தமிழரசுக் கட்சிக்குக் கொள்ளி வைப்பது யார்? மாவையா, செல்வராஜாவா,சிறீதரனா?

 


அவதானி

 செருப்புக்கு அளவாக காலை வெட்டும் முயற்சியில்  தமிழரசுக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல் வரும் போலத்  தெரியவில்லை.கட்சியும் பல்வேறு அணிகளாக இயங்கி வருவதால் தேர்தல் நடந்தாலும் வடமாகாண முதல்வராக மாவை வரமுடியுமா என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன் எனது எம்.பி பதவியை மாவை அண்ணனுக்கு வழங்கத் தயார் எனப் பகிரங்கமாகச் சொன்ன சிறீதரனும் சொன்ன சொல்லைக்காப்பாற்ற மாட்டார் எனப் புரிந்து விட்டது. பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் தயார் என்று சொல்லிக்கொண்டு இருக்க வேண்டுமே தவிர ஒரு போதும் விட்டுவிடக் கூடாது எனப் பிரபாகரனுக்கு அமிர்தலிங்கம் சொன்னது சும்மா இல்லை என்பதற்கு சிறீதரன் உதாரணம். போதாக்குறைக்குக்  கட்சியின் தலைமை மீதும் குறிவைத்துள்ளார். யார் யார் எதற்கு ஆசைப்படுவது என்ற விவஸ்தையே  இல்லாமற் போயிற்று.மலையக மக்களின் விடயமும் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துக்குப் பிரதான காரணம். அந்தக் கட்சிக்கு மலையகத்தமிழன் என்ற காரணத்தை இழி சொற்களால் திட்டிய சிறீதரன் தலைவராக வர ஆசைப்படுகிறார். இவர் கடைசியாக ஏற்படுத்திய குழப்பம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை   கலையரசனிடமிருந்து பறிப்பதற்கு வழி வகுத்துள்ளது. குளத்தைக் கலக்கி மீன் பிடிப்போம் என்று இவர் புறப்பட முதலைதான் வாயைப் பிளந்து கொண்டு வருகிறது. பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டிய கோவணத்தையும் இழந்தவரின் நிலையில் கலையரசன்.

கட்சியின் கையில் இருந்த யாழ்.மேயர்பதவியையும்  புலிகள் மீதுள்ள வெறுப்பால் கைவிட்டார் மாவை. கூட்டமைப்புக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று விரலை விட்டேனும் எண்ணத் தெரியாதவர் இவர். ஆர்னோல்ட்டை மீண்டும் மேயர் வேட்பாளராக அறிவித்தால் எதிர்த்து வாக்களிப்போம் என .பி.டி.பி பகிரங்கமாக அறிவித்து விட்டது. சொலமன் சூ சிறிலை வேட்பாளராக அறிவித்தால் ஆதரவாக வாக்களிப்போம் எனவும் .பி.டி.பி சொல்லிவிட்டது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்  ஆர்னோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களிக்காது. மாவை மக்கள் பிரதிநிதியாக தெரிவாகும் முன்னரே சிறில் அந்த நிலையை அடைந்து விட்டார்.இராஜா.விஸ்வநாதன் மேயராக இருக்கும் போதே சிறில் சபை உறுப்பினராக இருந்தவர்.இன்றுள்ள சபை உறுப்பினர்களில் அவரே மூத்தவர்.அப்படியிருந்தும் புலிகள் சார்பானவர் என்ற ஒரே காரணத்துக்காக மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழை ஏற்பட வேண்டுமென்று தீர்மானித்து பதவியை இழந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்தவர் மாவை. தான் ஆளுமையுள்ள தலைவர் என்பதை நிலை நாட்டத்  தவறிவிட்டவர்.

இன்றுள்ள நிலையில் செயலாளர் பதவி தான் அதிகாரம் மிக்கது என்று உணர்ந்து கொண்டார் மாவை. தேசியப்பட்டியல் விவகாரத்தில் மாவையைத் தெரிவு செய்யக்கூடாது என்ற சுமந்திரனின் எண்ணத்தை அவசர அவசரமாக நிறைவேற்றினார் செயலாளராக இருந்த கி.துரைராஜசிங்கம்.

