மாவீரர்நாள் வருகிறது கூடவே இடைச்சொருகல்களும் வரலாம்.

 

 மாவீரர்நாள் வருகிறது கூடவே இடைச்சொருகல்களும் வரலாம்.

-தயாளன்

 "தோழமைக்கு உரிமை கொடு;

 கடமை நேரங்களில் தவிர்த்துக்கொள்"

-தமிழீழதேசியத்தலைவர்

 தலைவரது படத்துடன் மேற்குறிப்பிட்ட வசனங்களைக் கொண்ட புகைப்படம் பல முகாம்களில் காட்சியளித்தது. ஓருநாள் தற்செயலாக இந்தப்படம் அவரது கண்ணில் பட்டுவிட்டது. " நான் எப்ப இதைச் சொன்னனான்?" என்று கேட்டார் அவர். வசனங்கள் சரியா,பிழையா என்பதை விட தான் சொல்லாத ஓன்றை சொன்னதாகக் குறிப்பிட்டால் எதிர்காலத்தில் இதைப்போல மேலும் பல சம்பவங்கள் நடந்து விடுமே என்ற எச்சரிக்கை உணர்வு அவருக்கு ஏற்பட்டது இந்தச் செய்தியை அறிந்ததும் இந்த வசனங்களைத் தாங்கிய புகைப்படங்கள் ஏனைய முகாம்களிலும் காணாமற் போயின. இது அவர் உயிரோடு இருக்கும் போது நடந்த விடயம் என்பதால் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லாயிருக்கிறதே என எங்கேயோ வாசித்த வசனங்களின் கீழ் தலைவர் என்று முதன்முதல் குறிப்பிட்ட அந்தப் போராளி நிச்சயம் அதன் பாரதூரத்தை உணர்ந்திருப்பார்.

  1987 செப்ரெம்பர் 26ம் திகதி எம்மை விட்டுப் பிரிந்தான் திலீபன். 1983 திருநெல்வேலி தாக்குதலைத் தொடர்ந்து போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களில் இவனும் ஓருவன். வந்த புதிதிலேயே பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களில் அவனும் ஓருவன் கோம்பையன் மணல் சுடுகாட்டுப்பகுதியிலிருந்து காரைநகர் வரையான பகுதிக்கு அரசியல் பணிக்காக அனுப்பப்பட்ட இவனுக்கு ஒரு துவிச்சக்கரவண்டி மட்டுமே வழங்கப்பட்டது. மிக நீண்ட பிரதேசத்தில் விடுதலையுணர்வைக் கொண்ட இளைஞர்களை இனங்கண்டு புலிகள் இயக்கத்தவராக மாற்றுவதுடன் மக்களையும் அணி திரட்டுவது இவனது பணி. இவனைப் போலவே கல்வியங்காட்டிலிருந்து அச்சுவேலி வரை,இணுவிலிருந்து காங்கேசன்துறை வரை,நாவற்குழியிலிருந்து இயக்கச்சி வரை, பண்ணைப் பாலத்திலிருந்து தீவுப்பகுதி முழுவதும், கிளிநொச்சி மாவட்டம் முழுவதற்குமென, வவுனியா மாவட்டத்துக்கென தலா ஓவ்வொருவர் நியமிக்கப்பட்டனர். யாழ் மாநகரசபைப் பகுதிக்கென ஒருவரும் ,பருத்தித்துறை,வல்வெட்டித்துறைக்கென தலா ஒவ்வொருவரும் நியமிக்கப்பட்டனர். பண்டிதரின் நெறிப்படுத்தலில் அரசியற் பணிகளை முன்னெடுத்து வந்தவர் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டதால் அவரது இடத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவனான சுகந்தன் (ரவிசேகரம்) நியமிக்கப்பட்டார். இவர் இயக்கத்திலிருந்து விலகியதும் அந்தப் பொறுப்பு திலீபனுக்கு வழங்கப்பட்டது.

        திலீபன் பொறுப்பெடுத்த காலத்தில் ஏற்கனவே இந்தியப் பயிற்சிக்கென அனுப்பப்பட்ட போராளிகள் 200 பேரில் கணிசமானோர் நாட்டுக்குத் திரும்பி வந்தனர். இதனால் அரசியற்பணிகளை விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இயக்கத்தின் அதிகாரபூர்வமான 'விடுதலைப்புலிகள்' பத்திரிகை இந்தியாவிலேயே அச்சிடப்பட்டு வந்தது. சுதந்திரன் பத்திரிகை ஆசிரியரான கோவை மகேசனால் வெளியிடப்பட்ட 'வீரவேங்கை'யும் அங்கேயே அச்சிடப்பட்டது.

