நினைவழியா நிகழ்வுகள்!
-சங்கர்
உள்ளுணர்வு
என்ற விடயம் எவருக்கும் புரியததாகவே உள்ளது. கடுமையான பகுத்தறிவாளர்களில் சிலர் இதனை தற்செயல் நிகழ்வு
என விளக்கமளிப்பர். எனினும் உள்ளுணர்வின் தாக்கத்தினால் விளைந்த சம்பவங்கள் சம்பந்தப்பட்டோரால் என்றுமே மறக்க முடியாத விடயமாகவே இருக்கும்.
போராட்டகால
வாழ்வு என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். சில விடயங்கள் அடிக்கடியும்
சில காலங்களில் நாளாந்தமும் நடந்தாலும் அது ஒரு புதிய
விடயம் போலவே உணர்வுள்ளோருக்குத் தெரியும். அவர்கள் தமது நடவடிக்கைகளை மாற்றிக்
கொள்வதில்லை. அலுப்புப்பட்டதும் இல்லை. அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்றுதான் வீரச்சாவெய்திய போராளிகளின் வித்துடல்கள் கொண்டு செல்லப்படுவதும் வழிநெடுக மக்கள் வணக்கம் செலுத்துவதும். முன்னே ஒரு வாகனம் மாவீரரின்
பெயர், விபரத்துடன் எந்தச் சம்பவத்தில் எப்போது வீரச்சாவடைந்தார் என்று அறிவித்துச் செல்லும். அச்சமயம் அப்பகுதியிலுள்ளோர் வீட்டிலுள்ளோர் பூக்களைப் பிடுங்கி கையிலோ, ஒரு தட்டத்திலோ வைத்திருப்பர்.
அடுத்து வித்துடல் தாங்கிய பேழையைச் சுமந்துவரும் வாகனம் ஊர்ந்து ஊர்ந்து வரும். வீரவணக்கம் செலுத்துவதற்காகக் காத்திருப்போர் அருகில் அது நின்றதும் மலர்களை
அப்பேழையின் மீதோ அடியிலோ வைத்து
வணக்கம் செலுத்துவர் மக்கள்.
இது
வெறுமனே ஒரு சடங்காகவோ, வைபவமாகவோ
நிகழ்வதல்ல. குறிப்பிட்ட அந்த மாவீரன் அந்த
மக்களின் மனதில் ஒரு உறவாகவே பதிந்து
நிற்பான். மலர்களுடன் தமது விழி நீரையும்
சொரிந்தே வணக்கம் செலுத்துவர் மக்கள். இவ்வாறாக வணக்கம் செலுத்துவோரில் வற்றாப்பளையை சேர்ந்த ஒரு குடும்பமும் அடங்கியிருந்தது.
இவர்களின் மகனும் ஒரு போராளியாக இருந்தான்.
புதுக்குடியிருப்பில்
திருமலை மாவட்டத் தொடர்பகம் இருந்தது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த
போராளிகள் வீரச்சாவடைந்தால் அத் தொடர்பகமே இறுதி
வணக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும். அந்த வகையில் திருமலை
மாவட்டம் கறுக்காமுனைப் பகுதியைச் சேர்ந்த ஒரு போராளி வீரச்சாவடைந்து
விட்டார் என்ற தகவல் அப்பணிமனைக்குக்
கிடைத்தது. அதன் பிரகாரம் அந்த
மாவீரரின் விபரத்தை அறிவித்தவாறே முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல் விதைக்கப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவித்தவாறு ஒரு வாகனம் போயிற்று.
புதுக்குடியிருப்பில் இருந்து வற்றாப்பளை மார்க்கமாகவே செல்வது வழக்கம்.
இந்த
அறிவித்தலைக் கேட்டதும் வற்றப்பளையைச் சேர்ந்த போராளியின் குடும்பத்தினர் இந்த மாவீரருக்கு வணக்கம்
செலுத்துவதற்காக மலர்களுடன் வீதிக்கு விரைந்தனர். அறிவிப்பு வாகனத்தைத் தொடர்ந்து வித்துடல் தாங்கிய பேழையைச் சுமந்த வாகனம் வந்தது. இக்குடும்பத்தினரைக் கண்டதும் வேகத்தைக் குறைத்த வாகனம் இவர்களின் அருகில் வந்ததும் நின்றுவிட்டது. ஏதோ பழுது. மலர்
வணக்கம் செய்த தாய் கண்ணீர் சிந்தினார்.
