ஆயுதப் போராட்டம் அழிவை மட்டும் தான் தந்தது என்று கூவிக்கொண்டிருக்கும் மேதாவிகளின் கவனத்துக்கு....


சிவா சின்னப்போடி (Siva Sinnapodi)

 

என்னுடைய பூட்டனுக்கும் பூட்டிக்கும்  குடியிருக்கவும் விவசாயம் செய்யவும் நிலம் வாங்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது.அவர்கள் புறம்போக்கு நிலங்களில் மட்டும் ஓலைக்குடிசைகளில் குடியிருக்க அனுமதிக்கப்பட்டார்கள்.கிணறு வெட்டவும் பொது நீர் நிலைகளில் தண்ணீர் அள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.மேலாடை அணியவும் கல்வி கற்கவும் விரும்பிய தொழிலைச் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைச் செய்தவர்கள் சிங்களவர்கள் அல்ல.தமிழர்கள்.தமிழ் மேட்டுக்குடியினர்.ஆறுமுகம் என்ற தமிழ் கனவான் இவர்களுக்கு ஞான குரு.

என்னுடைய அப்பு ஆச்சியினுடைய(தாத்தா பாட்டி) காலத்திலேயும் இதே நிலைதான் தொடர்ந்தது.ஆனால் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஊரில் காணி வாங்கவும் அந்தக்காணிகளில் குடிசைகள் அமைக்கவும் 5ம் வகுப்பு வரை பாடசாலைகளில் ஒதுக்குப் புறமாக நின்று கல்வி கற்கவும் வெள்ளைத்துரைமாரின் கருணையினால்  அனுமதி கிடைத்தது. ஆறுமுகத்தின் சீடன் இராமநாதன் சிங்கள மேட்டுக்குடியினரின் உரிமைக்காக லண்டனுக்கு வந்து பிரித்தானிய மகாராணியுடன் பேசினார்.ஆனால் எங்களுக்கு உரிமை வழங்க அவர் முட்டுக்கட்டை போட்டார்.

எனது அப்பா அம்மாவின் காலத்தில் 8 வகுப்பு வரை கல்வி கற்கவும் சிறு கல்வீடு கட்டவும் வாக்குப் போடவும் டொனமூர் என்ற பிரித்தானியக் கனவானின் கருணையினால் அனுமதி கிடைத்தது. 'அடக்குபவனின் அணுகுமுறையை அடக்கப் படுபவன் மௌனமாக ஏற்றுக்கொள்ளும் வரை அடக்குபவன் அடக்கிக்கொண்டே இருப்பான்.' என்ற உண்மையை எனது அப்பாவும் அவரையொத்த வயது தோழர்களும் புரிந்து கொண்டு அடக்கு முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்கள். இழப்புகள் வந்தன.நெருக்கடிகள் வந்தன.ஆனால் எவையெல்லாம் எங்களுக்கு மறக்கப்பட்டதோ அதை எல்லாம் நாங்களே எடுத்துக்கொள்ளும் வல்லமையை இந்த போராட்டம் எங்களுக்குத் தந்தது.

என்னுடைய காலத்தில் அவமானங்களும் புறக்கணிப்புகளும் தொடர்ந்தாலும் அறிவாயுதம் கொண்டும் போராயுதம் கொண்டு அவற்றை எதிர்க்கும் துணிவு எங்களுக்கு இருந்தது.இந்த துணிவை ஆயுதப் போராட்டம் தான் எங்களுக்குத் தந்தது.

இந்த ஆயுதப் போராட்டம் நடந்திருக்காவிட்டால்.....

எங்களுடைய எம்பி மார் நிலவிலே பேசி இருப்பார்கள்...

தனியான தண்ணீர் பானைகளும் குவளைகளும் எங்களுக்காக அவர்களது வீடுகளில் வைக்கப்பட்டிருந்திருக்கும்...

உணவு விடுதிகளில் தட்டுவத்திலும் தாமரை இலைகளிலும் நிலத்திலிருந்து தான் நாங்கள் சாப்பிட்டிருப்போம்...

பாடசாலைகளில் எங்களுக்குப் பின் வாங்கில்கள் தான் கிடைத்திருக்கும்.

அரச உத்தியோகங்கள் எங்களுக்கு எட்டாக் கனியாக இருந்திருக்கும்.

ஐயரையும் ஆண்டைகளையும் கோவிலுக்கு அனுமதிக்கும் கடவுள் எங்களை வெளியே நிறுத்தி வைத்திருப்பார்.

மேற்குலக புலப் பெயர்வும் கல்வியும் தொழில் வாய்ப்புகளும் ஆண்டைகளுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருந்திருக்கும்.

ஆயிரம் தவறுகள் இருந்தாலும் ஆயிரம் பலவீனங்கள் இருந்தாலும் தமிழீழத்திலே 30 வருட காலமாக  நடந்த ஆயுதப் போராட்டம் தான் எங்களுக்கு ஆற்றலைத் தந்தது.எங்களுடைய அடுத்த தலைமுறை கல்வியில் உச்சம் தொடவும் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கவும் வழியமைத்துக் கொடுத்தது.

நீங்கள் பாசிசம் ..ர் மண்ணாங்கட்டி என்று ஆயிரம் வியாக்கியானங்கள் சொன்னாலும் தமிழ் மக்களுக்கு அது  பேரழிவை தந்தவிட்டது என்று சொன்னாலும், இழப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டது உண்மை என்றாலும்  இந்த போராட்டம் மறுவளமாக  தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கத்தை உந்தித் தள்ளியிருக்கிறது.மாற்றத்துக்கான வழிகளை அது திறந்துவிட்டிருக்கிறது.எங்களுக்கு அழிவைத் தந்து தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக மமதை கொண்டிருந்த சிங்களம் அரச கட்டமைப்பு ரீதியாகத் தோற்றுப் போய்விட்டது.அது சோமாலியா எத்தியோப்பியா நிலைக்குச் செல்ல நீண்ட காலம் பிடிக்காது.

என்னைப் பொறுத்தவரை இந்தப் போராட்டம் தமிழ் மக்களுக்கு அழிவை மட்டும் தான் தந்தது என்று சொல்வார்களை நான் நவீன ஆண்டைகள் என்றே பிரகடனப்படுத்துவேன்.

 

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post