இரண்டாம் உலகமகாயுத்தத்தில் பிரித்தானிய விமானப்படையில் பணியாற்றிய, ஒரேயொரு இலங்கைத்தமிழரான யாழ்ப்பாணம், உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட 'கப்டன் செல்லையா இரத்தினசபாபதி' அவர்கள் தனது நூறாவது பிறந்த தினத்தை திருகோணமலையில் உள்ள அவரது தங்கு விடுதியில் கடந்த 2020இல் கொண்டாடினார்.
கொழும்பு
ஆனந்தாக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்விபயின்றபோதும்
அவரது விளையாட்டுப் போக்கினால் பெற்றோருடன் ஒத்துவராத காரணத்தால், வீட்டைவிட்டுப்
புறப்பட்டு பதினெட்டு பேர்களில் ஒருவராக பிரித்தானிய விமானப்படைக்கு தெரிவுசெய்யப்பட்டு, 1941ம் வருடம் இலண்டன்
சென்று சேர்ந்தார். அங்கு அவர் பெயர் 'சி.கே.பதி' என
மாற்றப்பட்டது. மேலதிக படிப்பிற்காக ஒரேயொரு தமிழராக கனடாவிற்கு அனுப்பப்பட்டார். படிப்பு முடிந்தபின் மறுபடியும் இலண்டன் வந்து பின்னர் யுத்தத்தில் பணிபுரிந்தபோது மிகவும் கடினமான விமானங்களை ஓட்டி, சாதனை புரிந்தார்.
ஒரு
சமயம், பிரான்ஸ் கடற்கரை ஓரமாக ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக்
கப்பலை மூழ்கடித்து சாதனை படைத்தார். 1944ம் ஆண்டு போர்
பதக்கம் கிடைக்கப்பெற்று கௌரவிக்கப்பட்டார். போர் முடிவிற்கு வந்தபின்பு
இங்கிலாந்தில் கடல் பிராந்திய காவல்துறையில்
சிலகாலம் பணிபுரிந்துவிட்டு தாயகமான, இலங்கைக்கு திரும்பினார். இங்கு இந்திய விமான சேவையில் கப்டனாக 27 வருடங்கள் பணியாற்றினார். ஓய்வுபெற்றபின்பு சில காலம் இலங்கை
விமானத்துறையில் பணியாற்றிவிட்டு திருகோணமலையிலுள்ள நிலாவெளியில் ஒரு சுற்றுலா விடுதியை
ஆரம்பித்து நடத்தியவர். இன்றைய தேதியில் இவர் காலமாகிவிட்டதாக தகவல்கள்.
இவரைப்போல
பல ஈழத்தமிழர்கள் அன்று முதல் இன்று வரை வெளிநாடுகளில் பல்வேறு
சாதனைகளை புரிந்து, பல்வேறு விசேட பதவிகளை புரிந்து, பெயரோடும் புகழோடும் இலைமறை காய்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இனங்கண்டு, பழைய பதிவுகளை ஆராய்ந்து,
தற்போதுள்ளோரை கண்டுபிடித்து ஆவணப்படுத்தவேண்டிய கடமை எமக்கு உள்ளது.
இவர் தொடர்பான மேலும் தகவல்கள் அறிந்தோர் பதிவிடவும்.
நன்றி
: Jaffna Thevi (தகவல் உதவி)
Post a Comment