வாகனம் தொடர்ந்து போகாமல் நின்றதைக் கண்டதும் அந்த இடத்தை விட்டுத்
திரும்பிச் செல்ல முடியவில்லை அவர்களால். சுமார் ஒரு மணித்தியாலம் சென்றது
வாகனத்தைத் திருத்த. அதுவரை இக்குடும்பத்தினரும் காத்திருந்தனர். இந்த மாவீரரின் குடும்பத்தினர்
இவ்வேதனையை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகின்றனர் என்று நினைத்தபடியே நின்றனர். ஒருவாறு திருத்த வேலை முடிந்தும் வாகனம்
புறப்பட்டது. இவர்களும் வீடு திரும்பினர். வித்துடல்
முள்ளியவளையில் விதைத்தாயிற்று.
அடுத்தநாள்தான்
மாவீரராக குறிப்பிடப்பட்டவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது.
அப்படியானால் விதைக்கப்பட்டவர் யார்? மாவீரரின் சொந்தப் பெயர், தந்தை பெயரில் எந்த மாற்றமுமில்லை. அது
உறுதியாயிற்று. தந்தை பெயரும், சொந்தப் பெயரும் அப்படியே உள்ள இன்னொருவர்தான் அந்த
மாவீரர். முகவரி மட்டும் மாற்றம். வற்றப்பளை அவரது முகவரி. எந்த வீட்டுக்கு முன்னால்
வாகனம் பழுதாயிற்றோ அதே வீடுதான் அந்த
மாவீரரது. மலர் தூவி அஞ்சலித்த
தாயும் உறவினரும் இந்த மாவீரருடையவர்களே. அதிர்ந்து போனார்கள்
போராளிகள். இனி செய்வதற்கு எதுவுமில்லை.
பெற்றோரிடம் தகவலைச் சொல்லி தவறுக்கு மன்னிப்புக் கேட்குமாறு தளபதி சொர்ணம் சொன்னார். தயங்கித் தயங்கி அவர்களின் வீட்டுக்குச் சென்றனர் திருமலைத் தொடர்பகத்தினர்.
தந்தை
கேப்பாபிலவிலுள்ள வயலுக்கு சென்றிருந்தார். அவரிடம் தகவலையும் சொல்லி நடந்த தவறுக்கு மன்னிப்பும் கோரினர் போராளிகள். எந்த விதத்திலும் தவறை
நியாயப்படுத்தவில்லை. தாயார் மற்றும் உறவினரிடம் அடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 'உனக்கு நாங்கள் மலர் போட்டு அஞ்சலி
செலுத்த வேண்டும் என்றுதான் உனது ஆத்மா அந்த
வாகனத்தைப் பழுதாக்கியதா?' என்று தம்மால் இழக்கப்பட்ட மகனை நினைத்துக் கதறினர்
அனைவரும். தந்தையின்
பெயரும் மகனின் பெயரும் ஒன்றாகவே இருந்ததில் தமது கண்ணீர் சற்று
அதிகமாகவே சொரிந்ததை உணர்ந்தனர் அவர்கள். தகட்டு இலக்கத்தை மீண்டுமொரு முறை சரியாக உறுதிப்படுத்தியிருந்தால்
இந்தக் குழறுபடி நேர்ந்திருக்காது எனத் தம்மைத் தாமே
நொந்துகொண்டனர் போராளிகள்.
எது
எப்படியிருந்தாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு
இவ்வளவு சம்பவங்களும் நடக்கக் காரணமானது என்பதை மறுக்க முடியாது. இதற்கு ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியவாறு
விளக்கம் கொடுக்கலாம். ஆனால் ஏதோ ஒரு சக்தியொன்றை
அனைவரும் உணரமுடிந்தது.
