயமடைந்தார். ( யாழ் பொலிஸ்நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதுவரை சிறீலங்கா பொலிஸ்சாராக விளங்கிய இவரும் நடேசனும் இயக்கத்தின் முழுநேர உறுப்பினர்களாகினர்) அந்தக் காலத்தில் மட்டக்களப்பில் மருத்துவப்பிரிவு என்று தனியாக ஒன்று இருக்கவில்லை. போதுமான மருந்துகளோ மருத்துவப் பயிற்சி பெற்ற போராளிகளோ இருக்கவில்லை. இந்நிலையில் மாத்தையாவை செல்வராசா - நல்லம்மா தம்பதியினரின் இல்லத்தில் தான் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.பிரதான வீதியால் அடிக்கடி சிறப்பு அதிரடிப்படையினரின் வாகனங்கள் செல்லும். அடிக்கடி முற்றுகைக்கு உள்ளாகும் பகுதி ஆரையம்பதி. அப்படியிருந்தும் தமது உயிரைப் பணயம் வைத்து விடுதலைக்கான பணியே தமது மூச்சு என அக்காயமுற்ற போராளியையும்  அவரோடு கூட இருந்தவர்களையும் இந்த அம்மா பராமரித்த விதம் இருக்கிறதே அது எக்காலத்திலும் மறக்க இயலாத பணி. இவரது அயலவரான மகேந்திரனும் அம்மாவுடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டார்.
   இந்திய ராணுவகாலத்தில் தலைமறைவாகத் திரிந்த போராளிகளுக்கு அன்னமிட்ட கைகளில் அம்மாவின் கைகளும் அடக்கம். மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டங்களில் நிதிப்பொறுப்பாளாராக இருந்த வள்ளுவனின் ஆவணங்களை பத்திரமாக பாதுகாத்துக் கொடுத்தவரும் அம்மாவே. வள்ளுவன் 10.09.1988 அன்று இந்திய ராணுவத்தினரின் முற்றுகையின் போது சயனற் உட்கொண்டு வீரச்சாவடைந்தார்.  5ம் கட்டை  இந்திய இராணுவத்தினர் முகாமில் அம்மாவின் மகன் அமரேந்திரனின் உயிர்பறிக்கப்பட்டது.அம்மாவால் காப்பாற்றப்பட்ட மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த மாத்தையா (விமலநாதன்) 15.10.87 அன்று இந்திய ராணுவத்தின் முற்றுகை ஒன்றில் வீரச்சாவடைந்தார். அம்மாவின் உறவினரான செல்லத்தம்பி மகேந்திரன் போராட்ட பங்களிப்புக்காக சிறை செல்ல நேர்ந்தது. பின்னாளில் போராளியான இவர் லெப். வர்ணணாக வாகரை- கண்டலடியில் 26.07.93 அன்று படையினருடனான எதிர்பாராத மோதலில் வீரச்சாவடைந்தார். 9.9.1985 அன்று பிரதீஸ் - பிரியன் ஆகியோர் ஆரையம்பதி  யின் முதல் மாவீரர்கள் ஆகினர். 28. 01.1988 கிழக்கின் முதல் பெண் மாவீரரான லெப் .அனிதா (இந்திராதேவியும்) ஆரையம்பதியைச் சேர்ந்தவரே 12.04.2004 லெப்.கேணல் நீலன்  வரை இந்த மண்ணின் மைந்தர்கள் 105  பேர் விதையாகினர் .போராட்ட பங்களிப்பை வழங்கிய சின்னத்துரை பூரணலட்சுமி.பாடசாலை அதிபர்களாக கனகரெத்தினம் .கணபதிப்பிள்ளை  உட்பட பலர் இந்த ஊரில் நாட்டுப்பற்றாளர்களாக பல்வேறு சம்பவங்களில் ஈகம் செய்தனர். அந்த வகையில் திருமதி நல்லம்மா செல்வராசாவும் என்றுமே மறக்க முடியாதவராகவிளங்குவார்  . போராட்டப் பங்களிப்பின் பெறுமதி அதுபுரியப்பட்ட காலத்தினைக் கொண்டு தான் அளவிடப்படுகிறது அந்தவகையில் திருமதி நல்லம்மா செல்வராசாவும் காலத்தால் உயர்ந்து விளங்குறார்.
A .குட்டி









































































0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post