சவால்களுக்கிடையே வெளிவந்த மேதகு – 2

சவால்களுக்கிடையே வெளிவந்த மேதகு – 2

சுடரவன்

"வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஓரு வரி கூட கிடையாது"

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனையத்தில் வெளியான குறிப்பு இது, மிகவும் பொருத்தமான காலகட்டத்தில் வெளியான வைரவரிகள் இவை.

பிரபாகரன் தனது இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு மனம் பொறுக்காமல் இந்த நிலையை மாற்றியமைக்க என்ன செய்ய வேண்டுமெனச் சிந்தித்தார். ஆயுதமொழியே ஆக்கிரமிப்பாளர்களுக்குப் புரிய வைக்கப் பொருத்தமானது என இறுதியில் முடிவெடுத்தார். தொடர்ந்து ஒழுக்கம்,கட்டுப்பாடு என்பவற்றுடன் இரகசியமாக ஒரு தலைமறைவு இயக்கத்தைக் கட்டியமைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார். இந்த இயக்கத்துக்கு என்ன பெயர் வைக்க வேண்டுமென புத்தி ஜீவிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் அபிப்பிராயம் கேட்க முனைந்திருப்பின் இன்று வரை அந்தக்காரியம் நடந்திருக்காது. துணிந்து இது தான் சரியானது என்று நிச்சயமாகத் தெரிந்தபின் செயலில் இறங்கினார்.

   ஈழப்போரின் இறுதியுத்தம் முடிந்து 13 வருடங்களாகின்றன. உயிரிழந்த பொதுமக்கள் தொகை விபரம்,மாவீரர் குடும்பங்களின் நிலை என்ன? அவர்களின் எண்ணிக்கை யாது? போராளிகளைத் திருமணம் செய்து கொண்ட பின் விதவைகளான பெண்கள் நிலை என்ன? அவர்களது வாழ்வாதாரத்துக்கு நாம் நமது மனசாட்சியின்படி எந்தளவு பங்காற்றியிருக்கிறோம் போன்ற விடயங்கள் குறித்து ஆக்க பூர்வமாக செயலாற்றியோர் தொகை விரல் விட்டு எண்ணத்தக்கதாகவே இருந்திருக்கும். இப்படிக் குறிப்பிடுவதால் தம்மால் முடிந்த நிதிப்பங்களிப்பை வழங்கியோரின் மனம் புண்படுமாயின் அதற்காக மன்னிப்பைக் கேட்டுக்கொள்வோம்.

இந்தியாவில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. புலிகளுக்கு ஆதரவாகப் பேசியோர், செயற்பட்டோர் என வைகோ உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் துன்பங்களை அனுபவித்தனர். பற்றரி வாங்கிக் கொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டிக் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் சிறையில் இருந்து இளமையைத் தொலைத்து விட்டு அண்மையில் தான் வெளிவந்துள்ளார். ரவிச்சந்திரன் உட்பட தொடர்ந்து சிறையில் இருப்போரின் நிலையும் இதுதான். இவ்வளவும் இருந்தும் விடுதலையின் பேரில் குறிப்பாக தலைவரின் ஆளுமை,வீரம் என்பவற்றை வியந்து பாராட்டும் ஒரு இளைய தலைமுறை எமது வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முனைந்ததை சாதாரணமாக எடுக்க முடியாது. இதற்காக இவர்களைப் பாராட்டாமல் "திண்ணைப் பேச்சு வீரர்களாக" இருக்கும் சிலரிடம் ஓரு கண்ணாயிருக்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் மேதகு - 2 திரைப்படம் பற்றிய எமது பார்வையை, அது ஏற்படுத்திய உணர்வுகளை எடுத்துச் சொல்ல விழைகின்றோம்.

 மேதகு -1 தமிழர் ஏன் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதனையும் யாழ் மேயர் துரையப்பா மீதான நடவடிக்கைக்கான காரணங்களையும் தெளிவுபடச் சொன்னது.