***
இச்சம்பவம்
09.09.1985 அன்று மட்டக்களப்பில் நடந்தது. பயிற்சி முகாமில் இருந்து ஒருவரின் வைத்திய தேவைக்காக வெளியே அனுப்பப்பட்டனர் இரு போராளிகள். நோயுற்றவருக்கு
உதவும்முகமாகவே இன்னொருவர் அனுப்பப்பட்டார். மருத்துவ வசதிகள் வளர்ச்சியுற்றிருக்காத அந்தக் காலத்தில் அரச மற்றும் தனியார்
மருத்துவமனைகளிலேயே போராளிகள் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. ஈரலிக்குளம்
பகுதியில்தான் இந்தப் பயிற்சி முகாம் இருந்தது. அங்கிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் செல்வதற்கென்றே இவர்கள் அனுப்பப்பட்டனர். இவர்கள் மட்டு. புகையிரத நிலையப் பகுதிக்கு வந்து விட்டனர். அவ்வேளை சிறப்பு அதிரடிப் படையினரின் வாகனம் ஒன்று வந்தது. ஒரே வயதுள்ள இருவர்
அங்கே நிற்பதைக் கண்டதும் அவர்களைப் பிடித்து விசாரிக்க எண்ணினர். தம்மை நோக்கி அதிரடிப் படையினரின் வாகனம் வருவதைக் கண்டதும் இருவரும் ஓடித் தப்ப முயன்றனர். முடியவில்லை.
படையினர் நெருங்கவே இருவரும் சயனைற் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவினர். இருவரின் உடல்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர் படையினர்.
வைத்தியசாலைக்குச்
சென்ற திருமதி பூரணலட்சுமி சின்னத்துரை என்பவர் அந்த இரு உடல்களையும்
கண்டார். ஆனால் முகத்தைப் பார்க்க முடியவில்லை. சொந்த ஊரான ஆரையம்பதிக்கு சென்றதும்
தனது வீட்டுக்கு வந்த போராளிகளிடம் இரு
சடலங்களைத் தான் கண்டதாகக் கூறினார்.
'அதில ஒரு பிள்ளை பச்சைச்
சாறன் உடுத்தியிருந்தது. ஆர் பெத்த பிள்ளைகளோ...'
என அங்கலாய்த்தார். விடயத்தைக் கேள்விப்பட்டதும் நகரப் பகுதியில் உள்ள சிலரிடம் இச்சம்பவம்
பற்றி விசாரித்தனர் போராளிகள். சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்திய அவர்கள் உயிரிழந்தோர் புளொட் இயக்கத்தவர்கள் என செய்திகள் அடிபட்டதாகக்
குறிப்பிட்டனர்.
அந்தக்
காலத்தில் 36 இயக்கங்கள் இருந்தன. ஆகையால் இதுபற்றி சரியாக அறிந்துகொள்ள முடியாது. இன்றிருப்பதுபோல் அன்று கைத்தொலைபேசிகள் இல்லை. ஒரு ஊரில் மூன்று
அல்லது நான்கு பேரிடமே தொலைபேசிகள் இருந்தன. தகவல் கிடைப்பது மிகச் சிரமம். இந்நிலையில் மூன்று தினங்களின் பின் அப்போதைய மட்டக்களப்புத்
தளபதி அருணா ஆரையம்பதியில் நின்ற மற்றொரு போராளியுடன் தொடர்பு கொண்டார். இருவரை தான் வைத்தியத்திற்காக அனுப்பி
வைத்ததாகக் குறிப்பிட்ட அவர் அவர்களின் உடல்நிலை
எவ்வாறுள்ளது என விசாரித்தார். எப்போது
அனுப்பியது எனக் கேட்டபோது 9 ஆம்
திகதி என்று குறிப்பிட்டார்.
அப்போதுதான்
மட்டு. புகையிரத நிலைய வீதியில் உயிரிழந்த இருவரும் தமது போராளிகளே எனப்
புரிந்தது ஆரையம்பதியில் இருந்த போராளிக்கு. யார், யார்? அனுப்பப்பட்டனர் எனக் கேட்டபோது பிரதீஸ்,
பிரியன் எனப் பதில் வந்தது.
