நாக்கிளிப் புழுக்களின் நர்த்தனம்!


களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை...ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!  எனும் தொடரில்  "காந்தியத்தின் தோற்றமும், அதன் செயற்பாடுகளும் , புளொட்டின் உருவாக்கமும" .பாகம் 4 பற்றிய விமர்சனம் இது.

 

நாக்கிளிப் புழுக்களின் நர்த்தனம்!

-அவதானி

"தவறு என்பது தவறிச் செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்

தப்புச் செய்தவன் திருந்தி ஆகணும்"

எம்ஜிஆர் நடித்த "பெற்றால்தான் பிள்ளையா" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது.இந்த வரிகளில் நான்காவதை ஏற்கமாட்டேன் என்று   அடம்பிடிக்கிறார் யோகன் கண்ணமுத்து.அளவெட்டியில் தமிழ் இளைஞர் பேரவையில் முன்னர் அங்கம் வகித்த இறைகுமாரன் மற்றும் உமைகுமாரனைப் படுகொலை செய்தது புளொட். இச் சம்பவத்துக்குக்  காந்தியத்துடன் தொடர்புடையவர் என யோகன் கண்ணமுத்துவால் போற்றப்படும் சந்ததியாரே தலைமை தாங்கினார்.தன்னை புளொட்டின் மூத்த உறுப்பினர் என்று சொல்லிக்கொள்ளும் யோகன் கண்ணமுத்துவுக்கு இது தெரியாமல் நடந்திருக்கும் என்றில்லை.

இதன் பின்னர் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இறைகுமாரன் உமைகுமாரனுக்கு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.இதற்கு யோகன் கண்ணமுத்துவே தலைமை தாங்கினார். பிரதம பேச்சாளர் இரா.வாசுதேவாஅவர் தனது உரையில் இச் சம்பவத்துக்குக் காரணம் தமிழர் விடுதலைக் கூட்டணியினரே எனக் குற்றஞ்சாட்டினார்.அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அமிர்தலிங்கம் ஒற்றை வரியில் பதில் கூறினார்."சுட்டவர்களே அஞ்சலிக்கிறார்கள்"

இன்று யோகன் கண்ணமுத்து அவசரமாகச் செய்யவேண்டியது பல்கலைக்கழகத்தில் அரசியல் படிக்கும் மாணவர்களிடம் அல்லது மூத்த பத்திரிகையாளர்களிடம் தமிழரசுக் கட்சி என்றால் என்ன தமிழர் விடுதலைக் கூட்டணி  என்றால் என்ன என்று கேட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும்.தான் ஒரு தத்துவ ஞானி என்ற கற்பனையில் இருக்கும் இவர் மூத்த பத்திரிகையாளர்களிடம் கேட்பது இவருக்கும்  கௌரவக்குறைச்சல்.இலங்கை ஐனாதிபதி கோத்தபாயா "நான் வாய் மொழியாகத் கூறுவது தான் சுற்று நிருபம்"என்றார். யோகன் கண்ணமுத்துவோ நான் வாய்க்கு வந்தபடி தான் கதைப்பேன்; அதை ஏற்கவேண்டியது தமிழரின் தலை விதி என உணர்த்த முனைகிறார். ஒரு சங்கீத வித்துவானிடமோ,நடனக் கலைஞனரிடமோ,விளையாட்டு வீரனிடமோ கேள்வி கேட்க முனையும் ஊடகவியலாளர்கள் அந்தந்தத் துறைபற்றி அடிப்படை அறிவுள்ளவர்களாக இருப்பர்.பரமார்த்த குருவே இப்படியிருந்தால் கேள்வி கேட்பவர் அவரது ஐந்து சீடர்களில் ஒருவராகத்தானே இருப்பர்.

தமிழரசுக் கட்சி - தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றி தவறான புரிதல் இந்தக் குருவுக்கும் சீடனுக்கும் இருப்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.தமிழரசுக் கட்சி - தமிழ்க் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கொண்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாகத் தோற்றம் பெற்றன.இந்தக் கட்சி தமிழர் கூட்டணியெனச் சுருக்கமாக அழைக்கப்பட்டதுகூட்டணியின் சின்னம் பொறித்த கொடி முதன் முதல் மட்டக்களப்பு கிரானிலேயே ஏற்றப்பட்டது.

