மறதி நோயின் பிடியில் இலங்கை அரசியல் வாதிகள்?

மறதி நோயின் பிடியில் இலங்கை அரசியல் வாதிகள்?

 -ஞானி

 மறதி  நோயால் தாம் பீடிக்கப்பட்டிருப்பதுபோல இலங்கை அரசியல் வாதிகள் சிலர் காட்ட முனைகின்றனர்.

இலங்கையின் தற்போதைய முதற்பிரஜையான ரணில் விக்கிரமசிங்காவுக்கு இந்த நோய் பீடித்திருக்கவில்லையாயின் நாட்டின் வரலாற்றை யாராவது அவருக்கு நினைவூட்டுவது நல்லது. அதிலும் இவர் தலைமைதாங்கும் .தே. வின் வரலாற்றையும் அதற்கு ஒரு காலத்தில் தலைமைதாங்கிய இவரின் மாமனாரும், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் ஜனாதிபதியாக விளங்கிய ஜே.ஆரின் செயற்பாடுகளையும் விளக்குவது முக்கியம்.

இக் கட்சியின் தலைமையை ஜே,ஆர் பொறுப்பேற்ற போது சிறீமாவோ அரசுக்குத் தலைமைதாங்கியிருந்தார். நாட்டில் உணவுப் பஞ்சம் உட்பட பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இந்த அதிருப்திகளை வாக்குகளாக மாற்றும் உத்திகளை ஜே ஆர் படிப்படியாக மேற்கொண்டார்.அதில் முக்கியமானது அவர் அறிவித்த சட்டமறுப்பு  ஊர்வலம்.கொழும்பு காலிவீதியை மறித்து சட்டத்துக்கு விரோதமாக நடத்திய ஊர்வலத்தினால் குறிப்பிட்ட நாளில் எந்த வாகனமும் அப்பாதையால் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாற்றுப் பாதையைத் தேடுவதில் வாகனச் சாரதிகள் திணறினர். அன்று மாலை தாம் அறிவித்த சட்டமறுப்பு  ஊர்வலம் வெற்றிகரமாக முடிந்ததாக ஜே.ஆர் அறிவித்தார்.இக் கட்சியின் தலைமையை ஜே,ஆர் பொறுப்பேற்ற போது சிறீமாவோ அரசுக்குத் தலைமைதாங்கியிருந்தார். நாட்டில் உணவுப் பஞ்சம் உட்பட பல்வேறு சிக்கல்கள் இருந்தன.

நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் போது யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் தமது மொழியின் இனிமையை கேட்டு ரசிக்க தமிழர்கள் கூடியிருந்தனர். இதனைச் சகிக்க முடியாதவர்களாக பிரதமர் ஸ்ரீமாவும், யாழ். உதவிச் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவும் இருந்தனர். இதன் விளைவாக தமிழர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 9 பேர் உயிர்யிரிழந்தனர். இந்தப் பாதகச் செயலுக்குச் சன்மானமாகச் சந்திரசேகரா பொலிஸ் அத்தியட்சகராக சிறிமாவினால் பதவியுயர்த்தப்பட்டார். தமிழாராய்ச்சி மகாநாட்டு படுகொலைகள் பற்றி வீரகேசரி நாளிதழ் தனது ஆசிரியத் தலையங்கத்தில் காலி வீதியில் நடைபெற்ற சட்டமறுப்பு  ஊர்வலத்தின் போது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த  பொலிசார் யாழ்ப்பாணத்தில் ஏன் இவ்வாறு நடந்துகொண்டனர் எனக் கேள்வியெழுப்பியிருந்தது. அவ்வளவு பிரமாண்டமான சட்டமறுப்பு ஊர்வலம் அது. ஜே.ஆரினால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டு அவரது கட்சியின் தலைவருமாகி ஒரே ஒரு ஆசனம் பெற்று ஜனாதிபதியுமான ரணிலின் ஆட்சியில் இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் யோசப் ஸ்ராலின்  சட்டத்துக்கு விரோதமாக நடந்துகொண்டார் எனக் குற்றஞ்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றைய இணைய யுகத்தில் எல்லோரிடமும் காட்சிகளைப் படம்பிடிக்கக்கூடிய தொலைபேசிகள் உள்ளன.

