பேரினவாத உணர்வைப் போக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

 


-அவதானி



 'முள்ளிவாய்க்கால்` - இது ஒரு இடத்தின் - கிராமத்தின் பெயர் மட்டுமல்ல; இதுவரை காலமும் தமிழ் பேசும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  இனப்படுகொலையின் மொத்தக் குறியீடு. இந்த ஆண்டு   நடைபெற்ற நினைவேந்தல்கள் நான்கு முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டிநிற்கின்றன.

1.யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்த எந்தச் செய்தியும்  வெளிவரவில்லை.

2.காலிமுகத்திடலில் கோட்டா கோ கோம் ஏற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல்.

3. சந்திரிகா அம்மையார் இந் நிகழ்வு பற்றி கருத்து வெளியிட்டமை - சுடரேற்றியமை.

4.கனேடிய அரசு வெளியிட்ட குறிப்பு - இது இனப்படுகொலைதான் என்று அடித்துக் கூறியவிதம் - இது இனப்படுகொலையென்று நிறுவப்போதிய ஆதாரங்கள் இல்லை என அடம் பிடித்த தமிழ் சட்டத்தரணிகளின்  வாயை அடைத்தமை.

முதலில் காலிமுகத்திடல் விவகாரத்துக்கு வருவோம். சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து அகிம்சை வழியில் இங்கு சத்தியாக்கிரகமிருந்தனர் தமிழர்கள். தமிழரசுக்கட்சி  இதனை ஏற்பாடு செய்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக  தமிழ்த் தேசிய உணர்வுள்ள பலதரப்பினரும் இதில் உணர்வுபூர்வமாகப் பங்கு பற்றினர். அரச ஆசீர்வாதத்துடன் சிங்களக் காடையர்கள் இந்த போராட்டக்காரர்களை மிலேச்சத்தனமாகத் தாக்கினர். தாமரைக்குளம் செல்லையா என்பவரின் காதைக் கடித்துத் துப்பினர். பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் இரத்தம் தோயத் தோய அடித்துப் புரட்டப்பட்டனர். மிகக் கொடூரமான முறையில் வன்முறைமூலம் இப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இக் காட்சிகளைப் பாராளுமன்றக் கட்டிடத்திலிருந்து ரசித்துக்கொண்டிருந்தார் சந்திரிகாவின் தந்தையாரான SWRD பண்டாரநாயக்கா (சொலமன் ஆர் டயஸ் பண்டாரநாயக்கா). மண்டை உடைக்கப்பட்ட  நிலையில் இரத்தம் வடிய வடிய பாராளுமன்றத்துக்குள் சென்றார் .அமிர்தலிங்கம். "விழுப்புண் தாங்கிய வெற்றிவீரர்கள் வருகிறார்கள்" என்று நக்கலடித்தார் அப்போதைய பிரதமர். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் சம்பிரதாயத்துக்காகவேனும் அனுதாப வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வரவில்லை . இரத்தம் வடிய வடிய பாராளுமன்றில் உரையாற்றினார் அமிர்தலிங்கம்.

பின்னர் பிரதமரான சந்திரிகாவின் அன்னையும் எல்லா விடயத்திலும் கணவருக்கு விசுவாசமாக இருந்தார்.மலையகத் தமிழரை ஆடு - மாடுகள் போல நாடுகடத்தும் ஒப்பந்தமொன்றை அன்றைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன் கைச்சாத்திட்டார். இரண்டு கொத்து அரிசி தருவோம் என்ற பொய் வாக்குறுதி வழங்கி 1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இவரது தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றின தொடர்ந்து தமிழரை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது. பின்னர் தமிழர்களின் உயர்கல்வி வாய்ப்பைக் குறைக்கும் நோக்கில் இனரீதியான தரப்படுத்தல் முறைமையை கொண்டு வந்தார் சிறிமா.இதன் மூலம் சிங்கள மாணவரை விடத் தமிழ் மாணவர் கூடுதல் புள்ளிகள் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது(இது தற்போது மாவட்ட  ரீதியான தரப்படுத்தலாக மாற்றமடைந்ததுள்ளது)

நான்காவது உலகத் தமிழராய்ச்சி மகாநாட்டின் போது யாழ்.முற்றவெளியில் தமிழக அறிஞர்.நைனா முகமதுவின் உரையைச் செவிமடுத்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது பொலிஸார் மேற் கொண்ட  தாக்குதலின் விளைவாக ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையை தலைமையேற்று நடத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சர்  சந்திரசேகராவுக்கு பதவியுயர்வு வழங்கிக் கௌரவித்தார் சிறிமா.

