மக்கள் மறந்த கொடூரம் மக்கள் மன்றில் குற்றவாளிகள் !

 1990 டிசெம்பர் 01 - ஈழத்தமிழர் வரலாற்றில் கறை படிந்த நாள். தமிழரின் உரிமைப் போரில் தம்முயிரை ஈகம் செய்யப் புறப்பட்ட தமிழ் இளைஞர்களில் ஒரு குழுவான டெலோ (TELO) அரசின் எடுபிடிகளாகி அந்தத் தைரியத்தில் சொந்த இனத்திலேயே கூட்டுப்பாலியல் வன்முறையையும் படுகொலையையும் அரங்கேற்றிய நாள். இந்த ஈனச் செயலுக்குப் பலியானவர் ஆரையம்பதியைச் சேர்ந்த விஜி என்றழைக்கப்படும் நல்லதம்பி அனுஷ்யா. அந்தக் கொடூரம் பற்றி   கவிதை இது.

31 வது ஆண்டு நினைவு (01.12.2021)

மார்கழி ஒன்று - எம் ஈழப்

பார்கழி இழந்த நாள்...

 மீன் பாடும் தேன் நாடாம்

மட்டு நகர் தந்த வித்தகியாம்

விஜி அவளை...

 வீணாகிப் போன வீணர்களால்

வீணாக்கப்பட்டு வீசி எறியப்பட்ட

கரி நாள்..

 போராடப் புறப்பட்ட புண்ணியவான்கள்  சொந்த இனத்துக்காக...

 தன்னினத்தையே காட்டிக் கொடுத்த கயவர்களானார்கள்  சொந்த அரசியல் இலாபத்துக்காக...

 எதிரியுடன்

ஒட்டி நிற்கும்  ஒட்டுக் குழு ஓநாய்க் கூட்டங்களான சொரணை கெட்டவர்களானார்கள்

ரெலோ அமைப்பாக...

 தன்னின சகோதரியையே

லன்புனர்ந்தனர்  தம்

இச்சை வெறிக்காக...

 அழகாகப் பிறந்தது உன் தவறா?

இல்லை

ஈழ மகளாகப் பிறந்தது உன் தவறா?...

 உன் நீள விழிகளும் நீர் விழியாகிட

நேர்ந்தது என்ன கொடுமையோ?...

 தாளமிடும் உன் தாமரைப் பாதங்கள்

ஓய்ந்து கிடந்தது என்ன கொடுமையோ?...

 ஒளி சூழும் மலர் விழி ஒளி மங்கி

மூடிக் கிடந்தது என்ன கொடுமையோ?...

 மட்டு வாவி ஆற்றின் மீதினில் உன் பொன்னுடல் வீசிக் கிடந்தது என்ன கொடுமையோ?...

கொடியவர் உனக்கிழைத்த கொடுமைகளுக்கெலாம்

நீர் சாட்சி நிலம் சாட்சி...

 நீல விண் முகில் சாட்சி ஊரெல்லை மரம் சாட்சி உறங்காத மதி சாட்சி...

 வார்த்தைகளில் சொல்லிட வலியற்ற

பரிதாபம்...

 ஓர் சாட்சி இல்லாது உனைக் கொன்று ஆற்றில் வீசியவரை

நீதி தன்னும் கேட்கவில்லை...

நேர்மை மனம் துடிக்கவில்லை...

 ஆதி முதல் உலகாளும் இயற்கை அன்னை தனும் உனை வன்புணர்ந்த கொடுமை தனை நீதி தெய்வ சபை ஏறி நேரில் உண்மை கூறவில்லை...

 சரித்திரம் என்ன சொல்லும்...

சாட்சியம் என்ன சொல்லும்...

 சபலமே மனதில் கொண்டு கருத்திலே நஞ்சைப் பூசி...

 கருணையில்லாக் கயவர் உன்னை

வருத்தி கொன்று தம் இச்சை

தீர்த்து மகிழ்ந்தனர்...

 காலம் ஓர் நாள் மாறும்

கயவர் தம் செயலுக்கு

காலம்  தன் பதில் கூறும்...

 கதிர்காமத்திலே காடையரால்

கசக்கி எறியப்பட்ட

சிங்கள அழகுராணி மனம்பேரிக்கு அன்றளித்தனர் தீர்ப்பு...

செம்மணியிலே செங்குருதி சிந்த சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட கிருசாந்திக்கும் பின்பளித்தனர்  தீர்ப்பு...

 மட்டு மண்ணில் மடிந்த பூக்களான

மட்டு மகள் ரிபாயாவும்

வன்னி மகள் பிரேமினியும் உன்னைப் போலவே புதைக்கப்பட்டனர்

மறை கழன்ற ஈனர்களால்

கசக்கி முகர்ந்து...

 சொந்த இனத் துரோகிகளால்

கதறக் கதற கசக்கி முகர்ந்து எறியப்பட்டதால் தானோ உங்களுக்கு

இன்னும் வழங்கப்படவில்லை தீர்ப்பு?...

 கொன்றொழித்தவர்கள் அரசின் கைகூலிகள் என்றபடியாலா?...

ஒற்றுமையே என்னவென்றறியா தமிழரின்  பிரதிநிதிகள் என்று கூறிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  அடிவருடிகள் என்றபடியாலா?...

 சிங்களவன் கூட தான் செய்த தவறுக்கு அன்றேற்றான் தண்டனை...

 சொந்த இனத்திற்காக போராடிய

ரெலோ அமைப்பு  மட்டும் ஏற்கவில்லை

தம் தவறை இற்றை வரை...

 கண்ணிருந்தும் குருடர் போலக்

காதிருந்தும் செவிடர் போல

வாயிருந்தும் ஊமையர் போல

இதைக்

கண்டும் காணாமல் விட்டு மௌனிப்பது ஏனோ?

எமது அரசியல் தலைமைகளே!

 மீனவள் 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post