கிழிந்து
தொங்கும் முகமூடிகள்
=============================
-சுப, வீரபாண்டியன்
பார்ப்பனியம்
தன் பழைய போர்முறை ஒன்றை
மீண்டும் புதுப்பிக்கத் தொடங்கிவிட்டது.
சமூகநீதிக்
கருத்தியயலான திராவிடத்தை, தானே
நேர்நின்று எதிர்க்காமல், தமிழ் முகமூடி அணிந்த சிலரைக் கொண்டு எதிர்ப்பது என்பதே அந்தப் பார்ப்பனியத்தின் பழைய உத்தி! ம.பொ.சி அவர்களை
முன்னிறுத்தித் தொடங்கித் தோற்றுப்போன அதே செல்லரித்துப்போன பழைய
தாக்குதல்.
இப்போது
புதிதாய்ச் சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். திராவிடம் என்பது தமிழ் இன மறைப்பாம்!
நீதிக்கட்சிக் காலத்திலிருந்து திராவிடக் கொள்கை தமிழர்களுக்கு கேடு விளைவித்து விட்டதாம்.
எப்படி வரலாற்றைத் தலைகீழாய் புரட்டிப் போட முயற்சிக்கின்றனர் பாருங்கள்!
ஆனாலும்
பூனைக் குட்டியை எவ்வளவு காலம் கோணிப் பைக்குள் அடைத்து வைக்க முடியும்? இப்போது அது வெளியே வந்துவிட்டது.
போலி முகமூடிகள் இப்போது கிழிந்து தொங்குகின்றன. நாம்
தமிழரா, திராவிடரா என்று கருத்தரங்கம் போட்டவர்கள், நேரடியாகவே நாங்கள் தமிழ் இந்துக்கள் என்று சொல்லி அம்பலப்பட்டுப் போயுள்ளனர். தமிழ்த் தேசியத்திலிருந்து மெல்ல இந்து தேசியத்த்திற்கு வந்துவிட்டனர். அய்யா பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் காலமெல்லாம் எதிர்த்த அந்த இந்துத்வத்தை மீண்டும்
உயிர்ப்பிக்க அவர்கள் முற்படுகின்றனர். தங்களை ஆர் எஸ் எஸ்
என்று நேரடியாக அறிவித்துக் கொள்ளாத ஒரு குறைதான்!
இதனை
இன்று திராவிட இயக்கத்தினர் மட்டுமின்றி, தமிழ்த் தேசியர்களுமே மிகக் கடுமையாக எதிர்த்து நிற்கின்றனர். இவர்கள் "தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்கும் பார்ப்பனியக் கங்காணிகள்" என்கிறார் பொழிலன். இது தமிழ்த் தேசியத்திற்குச்
செய்யும் "பச்சைத் துரோகம்" என்கிறார் ஆழி. செந்தில்நாதன்.
"திராவிடம்
யாருக்கு கசக்கும்?" என்பதை விளக்கிச் சொல்கிறார் பேராசிரியர் கருணானந்தம். "திராவிடத் தமிழ்த் தேசியம்" என்பதை விளக்குகின்றார் வாலாசா வல்லவன்.
மேற்காணும்
நால்வரும் ஆற்றிய உரைகளை நூல்களாகத் தொகுத்து, வரும் வெள்ளிக்கிழமை (22.10.2021) மாலை 6 மணிக்கு, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் வெளியிடுகிறது
நம் கருஞ்சட்டைப் பதிப்பகம்.
இந்நூல்களை
மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், அடக்க
விலைக்கும் குறைவாக 10 ரூபாய்க்கு நூல்கள் வெளிப்படுகின்றன. ஒவ்வொரு
நூலும் 10,000 படிகள் அச்சிடப்படுகின்றன. இவ்வாண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் படிகளை
மக்களிடம் கொண்டு சேர்த்திட வேண்டும் என்பது திட்டம்.
இதனை
வெறும் வணிகமாக அன்று, திராவிட
இயக்கத்தகால் பயன்பெற்ற இச்சமூகத்தின் நன்றிக் கடனாகச் செய்து முடிக்க விரும்புகிறோம். இதில் உங்கள் பங்கும் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். திராவிட இயக்க உணர்வுள்ள ஒவ்வொருவரும் ஒன்று, இரண்டு என்று இல்லாமல், பத்து, நூறு என்று நூல்களை
வாங்கிப் படிப்பதோடு, மற்றவர்களுக்கும் கொடுத்துப் பரப்பிட வேண்டும் என்பது எம் வேண்டுகோள்!
இணைய வழியிலும் (http://karunchattaibooks.com) 22 ஆம்
தேதி முதல் நீங்கள் நூல்களைப் பெற்றுக்
கொள்ளலாம்.
தமிழ்
இந்து என்னும் பெயரின் மூலம் மீண்டும் தலைதூக்க முயலும் பார்ப்பனியத்தை விரட்டி அடிப்போம். தமிழ் மொழியை, இனத்தை, நிலத்தைக் காக்கத் திராவிடக் கருத்தியலை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம்!
அன்புடன்
சுப.வீரபாண்டியன்
Post a Comment