1977 பொதுத்தேர்தலை தமிழீழக் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாகக்  கருதுமாறு தமிழர் கூட்டணி பிரகடனப்  படுத்தியது.அன்றிருந்த சூழலில் யாழ்ப்பாணத் தொகுதியில் காசி ஆனந்தன் போட்டியிட்டிருந்தால்  ஏனைய  எல்லாத் தொகுதி வேட்பாளர்களையும்விட அதி கூடிய பெரும் பான்மை வாக்குகளால் வென்றிருப்பார்.வட கிழக்கு உள்ளடக்கிய தமிழீழம் என்ற கோரிக்கைக்கு வலுச்சேர்த்ததாகவும்  இருந்திருக்கும். மட்டக்களப்புத் தொகுதியில் நான் போட்டியிடுவேன்  என அடம்பிடித்ததால் நியாயமாக முஸ்லீம் வேட்பாளரைநியமிப்பதற்குப் பதிலாக இவரை நியமிக்கவேண்டியிருந்தது.இரட்டை  அங்கத்தவர் தொகுதியாக மட்டக்களப்பு அறிவிக்கபட்டதன் நோக்கம் தமிழரும் முஸ்லீமும் எம்.பியாக வேண்டுமென்பதற்காகவே 

தொடர்ச்சியாக எம்பி யாக இருப்பவர் என்ற வகையிலும் தமிழ்த் தேசிய உணர்வை கிழக்கில் வளர்த்தவர்களில் மூத்தவராக இருப்பதாலும் இராஜதுரையே  தமிழர் கூட்டணியின்  அதிகார பூர்வமான வேட்பாளர்; அவருக்கே உதய சூரியன் சின்னம். ஆகையால் உறங்கு நிலையிலிருந்த தமிழரசுக் கட்சியின் சின்னம் காசி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது. தேர்தலின் முடிவில்  "பாராளுமன்றக் கதவுகள் திறக்காவிடினும் இந்த நாட்டின் சிறைக்கதவுகள் எனக்காகத் திறந்தே உள்ளன"என்று அவர் சொல்லும் நிலை ஏற்பட்டது. அத்துடன் தமிழரசுக் கட்சி என்பது கோமா நிலைக்குச்  சென்று விட்டது.   

2004 ல் வீரசிங்கம் ஆனந்த சங்கரியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கோமாநிலையில் இருந்த தமிழரசுக் கட்சிக்கு குளுக்கோஸ் ஏற்றி அரசியல் களத்தில் இறக்கிவிடப்பட்டது. 1977 ல் வவுனியா தொகுதியில் போட்டியிட்டவர் முன்னர் தமிழ்க் காங்கிரஸ் எம்.பி யாக இருந்து 1970ல் தோற்றுப்போன தா.சிவசிதம்பரம். 1977ல் இடம்பெற்ற இன அழிப்பைத் தொடர்ந்தே மலையக மக்களைக்  குடியேற்றும் விடயம் ஆரம்பமானது. தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,காந்தீயம் என்பன இந்த முயற்சியில் பின்னர் ஈடுபட்டனகுறிப்பாக வவுனியாத் தொகுதியில் இடம்பெற்ற பணிகள் குறித்து தமிழரசுக் கட்சியால் தொல்லை ஏற்பட வில்லையா என்று சீடன் கேட்க அது பற்றி குரு விளக்கமளிக்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணி மூலம்

தெரிவான தா.சிவசிதம்பரம் அடிப்படையில் காங்கிரஸ்காரர். இதற்குள் தமிழரசுக்கட்சி  என்ன தொல்லையை க் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்?

உச்சக்கட்டப்  பித்தலாட்டம் 80 நடுப்பகுதியில் புளொட்டில் இணைந்திருப்பேன் எனக் கூறுவதுதான். ஏனென்றால் "புளொட்டின் உருவாக்கம் நடந்தது 79ம் ஆண்டு நவம்பர்  மாதமளவில் தான் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கமென்று பெயருடன் அப்போதுதான் உருவாகினது" என்று கூறுகிறார்.

புலிகள் இயக்கத்தில் உடைவு ஏற்பட்டது 80 நடுப்பகுதியில் தான். வாய்க்கால் தரை மாநாடு  80 ஏப்ரலில் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் உடைவு ஏற்பட்டது. பின்னர்  ஆகஸ்டில் ஊர்காவற்துறை மாநாடு நடைபெற்றது.இப்படியிருக்க 1979 நடுப்பகுதியில் புளொட்டின் உருவாக்கம் நடந்தது எவ்வாறு சாத்தியம்?

