திணிக்கப்பட்ட தலைவர்கள் வரலாற்றை எப்போது படிப்பர்?

-துஷியன்

ஒரு பிரபல்யமான மதகுரு இன்னொரு நாட்டுக்குப் பயணமானார். அந்த நாட்டைப் பற்றிய நல்ல தகவல்களே அதுவரை அவரை எட்டியிருந்தன. தனது இந்தப் பயணம் நல்ல வகையில் அமையும் என்பது அவரின் எதிர்பார்ப்பு. விமானத்திலிருந்து இறங்கி வெளியே வருகையில் ஓர் ஊடகவியலாளர் அவரிடம், "இந்த நாட்டில் விபசார விடுதிகள் அதிகமாக இருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அந்த மதகுரு இதுவரை இவ்விடயம் தொடர்பாக எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆகவே, இக்கேள்வி அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. எனவே, “இந்த நாட்டில் விபசார விடுதிகள் உண்டா?”, எனச் சந்தேகத்துடன் கேட்டார். அவ்வளவுதான் அந்த ஊடகவியலாளர் சார்ந்த நிறுவனம், “விமானத்திலிருந்து இறங்கியதும் மதகுரு கேட்ட முதல் கேள்வி இந்த நாட்டில் விபசார விடுதிகள் உண்டா? என்பது தான் " என்று செய்தி வெளியிட்டதுபொது வாழ்வில் ஈடுபடுவோர் தமது சந்தேகங்களைக்கூட மற்றவர்களிடம் பகிரங்கமாகக் கேட்கக்கூடாது. கேள்வி கேட்பவரின் நோக்கம் என்ன என்று சற்றுக் குள்ளத்தனமாகவும் சிந்திக்க வேண்டும். இல்லையேல், இந்த மதகுருவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும்.

இதையொத்த நிகழ்வுதான் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசருக்கும் ஏற்பட்டது. அவர் கொழும்புச் சூழலில் வளர்ந்தவர் என்பதால் குள்ளத்தனம் நிறைந்த யாழ்ப்பாண அரசியலுக்குத் தாக்குப் பிடிக்க மாட்டார் என்பதை உணர முடிகிறது. நீங்கள் வேளாள சாதியல்லாதோருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். உங்களைச் சூழ அவர்களே பெருமளவில் உள்ளனர் என இவரது நலன் விரும்பிகள்போல பாசாங்கு செய்வோரின் வலையில் இவர் இலகுவாக விழுந்து விட்டார். “நான் உயர் நீதிமன்ற நீதியரசராக விளங்கியவன். நான் செய்வது சரியோ பிழையோ என்பதைத்தான் சிந்திப்பேனே தவிர, மற்றவர்களின் பிறப்பின் மூலம் பற்றிச் சிந்திக்க மாட்டேன், என்று ஒரு பதில் சொல்லியிருந்தாரெனில் இனி எவ்வாறு நடந்து கொள்வது என்று அவர்களுக்கும் புரிந்திருக்கும்.

அதை விடுத்து ஒவ்வொருவரினதும் சாதி மூலங்களை அறிய முற்பட்டமை ஒரு நீதியரசருக்கோ, முதலமைச்சருக்கோ, ஒரு கட்சித் தலைவருக்கோ பொருத்தமானதாக இருக்காது. திரு. தனபாலசிங்கம் சுதா என்பவருக்கு இவர் எழுதிய பகிரங்க மடல் சில வேளை இவரின் மேல் அனுதாபத்தை ஏற்படுத்துமே அல்லாது இனத்தினதோ கட்சியினதோ தலைமைக்குப் பொருத்தமானவரா என்ற கேள்வியையே எழுப்பும்.

இதுபோலத்தான் ஆப்கான் அகதிகள் விவகாரமும். அங்கிருந்து ஏதிலிகளாக வந்தோரை கொழும்பில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்குக்கு குறிப்பாக வவுனியாவுக்கு அனுப்புவது பற்றி அரசு சிந்தித்தது. அவ்வேளை, சிவசக்தி ஆனந்தனும் சிவாஜிலிங்கமும் அவர்களை இங்கேஅனுப்ப வேண்டாம் என அறிக்கை விட்டனர். தன்னுடன் நட்பாக இருக்கும் இரு கட்சிகளின் பிரமுகர்கள் சொல்கிறார்களே என்றதும் இவரும் அது போன்ற ஓர் அறிக்கையை விடுத்தார். உலகெங்கும் உள்ள நாடுகளில் தமிழருக்கு அடைக்கலம் கொடுக்கக் கடமைப்பட்டது இங்கிலாந்துதான். அதுதான் தனியாட்சி நடத்திய தமிழர்களின் ஆட்சியதிகாரத்தைப் கைப்பற்றி சிங்களவர்களின் தேசத்துடன் ஒரே அலகாக இணைத்தது. பின்னர் போகும் போது ஆட்சி அதிகாரத்தைச் சிங்களவரிடமே ஒப்படைத்தது. தன்னால் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பிராயச்சித்தமாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்யத் தயங்குகிறது. ஆனால், ஈழத் தமிழினத்தவரோ எண்ணற்ற நாடுகளின் கதவைத் தட்டி அடைக்கலம் கேட்கின்றனர். அதற்கு ஓரளவு ஒத்துழைப்பும் கிடைக்கிறது. அவ்வாறிருக்கையில் எம்மைப் போலவே சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு வந்தவர்களுக்கு கதவடைப்பு செய்ய முற்படுவது எந்த வகையில் நியாயமானது? இச் செயல் இவர் வகித்த உயர்நீதிமன்ற நீதியரசர் என்ற பதவிக்கும் பொருத்தமில்லாதது. இவரே இப்படி மறுத்தால் மற்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்வர்?

