- கரும்பறவை
நவ. 27 மாவீரர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...' மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின் போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் பாடினார். அதேசமயம், ஏற்கனவே இசையமைத்த பாடலும் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பானது. அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து 'வெளிச்சம் இதழில்' இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.
1992 ஆம்
ஆண்டின் மாவீரர் நாள் பிறக்கப் போகின்றது.
இந்த நாளின் பிறப்பின்போது, நாம் மாவீரர் துயிலும்
இல்லத்தில் நிற்க வேண்டும். இதற்காகச் சென்று கொண்டிருக்கிறோம். பகலிலேயே எங்கோ ஒருவரைத்தான் காணக்கூடியதாக இருக்கும் இராசபாதையில் நள்ளிரவிலும் ஒரே மக்கள் கூட்டம்.
இந்த வீதியிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் இன்னும் கூடுதலான மக்கள் திரள்திரளாகச் செல்கிறார்களே.... இவர்கள் கிளாலியை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டமல்ல... நல்லூர் திருவிழா முடிந்ததும் கடலைக் கடைகளுக்கும் ஐஸ்கிறீம் கடைகளுக்கும் வேடிக்கை பார்க்கும் கூட்டமுமல்ல... அனைவருமே உணர்ச்சிப் பிளம்புகளாய் காட்சியளிக்கிறார்கள். சத்தியம் செய்யும் அந்தக் கூட்டத்தினூடேதான் போய்க் கொண்டிருக்கிறோம். இது ஒரு வித்தியாசமான
அனுபவம்தான். நாம் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியின்போதும் மனதுள் ஏதோ ஒன்று... அதை
விபரிக்க முடியவில்லை.
'என்ரை
ராசா... கிளியண்ணை வந்திருக்கிறார் ஒருக்காப் பார் ராசா...', ஒரு
மாவீரனின் சமாதியில் அவர் தாய் அழுதுகொண்டே
சொல்லும் வார்த்தைகள் எமது நெஞ்சைப் பிழிகின்றது.
கண்ணீர் முட்டுகிறது. கூட வந்தவர்களுக்குத் தெரியாதபடி
துடைத்துக் கொள்கிறேன். இப்போதே அழத் தொடங்கினால்.... கஷ்டப்பட்டு
கண்ணீரைச் சிக்கனப்படுத்திக் கொள்கிறேன். பின்பு தேவையல்லவா.
வழியில்
இந்த ஆண்டு மாவீரர் தினம் பிறக்கும் வேளையில் மணியோசைக்குப் பின் ஒலிக்கவிருக்கும் மாவீரர்
பாடலைப் பாடவிருக்கும் வர்ணராமேஸ்வரன் வருகிறார். 'ராமேஸ்வரன் எனக்குப் பக்கத்தில நில்லுங்கோ... நீங்கள்தான் எனக்குப் பக்கத்தில நிண்டு பாடுறது.', உரிமையுடன் கட்டளையிடுகிறார் புதுவையண்ணா. இப்படித்தான் நாங்கள் எங்கள் மக்களை வசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
மாவீரர்
துயிலுமில்லத்தில் முதலாவது சுடர் ஏற்றப்படும் இடம் - அந்த நேரத்தை எதிர்பார்த்தபடி
மனம் எதையோ தேடுகின்றது. 12.00 மணி. யாழ். மாவட்ட
விசேட தளபதி தமிழ்ச்செல்வன் முதலாவது சுடரை ஏற்றுகிறார். எங்கும் ஆலய மணியோசை. தீபத்தில்
ஏற்றப்படும் ஒளியைத் தொடர்ந்து எனது கண்கள் எனது
கட்டுப்பாட்டை இழக்கின்றன. ஆலய மணியின் ஓசை
ஒலிக்கு மட்டும் மௌனமாக நின்று அஞ்சலிக்கின்றோம். ராமேஸ்வரன் பாடுகிறார். இதே பாடல் ஒலிபெருக்கியிலும்...