பாகல் விதையைப் போட்டால் சுரைக்காயா முளைக்கும்? தற்போது இசைப்பிரியாவுக்கு மட்டுமல்ல செம்மணியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட  கிருசாந்தி மற்றும் புங்குடுதீவில் கொல்லப்பட்ட சாரதாம்பாள், அம்பாறை மத்திய முகாம் என்ற இடத்தைச் சேர்ந்த கோனேஸ்வரி மட்டுமல்ல நாகர்கோயில் பாடசாலை, நவாலித் தேவாலய குண்டு வீச்சு போன்றவற்றில் கொல்லப்பட்டவர்களுக்கும் சேர்த்துத்தான் இந்தச் சுடரை ஏற்றினார் சந்திரிகா என்பதே உண்மை. சமல்,மகிந்த,கோத்தாவின் தந்தை D.A

ராஜபக்சாவின் நினைவிடம் தகர்க்கப்பட்டதும் நல்லவேளை தனது தந்தையாரின் நினைவிடம் தப்பிவிட்டது என்று நிச்சயம் எண்ணியிருப்பார் சந்திரிகா.

மறைந்தவர்களின் சமாதிகளைக் கிளறும் வரலாற்றை ஆரம்பித்து வைத்தவரே சந்திரிகா தான்.

   ஹொரஹொல்லவிலுள்ள தனது தந்தையின் நினைவிடத்துக்குச் செல்லும் போதெல்லாம் தன்னால்

அழிக்கப்பட்ட கோப்பாய்,தீருவில்,கொடிகாமம்,சாட்டி,வடமராட்சி கிழக்கு துயிலுமில்லங்களில் தரைமட்டமாக்கப்பட்ட சமாதிகள் பற்றிய நினைவு அவரைக் கொல்லும். சிங்கள ஊடகமொன்றில் "பதவி இருக்கும் போது மூளை இல்லை; மூளை இருக்கும் போது பதவி இல்லை"என வெளியான இவரைப்பற்றிய குறிப்பு சரியான கணிப்புத்தான்

 யுத்த வெற்றியும்,சிங்கள பெளவுத்தர்களே மேன்மையானவர்கள் என்ற எண்ணமும் காலிமுகத்திடலில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் தீபத்தில் எரிந்துபோயிருக்கும் என நம்பலாம். 2009 இல் இதே மாதத்தில் கிரிபத் வழங்கிய இடத்தில் இவ் வருடம் கஞ்சி வழங்கப்பட்டது என்பது  புதியதொரு செய்திதான். யுத்தத்தில் ஊனமுற்ற படை வீரரொருவர் சக்கர நாற்காலியுடன் வந்து முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தியமை இன்னுமொரு பரிணாமம்.

    இவ் வருடம் அடுத்த நிலைக்குத் தகுதியுள்ள 396 அதிகாரிகள்,8110 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடற்படையின் 74 அதிகாரிகள் மற்றும் 2010 சிப்பாய்களுக்கு  பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் வான் படையின் 450 அதிகாரிகள் மற்றும் 3361 சிப்பாய்களுக்கும் இவ்வாறு பதவியுர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அனுமதியுடன் இப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன என்ற செய்தியுடன் சம்பிரதாய பூர்வமாக எல்லாம் முடிந்தன. மே 19 தேசிய படைவீரர்கள் நாளை முன்னிட்டு ஜனாதிபதி ஊடகங்களுக்கு சம்பிரதாயபூர்வமாக ஒரு அறிக்கை விட்டுள்ளார். எல்லாம் சுபம்.

இதற்கு மேல் ஒரு ஆரவாரமும் இல்லை. டொலர் , டீசல்,பெற்றோல்,எரிவாயு பிரச்சனைகள் எல்லா எடுப்புக்களையும் கைவிடுவதற்கு ஒரு காரணமாக அமைந்தன.