நிர்வாகப் பதவிகளில் புலிகள் சார்பானோர் அமர்ந்து விடக்கூடாது என்பதில் இங்குள்ள பதிவு செய்யப்பட்ட சகல கட்சிகளுமே ஒத்தகருத்துடன் உள்ளன. சொலமன் சூ சிறில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் மிகவும் மூத்தவர். 1979இலேயே யாழ். மாநகர சபைக்குத் தெரிவானவர். யாழ். இடப்பெயர்வின்போது புலிகளின் தலைமையை ஏற்று கிளாலியை கடந்து வன்னிக்கு வந்த வரலாறு அரசியல்வாதிகளில்  சிறில் மற்றும் சிவநேசன் ஆகிய இருவருக்கு மட்டுமே உண்டு. மணிவண்ணன் சொல்லி விட்டார் என்பதற்காக மேயர் தெரிவின்போது வெளிநடப்பு செய்ய அனுமதித்தமை மிகத் தவறு. இது இவரது ஆளுமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

இது போன்றதே இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவுநாள் விவகாரமும்.

முள்ளிவாய்க்கால் என்றதும் இழப்புகளைச் சந்தித்த குடும்பத்தினரின் உணர்வுகளை விபரிக்க முடியாது. ஒரு வருடமாக மனதில் தேக்கி வைத்திருந்த மனப்பாரத்தை இந்த நாளில் ஏற்றும் சுடரின் முன்பாகத்தான் இறக்கி வைப்பார்கள். ஐம்புலன்களும் ஒரே நிலையில் இருக்கும். சுடரேற்றும் இடத்தில் தமது உறவுகளுக்கு மலர் தூவி, அவர்களுக்குப் பிரியமானதைப் படையலிட்டு அழுது முடிந்ததும் பொதுத் தூபியடிக்கு வந்து ஏனைய உறவுகளுக்குமாக மலர் அஞ்சலி செலுத்துவார்கள். மனம் முழுக்க யுத்த காலம் பற்றிய ஒரே நினைவுடன் நடந்து வந்து தமது உரிமைக்கான கஞ்சியைக் குடிப்பார்கள். ஒவ்வொரு மிடராகக் குடிக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தியதும் பிரிய மனமில்லாமலே தாங்கள் இழந்த உறவுகளிடம் மனதால் விடைபெற்று வருவார்கள். வீட்டுக்குத் திரும்பி வரும்வரை இந்த நிலையே இருக்கும்.

இதனை ஏதோ மதகில் இருந்து மற்றவர்களைக் கலாய்க்கும் விதமாக மாற்றினர் பேராசிரியர் சிவநாதனும் மணிவண்ணனும். தமக்கு பிடிக்காத அரசியல்வாதிகளான சுமந்திரனையும் சிறீதரனையும் கண்டவுடன் பம்பல் அடிக்க முற்பட்டனர். (கட்சித் தலைமை தொடர்பான விடயம்.) மாகாண சபையில் இனப் படுகொலை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவந்தமைக்காக தமது விசுவாசி ஆர்னோல்ட் மூலம் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வர ஏற்பாடு செய்தவர் சுமந்திரன் என்பது அப்படியொன்றும் இரகசியமான விடயமல்ல. நிர்வாகம் செய்வதற்குத் தமிழர்கள் தகுதியில்லாதவர்கள் என்பதை சிங்கள தேசத்துக்கும் உலகுக்கும் வெளிப்படுத்த சுமந்திரன், சயந்தன், ஆர்னோல்ட் செய்த கோளாறுகளைப் படமாக்க வேண்டி வந்தால் குறைந்தது இரு பாகங்களேனும் வெளியிட வேண்டி வரும். உள்நாட்டு விசாரணையே போதும் என்று ஆரம்பத்தில் வாதிட்டுக்கொண்டிருந்த சுமந்திரன் பாவ மன்னிப்புக்காகவோ வேறு எந்த நோக்கத்துக்காகவோ அங்கு வந்திருக்கலாம். இவர்களின் பம்பலான கேள்விக்கு அவரும் பம்பலாகவே பதிலளித்து தாங்கள் இளிக்கும் காட்சிகளை ஊடகங்களில் பதிவேற்றினர்.