இதனை விட இன்னொரு விடயம் சுந்தரம் மீதான நடவடிக்கை 2.01.1982 அன்று எடுக்கபட்டபின் முயன்றது உமாமகேஸ்வரன் குழு ரோனியோ செய்து வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் `புலிப்படைத் தளபதி மரணம்என்ற தலைப்பிட்டது.இதனைத் தொடர்ந்து புலிகளின் இலச்சினையுடன் `துரோகத்துக்குப் பரிசு` என்ற தலைப்பில் வெளியிட்ட  துண்டுப் பிரசுரத்தில் தமது செயலுக்கான காரணங்களை விபரித்திருந்தனர் புலிகள்.அதற்குப் பிறகும் தாங்கள்தான் உண்மையான புலிகள் என்றே நிரூபிக்க முயன்றது உமாமகேஸ்வரன் குழு. ஒரு துண்டுப் பிரசுரத்தில் சுந்தரம் புலிப்படை,காத்தான் புலிப்படை ரொபேர்ட் புலிப்படை,என்பனவற்றுடன் இன்னொருவரின் பெயரிலும் புலிப்படை இருந்ததாக காட்டமுனைந்தது. அதாவது தங்களுக்குள் பல படைப்பிரிவுகள் இருப்பதாக மாய மானொன்றைக் காட்ட  முனைந்தது.யோகன் கண்ண முத்துவே இவ்வளவு கோளாறு செய்வாரென்றால் அவரது தலைவரான உமா மகேஸ்வரன் எவ்வளவு செய்ய முனைந்திருப்பார்.

1982  ஆண்டு இவர் மட்டக்களப்பு நகரில் அமைந்திருக்கும் பொது வைத்திய சாலை (தற்போது போதனா வைத்திய சாலை) முன்றலில் அமைந்திருந்த உப தபால் அலுவலத்துக்கு வந்திருந்த நாலு தமிழ் இளைஞர்களை  அதிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த புளியமரத்தடியில் கூட்டிக்கொண்டு போய் வகுப்பு நடத்தினார். தங்கள் அமைப்பில் 500 உறுப்பினர்கள் இருப்பதாக கதையளந்தார்.மட்டக்களப்பில்  அப்போது பிரபல்யமாக இருந்த வைத்திய நிபுணர் டாக்டர் கருணாகரன் என்பவர் இவ் வீதியிலே வந்துகொண்டிருந்த போது இவர்களைக் கண்டார். அந்த நாலுபேரில் ஒருவர் அவருடைய உறவினர். .அன்றிரவு தனது உறவினரை வீட்டுக்கு அழைத்து இவர் உண்மையான புலிப்படையே  இல்லை என்று சுட்டிக்காட்டினர்.500 பேர் கணக்குக்கும் விளக்கமளித்தார்.இவர்கள் 15 -20 பேர்தான் இருக்கமுடியும்; 500 பேர் என்பது கலப்படமில்லாத பொய் என்று கூறினார். உண்மைதான் அந்தக் காலத்தில் 500 சோற்றுப் பார்சல்களைத்  திரட்டவில்லையே?

இறைகுமாரன்,உமை குமாரன்  படுகொலையில் உண்மையைத் திரித்துக் கூறியதன் பின்னர் சுழிபுரத்தில் சுவரொட்டி ஒட்டச் சென்ற 6 மாணவர்களைக் கொன்றதுடன் சிலரின் ஆணுறுப்பை வெட்டி சடலங்களின் வாயில் வைத்த மனோ வியாதிக்காரர்களின் செயலை நியாயப்படுத்தியோ அல்லது வேறு ஒருவர் தலையிலோ பழி  போட்டிருப்பார்.

எப்படியோ ஓரத்தநாடு மண்ணில் புளொட்டினால் புதைக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறாமல் தப்பிக்கொண்டார்.

எல்லாம் முடிந்தபின் இன்று ஒரு தத்துவ ஞானி போல காட்சியளிக்க முயல்கிறார் இந்தப் பரமார்த்த குரு. இவரது  சீட சிகாமணிகள் இவரிடம் வரலாறு கேட்டு இணையத்தில் வெளியிடுகின்றனர்.ஒருவனைப் பாம்பு கடித்து விட்டது . அவனை வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அந்தப் பாம்பைத் திட்டிக்கொண்டே சென்றனர்உறவினர்கள்.இதனைக் கேட்ட நாக்கிளிப் புழு (மண் புழு)பாம்பென்றால் கடிப்பேன் தானே? என்று கேட்டதாம்.யோகன் கண்ணமுத்து போல் இன்னும் எத்தனை நாக்கிளிப் புழுக்கள் நர்த்தனமாடப் போகின்றனோவோ?