 

இல்லாவிட்டால் ஜோசப் ஸ்டாவின் வன்முறையில் ஈடுபட்டார் என்றும் பொலிசார் வழக்குத்தாக்கல் செய்திருப்பர் என்றே எண்ணத் தோன்றுகிறது. எனவே தான் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றோம் ஜே.ஆர் பற்றியும் அவரது சட்டமறுப்பு ஊர்வலம் குறித்தும் யாராவது ரணிலுக்கும் ஜோசப் ஸ்ராலினுக்காக வாதாடவுள்ள வழக்கறிஞர்களுக்கும் நினைவூட்டுங்கள்

     ***

தமிழர்களுக்கு மறதி அதிகம் என்ற நம்பிக்கை தான் எமது அரசியல்வாதிகளின் முதலீடு. இங்கிலாந்துப்பிரதமர் இலங்கைக்கு வந்திருந்த போது யாழ் பொதுசன நூலகத்துக்கும் வந்திருந்தார். திருமண வீடென்றால் நான் தான் மாப்பிள்ளை; சாவீடென்றால் நானே பிணம்; என்ற நினைப்பிலுள்ள சுமந்திரன் அவருடன் கூடவே ஒட்டிக்கொண்டார். இங்கிலாந்துப் பிரதமரின் கவனத்தை ஈர்ப்பதற்காக காணாமற் போனோர் சங்கத்தைச் சேர்ந்த பெற்றோரும் துணைவியரும் அப்பகுதிக்கு விரைந்திருந்தனர். இவர்களை இங்கிலாந்துப் பிரதமர் பார்த்து விடக் கூடாது என்பதற்காக பின்வழியாக அவரைக் கூட்டிக் கொண்டோடினார் சுமந்திரன். இதனால் இச்சங்கத்தினரைக் காண முடியாமற் போயிற்று இங்கிலாந்துப் பிரதமருக்கு. இச் சம்பவம் பற்றி போராட்டக்காரர்கள் குறித்து "சும்மா கத்திக் கொண்டு -----------"  என்று சுமந்திரன் சினந்து கொள்ளும் ஒளிநாடாக்கள் அக்கால கட்டத்தில் வெளியாகின இன்றோ காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஏதாவது நடந்து விடக் கூடாதே என்ற பதபதைப்பு அடிக்கடி வெளிப்படுகிறது. அடிக்கடி எச்சரிக்கைகளும் ஆட்சேபனைகளும் வெளிவருகின்றன. சொந்தத்தாய் பிச்சையெடுக்க காசியிலே கோதானம் செய்தானாம் ஓருவன் என்ற சொற்றொடர் தான் நினைவுக்கு வருகிறது

இறுதியுத்தம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும்; இங்கு நடைபெற்றது இனப்படுகொலையே என்று எல்லோரும் வலியுறுத்திய போது உள்ளூர் விசாரணையே போதும் என்ற நிலைப்பாட்டையே ஆரம்பத்தில் இவர் எடுத்தார். பின்னர் அந்தக்கருத்து மக்களிடம் எடுபடாது என்பது உறைத்த பின்னர் தான் இறங்கி வந்தார். புலிகளும் யுத்தக்குற்றங்கள் புரிந்தனர்; அதற்கான வலுவான ஆதாரங்கள் உண்டு என்று அடித்துக் கூறும் இவர் இங்கு நடந்தது இனப்படுகொலை என்பதற்கு சாட்சியங்கள் இல்லை எனவும் கூறினார். இவர் யாருடைய பிரதிநிதி? தமிழரின் வாக்குகளைத் திரட்டுவது மட்டும் தமது ஒரே இலக்கு என உணர்த்த முனைகிறாரா? ஆதாரங்களைத் திரட்டுவது எங்களது வேலையில்லை; நாங்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்போம்; அங்கு வந்து ஆதாரங்களை தர விரும்புவோர் முன் கூட்டியே எம்மிடம் நேர ஓதுக்கீடு பெற்று கொண்டு வந்து தரமுடிந்தால் தாருங்கள் என்பது தான் அவரது நிலைப்பாடா?