இவற்றை நாட்டுக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அவ்வப்போதைய நிலைமைகளை உடனே வெளியிட இங்கேயே ஒரு பத்திரிகையை வெளியிட வேண்டுமென தளபதி கிட்டுவும்,மாவட்ட அரசியற்பொறுப்பாளர் திலீபனும் தீர்மானித்தனர். 'களத்தில்' என்று பெயரிடப்பட்ட அப்பத்திரிகைக்கு திலீபனே ஆசிரியராகவுமிருந்தான். அவனது கருத்துக்கள் களத்தில் பத்திரிகையிலும், ஏனைய பத்திரிகைகளுக்கான அறிக்கைகளாகவும் வெளிவந்தன. குறிப்பாக இவன் பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போது இவனது உதவியாளனாகச் செயற்பட்டு பின்னர் புன்னாலைக்கட்டுவன் பிரதேசப் பொறுப்பாளராக விளங்கியதுடன் இவன் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பன்னிரு நாட்களும் இவனது அருகிலேயே இருந்த ராஜனுக்கு இவன் என்னென்ன சொன்னான் எதை எதை எழுதினான் என்பது சந்தேகமறத் தெரியும்.

     திலீபன் இயக்கத்திலிருந்து உயிர்பிரியும் வரை எமது மண்ணில்  தேர்தல்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்திய இராணுவத்தின் வருகைக்குப் பின்னர் தான் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பன நடைபெற்றன. இந்திய ராணுவம் சென்ற பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் மீண்டும் உருவாகினபின்னர் தீவுப்பகுதிகள் படையினர் வசமாகின. அங்கிருந்த சொற்ப மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கென ஒன்பது பேர் .பி.டியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர் என அறிவிக்கப்பட்டது. இக்குழுவின் சார்பில் போட்டியிட்ட  ஓருவருக்கு ஓரே ஓரு வாக்கு மட்டுமே கிடைத்தது(அதாவது அவரின் வாக்கு) அவரது மனைவியோ,அதே அணியில் போட்டியிட்ட ஏனையவர்களில் ஓருவரோ கூட இவருக்கு வாக்களிக்கவில்லை. ஓருவர் மூவருக்கு விருப்பு வாக்களிக்கலாம் என்ற போதிலும் கூட ஒரே ஓரு வாக்கு கிடைத்ததென்றால் டக்ளஸ் கூட இவருக்கு வாக்களிக்கவில்லை போலும்.

     B.B.C நிருபர் ஆனந்தி டக்ளஸ் அவர்களிடம் "இத்தனை குறைந்த வாக்குகளுடன் ஒன்பது ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிச் செல்வது சரியாக உங்கள் மனச்சாட்சிக்குத் தெரிகிறதா?" எனக் கேட்டார். இதற்கு டக்ளஸ் "இதில் சரி பிழை என்பதற்கு அப்பால் இந்தச் சூழ்நிலையில் பதவிகளைப் பொறுப்பேற்று எவ்வாறு மக்களுக்கு சேவையாற்றலாம் என்பதே எமது நோக்கம்" எனப் பதிலளித்தார்..பி.டிபியை விட முஸ்லீம் காங்கிரஸ்க்கும் ஒரு இடம் கிடைத்தது. டாக்டர் இலியாஸ் இப்பதவிக்கு தெரிவானார்.

          .பி.டியினர் இவ்வாறு தெரிவாகியமை பற்றி பொதுவாக மக்களிடையே விசனம் உண்டாயிற்று. அப்போது லண்டனில் தன்னை விட இயக்க விசுவாசி எவனுமே இருக்க முடியாது எனக் கருதிய ஓரு புண்ணியவான் கற்பனையில் திலீபன் சொன்னதாகக் குறிப்பிட்டு ஓரிரு வசனங்களை சுமார் பத்து ஆண்டுகளின் பின் (10 செப்டம்பர் 97)

களத்தில் பத்திரிகையில் வெளியிட்டார். அதில் "இந்த மண்ணின் விடுதலையை நேசிக்காத எவரும் இந்த மண்ணை ஆள அருகதை அற்றவர்கள்" என்பதும் ஒன்று. இதனை எழுதியவர் .பி.டியை நன்றாகச் சாடியிருக்கிறேன் என்று நினைத்திருப்பார். தேர்தல் திணைக்களத்தில்

சைக்கிள் சின்னத்துடன் ஒற்றையாட்சியை  ஆதரிக்கும் யாப்பினை சமர்ப்பித்த  அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியினர்  பின்னாளில்   தாம்  எதிர்க்கும் 13 வது சட்டதிருத்தத்தின் கீழ் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த வசனத்தைப் பயன்படுத்துவார்கள் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். "இந்த பெண்ணை எனக்கு பிடிக்கவே இல்லை; ஆனால் இவளை நீங்கள் எனக்குத் தான் கட்டித்தர வேண்டும்; வேறெவருக்கும் கட்டிக் கொடுக்கக்கூடாது" என்று கூறும் பாணியில் திலீபன் நினைவு நாளில் இந்த வசனத்தைக் காட்சிப்படுத்தியமை தேர்தலுக்கான முன்னோட்டமே.