நாம் உறுதியெடுத்துக் கொள்கின்றோம்...
'வழிகாட்டி எம்மை
உருவாக்கும்
தலைவன் வரலாறு மீதிலும்
உறுதி.
விழிமூடி இங்கே துயில்கின்ற
வேங்கை வீரர்கள் மீதிலும்
உறுதி.
இழிவாக வாழோம் தமிழீழப்
போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.'
நான் ஏன் அழுகின்றேன்...
இழப்புகளினால்
உரமேறிய தேசமல்லவா... எனது தேசம். ஐயாயிரத்துக்கும்
மேலும் சில நூறு பேர்களை
இழந்து விட்டோம். இன்னுமா மாறவில்லை. சீலனது வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. 'போராளிகள் மென்மையான மனமுடையவர்கள். மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் சகிக்க முடியாதவர்களே போராளியாகின்றனர். அதைத் தாங்கிக் கொண்டு சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள்தான் போராட்டத்துக்கு வெளியில் நிற்கிறார்கள். எவ்வளவு அச்சொட்டான வார்த்தைகள் இவை. சூழவுள்ள மக்களைப்
பார்க்கிறேன். எத்தனை எத்தனை ஆயிரம் சொந்தங்கள் எமக்கு. எல்லோரும் எம்மவர்கள்... ஆனால் அன்று நீயும் ஆனந்தும் எரிக்கப்படும்போது உங்களுக்குப் பக்கத்தில் ஒருவருமே இல்லையே... உனது வீரச்சாவுச் செய்தி
கேட்டு திருமலையிலிருந்து பறந்து வந்த உனது அம்மா
உனது உடலைத் தரும்படி எவ்வளவு மன்றாடியிருப்பார் சிறீலங்கா இராணுவத்திடம். அவர்கள் உனது உடலைக் கொடுக்கவில்லையே...
பௌத்த தர்மம் அதற்கு இடமளிக்கவில்லை... இன்று இந்தத் தேசமே சொந்தம் கொண்டாடுகிறது. நாங்கள் வளர்ந்துவிட்டோம்... எங்கும் போராளிகள் பொதுமக்கள்...
ஒரு
தாக்குதலுக்காக யாழ். நகரப் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கிறோம். மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இராணுவத்தினர் இரண்டு வாகனங்களில் வந்து இறங்குகின்றனர். கம்பீரமான தோற்றத்துடன் தமக்குச் சொந்தமில்லாத மண்ணில் நடமாடுகின்றனர் இராணுவத்தினர். அப்போது நீ சொல்கிறாய், 'இதைப் போல நாங்களும் ஆம்ஸைக் கட்டிக் கொண்டு சுதந்திரமா திரிய வேணும் அப்ப அது புதினமில்லாத மாதிரி சனம் போக வேணும்', எவ்வளவு ஆசையாகச்
சொன்னாய். இந்தப் போராட்டம் வெல்லும் நாங்கள் வளர்வோம் என்பதெல்லாம் நாம் எதிர்பார்த்ததுதான். ஆனால், இவ்வளவு
விரைவாக... எல்லாம் இன்றுபோல் இருக்கிறது.
'உங்களைப் பெற்றவர் உங்களின்
தோழிகள் உறவினர் வந்துள்ளோம்...'
இதேநேரம்
இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏதோ ஒரு இடத்தில்
அழுது கொண்டிருப்பார்கள் எனது குஞ்சம்மாவும், குஞ்சையாவும்.
