இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 35-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை.
பின்னர் டெல்லி
அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் சிறை வைக்கப்பட்ட
நிலையில் ஒப்பந்தத்தை ஏற்றாக வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனாலும் இதுதான்
ஒப்பந்தம் எனக் கூறிவிட்டு 1987-ம் ஆண்டு ஜூலை 29-ல் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன்
ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து தாயகம் திரும்பிய
தேசியத் வே .பிரபாகரன் 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி சுதுமலை கோவிலடியில் லட்சக்கணக்கான
மக்களிடையே ‘சுதுமலை பிரகடனத்தை வெளியிட்டார்.
வரலாற்றுச்
சிறப்புமிக்க தேசியத் தலைவரின்
சுதுமலை பிரகடனம்:
எனது
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே…
இன்று
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம்
ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவதுபோல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல
இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவுகள் நமக்குச்
சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க
வேண்டும்.
திடீரென
மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது
மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் – இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு
வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.
பாரதப்
பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக்
காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல
சிக்கல்கள் இருந்தன… பல கேள்விக்குறிகள் இருந்தன.
இந்த
ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு
ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பதைப் பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம்
ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெள்ளத்தெளிவாக விளக்கினோம். ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது.
இந்திய
அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சர்யப்படவில்லை. இந்த ஒப்பந்தம்
தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது, பிரதானமாக இந்திய
– இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின்கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது.
ஆகவேதான்,
இந்திய அரசு அதிக அக்கறை
காட்டியது. ஆனால், அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது.
ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது
எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை
நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால், நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை.
எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது?
இந்த
ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது… எமது
அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது…
எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது…
எமது ஆயுதப் போராட்டத்துக்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனை ஈட்டி, எத்தனையோ உயிர்பலி கொடுத்துக் கட்டி எழுதப்பட்ட ஒரு போராட்ட வடிவம்
ஒருசில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க
முடியாமல் இருக்கிறது.
திடீரெனக் கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணியாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம், எமது பிரச்னைகளை மனம்திறந்து பேசினேன்.
சிங்கள்
இனவாத அரசின்மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதயும், இந்த ஒப்பந்தத்தை அவர்கள்
நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப்
பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார்.
எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார்.
பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது
உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க,
இந்தியா அனுமதிக்காது என நாம்
நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்தியச் சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.
நாம்
எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக்
கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும்
தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள்
நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்புக்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விடிவுக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம்.
நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடம் பெற்றுக்கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது, இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது.
நாம்
ஆயுதங்களைக் கையளிக்காதுப் போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்பாக்ய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை.
இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய
வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத்
தயாராக இல்லை. எமது எதிரியிடம் இருந்து
எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம்
கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவருடைய
உயிருக்கும், பாதுகாப்புக்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக்
கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம்
ஒத்துழைப்பதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை. இந்தச்
சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.
ஆனால்,
இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள் இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே, தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
தமிழீழ
லட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன்
என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. எமது லட்சியம் வெற்றி
பெறுவதானால், எமது மக்களாகிய உங்களின்
ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.
தமிழீழ
மக்களின் நலன் கருதி இடைக்கால
அரசில் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம்.
ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.
Post a Comment