சரி சுமந்திரன்தான் அப்படியென்றால் அந்தக் கலகலப்பில் சிறீதரன் எப்படிப் பங்குபற்றலாம்? முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் அங்கு நிற்காவிட்டாலும் இந்த யுத்தபூமி எதிர்கொண்ட இன்னல்கள் அவருக்குப் புரியாதா? இந்த இடத்துக்குப் பொருத்தமான கதைகள் (பேச்சுகள்) அல்ல இவை. முதலில் நாங்கள் இந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு வேறு ஓரிடத்தில் பதிலளிக்கிறோம் என்று சொல்லியிருந்தால் பேராசிரியர் சிவநாதன், மணிவண்ணனுக்கு மட்டுமல்ல சுமந்திரனுக்கும் விடுதலைப் போராட்ட உணர்வின் அரிச்சுவடியை கற்பித்ததாக இருந்திருக்கும். பாராளுமன்ற கன்ரீனில் கதைத்து பம்பலடிப்பது போலத்தானா முள்ளிவாய்க்காலையும் கருதுகின்றனர்; ஏமாற்றம்தான்.

கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது நீதியரசர்தான் முதலமைச்சர் என்று அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்று வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 3 இலட்சத்து 53 ஆயிரத்து 595 பேர் வாக்களித்திருந்தனர். முதலமைச்சர் போட்டியிட்ட யாழ். மாவட்டத்தில் அவருக்கு ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 255 பேர் விருப்பு வாக்களித்திருந்தனர். அப்படியிருக்கும்போது நல்லாட்சி அரசில் பிரதமராக இருந்த ரணில் ஏதோ ஒரு காரணத்துக்காக யாழ்ப்பாணம் செல்லும்போது நான் முதலமைச்சரைச் சந்திக்க மாட்டேன் எனத் திமிருடன் சொன்னார். இவரது மாமனார் ஜே. ஆர். வடக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படப்போவதில்லை என்று சொன்னதற்குச் சற்றும் குறையாத திமிர் ரணிலின் கூற்றில் தெரிந்தது. வாக்களித்த தமிழருக்கு வந்த கோபம் முதலமைச்சருக்கு ஏனோ வரவில்லை. பாராளுமன்றில் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தபோது ஏற்கனவே ரணிலின் கூற்றால் கொதித்த மக்கள் கூனிக்குறுகிப் போனார்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்காகத்தான் ரணிலுக்கு ஆதரவாக இவர் வாக்களித்தார் என்பது சிலரது வாதம்.

சிறையில் இருக்கும் அரசியல்கைதிகளில் சிலரை பொன்சேகா போன்றோரின் குடும்பத்தினர் மன்னிக்கத் தயாரில்லை என்ற பதில் அரசுத் தரப்பிலிருந்து வந்தது. 2000 ம் ஆண்டு டிசம்பர் 20 அன்று மிருசுவிலில் நான்கு வயதுக்குழந்தை, பதின்ம வயதுச்சிறுவர் மூவர், ஒரு பெண் உட்பட எட்டுப்பேரின் படுகொலையில் சம்பந்தப்பட்ட சுனில் ரத்னாயக்காவைசம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மன்னித்தார்களா என்று கேட்கக்கூட நீதியரசரால் முடியவில்லையா? ஏமாற்றம்தான்.

தலைமைக்குக் கட்டுப்பட்ட சிப்பாயால்தான் சிறந்த தளபதியாக உருவாக முடியும் என்பது எமது ஆயுதப் போராட்டத்தை வழிநடத்தியவர் அடிக்கடி கூறும் விடயம். அரசியலில் படிமுறையாக வராமல் திணிக்கப்பட்ட தலைவர்களையே தற்போது அதிகம் காண முடிகின்றது. அதுதான் இவ்வாறான கோளாறுகளுக்கும் காரணம்.

   தமிழர் தாயகத்தில் பெளத்தத்தின் பெயரால் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக இந்தியத்தரப்புடன் தொடர்பு கொள்ள போவதாகக் கூறுவதும் சில அடிப்படைப்பிரச்சனைகளை இவரால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதையே காட்டுகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கார் இறுதியில் பெளத்தத்தையே தழுவினார் என்பது வரலாறு. எமது மக்கள் கொஞ்சமும் பொது அறிவு இல்லாதவர்கள் என்ற நினைப்பில் இந்த விடயத்தில் இந்தியாவிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என நம்புவதை என்னவென்று சொல்வது? தமிழரின் மறதி மீதான அதீத நம்பிக்கையில் தான் திணிக்கப்பட்ட தலைவர்களின் அரசியல் பயணம் தொடர்கிறது.

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post