 

பின்னிணைப்பு

இவர் சின்னாச்சி,கருணாநிதி ஆகியோர் புலிகளில் இணைந்து கொண்டதாக குறிப்பிடுகிறார்.

சின்னாச்சி புலிகள் இயக்கத்தில் இணையவில்லை;ஆதரவாளர் மட்டுமே. இவர் அண்மையில் கொழும்பில் காலமானார்.. இவருடைய  தம்பி சபாரத்தினம் தயாளன் (2ம் லெப்டினன்ட் அர்ஜூன்) 27 ,12.1988 அன்று பூநோச்சிமுனையில் இந்தியப் படையுடனான  மோதலில் வீரச்சாவடைந்தார்.

கருணாநிதி கல்முனையில் விஸ்வம் என்ற பெயரில் புலிகள் உறுப்பினரானார். 18.03.1985 அன்று முகமூடியின் உதவியுடன் கல்முனைப் பகுதிக்கு வந்த படையினர் இவரைக் கைதுசெய்ய முயன்றனர்.அப்போது சைனட் உட் கொண்டு  உயிர்பிரிய முன்னர் முகமூடியின் முகத்திரையை அகற்றி விட்டு  தங்கமணி தான் காட்டி கொடுத்தான் என உரக்கச் சத்தமிட் டவாறு ஆகுதியானார்.

தனது குருவாகச்  சித்தரிக்கும் ஈஸ்வரன் என்பவரைப்  புளொட்டில் செல்வாக் குடன் திகழ்ந்த மெண்டிஸ்  கடத்தி செல்ல முயன்றார். தப்பித்து ஓடிய ஈஸ்வரனை புலிகளின் ஆதரவாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் காப்பாற்றினர். ஈஸ்வரன், பிரசாத் எனப்படும் கணேசமூர்த்தி ,பரந்தன் ராஜன்,டக்ளஸ் தேவானந்தா முதலானோர் இணைந்து .என்.டி.எல்.எவை உருவாக்கினர்.அதாவது இயக்கங்களிலிருந்து பிரிந்து  உதிரிகளாக விலகியவர்களைக் கொண்டு ஆரம்பத்தில் இது உருவானது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்தவுடன் சில ஆயுதங்களைக்  கையளித்து .என்.டி.எல்.எவ் என்றால் பரந்தன் ராஜன் தான் எனக் காட்டும்  முயற்சி நடந்தது. தங்களுடன் எந்த ஆலோசனையையும் நடைபெறாமல் தன்னிச்சையாக இடம் பெற்றது இது என விசனமடைந்த ஈஸ்வரனும் பிரசாத்தும் தங்களையே .என்.டி ,எல் எவ் என புலிகள் அங்கிகரிக்க வேண்டுமென எதிர்பாத்தனர். இந் நிலையில் டக்ளஸ் ஒதுக்கிக் கொண்டார். இது தொடர்பாக பிரபாகரனைச் சந்திக்க வேண்டுமென ஈஸ்வரன் கேட்டதற்குஅமைய பல்கலைக்கழகத்துக்கு  முன்னால் உள்ள குமாரசாமி வீதியிலுள்ள ஒரு வீட்டில் இச் சந்திப்பு நடந்தது.பரந்தன் இராஜனேயே   இந்தியா .என்டி.எல்.எவ் வென காட்ட முயற்சிக்கையில் அதற்கு உரிமைகோருவதில் பயனில்லை என ஈஸ்வரனிடம் கூறினார் பிரபாகரன்.மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துமாறு ஈஸ்வரனுக்கு ஆலோசனை சொன்னார் பிரபாகரன். இவர் பற்றி அவர் அறிந்திருத்தமையால் இந்த விடயத்துக்கு இவர் பொருத்தமானவர் என பிரபாகரன் கருதியிருக்கலாம். இந்திய இராணுவத்துடனான மோதல் எல்லா நிலைமையையும் மாற்றிவிட்டது. ஆனால் யோகன் கண்ணமுத்து மட்டும் தான் பல ஆணிகளைப் புடுங்கியவர் என்ற நினைப்பில் புலிகள் மீது தொடர்ந்து வாந்தி எடுக்கிறர்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post