எனது இளமைக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன. இவர்களின் மகன் நக்கீரன் (செந்தில்குமரன்)
அப்போது பிறக்கவில்லை. (ஆறு பெண் பிள்ளைகளுக்குப்
பின்னே இவன் பிறந்தான். ) ஒவ்வொரு
பிள்ளையும் பிறக்கும்போது இது ஆண்பிள்ளையாக இருக்காதா
என்ற எதிர்பார்ப்பாயிருக்கும். இனி ஆண் பிள்ளையே
பிறக்காது. நமக்கு இறுதிக்கடன் செய்ய ஆண்பிள்ளை இல்லையே என்று குஞ்சையாவுக்கு ஒரு ஏக்கம். அதனால்
அவர் என்னுடன் கூடியளவு பாசத்துடன் இருந்தார். ஒருநாள் எனக்குத் தேவையான பழவகைகளை வாங்கி வந்து 'குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பியா மனா?', என்று கேட்டார். நானும் 'ஓம்' என்றேன். அவருக்கு
மகிழ்ச்சி தாளவில்லை. அதன் பிறகு எனது
தேவைகளை நிறைவேற்றுமிடத்தை நான் தெரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு தடவையும் அவர் என்னைக் கேட்பார்
'குஞ்சையாவுக்கு என்ன செய்வாய்?', 'கொள்ளி
வைப்பன்', இதன் தாக்கம் விளங்காது
பதில் சொல்லும் வயது.
ஏழாவதாகச்
செந்தில்குமரன் பிறந்தான். அவன் மீது பாசமாகக்
கொட்டி வளர்த்தார்கள். நானும் வளர்ந்து விட்டேன். அப்போதெல்லாம் இந்தப் பழைய சம்பவத்தை எனது
குடும்பத்தாரிடம் சொல்லிச் சிரிப்பேன். 'இப்ப குஞ்சையா செத்து
நான் கொள்ளி வைக்கப் போனால் குஞ்சையா பெட்டிக்குள்ளால எழும்பி 'ஏன் நீ கொள்ளி
வைக்கிறாய் செந்தில் எங்கை போட்டான்' எண்டு கேட்பார் என்று சொல்லிச் சிரிப்பேன்.
அவன்
இயக்கத்துக்குப் போய் மாவீரர் ஆனதும்
நான் அங்கே போனேன். அப்போது அவர், 'டேய் நீ சின்னனாய்
இருக்கேக்கை குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பனெண்டெல்லோ சொன்னனீ... வைப்பாய்தானே...' என்றார்.
புரியாத
வயதில் சொன்ன அந்த வார்த்தைகளில் இத்தனை
அர்த்தமா...? இத்தனை தாக்கமா...? தொடர்ந்து பாடல் ஒலிக்கிறது.
'.... அன்று செங்களம் மீதிலே
உங்களோடாடிய தோழர்கள்
வந்துள்ளோம்...'
அடிபட்ட
பந்தாக மீண்டும் சீலனை நோக்கி நினைவுகள்... சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத் தாக்குதல். மேல் மாடியில் காலில்
காயப்பட்ட சீலன் காலை இழுத்துக் கொண்டு
இயலாத நிலையில் றிப்பிட்டரைக் கொடுத்து விட்டு அந்த பொலிஸ் நிலைய
வளவில் தேங்கியிருந்த மழைத்தண்ணீரைக் குடிக்கிறான். தொடர்ந்து படுத்தபடியே அவனது உத்தரவுகள், 'ஒண்டையும் விடக்கூடாது எல்லாத்தையும் ஏத்தவேணும்', இயந்திரமாக இயங்குகிறோம். எல்லாவற்றையும் ஏற்றியதும் மினிபஸ் புறப்படுகிறது. அழுதபடியே ரஞ்சன் காயப்பட்ட எல்லாரையும் கொஞ்சுகிறான். (சீலன், புலேந்திரன்,.... எல்லாரையும் காப்பாற்ற விரைவாக வாகனத்தை செலுத்துகிறான் சங்கர். அன்று மற்றவர்கள் காயப்பட்டதற்காக அழுத ரஞ்சன் உட்பட
ஏனைய அனைவரையும் தொலைத்து விட்டு நிற்கிறோம். அதே வரிகள் மீண்டும்.
'.... அன்று செங்களம் மீதிலே
உங்களோடாடிய தோழர்கள்
வந்துள்ளோம்...'