இந்தச் சர்ச்சையால் எய்தவர் இருக்க அம்பு ஒடிக்கப்பட்டது. கட்சித் தலைவர் இருக்க நேற்று அரசியலுக்கு வந்த சுமந்திரனைத் திருப்பதிபடுத்த செய்த காரியங்களை அவர் நினைத்துப் பார்க்கவில்லை. துரைராஜாசிங்கம்  யார்? தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னம் உதயசூரியன் என்று அறிவித்த பின்னர்  முதன் முதலாக கையால் வரைந்த உதயசூரியன் கொடி கிரானிலேயே ஏற்றப்பட்டது. (வரைந்தவர் ஓவியர் தர்மா) அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் இவர் குறிப்பிடத் தக்கவர். 1994 பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,974 வாக்குகள் பெற்று எம்.பி ஆனார்.

இவர் சுமந்திரனுக்கு  செம்பு தூக்கப்போய் தனது பெயரைப் கெடுத்துக்கொண்டது மட்டுமன்றி செயலர் பதவியையும் இழந்தார்.

மாவையின் தலைமையின் கீழ் யாழ்மாநகரசபை,நெடுந்தீவு,நல்லூர் பிரதேச சபைகள்,தற்போது வல்வெட்டித்துறை நகர சபை முதலானவற்றில் ஆட்சியை இழந்துள்ளது கட்சி. தற்போது செயலராக மாவையையும்,தலைவராக முன்னாள் எம்.பி செல்வராஜாவையும்,உப தலைவராக சுமந்திரனையும் நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. செல்வராஜா யார்? மக்கள் மனதில் இன்று தலைமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை உள்ளதா? விகிதாசாரத் தேர்தல் முறையில் மட்டு . தேர்தல் மாவட்டத்தில் ஒரு கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக  போட்டியிட்டு விருப்பு வாக்கில் கடைசி இடம் பெற்றவர் என்ற கேவலமான வரலாறு இவருக்கு மட்டுமே உள்ளது. (தேர்தல் 2015)

யுத்தம் நடைபெற்ற காலத்தில் இவர் வெளிநாடொன்றுக்குச் சென்றார்.அங்கிருந்து பின்னர் ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு முன்னாள் போராளி ஒருவர் யுத்த காலத்தின் நினைவுச் சின்னங்களாக பராமரிக்கப்படும் இடமொன்றுக்கு இவரைக் கூட்டி சென்றார். அது பற்றி விளக்கமுனைகையில் "இதையெல்லாம் எங்களுக்கு ஏன் காட்டுகின்றீர்கள் - வெளிநாட்டுக்கு வந்தால் வணிக வளாகம் (shopping complex )போன்றவற்றுக்குக் கூட்டிச் சென்றிருந்தாலாவது பயனுள்ளதாக இருந்திருக்கும்" எனக் கூறினார் போராடிக்கொண்டிருந்த மக்களின் பிரதிநிதியான இவர்.

2012 இல் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக விளங்கிய கி.துரைராஜசிங்கத்தின்பணிமனைக்கு முன்னாள் மாவட்ட  அபிவிருத்திச் சபை  உறுப்பினர் ஒருவர் சென்றார்.(தற்போது புலம்பெயர் நாடொன்றில் இருப்பவர்) இவரிடம் தாந்தாமலை வீதியைப் பற்றி குறிப்பிட்ட அவர் அந்தக்காலத்தில் இருந்த மாதிரியே இந்த வீதி இருக்கிறதே; ஏன் இதனை அபிவிருத்தி செய்யவில்லை எனக் கேட்டார். "இவங்கள் எங்களை எதாவது செய்ய விட்டாத்தானே" ?  என்று புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரைச் சுட்டிக்காட்டினார் செல்வராஜா.யுத்தம் முடிந்தது 2009 மே 18 இல். 2010 திலும் இவர் மீண்டும் எம்.பி யாக தெரிவானார்.அப்படியிருந்தும் தனது செயற்திறனின்மைக்கு புலிகளைக் குற்றஞ்சாட்டுவதை அயோக்கியத்தனம் என்று சொல்லாமல் வேறு எப்படிச்சொல்வது?

பொதுவாக மக்கள் பிரதிநிதிகளின் செல்வாக்கினைக் குறைப்பதில் வாரிசுகள்,துணைவியாரின் பங்கு கணிசமாக இருக்கும்.எம்.பி யாக இருந்த இவரிடம் எதோ ஒரு விடயத்துக்காக ஆசிரியை ஒருவர் சென்றார்.இவர் வெளியில் வரத் தாமதமாகும் எனத் தெரிந்தமையினால் அங்கிருந்த கதிரையொன்றில் அமர்ந்தார். இதனைக் கண்ணுற்ற இவரது துணைவியார் "நீங்களெல்லாம் கதிரையில் இருக்க காலம் வந்துவிட்டதோ?" எனச் சினந்தார். இவ்வாறான சம்பவங்களே பின்நாளில் விருப்புவாக்கில் கடைசி இடத்துக்கு  இவரைத் தள்ளின.

