நினைவழியா நிகழ்வுகள் பகுதி 2
-சங்கர்
நினைவழியா நிகழ்வுகள்
பகுதி 1 ல் மாவீரரது
விபரம் மாறியமையால் ஏற்பட்ட நிலைமை தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெற்றிருந்தன. இதன் ஆரம்ப சம்பவங்கள்
பற்றிப் பார்ப்போம். தொடர்ந்து இன்னொரு சம்பவம் பற்றியும் வெளியாகிறது.
90 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் மட்டக்களப்பில் ஆரம்பமானது . பொத்துவில் தொடக்கம் வாழைச்சேனை வரையான சகல பொலிஸ் நிலையங்களும் கைப்பற்றப்பட்டன. வடக்கில் இராணுவ முகாம்கள் முற்றுகைக்குள்ளாகின. யாழ். கோட்டை இராணுவ முகாமும் அவற்றில் ஒன்று. தொடராக நிகழ்ந்த தாக்குதல்களில் இம்முகாம் மீது 1990. 08. 05 ஆம் நாளன்று நடத்தப்பட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதில் 31 போராளிகள் மாவீரர்களாகினர்.
ஒரே
இயக்கப் பெயரைக் கொண்ட இரு போராளிகள் இத்தாக்குதல்
முயற்சியில் பங்குபற்றினர். இந்த இருவரில் ஒருவர்
வீரச்சாவடைந்தார். அவரது வித்துடலை மீட்க முடியவில்லை. மற்றவர் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு
அனுப்பப்பட்டார். தாக்குதலின் முடிவில் வீரச்சாவடைந்தவர் எனக் காயமடைந்தவரைக் கருதினர்.
மாவீரர் பெயரில் அவரது விபரமே வெளியாகிறது. உண்மையில் வீரச்சாவடைந்தவர் பற்றிக் கேட்டபோது அவர் சிகிச்சை பெற்று
வருகிறார் எனப் பதிலளிக்கப்பட்டது.
இரு
குடும்பத்தவர்களை - அவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தவரை ஒரு பகுதியினருக்கு தமது
மகன் மாவீரன் என்றும் மறுபகுதியினருக்கு விழுப்புண் அடைந்து விட்டான்; சிகிச்சை பெறுகிறான் என்ற நிலையே இருந்தது.
தற்போது இருபகுதியினருக்குமே அதிர்ச்சி. அதில் ஒரு பகுதியினருக்கு இன்ப
அதிர்ச்சி. உயிரோடு இருக்கிறான் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு அந்தப் பாதகமான செய்தி சொல்லப்பட்டது. அவர்கள் சூழ்நிலையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டனர். தமது விதியையே நொந்தனர்.
ஏனெனில் அவர்கள் இந்தப் போராட்ட கள மண்ணில் இருந்தவர்கள்.
அந்த
மாவீரரின் தந்தை ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்துக்குச் சென்றார். விடயத்தைத் தெரிவித்துவிட்டு ஒரு விளம்பரம் போட்டார்.
தமது மனதை ஆற்றுப்படுத்துவதற்காகச் செய்யப்படும் மதச்
சடங்கு மற்றும் நிகழ்வுக்கான அழைப்பு அது. அப்பத்திரிகை நிறுவனத்தினர்
சட்டத்தரணி பொன். பூலோகசிங்கத்தின் நாட்குறிப்பின் உதவியுடன்
தாம் தயாரித்து வந்த மாவீரர் பட்டியலில்
இம்மாவீரனின் சொந்தப் பெயர், முகவரியை
மாற்றினர். போராளிகளுக்கு இலக்கமும் வழங்கி அதனைத் தகட்டில் பொறித்துக் கட்டும் நடைமுறையை ஏற்படுத்துவதற்கான காரணங்களில் இந்த அனுபவமும் ஒன்று.
***
தமிழரின்
ஆயுதப் போராட்டத்தைப் பொறுத்தவரை துணைப் படை, எல்லைப் படையினரின்
பங்கும் பெருமைக்குரியது. அதனால்தான் அவர்களின் வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டன. பிரிகேடியர் முதல் வீரவேங்கை வரையிலான மாவீரர்களுக்குச் சமமாக எல்லைப் படையினரும் மதிக்கப்பட்டனர். அருகருகே விதைக்கப்பட்டனர். ஆனையிறவு முகாமின் வெற்றிக்கு முதுகெலும்பாக அமைந்தது குடாரப்பு தரையிறக்கமும் அதனைத் தொடர்ந்து இத்தாவில் பகுதியில் ஊடுருவி படையினருக்கான வழங்கல், மேலதிக படையினரை வரவழைத்தல் முதலான செயற்பாடுகளை மேற்கொள்ள விடாமல் ஆனையிறவு முகாமை தனிமைப்படுத்தியதும்தான். இதனை பிரிகேடியர் பால்ராஜ்
வழிநடத்தினார். பிரிகேடியர் பானு ஒட்டுமொத்த நடவடிக்கையினதும்
ஒருங்கிணைப்புத் தளபதியாக விளங்கினார்.