நடந்தது இனப்படுகொலையே என்ற தீர்மானத்தை வடக்கு மாகாண சபையில் முதல்வர் கொண்டு வந்த போது அது ஏகமனதாக நிறைவேறியது. ஓரு வாக்கு கூட எதிராகப் பதிவாகவில்லை. அதன்பின்னர் அவரது சிஷ்யர்கள் ஆடிய கூத்துக்கள் இலேசில் மறக்கக் கூடியவையா? யு.எஸ் ஹோட்டலில் விந்தன் கனகரத்தினத்திடம் ஆர்னோல்ட், சயந்தன் போன்றோர் கூறிய விடயங்கள் பத்திரிகைகளில் வெளியாகினவே. முதல்வருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னால் இருந்தவர் இவர் தான் என்பது வெட்டவெளிச்சமாகியதே. காலி முகத்திடலில் தமிழர் பெரும் எண்ணிக்கையில் கூடவில்லை என்பதும் பெருங்கவலை இவருக்கு. சிங்களம் தனது நடவடிக்கையை சிறுபான்மையினரில் தான் முதலில் தொடங்கும் என்பதற்கு விமானத்துக்குள் நடைபெற்ற  டனிஸ் அலியின் கைது வெளிப்படுத்துகிறது. இவரோ தொடர்ந்து காலி முகத்திடலிலேயே நிற்கிறார் அங்கேயே நிற்கட்டும். அடுத்த தேர்தலில்  கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிட்டு மூவினமக்களின் வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகட்டும்.

              ***

 கட்சிக்குள் தனது இடத்துக்குக் கிட்ட வேறு யாரும் வந்து விடக்கூடாது என்பதில் அதீத அக்கறை சுமந்திரனுக்கு. இவர் குலுக்குவதற்கு கரம் நீட்டுகிறார் என்றால் காலைக் கொஞ்சம் பின்னே நகர்த்திப் பாதுகாப்பாக இருப்பது நல்லது. கையை நீட்டிக் கொண்டே கால்தடம் போட்டு விழுத்தக் கூடிய ஆபத்தான பேர் வழி இவர்.

பொதுமக்கள் முன்னிலையில் தன்னை விட மகிந்தவுடன் கூடிய தொடர்பைப் பேணுபவர் சாணக்கியன் என்று கூறியதன் நோக்கம் என்ன என்பதற்கு வேறு விளக்கம் தேவையில்லை.

அரசியலுக்கு புதியவரான சாணக்கியன் ஏற்கனவே தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என பாராளுமன்றில் குறிப்பிட்ட அரியநேந்திரன், 2020 ம் ஆண்டுவரை அரசியலுக்குள் வரும் எண்ணம் இருக்கக் கூடாது என்று எச்சரித்த செல்வராசா போன்றோரின் எதிர்ப்புக்களைத் தாண்டியே மட்டக்களப்பில் போட்டியிட்டுத் தெரிவானார். இன்று சுமந்திரன் மாட்டிய நாணயக்கயிற்றில் சிக்குண்டு போய்க்கிடக்கிறார்.

தான் போக முடியாத இடங்களுக்கு இந்த நாணயக்கயிற்றை தனது பிரதம சீடன் சயந்தனிடம் ஓப்படைத்தால் என்ன என்ற எண்ணம் சுமந்திரனுக்கு இருப்பதாக செய்திகள் கசிகின்றன. 1,32,000 வாக்குகளைப் பெற்ற முதலமைச்சர் நிர்வாகம் செய்வதற்கு பொருத்தமானவர் இல்லை என்று காட்ட சுமந்திரனின் சிஷ்யர்கள் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சநெஞ்சமல்ல என்பதை தெரிந்து கொண்டு இந்த நாணயக்கயிற்றை கழற்றி எறிய முயல வேண்டும் சாணக்கியன்.

        ***

2010 தேர்தலில் .பி.ஆர். எல்.எவ்வுக்கு ஒதுக்கிய இடத்தின் மூலம் அரசியலுக்குள் நுழைந்த சிறிதரனும் தமிழரசுக்கட்சியின் தலைமையைக் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறார். அவருக்கும் இக்கட்சியின் ஆரம்பத்தை, வரலாற்றை யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. மலையகத் தமிழரின் வாக்குரிமை, குடியுரிமை பறிக்கப்பட்ட விவகாரங்களே இக் கட்சியினை தோற்றுவிக்கும் நிலைமையை உருவாக்கியது. 'வடக்கத்தியான் ' என்று திட்டும் ஓருவர் இக் கட்சித் தலைமைக்கு பொருத்தமானவரா என கட்சி உறுப்பினர்கள் சிந்திப்பார்கள் என நம்புவோம். சம்பந்தன் ஜயா போல ஆக்களெல்லாம் சாகும் வரைக்கும் பதவியில் இருக்க வேணும் என்று நினைக்கினை. இப்ப நான் எம்பி யாக இருக்கிறேன்இன்னொரு தரம் எம்.பி.யானால் போதும் அதுக்குப் பிறகு வேற ஆக்களுக்கு வழிவிட்டிடுவன்" எனக் குறிப்பிட்ட இந்த முன்னாள் அதிபர் எண்ணத் தெரியாமல் மூன்றாவது தடவையும் எம்.பியானார். என்ர இடத்தை மாவை அண்ணனுக்கு வழங்கத்தயார் எனக் கூறி வந்த இவருக்கு கடந்த தேர்தல் முடிவின் பின்  மறதி நோய் வந்து விட்டது போல இருக்கிறது. இப்போது இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமை. மாவைக்கு ஏதோ கொடுப்பதாகக் கூறிய அவர் இப்போது அவரிடம் இருப்பதையும் பறிக்க முயல்கிறார். தந்தை செல்வா சரியாகத் தான் சொன்னார் " தமிழர்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