கல்லடியில் இவரது வாகனத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்தார்.என்னதான் தலைபோகிற அவசரமென்றாலும் ஒரு மக்கள் பிரதிநிதியான இவர் காயமுற்றவரை தனது வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.சாதாரணமாக எந்த மனிதனும் முதலில் அதைத்தான் செய்வான். விபத்துக்கான தவறு எந்தப் பகுதியிலாவது இருந்து விட்டுப் போகட்டுமே;  இவரோ வீதியில் நின்றவர்களிடம் இவரை (காயமுற்றவரை) ஆஸ்பத்திரியில் சேருங்கள் என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

தமிழரசுக் கட்சித் தலைவராக விளங்கிய தனது தாத்தா  இராசமாணிக்கத்தின் பெயரால் நிதியமொன்றை நிறுவி மட்டக்களப்பு மக்களுக்கு எதாவது செய்யவேண்டுமென எண்ணினார் சாணக்கியன்.

களுவாஞ்சிக்குடியில் நடந்த ஒரு நிகழ்வின்போது சாணக்கியன் யாரென அறிந்து கொண்டார் சம்பந்தர் ஐயா. நிகழ்வின் முடிவில் சாணக்கியனைக் காட்டி இவர் எமது கட்சிக்குப் தேவைப்படுவார் எனச் செல்வராஜாவிடம் சொன்னார். சம்பந்தன் ஐயாவுடன் சாணக்கியனுக்கு அறிமுகம் ஏற்பட்டதே  பெரும் நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது செல்வராஜாவுக்கு. அந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது சம்பந்தன் ஐயாவின் கூற்று.

அன்றிரவு சாணக்கியனைத்  தொலைபேசியில் அழைத்த அவர் "2020 வரை நான் அரசியலில்  இருப்பேன்,எனவே அதுவரை உள்ளுராட்சி மன்றம் முதல் எந்த வகையிலும் அரசியலுக்குள் வர முயற்சிக்கக் கூடாது" என எச்சரித்தார். இவரது எச்சரிக்கையே அரசியலில் இறங்கும் எண்ணத்தை சாணக்கியனுக்கு ஏற்படுத்தியது. இன்று பிள்ளையான் ஆக்கிரமித்து வைத்துள்ள வீட்டின் சொந்தக்காரரான அருண் தம்பிமுத்து  கேட்டதும்  அவர் சார்ந்த கட்சியில் இணையும் சூழல் ஏற்பட்டது இதனால் தான்.

பின்னாளில் புலிகளின் மூத்த போராளியான யோகன் பாதர் (பாலிப்போடி சின்னத்துரை) இன் அழைப்பை ஏற்று  மாவீரர் நாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். அதைப் பார்த்ததுமே அங்கு காணப்பட்ட உணர்வுகளின் தாக்கம், இந்த விடுதலைப் போராட்டம், தேசியம் என்பனவற்றின் கனதி,பெறுமதி அவருக்குப் புரிந்தது.

கடந்த பொதுத்தேர்தலில் சாணக்கியன் போட்டியிடப்போகிறார் என்றதும் சாகும் வரை அரசியலில் இருக்கும் தனது ஆசைக்கு ஆப்பு வைத்ததாக எண்ணினார் செல்வராஜா.இயன்றவரை தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.வேறு கட்சியிலிருந்து வந்தவர் சாணக்கியன் என்றார்.இந்த விடயத்தில் பாராளுமன்றத்தில்  தமிழரின் ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதம் எனக் குறிப்பிட்ட அரியநேத்திரனும் செல்வராஜாவுடன் கைகோர்த்துக்கொண்டார். 2010 தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட களுதாவளையைச் சேர்ந்த குணரத்தினத்தை 2012 மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் செல்வராஜா. இது பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோது "அரசியல்ல  இதெல்லாம் சகஜமப்பா" என்று கவுண்டமணி பாணியில் பதிலளித்தார். பின்பு சாணக்கியன் விடயத்தில் தக்காளிச் சட்டினி - ரத்தம்  பாணியில் இவரது அரசியல் இருந்தது. சாணக்கியனின் தாய் சிங்களத்தி என்ற கதை தொடக்கம் பல்வேறு விதமான அவதூறுகளை பரப்பியது  செல்வராஜா   அரியநேத்திரன் கூட்டணி. அத்துடன் ஜனாவுக்கு வாக்களிக்குமாறு கூறியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்உருவாக்கத்தின் போது எந்தக் காலத்திலும் ஜனாவை அவர்சார்ந்த  கட்சிக்குள் மீண்டும் உள்வாங்கக்கூடாது என வலியுறுத்திய விடயம்  அப்போதைய ஊடகவியலாளரான அரியநேத்திரனுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் பட்டிருப்புத் தொகுதியில் இளைஞரான சாணக்கியன் களம் இறங்கினால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் எனக் கருதினார். இத்தனையையும் மீறித்தான் சாணக்கியன் வெற்றி பெற்றார்.இதெல்லாம் மாவைக்கு தெரியாதென்றல்ல சாணக்கியனை மட்டம் தட்டுவது; செயலாளரானபின் தேசியப்பட்டியல் எம்.பி யிலிருந்து கலையரசனை தூக்கிவிட்டு அப்பதவிக்குப் தனது பெயரை பிரேரிப்பது என மாவை  உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. எத்தனை நாளைக்குத்தான் பதவி இல்லாமல் இருப்பது.    

