ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்!

எந்நாளும் விளக்கேற்றி அழுதிடுவோம்

எம் வாழ்வின் பெருமையென உணர்ந்திடுவோம்

மாவீரர் திருநாளை

தலை வணங்கி நினைத்திடுவோம்

மான மறவர்க்கு தினமும் மலர் தூவிப் போற்றிடுவோம்

தரணியெல்லாம் அவர் புகழை

தமுக்கு எடுத்து அறைந்திடுவோம்!

 

ஈழத்தின் விடியலுக்காய்  யாகத் தீயில்

மாவீர முதல் வித்தாய்

ஆகுதியானார்

சங்கரண்ணா

உண்ணாமல் நோன்பிருந்து

உயிரீய்ந்தார் திலீபன் அண்ணா

எம்மின விடுதலைக்காய்

பெண் மாவீர விடுதலை  முதற் தாயாய் தன்னுயிரை உவந்தளித்தாள்

ஈழத்துக் கொற்றவையாம் மாலதி அக்கா!

 

கருவேங்கை விடுதலை முதல் மாமுனிவனாக

சரித்திரம் படைத்தார்

மில்லர் அண்ணா

ஈழத்து மறத்திகளும் வீரத்தில் சளைத்தவர்கள்

அல்ல என்று

முதற் பெண் கடற் கரும்புலியாய்

கடலினிலே காவியம் படைத்தாள் அங்கயற்கண்ணி அக்கா

வானில் கூட வெடித்து உலகை வாய் திறக்க வைத்தார்கள்

ரூபனும் சித்திரனும்!

 

எம் நாடு எம் நிலம்

என்னுணவு  என்னுணர்வு

எம்மொழியே எம்மறிவு

யாரவன் நீ எமைக் கேட்க

எம் வலிமை உணராமல்

எகத்தாளமுடன் வந்து

எள்ளி நகையாடி

எமையடிமையாக்க வந்த

எதிரிகளை

வீறுடனே வீழ்த்தியழித்து

அச்சம் தவிர்த்து அடங்க மறுத்து

வருங்காலம் உணர்வு பெற வழி வகுத்து

ஈழத்தின் இறையாண்மை

காத்தோர்கள்!

 

தானுயர வாழாமல்

தம் சுற்றம் வாழ்வினிக்க

தமிழ் உயர தமிழன் புகழ் வான் சிறக்க

தொல் குடித் தமிழினம் தான் பெருமை கொள்ள

உண்மையுடன் வாழ்க்கை வாழ்ந்து

ஒப்பற்ற தலைவன் வழியில் நடந்து

தரணியிலே புதுப் பரணி

படைத்தவர்கள்!

 

கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்

புலரட்டும்

இவர்கள் நினைவோடு

மலரட்டும்

இவர்கள் கனவோடு

நாளெல்லாம் இவர்கள் புகழை

கொட்டட்டும் செண்டை மேளம்

முழங்கட்டும் பம்பை மேளம்

நித்தம் எம் எழுத்தாணியும் மாவீரர் புகழ் பாடியே  சிறக்கட்டும்

ஊனுருக உயிருருக உள்ளொளி பெருக அவர்கள்  நினைவைக் கருக்கொண்டு

அவர்கள் கனவை நிறைவேற்றுவோம்!

-நிலாதமிழ்.


 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post