மேதகு - 2 பல நடவடிக்கைகளை ஒரே படத்தில் காட்ட முனைந்ததால் வரலாற்றின் போக்கை சரியான முறையில் காட்டமுடியாமற் போயிற்று. திருநெல்வேலித் தாக்குதலுடன் இந்தப் படம் முடிந்திருந்தால் போதிய கவனத்துடன் இன்னும் சிறப்பாக எடுத்திருக்க முடியும். புலிகள் மட்டுமல்ல ஏனைய இயக்கங்களும் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத நிலையே 1983 ஜீலை 23 வரை இருந்தது. எந்த இடத்துக்கும் எந்த நேரமும் படையினரோ, பொலிஸாரோ முற்றுகையிடக்கூடிய நிலை அது.

உரும்பிராயில் நடைபெற்ற எரிபொருள் நிலைய உரிமையாளரான நடராசா மீதான கையெறி குண்டுத்தாக்குதலுக்கு செல்லும் இளங்குமரன் (பேபி)அண்ணாவும் இன்னொரு போராளியும் ஓருவர் துவிச்சக்கரவண்டியை ஓட்டுபவராகவும் மற்றவர் பின்னால் இருந்து பயணிப்பதாகவும் காட்டப்படுகிறது. தலைமறைவு கால வாழ்க்கையில் துவிச்சக்கரவண்டிப்பயணம் மிக அவதானத்துடன் மேற்கொள்ளப்படும் விடயம். பெரும்பாலும் பின்னால் இருந்து பயணிப்பது இல்லை. வண்டியை ஓட்டுபவர் ஒருபோதும் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. அவர் எதிரில் வருபவர்கள் மற்றும் வாகனங்களை அவதானிக்க வேண்டும். முன்னால் இருப்பவர் தான் ஓட்டுபவரின் தோளுக்கு மேலாக பார்வையைச் செலுத்த வேண்டும். யாராவது பின் தொடர்ந்தால் தாங்கள் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல் வேறு எங்காவது போக வேண்டும். எனவே இவ்வாறான பயணத்தின் போது பாதுகாப்பு நடவடிக்கை பற்றி உரையாடல் மூலம் ஒரிரு வசனங்கள் இடம்பெற்றிருந்தால் அந்த கால சூழ்நிலையை உணர வைத்திருக்க முடியும்.

திருநெல்வேலிசமர் மட்டுமல்ல அதற்கு முன் நடைபெற்ற கந்தர்மடம் வாக்குச்சாவடி மீதான தாக்குதல் பின்னர் இடம்பெற்ற ஓட்டுசுட்டான் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையங்கள் மீதான தாக்குதல்களின் போதும் குழாய்களில் வெடிமருந்து அடைத்து திரியைப்பற்ற வைத்து எறியும் கைக்குண்டுகளே பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலித் தாக்குதல் வரலாற்றின் போக்கை மாற்றியமைத்தது பெரும் எடுப்பில் முன்னாயத்தம் செய்தே ரோந்தினையோ முற்றுகையினையோ செய்ய வேண்டியிருந்தது. அந்த முக்கியத்துவம் போதுமானளவு காட்சிப்படுத்தாமல் இலங்கை - இந்திய ஓப்பந்த காலம் வரை நீடித்ததைத் தவிர்த்து அடுத்த படத்தில் இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆரம்பகாலத்தில் போராளிகள் சீருடையுடன் பயிற்சி எடுப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. 1981 இல் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள திருமணமண்டபத்தில் பயிற்சி எடுத்த போராளிகளே முதல்முதல் சீருடை அணிந்திருந்தனர். ஆவணம் என்ற ரீதியில் இதுவும் குறிப்பிடத்தக்க அம்சம்.

முருங்கனில் தம்மைக் கைது செய்ய வந்த இரகசிய அணியினரை மடக்கி அழித்த பின்னர் எழுந்த சூழ்நிலையில் அதுவரை காலமும் நடந்த சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இலச்சினையுடன் கூடிய கடிதத்தலைப்பில் உரிமை கோரப்பட்டது. இந்த விடயம் 27 ஏப்ரல் 1978 அன்று வீரகேசரியில் வெளிவந்தது. அதனைக் காட்சிப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 இந்தப்படத்தில் TERRORISM என்று குறிப்பிட்டதும் சீற்றமடையும் நாசர் இது ஒரு தேசிய விடுதலைப்போராட்டம் தான் என்று மாணவர்களுக்கு விளக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றிய காட்சிகள் தமிழக மக்களுக்கு தெளிவாக புரிகிறது.