ஆனையிறவு
முகாம் புலிகளின் கைகளில் வீழ்ந்தாயிற்று. பானு அங்கே தேசியக்
கொடியை ஏற்றியுமாயிற்று. பெட்டி (box) வடிவில் களம்
அமைத்து இத்தாவிலில் நிலைமையைத் தக்கவைத்துக் கொள்ளும் பால்ராஜின் அணியினருக்கும் ஆனையிறவு, இயக்கச்சியில் வெற்றிக்களிப்போடு நிற்கும் போராளிகளுக்கும் இடையில் ( பளைப் பகுதியில் ) இலங்கை இராணுவத்தினரின் ஒரு பகுதியினர் நின்றனர்.பாக்குவெட்டிக்குள் அகப்பட்டுக் கொண்ட பாக்கைப் போன்று ஆனது அவர்களின் நிலை.
போராடினால்தான் தமது உயிரைத் தக்கவைக்க
முடியும் என அவர்கள் நம்பினர்.
இதனால் அவர்களின் எதிர்த்தாக்குதல் கடுமையாகவே இருந்தது. இந்நிலையில் புலிகளின் இரு அணியினரும் தமக்கிடையே
கைகுலுக்கி வெற்றியை முழுமைப்படுத்தும் சந்தர்ப்பத்தை எல்லைப் படைக்கு வழங்கத் தீர்மானித்தார் பானு. சுட்டா தலைமையிலான எல்லைப் படையினர் எதிர்பார்த்ததை விட வேகமாகவே தமது பொறுப்பை நிறைவேற்றினர். ஒவ்வொரு
எல்லைப் படை வீரரும் தலையை
நிமிர்த்தி அடையாளப்படுத்தி வரலாற்றில் இடம்பிடித்தனர்.
இவ்வாறான
பெருமைக்குரிய எல்லைப்படையினரின் தொடர் நடவடிக்கைகளில் ஒரு சமயம் இருவரின்
வித்துடல்கள் இனங்காண முடியாதளவுக்கு இருந்தன. இதில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர். மற்றவர் நெடுங்கேணியைச் சேர்ந்தவர். வித்துடல்களை மாற்றி குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தாயிற்று. இனி இவை அந்தந்தப்
பகுதிக்குரிய துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட வேண்டும்.
யுத்தகளத்தில்
வெயில் மற்றும் காரணங்களால் வித்துடல் சிதைவுற்றிருக்கும் என நெடுங்கேணியைச் சேர்ந்த
மாவீரரின் குடும்பத்தினர் கருதினர். வித்துடலுக்கு மலர் வணக்கம் செய்து,
விழிநீரைச் சொரிந்து கொண்டிருந்தனர். அச்சமயம் அந்த இடத்துக்கு வந்த
அவரது நண்பரும் உறவினருமான ஒருவர், 'இது அவனில்லை', எனத்
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ஆள்தான் நிதானம்
இழந்திருந்தாரே தவிர, பார்வையில் தெளிவு இருந்தது. அவரது நடவடிக்கைகளைக் கண்ட அங்கு நின்ற
பொறுப்பாளர் மனதில் ஏதோ ஒரு பொறி
தட்டியது. அச்சமயம் அவரது தொலைத்தொடர்புக் கருவிக்கு ஒரு அழைப்பு வந்தது.
மன்னாரில் உள்ள எல்லைப்படை மாவீரரின்
குடும்பத்தினர், இது தம்மிடம் ஒப்படைக்கப்பட
வேண்டிய வித்துடல் அல்லவென்றும், தமக்குரிய வித்துடலை வழங்குமாறும் கோருகின்றனர் என்பதே அந்த அழைப்பின் மூலம்
வந்த செய்தி. நிலைமை புரிந்தது அவருக்கு.
உடனே
குறிப்பிட்ட ஒரு முகாமுக்கு அந்த
வித்துடலைக் கொண்டு வருமாறு கோரினார். நெடுங்கேணியினரிடம் 'ஒருக்கா கிளீன் பண்ண வேண்டியிருக்கு. வித்துடலை
கொண்டுபோய் முகாமில் வைத்து செய்யவேண்டியவற்றை செய்துவிட்டுத் தருகிறோம்' என்றார். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். சொன்னபடியே முகாமுக்குக் கொண்டு சென்று, சிறிது வேலைகள் செய்தபின் மன்னாருக்கு இந்த வித்துடல் அனுப்பப்பட்டது.
அங்கிருந்து வந்த வித்துடலும் இதுபோலவே
கவனிக்கப்பட்டது. நெடுங்கேணியில் ஒப்படைக்கப்பட்டது.
அப்போதும்
நிதானத்துக்கு வராத அந்த நண்பர்
வந்தார். 'ஆ... இதுதான் அவன்...!
இயக்கத்தின்ர கிளீன்
பண்ணுற
வேலை எண்டால் சும்மாவே. என்ன மாதிரி இருக்குது
பார்...' என்றார். அப்பாடா என்று பெருமூச்சு விட்டார் அந்தப் பொறுப்பாளர். அவர் எந்தப் பட்டமும்
பெற்றவரல்ல. பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி சுமார் இரண்டரை தசாப்தத்துக்கு மேலாக போராட்டக் களத்தில் நின்றவர். இன்று தானுண்டு தன் வேலையுண்டு என
புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து வருகிறார். தனது குடும்பத்தினருக்காக மட்டுமல்லாது போராடியவர்களுக்காக
தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டு அமைதியாக வாழ்கிறார்.
நன்றி:
ஈழ நாடு
Post a Comment