அதிர்ந்துபோய்
நின்றார் அப்போராளி. அருணா குறிப்பிட்ட இருவருமே ஆரையம்பதியைச் சேர்ந்தவர்கள். பிரியனது இயற்பெயர் தம்பிப்பிள்ளை நவரட்ணராஜா, பிரதீஸ் என்பவரின் முழுப்பெயர் சினத்துரை ரகு, யார் பெத்த
பிள்ளைகளோ என அங்கலாய்த்தாரே அந்தத்
தாயார் பூரணலட்சுமியின் மகன்தான் இந்த ரகு. 'இந்தாங்க
இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டித்துப் போங்க' என்று தனது கையில் ரகுவை
ஒப்படைத்த அந்தத் தாயின் மகனது வீரச்சாவைச் செய்தியாகக் கேட்டு நிலைகுலைந்தார் அப்போராளி. இனி அந்தத் தாயின்
முகத்தில் எப்படி விழிப்பேன் என எண்ணினார்.
இதைவிட
இன்னொரு சம்பவம் ரகு குடும்பத்தில் ஒரேயொரு
ஆண் பிள்ளை. இரு மூத்த சகோதரிகள்
இருந்தனர். அவர்களில் ஒருவர் 8 ஆம் திகதி (ரகுவின்
சம்பவத்துக்கு முதல்நாள்) 'எனக்கு ரகுவைக் பார்க்க வேணும் போல இருக்கு', என
அந்தப் போராளியிடம் கூறினார்.
'பயிற்சி
தொடங்கி விட்டது. இனி முகாமை விட்டு
அவனை வெளியில் கொண்டுவர முடியாது. நீங்கள் அங்கெ சென்று பார்ப்பதும் சாத்தியமில்லை. பயிற்சி முடிந்ததும் நானே கூட்டிக்கொண்டு வருகிறேன்'
என்று சொன்னதற்கும் அந்தச் சகோதரி சமாதானமாகவில்லை. தான் எப்படியும் அவனைப்
பார்த்தாக வேண்டும் என அடம்பிடித்தார். இந்தச்
சம்பவங்கள் எல்லாம் அந்தப் போராளியின் நினைவுக்கு வந்தன. ஏதோ ஒரு உள்ளுணர்வு
அவனைப் பார்க்கத் துடிக்க வைத்தது. எனினும் அவனது முகத்தை எவருமே பார்க்க முடியாமல் போயிற்று. அதுபோல ஏதோ ஒரு சக்தி
யாரோ ஒரு பிள்ளையைப் பார்ப்பதுபோல
தாயாரைப் பார்க்க வைத்தது.
'உங்களது
கையில்தானே அவனை ஒப்படைத்தேன்', என்று
அன்ரி என்றழைக்கப்படும் திருமதி பூரணலட்சுமி கேட்பாரே என்று அந்தப் போராளிக்குத் தயக்கம். தகவலை வேறொருவர் மூலம் அனுப்பி விட்டு மாலை நேரம் அங்கு
தயங்கித் தயங்கிப் போனார். அன்ரி கதறிக் கொண்டிருந்தார். அப்போராளியைக் கண்டதும் 'ரகு இல்லையெண்டதுக்காக இங்க வராமல்
இருந்திடாதீங்க. எங்களைத்தான் நீங்கள் முதல்ல கண்டனீங்கள்...' என்று அழுகையினூடே கூறினார் அன்ரி.
மாவீரர்
ஈகம் மட்டுமல்ல எத்தனையெத்தனை வகையான தியாகங்கள், பங்களிப்புகளுடன் இந்தப் போராட்டம் வளர்ந்து நிற்கிறது என்று அதிசயித்துப் போனார் அந்தப் போராளி.
1990 இல்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரைக்குப் போக ஆரையம்பதி மக்களுக்கு
தடை விதித்தது ரெலோ. எவரையும் ஏற்றிச் செல்லக்கூடாதென தோணிக்காரர்களுக்கும் உத்தரவு. இத்தடையை மீறி படுவான்கரைக்குச் சென்றார்
அன்ரி. இதனால் இவருக்கு மரண தண்டனை விதித்தார்
அப்போதைய ரெலோவின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ஜனா. கிழவி ரவி,
வெள்ளை, ராபர்ட் ஆகிய ரெலோ உறுப்பினர்கள்
இத்தண்டனையை நிறைவேற்றினர்.
நன்றி:
ஈழ நாடு
Post a Comment