ஜெனிவாவில் பெரிய கோவைக்கட்டுக்களுடன் சென்ற பொலிஸ் உயர்அதிகாரி புலிகள் இவ்வாறு நடந்து கொண்டனர் என விளக்கமுனைந்தார். அப்போது தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் இதெல்லாம் பகிரங்கமாக நாம் உரிமை கோரிய சம்பவங்கள். ஏன் வேலை மினக்கட்டு இதனைச் சுமந்து வந்தீர்? எங்களது பையன்களைக் கேட்டால் Pen drive இல் இதனை ஏற்றித்தந்திருப்பார்களே என தனது பாணியில் குறிப்பிட்டார்.

இப்போதுள்ள சிக்கல் எமது மண்ணில் பிறந்து அதிவிசுவாசமுள்ளவர்களாக வெளிநாடுகளில் வேடம் புனைபவர்கள் பற்றியதே. இவர்கள் வேறு ஒரு படம் காட்ட முனைகின்றனர். தலைவரை வன்முறையாளராகக் காட்ட இத்திரைப்படம் முயல்கிறது என நிலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

 கடந்த 17.08. 2022 அன்று யாழ் இலங்கை வேந்தன் மண்டபத்தில் வென்மேரி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நிகழ்வில் இசைவாணர் கண்ணனுக்கு மகாவித்துவான் பிரம்மசிறி வீரமணி ஜயர் ஞாபகார்த்தமாக பேராளுமை விருது வழங்கப்பட்டது. இவரைப்பற்றிய குறிப்பில் "இந்த மண் எங்களின் சொந்தமண் என்ற தனது இன்னிசைப் பாடல் மூலம் எம் மண்ணுக்கும் மக்களுக்கும் தமிழ்த்தேசிய உணர்வை நிரந்தரமாக ஏற்படுத்தியவர்" எனக் குறிப்பிடப்பட்டது. அவ்வாறான அற்புதமான பாடலை டப்பாங்குத்து தரத்தில் வெளியிட்டு அப்பாடலின் ஆன்மாவைக் கொன்றவர்கள்; அதனை வழிமொழிந்தவர்கள் இத்திரைப்படத்தில் குற்றம் தேட பூதக்கண்ணாடி கொண்டு திரிகின்றனர்.

 இவர்களைத் திருத்த நாசர் இன்னொரு படத்தில் நடிக்க வேண்டும் போல உள்ளது. அதுமட்டுமல்ல இவர்கள் தாங்களாகவே பல்துலக்க தொடங்கும் காலத்திற்கு முன்னரே தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய நெடுமாறன் ஜயா , வைகோ, குளத்தூர்மணி, மணியரசன் ஐயா ,வேல்முருகன், தாமரை(கவிஞர்),கௌதமன் (இயக்குனர்)போன்ற இன உணர்வாளர்கள் இப்படத்தைப் பார்த்து அவர்களின் முயற்சியைப் பாராட்டி உள்ளனர். ஆனால் வரலாறு விளங்காமல் தம்மை அதிவிசுவாசிகள் போல காட்ட முனையும் பிரகிருதிகளின் இம்சை தாங்க முடியவில்லை.

இவர்கள் வரலாறை எழுதி புத்தகமாக வெளியிட்டால் அதே அளவு மொத்தத்தில் சுட்டிக்காட்டக் கூடிய அளவுக்கு தவறுகள் உள்ளன.

கட்டுரை எழுதினால் இவர்களுக்கு யதார்த்தத்தை புரிய வைக்க முயலும் போது இது சிறுகதை என்று தோசையைப் புரட்டுகின்றனர். அம்மாடி  இவர்கள் அடிக்கும் கொட்டம் தாங்க முடியவில்லை.