***

      சூரியகாந்தி திரைப்படத்தில் ஓரு பாடல்; இதனை எழுதிய கண்ணதாசனே திரையில் தோன்றிப்பாடுவதாக காட்சி

"மதியாதார் தலை வாசல் மிதிக்காதே - என்று

மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது,

ஔவை சொன்னது; இதில் அர்த்தம் உள்ளது".

      வடமாகாண சபைத் தேர்தலில் 353,595 வாக்குகளை முதல்வர் இவர் தான் என்று எண்ணி மக்கள் வாக்களித்தனர் யாழ் மாவட்டத்தில் 1,32,000 விருப்பு வாக்குகள் கிடைத்தன. அப்படியிருந்தும் இவர் ஓரு பொய்யர் (HE IS A LIER) என்று சொன்னார் அப்போதைய பிரதமர் ரணில். யாழ்ப்பாணம் போகும் போது அவரைச் சந்திக்க மாட்டேன் என்றார். ரோசமுள்ள தமிழருக்கு இந்த விடயத்தில் கோபம் வந்தது.

     அமெரிக்க அதிபர் நிக்சன் இந்தியா வந்த போது தன்னைச் சந்திக்க கேட்டதற்கு "இந்த நிக்சன் தானே நம்ம அண்ணாத்துரை அமெரிக்கா போனப்போ சந்திக்கக் கேட்டதற்கு முடியாதுன்னு சொன்னவன். அவனை எப்படியப்பா நான் சந்திக்கிறது?" என்று கேட்டார் காமராஜர். இந்திய சுதந்திரப் போரில் கலந்து கொண்டவரும் தமிழக முதல்வராக இருந்தவருமான இவரை ஒரு மாணவன் மூலம் தேர்தலில் தோற்கடித்தாலும் அண்ணாத்துரையை தனது முதல்வராகவே பார்த்தார் காமராஜர். அவரை மதிக்காதவரை தானும் மதியேன் என்பது அவரது நிலைப்பாடு. இந்த நிலைப்பபாட்டில் தான் வடக்கு மக்கள் இருந்தனர் என்பதை நீதியரசர் ஏன் தான் விளங்காமல் விட்டாரோ?.

     " இன்னா செய்தாரை ஓறுத்தல் - அவர் நாண

நன்னயம் செய்து விடல்" என்று திருக்குறளைச் சொல்லிச் சமாளிக்கலாம். அதை விட ரணில் ஒரு நரி என்று திரு அன்ரன் பாலசிங்கம் கூறியதே மக்கள் மனதில் உறைந்து கிடக்கிறது.

    1994 ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகவுள்ளார் டக்ளஸ். இதில் கணிசமான காலம் அமைச்சுப்பதவியை வகித்தார். இப்போதும் அமைச்சர். வடக்கின் இரு முக்கிய அதிகாரிகளை வெளியே தூக்கிப் போடும் உத்தரவைப் பிறப்பித்தார் வடக்கு ஆளுநர். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார் டக்ளஸ். அமைச்சராக இருந்தால் என்ன அவர் தமிழராகவே தெரிந்தார் ரணிலுக்கு. இந்த இரு அதிகாரிகளையும் கொழும்பில் கையொப்பமிடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பதை திரு.விக்னேஸ்வரன் கணித்துச் செயற்படுவது நல்லது. இவருக்கு  மறதி நோய் வரவில்லை என்றே நம்புவோம்.

           ***

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக முன்னணியினர் வடக்கில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். போராட்டத்தின் வலி தெரிந்தவர்கள் என்ற வகையில் தமிழர்கள் இந்த நடவடிக்கையை உணர முடியும் எனினும் " ஓருநாடு ;இருதேசம்" எனும் சுலோகத்தை முன்னெடுக்கும் இக்கட்சியின் தலைவருக்கு எந்தத் தேசத்தில் சொத்துக்கள் அதிகம் என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post