அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் விடுதலையாகும் ஆயுள் கைதிகளோடு ஈழத் தமிழர்களையும் விடுவிக்க வேண்டும்.
முதல்வருக்கு
வ.கௌதமன் கோரிக்கை.
ஈழத்தமிழர்களுக்காக
பல்வேறு சலுகைகளை அறிவித்து புலம்பெயர் தமிழர்கள் நலனுக்காக அமைச்சர் மஸ்தான் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்தது
வரை அனைத்து செயல்பாட்டுக்குமாக தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் அறிஞர்
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்யவிருப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த ஏழுநூறு கைதிகளுக்குள்
தண்டனை காலம் முடிந்தும் திருச்சி சிறப்பு முகாமில் அடைபட்டுக் கிடக்கும் 40-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களையும், சேர்த்து
விடுவிக்க வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
2009 திட்டமிட்ட
இன அழிப்புக்கு முன்பும், பின்பும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இந்திய ஒன்றியம் எங்களது தந்தையர் நாடு, தமிழ்நாட்டில் வாழ்பவர் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் என்கிற
உரிமையோடு தஞ்சமடைந்தனர். ஆனால் இன்று வரை அவர்களின் பிள்ளைகள்
உயர்க்கல்வி படிக்கவோ, வேலைக்கு செல்லவோ,
தனித்ததொரு
தொழில் செய்யவோ இங்கு அனுமதியற்ற, ஆதரவற்ற நிலையில்தான் அவர்களின் வாழ்வு கடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் முதலமைச்சர் அவர்கள் சில சலுகைகள் வழங்கியிருப்பது
ஆறுதலளிக்க கூடியதாக இருந்தது. இருப்பினும் மூன்று தலைமுறைகளைத் தொலைத்துவிட்ட அவர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஏதாவது ஒரு தூர தேசத்திற்கு
செல்ல வேண்டுமென முடிவெடுத்தால், அவர்களுக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதில்லை. இத்தகைய நிலையில்தான் கடவுச்சீட்டு சம்பந்தமாக அவர்கள் மீது பல்வேறு வழக்குகள்
பாய்ந்தது. 8 மாதமோ ஒரு வருடமோதான் தவறான
கடவுச்சீட்டு தயாரிப்புக்கான தண்டனை. ஆனால் இவர்களின் தண்டனை காலம் முடிந்து நான்கைந்து ஆண்டுகள் கடந்தும் கூட, 40க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் இன்றும் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
இவர்களின்
விடுதலை சம்பந்தமாக, சட்ட அமைச்சர் மாண்புமிகு
இரகுபதி அவர்களையும், மறுவாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு
மஸ்தான் அவர்களையும், மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி
ஜெசிந்தா அவர்களையும், காவல் துறை கூடுதல் இயக்குனர்
(உளவுப்பிரிவு) ஐயா
டேவிட்சன் அவர்களையும் நேரில் சந்தித்து விடுதலைக்காக முறையிட்டேன். மாண்புமிகு முதலமைச்சர், மதிப்புமிகு தலைமைச்செயலாளர், மரியாதைக்குரிய காவல்துறை தலைவர் ஐயா ஈஸ்வரமூர்த்தி,
மரியாதைக்குரிய திருச்சி மாவட்ட ஆட்சியர் ஐயா சிவராஜன் அவர்கள்
உள்ளிட்ட பலருக்கும் பல முறை கடிதம்
அனுப்பினேன். இருப்பினும் அவர்களின் விடுதலை
தள்ளிக் கொண்டே போவது பெருத்த கவலையளிக்கிறது. நம்பி தஞ்சமடைந்த இடத்திலும் கூட நிம்மதியற்ற வாழ்விலிருக்கும்
ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமாக நிம்மதி கிடைக்க வேண்டுமென்றால், இரட்டைக் குடியுரிமையோ அல்லது ஒற்றைக் குடியுரிமையோ கிடைத்தால்தான் உலகம் முழுக்க வாழ்கின்ற ஈழத் தமிழர்கள்
அந்தந்த நாட்டில் எப்படி கல்வி, வேலை, அரசியல் உரிமையோடு தலைநிமிர்ந்து வாழ்கிறார்களோ, அத்தகைய வாழ்வை தாய் தமிழ்நாட்டிலும் வாழ
முடியும். ஆகையினால் தாயுள்ளம் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழுநூறு ஆயுள் கைதிகளுக்குள், திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களையும் சேர்த்து
விடுதலை செய்ய வேண்டும். மேற்கொண்டு அடைபட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களின் வழக்குகளையும் விரைவில் முடித்து விடுதலை செய்வதோடு, உடனடியாக இந்திய ஒன்றியத்தில் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் இரட்டை குடியுரிமை கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டுமென்று
உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
வ.கௌதமன்
பொதுச்செயலாளர்
தமிழ்ப்
பேரரசு கட்சி
"சோழன்
குடில்"
03.11. 2021
Post a Comment