தமிழ்த்தேசிய உணர்வுடன் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை நடமாடிய, செயற்பட்ட தேவர் அண்ணா இயக்கத்தில் இருக்கும் போது நாடக மற்றும் திரைப்படக்கலைஞராக விளங்கினார். தமிழகத்தில் இவர் நடித்த நாடகங்களில் நாசரும் நடித்துள்ளார். பின்னர் இயக்கத்தில் இல்லாமல் தேவர் அண்ணா கொழும்பில் வாழ்ந்த போதும் சிறிலங்கா அரசிடம் விருதுவாங்கும் அளவுக்கு கலைப்பணியாற்றினார். எமது வாழ்வியல் கலந்த தமிழக திரைப்படங்களிலும் இவரது பங்களிப்பு இருந்தது

மேதகு - 2 திரைப்படத்தில் சிங்கள மொழி வசனங்களுக்கு இவரே குரல் கொடுத்தார். திரைப்படம் முதலில் காட்டும் போது இவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று எந்த வட்டத்துக்குள் வாழ்ந்தாலும் படம் எடுக்கும் போது எதிர் கொள்ளும் சவால்கள், சிரமங்கள் பற்றி நிச்சயம் அறிந்தே இருந்திருப்பார்

இந்தவகையில் பெண்போராளிகள் பற்றிய விடயங்களை காண்பிக்காதது நல்ல விடயம். அது ஓரு தனிப்படமாகக் காட்சிப்படுத்த வேண்டியது. பெண்கள் ஆயுதப் பயிற்சி பெற்றது மட்டுமல்ல அதற்கு முன்னதாக நான்கு பெண்கள் அரசியல் பணியை செய்ததையும் கண்டிப்பாகக் காட்ட வேண்டும். இவர்கள் நால்வரும் இன்னமும் உயிரோடிருப்பது மகிழ்ச்சியான விடயம்.

மன்னார் தீவுப் பகுதியை சில நாட்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததே மகளிர் படையணி கண்ட முதல் களம்.  இருபடையினர் கைதாகிய விக்ரரின் இழப்பைச் சந்தித்த அடம்பன் சமர் என்றே பலராலும் பதிவாகி வருகின்றது. தீபா, ஜெயந்தி முதலான முன்னாள் போராளிகளிடம் சரியான தகவல்களைப் பெறக்கூடியதாக இருக்கும்.

வட்டுக்கோட்டை பிரகடனம் (தனிநாடு) செய்யப்பட்ட  காலத்தில் நின்று பேசக்கூடிய நிலையில் தந்தை செல்வா இல்லை.கதிரையில் அமர்ந்து மெல்லிய குரலில் பேசுவதை அமிர்தலிங்கமோ அல்லது வேறு யாரோ உரத்துச் சொல்வார்கள்.

எம்.ஜி .ஆருடனான சந்திப்பில் பக்கவாட்டில் தலைவராக நடிப்பவர் நிற்கும்போது அற்புதமாக இருக்கிறது. தலைவர் பற்றிய பல்வேறு ஒளி நாடாக்களை அவர் இன்னும் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என எண்ணுவது தவிர்க்க முடியாததாகும். பொதுவாக இந்தியப் பிரமுகர்கள் பற்றிய பதிவுகள் மிகச்சரியாக உள்ளன. தம்மை ஒரு கதாபாத்திரமாக வேறொரு உடம்பில் காணும் வரலாறு இவ்வாறானவர்களுக்கு மட்டுமே கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

பாடல்கள் பொருத்தமாக நன்றாகவே உள்ளன. 1983 இனக்கலவரம் போன்ற காட்சிகள் எவ்வளவு சிரமப்பட்டு படமாக்கியிருப்பார்கள் என வியக்க வைக்கின்றன.வெலிக்கடை சிறைக் கலவரத்தில் புத்தரின் முகத்தில் இரத்தம் வடிவதான காட்சி  இயக்குனரின் திறமைதான். இப் படத்துக்காக வெவ்வேறு வழிகளில் தமது பங்களிப்பை வழங்கிய அனைவரும் மரியாதைக்குரியவர்களே

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post