தமிழ்நாட்டில் வாழும் இருளர் பழங்குடி இன மக்களின் அவலங்களை, ஓர் உண்மைக்கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின்
தொன்மைக்கு சான்றாக உள்ள இருளர் பழங்குடியின
மக்கள் இன்றைக்கும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். "நாகரிகமடைந்து" விட்டதாக சொல்லிக் கொள்பவர்கள் இழைக்கும் கொடுமைகளை சிறப்பாக காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். படம் முழுவதும் போலிஸ்
அராஜகம் பற்றிப் பேசினாலும், அந்த மக்களின் உழைப்பை
சுரண்டிப் பிழைக்கும் பண்ணையார்களும், முதலாளிகளும் குற்றவாளிகள் தான்.
காவல்துறையினர்
எப்போதும் அதிகார வர்க்கத்தின் ஏவல் நாய்களாக இருப்பார்கள்.
பணபலம் இருப்பவனிடம் விலைபோகக் கூடியவர்கள். ஆனால், அடித்தட்டு ஏழை மக்கள் தன்மானம்
மிக்கவர்கள். போலிஸ் உயர் அதிகாரியே போதுமான
அளவு பணம் வாங்கித் தருவதாக
சொன்ன போதிலும், கொலைக்குற்றவாளிகள் தரும் பணத்தில் வாழ்வதை விட, வழக்கில் தோற்றாலும்
பரவாயில்லை, தன்மானத்துடன் வாழ விரும்புகிறார்கள். படத்தில் முக்கிய
பாத்திரமான செங்கேணி இந்த வசனத்தை பேசுவதாக
காட்சி அமைத்தமைக்கு டைரக்டரை பாராட்டலாம்.
மேலும்
ஜெய்பீம் திரைப்படம் நிகழ்காலத்திலும் நமக்கோர் உண்மையை உணர்த்துகிறது. நடைமுறையில் உள்ள சட்டங்களை பாவித்தே
நீதிக்காக போராட முடியும். வழக்கில் கிடைக்கும் வெற்றி தோல்வியை விட, இதன் மூலம்
குற்றவாளிகளை எச்சரிக்கையாக இருக்க வைக்கலாம். இல்லாவிட்டால், இருளர்கள் போன்ற கேட்க நாதியற்ற மக்களை, போலிஸ் பொய்யான திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்து அடித்துக்
கொலை செய்யும் கொடுமைகள் தொடரவே செய்யும். மேலும் இந்தப் போராட்டத்தில் நேர்மையான போலிஸ் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதிலும் தவறில்லை.
ஏழை
எளிய மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
என்பதற்காக, மனித உரிமை வழக்குகளில்
ஆஜராகி இலவசமாக வாதாடிய வக்கீல் சந்துரு என்பவர் இருந்தார் என்ற உண்மையை இந்தப்
படம் பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறது. அவர் மட்டுமல்லாது, இருளர்
பழங்குடி மக்களை அணிதிரட்டி அமைப்பு வடிவமாகியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். அது இந்தப் படத்தில்
மிகத் தெளிவாக காட்டப் பட்டுள்ளது. இருப்பினும், படம் தொடர்பான வலதுசாரிகளது
விமர்சனங்களில் அந்த விடயம் இருட்டடிப்பு
செய்யப் படுகின்றது.
காலங்காலமாக
இது போன்ற தகவல்களை மூடி மறைத்து விட்டு,
"கம்யூனிசம் என்ன செய்தது? அது
எப்போதோ காலாவதியாகி விட்டது!" என்று விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் சூரியன் மறைவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை கம்யூனிஸ்டுகள் மட்டுமே முன்னெடுக்க முடியும் என்ற உண்மையை உலகறிய
வைத்த ஜெய்பீம் படத் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுகள்.
தகவல்: Kalai Marx
(facebook) நன்றி
Post a Comment