     இந்த வசனத்தை கண்ணுற்ற ஓருவர் உடனே அதனைப் படம் எடுத்து லண்டனுக்கு ராஜனிடம் அனுப்பி வைத்தார். அத்துடன் எப்பவாவது,எங்கேயாவது திலீபன் இப்படிச் சொன்னான் அல்லது எழுதினான் என்று தெரியுமா என்று ராஜனிடம் கேட்டார். "ஓருபோதும் இல்லை" என்று பதில் கிடைத்தது.

      தனது பெயரில் வெளியிட்ட அந்த வசனத்தை அவர் உயிரோடு இருந்ததால் தடுக்க முடிந்தது தலைவரால். தான் மறைந்து பத்து வருடங்களின் பின்னர் நாட்டில் தான் ஆசிரியராக இருந்த பத்திரிகையை அதே பெயரில் லண்டனில் வெளியிட்ட புண்ணியவானைப் பற்றி தான் சொல்லாததை சொன்னது போன்ற  கற்பனை வார்த்தைகள் அந்தப் பத்திரிகையில் பிரசுரமாகுமென்றோ திலீபன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். " மலரப்போகும் தமிழீழத்தை வானத்தில் இருந்து பார்ப்பேன்" என்று தான் அவன் உயிரோடு இருக்கும் போது சொன்னான். மற்றும் படி "இந்த மண்ணின் விடுதலையை நேசிக்காத எவரும் இந்த மண்ணை ஆள அருகதை அற்றவர்கள்"என்ற வார்த்தையை பார்த்தால்  தலைவர் அன்று கேட்ட கேள்வியைத் தான் திலீபனின் ஆன்மாவும் கேட்கும் "நான் எப்ப இதைச் சொன்னனான்"?

      இன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்சின் அரசியற் குழந்தைகள் திலீபனின் மறைவின் பின் அவனது பெயரில் வெளிவந்த இந்தக் கற்பனைக் கூற்றைச் சுட்டிக்காட்டி ஆதாரம் இருக்கிறது என்று துள்ளிக்குதிக்கிறார்கள். இவர்கள் திலீபன் உண்ணாவிரதம் இருந்த காலத்தில் பிறந்திருந்தார்களோ தெரியாது.

          திலீபனை அரசியல் பணிக்கு அனுப்பியவரும்,எப்போதும் அவன் கூடவே இருந்த ராஜனும்,சமகாலத்தில் தீவுப்பகுதியில் பிரதேசப்பொறுப்பாளராக விளங்கியவரும் இப்படி திலீபன் சொல்லவே இல்லை  எனச் சொன்னாலும்  இவர்கள் கட்சி விசுவாசம் உண்மையை தரிசிக்க விடாது.

                ***

2022 ஆம் ஆண்டின் மாவீரர்நாள் வருகிறது .இந்தக் கால கட்டத்தில் தலைவரின் அறிக்கைகள்,குறிப்புகள் என்று சொல்லி பலதும் பத்தும் வெளிவரலாம். அதற்குள் தமது கற்பனைகளை இடைச்சொருகலாக நாசூக்காக திணிக்கும் சம்பவங்கள் ஏற்படலாம். எனவே தலைவரை உளமாக நேசிக்கும் அனைத்து உறவுகளும் இந்த விடயத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 தான் கற்பனையாக எழுதிய வசனம் திலீபனின் நினைவேந்தல் விடயத்தில் பயன்படுத்தப்பட்ட போது திருடனுக்கு தேள் கொட்டியது போன்று குறிப்பிட்ட புண்ணியவானுக்கு இருந்திருக்கும். ஆனாலும் விசமத்தனமான மெளனம் சாதித்தார். எவ்வகையிலும் மாவீரர்களையும் இந்த அரசியல் அசிங்கத்துக்குள் தலைவரின் பெயரால் இழுத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

        ஏனெனில் தலைவர் மாவீரர்நாள் உரையில் தனக்கு பிடிக்காத தமிழ் தரப்பைச் சாடினார் என்ற அர்த்தத்தில் விளங்கிக் கொண்ட 'புத்திசாலிகள்' நாட்டில் மட்டுமல்ல லண்டனிலும் இருக்கிறார்கள்  அதற்கு அப்பாலும் இருக்கக்கூடும்.

-நன்றி எதிரொலி

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post