         சிங்களத் தரப்பு ஒரு முடிவுக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டது. அங்கும் புலம்பெயர்ந்தோரின் எடுப்புகளுக்குக்  குறைவில்லை. அவுஸ்திரேலியாவில் கோட்டா  கோ கோம் போராட்டத்தின் போது இன அழிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கியோர் மீது முறுக்கி கொண்டார் ஒரு சிங்களத்தின் வாரிசு. அவரிடம் வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தைக் கிழித்து வீசும் காட்சி ஊடகங்களில் வெளிவந்தன. தமிழரின் கையால் ஏதும் வழங்குவதை அவரால் பொறுக்க முடியாதுள்ளது. அவருக்கு கொஞ்சம் கஞ்சி அனுப்பி வைக்க காலிமுகத்திடலின் ஏற்பாட்டாளர்கள் முயற்சிப்பது நல்லதுஏனெனில் அங்கு குடிக்கப்பட்ட ஓவ்வொரு வாய்க்கஞ்சியும் பேரினவாத உணர்வைப்  போக்கியிருக்கும் என நம்பலாம்.

          சிங்களவர்களை உணரவைத்தாலும் தாமே பெரிய ராஜதந்திரிகள், சட்ட அறிஞர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளை என்ன செய்வது என்று புரியவில்லை.இனவழிப்பு என்பதற்கு போதிய ஆதாரமில்லை என்றார்கள். புலிகள் மீது கட்டாய ஆட்சேர்ப்புக்கு  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்கள். நடந்தது இனப்படுகொலைதான் என்று தீர்மானம் கொண்டு வந்ததற்காக வடக்கு முதல்வர் மீது வேறு ஏதோ காரணங்களைச் சொல்லி நம்பிக்கை இல்லாப்பிரேரணையைக் கொண்டுவரச் செய்தார்கள்

கிடைத்த வடக்கு மாகாண சபை நிர்வாகம் ஆட்சி நடத்த தகுதியற்றது என்று நிரூபிக்க ஏதோ எல்லாம் செய்து தொலைத்தார்கள். முதலமைச்சர்

நிதியத்தை அனுமதித்தால் என்ன என்று டின்னர் சாப்பிடும்போது ராஜபக்ச குடும்பத்தினரிடம் கேட்டுத் தொலைத்திருந்தாலே சட்டபூர்வமாக நாட்டுக்குள்

கணிசமான டொலர்கள் வந்திருக்கும். அழிவுக்குப் பயன்படுத்தப்பட்ட அறிவை ஆக்கத்துக்குப் பயன்படுத்தும் தெளிவை வழங்கியருள்க என்று யேசப்பா, புத்த பெருமான், செல்வச்சந்நிதி முருகன், வல்லிபுரத்தில் உள்ள கண்ணன் என எல்லாக்கடவுள்களையும் வேண்டுவோம்.

குழிக்குள் போடப்பட்ட  நண்டுகள் நாம்மேலேறிவர எந்த ஒரு நண்டு முயற்சித்தாலும் கீழே உள்ள ஏதோஒரு நண்டு அதை இழுத்து விழுத்தும். இந்த இழுத்து வீழ்த்தும் நண்டுகளுக்கு சாமரம் வீசும் நண்டுகள் பேசாமல் இருந்தாலே இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.

இவ் வருட  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரகடனத்தில் "மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டமை, பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தாமை சிங்கள அரசுக்கு ஏனைய தேசங்களின் இருப்பின் மீதும் ஆதிக்கத்தைச் செலுத்தலாம் என்ற துணிவைத் தந்தது" எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை 2009 பின் முளைத்த தமிழ்த் தேசிய வாதிகள் புரிந்து கொள்வது நல்லது

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 18 நாளை தமிழ் இனப்படுகொலை நாளாக கனடா பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது என்ற செய்தியையும் இந்த அதிபுத்திசாலிகளின்  கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம். தமிழரசுக்கட்சியின் உருவாக்கமே மலையகத் தமிழர் விவகாரத்தால்  தான் ஏற்பட்டது. இன்று அந்தக் கட்சியில் இருந்து கொண்டு மலையகத் தமிழரை அன்னியப்படுத்தும் வேலைகளை இவர்கள் செய்யாமல் இருப்பார்களாக.






0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post