மட்டக்களப்பில் இருந்து ஒரு மடல் !

மட்டக்களப்பில் இருந்து ஒரு மடல் ! சேரல் : இரா.சாணக்கியன் பா .உ 


கடந்த பாராளுமன்றத்தேர்தலில் (2020) நீங்கள் எங்களிடம் வாக்குக் கேட்க வந்ததிலிருந்து உங்கள் அறிமுகம் ஏற்பட்டது. உங்களைப் பற்றி பல விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் எல்லோரையும் போன்று நானும் எனது சந்தேகங்களை உங்கள் முன் வைத்தேன்.

அருண் தம்பிமுத்து வழிகாட்டலில் 23  வயதில் மகிந்த அணியுடன் பயணித்ததாகவும் அறியாத வயதில் விட்ட தவறுக்காக வருந்துவதாகவும் எனக்கொரு வாய்ப்புத் தருமாறு இரந்து வாக்குக் கேட்டீர்கள்.

வெற்றி பெற்ற பின் உங்களை நம்பலாமா? எனக் கேட்டதற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இராஜினமா செய்யும் திகதி இடப்படாத கடிதத்தை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தீர்கள்.

2015 தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருசில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது .இதன் காரணமாக உங்கள் அணி எந்த ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெறும் தகுதியற்று  போனதை மறந்து இருக்கமாட்டீர்கள.

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை  பெறுவதானால்  தமிழரசுக் கட்சியிலேயே வேட்பாளர் பட்டியலில் இணையவேண்டும் என சரியான கணக்குப் போட்டீர்கள்.

வேட்பாளர் பட்டியலில் நீங்கள் நுழைய தமிழ்த் தேசியத்துடன் நீண்டகாலம் உழைத்தவர்களின் சிபாரிசின் பேரில்  சம்பந்தன் ஐயா முடிவெடுத்தது உண்மைதான்.

அவர்களுக்கு நீங்கள் நன்றியுடையவர்களாக  இருப்பீர்கள் என்று எதிர்பாத்தோம்.  

ஆனால் மட்டக்களப்பு மக்களே வாக்களித்து உங்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை  தந்தனர் அவர்களின்  உணர்வுகளை  நீங்கள்   மறப்பது தகுமா?

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை போராட்டம், கொவிட் காலத்தில் கொரனாவால் இற ந்த முஸ்லிம் சகோதரர்களின் உடல்களை எரித்தமைக்காக பாராளுமன்றில் ஓங்கி ஒலித்த உங்கள் குரல் கேட்டு நாங்கள் வியந்தோம் தமிழ் மொழிபேசும் மக்களுக்காக  ஒரு தலைவன் உருவாகிவிட்டான் என உங்களைப் பார்த்து பெருமிதம் அடைந்தோம்.

உங்களுக்காக நாங்கள் வாக்குக்கேட்டவர்கள் சரியான ஒருவரை அடையாளம் காட்டியதற்காக எங்களைப் பாராட்டி கொண்டாடினர் . சாணக்கியருடன் பேசினீர்களா? புகைப்படம் எடுத்தீர்களா?சாணக்கியனை தெரியுமா ?என மற்றவர்கள் விழிக்கும் அளவுக்கு உங்கள் புகழ் உயர்ந்தது.மாற்று  இன  பாராளுமன்ற உறுப்பினர்களே மனம் வெதும்பும் வகையில் தமிழ் மொழி பேசும் மக்கள் பிரதிநிதியாக நாடு முழுவதும் வலம் வந்தீர்கள்.

அண்மைக்காலமாக உங்களுக்கு வாக்களித்த மக்கள் உங்களை விமர்சிக்கும் அளவுக்கு சென்றிருப்பது சரியா? மட்டக்களப்பில் தமிழ்த் தேசியத்தின் வலுவான குரலாக இருப்பீர்கள் என எதிர்பார்த்து உங்களுக்கு வாக்களித்த 33332 மக்களை ஏமாற்றுவது தகுமா?

யாழில் சுமந்திரன் பல தில்லுமுல்லுகளை பண்ணி வெற்றியீட்டியதாக பரவலாக செய்திகள் வெளியானதை மறந்துவிட்டீர்களா? இதை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும். இவை நம்பக்கூடியதாக இருக்கிறது. வலுவான மக்களின் வாக்குப்பலத்தை மறந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட  நிராகரிக்கப்பட போறவர்களின் பின்னால் போவதன் அர்த்தம் தான் என்ன?

அறியாத பருவம் என்ற 23 வயதில் விட்ட  தவறை 33 வயதில் விடப்போகின்றீர்களா? உங்கள் ஆளுமையும் மட்டக்களப்பு மக்களின் பலத்தையும் நம்பாம ல்  தமிழ் தேசிய விரோதிகளின் பின் சென்று எதிர்காலத்தில் மட்டக்களப்பு மக்களால் நிராகரிக்கப்படபோகின்றீர்களா?

உங்களுக்கு தேர்தல் காலத்தில் ஜனாதிபதியினால் ஒதுக்கப்பட்ட 600 மில்லியன் ரூபாவை பங்கு போட பலர்வருவர் அவர்களுக்கு தெரியும் இது உங்கள் பணமென்று அன்று , பணத்தை பெறுவதற்காக உங்களுக்கு கட்டுப்பட்டது போன்று நடப்பார்கள்.கம்பரெலிய திடடத்தின் மூலம் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களால் எவ்வளவு அபிவிருத்தி  திட்டங்கள் மட்டக்ளப்பில்  முன்னெடுக்கப்பட்டன. 2015 இல் 48221 வாக்குகளை பெற்ற சிறிநேசன் 2020இல் 25303 வாக்குகளைப் பெற்று தோல்வி அடையவில்லையா? அரச நிதியில் நடைபெறும் அபிவிருத்தியும் வசதிகளும் பாராளுமன்ற உறுப்பினரது அல்ல ,பணத்துக்காகவும் சலுகைகளுக்குமாக தமது உரிமைகளை விட்டுக்கொடுக்கும் இனமல்ல தமிழர் என்பதை நினைவில் நிறுத்தி இனியாவது நல்ல பாதையை அமைத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் உங்களின் அரசியல் அஸ்தமனம் விரைவில் தோன்றும்,

சுந்தரம்

08..09.2024

 


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post