வரிசையாக
நினைவுக்கு வருகின்றனர். 'யாழ்ப்பாணத்துக்கு வெளியில அடிக்க வேணும்', என்று அடிக்கடி கூறும் செல்லக்கிளியம்மான்.
உமையாள்புரத்தில்
இராணுவத்தினர் ஓடும்போது சிரித்தபடியே 'துரத்துங்கடா' என்றபடியே அவர்களின் ட்றக்கில் ஏறிய செல்லக்கிளியம்மான்... களுவாஞ்சிக்குடி பொலிஸ்
நிலையத் தாக்குதலில், 'அம்மாட்டச் சொல்லுங்கோ நான் சண்டையிலதான் செத்தனெண்டு',
என்று சொன்ன பரமதேவா. ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, 'ரெண்டு கிறனைட் தாங்கோ நான் உள்ளுக்கை போய்க்
காட்டுறன்' என்று சொன்ன விசாகன். 'அண்ணே ஒரு சக்கைக் கானைத்
தாங்கோ நான் கொழுத்திக் கொண்டு
போய் உள்ளுக்கை வைச்சிட்டு வாறன்' என்று சக்கைக்கானை வாங்கிக் கொண்டு துப்பாக்கி வேட்டுகளுக்கிடையே பொலிஸாருக்கு மத்தியில் அதை வைத்து விட்டு
வந்த கமல்... இன்னும் எத்தனை... எத்தனை...
'எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்'
தவிக்கும்
மனதின் வார்த்தைப் பிளம்பு இது. எனக்கு இதற்கும்
மேல்... 'ழ'கரம், 'ல'கரம் வித்தியாசமில்லாமல் மழலையாக ஒலிக்கும்
சீலனின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.
'நள்ளிரா வேளையில்
நெய்விளக்கேற்றியே நாமுமை
வணங்குகின்றோம்'
பகீனுக்கு
எப்போதும் சந்தேகம் இந்த சயனைற் வேலை
செய்யுமாவென்று, அடிக்கடி கேட்பான். 'அண்ணை இது வேலை செய்யுமோ?'
'அது
வேலை செய்யும் நீ போடா', வல்வெட்டித்துறைக்கு
அனுப்பி வைப்போம். நாம் எத்தனை தரம்
சொன்னாலும் அவனுக்குத் திருப்தியில்லை.
ஒருநாள்
நள்ளிரவு. களைத்துப்போய் வந்த நான் படுக்கப்போகிறேன்..
அப்போதும் கேட்கிறான். 'அண்ணை இது வேலை செய்யுமோ?'
- எனக்கு எரிச்சல். 'வேலை செய்யாது போல
கிடக்கு... உன்னிலதான் ரெஸ்ற் பண்ண வேணும்... போய்ப்
படடா'
அவன்தான்
எமது இயக்கத்தில் முதன் முதல் சயனைற் உட்கொண்டவன். அந்தச் செய்தி கிடைத்ததும் நான்... இந்த வாயால இனி
எதுவும்...
'எங்கே! எங்கே! ஒருதரம்
விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம்
காட்டியே
மறுபடி உறங்குங்கள்'
கண்ணால்
காண முடியவில்லைத்தான். ஆனால், மனதில் அனைவரது முகங்களும்... அங்கிருந்து நகர்கிறேன்.
'உயிர்விடும் வேளையில் உங்களின்
வாயது உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாக நின்றினி
விரைவினில் நிச்சயம்
எடுத்தாள்வோம்.'
என்ற
வரிகளை மனதில் சுமந்தபடி அங்கிருந்து நகர்கிறேன். கடந்த வருடத்தைப் போலவே. அங்கு பலர் மயங்கி விழுகின்றார்கள்.
முதலுதவிப் படையினர் அழைக்கப்படுகின்றனர்.
அறிவிப்பாளரின்
மொழியில் கூட சோகம்...
Post a Comment