 இவ்வளவு கலகத்துக்குள்ளும் லாபமடையப்போகிறது சுமந்திரனே. கடந்த பொதுத்தேர்தலில் போது ஒரு லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன் என திமிருடன் சொன்னார் சுமந்திரன்.

நாட் செல்லச் செல்ல சில உண்மைகள் அவருக்கும் புரிந்தன. இதனைத் தொடர்ந்து "சுமந்திரன் எங்களுக்கு வேணும்" என்று உரத்துச் சொல்லத் தொடங்கினார் சிறீதரன். தனக்கு என்பதையே எங்களுக்கு என்று சொல்கிறார் என விடயமறிந்தோர் புரிந்துகொண்டனர்.ஏனெனில் கிளிநொச்சி நீதி மன்றில் தென்னிந்திய திருச்சபை தொடர்பான வழக்கொன்றில் ஒரு தரப்பினருக்காக ஆஜரான சுமந்திரன் மறு தரப்பினரை "இவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்கள்" எனக் குறிப்பிட்டார். பயங்கரவாதிகள் என்று இவர் குறிப்பிட்டவர்களில் தனது மைத்துனர்களான தீபனும்,கில்மனும் அடங்குகின்றனர் எனத் தெரிந்தும் ஏதோ ஒரு விடயத்துக்காக சுமந்திரன் அவருக்குத் தேவைப்பட்டார். இன்று சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழுவது மேல் என்று எண்ணினாரோ என்னவோ மாவையின் புதிய கூட்டாளி   சுமந்திரனை எதிர்க்க கலையரசனுக்கு தலைப்பாகை கட்டிவிட்டுள்ளார். இதில் மட்டு. மேயர் ஏன் இந்த வலையில் வீழ்ந்தார் என்பது தெரியவில்லை.எப்படியோ மாவை செயலரானதும் கலையரசனின் பதவி பறிப்பு பெரும்பாலும் உறுதி எனத் தெரிகிறது.  

சிதறு தேங்காய் போல் ஆகிவிட்டது தமிழரசுக் கட்சி. யதார்த்தத்தை புரியும் நிலையில் மாவை இல்லை. அவரது ஒரே இலக்கு வடக்கு முதல்வர் அல்லது கட்சி செயலர் பதவி. மிக மோசமான செல்வராஜாவிடம் கட்சித் தலைமையை கையளித்து விடலாம் என்று பார்க்கிறார். எது  எப்படி இருந்தாலும் மாவை,சுமந்திரன் போன்றோர் ஒவ்வொரு இலக்கில் பயணித்தாலும் புலிகளை எதிர்ப்பதில் மட்டும் ஓரணி. சம்பந்தன் ஐயா ஒரு மூத்த போராளியை சந்தித்ததைத் தொடர்ந்து சில புள்ளிகள் நடந்து கொண்ட விடயம் கட்சி எனும் பூசை அறையில்  புலிகள் எனும் செருப்புக்களை அனுமதிக்க முடியாது என்பதே. இதில் சி. வி. கே சிவஞானம் மட்டும் சற்று விதி விலக்கு. திலீபன் போன்றோருடன் பழகியதால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் .

குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக முழுக்கட்சியையும் ஏப்பம் விட  .பி.ஆர்.எல். எப் வின் கோட்டா  மூலம் அரசியலுக்குள் நுழைந்த சிறீதரன் முயற்சிக்கிறார்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post