அப்பனுக்குச் சத்தியசோதனை வைத்த மகள்!

மாஸ்ரர் . எல். சோதனை முடிய 20 பெடியங்களோட நான் உங்களிட்ட இங்கிலீஸ் ரியூசனுக்கு வருவன், என்று சொன்னாள் எனது மகள் சங்கீதா. திரு மாஸ்ரர் என்றழைக்கப்படும் மு. திருநாவுக்கரசு என்னும் அரசியல் ஆய்வாளர் கிளிநொச்சி திருநகரில் ஆங்கில வகுப்புகளை நடத்தி வந்தார். மாணவர்கள் மட்டுமல்ல, பல்வேறு பதவி நிலைகளில் இருந்தவர்களும் தமது ஆங்கில அறிவை விருத்தி செய்யும்முகமாக அவரின் வகுப்புகளில் கற்றுவந்தனர். என்னோடு வரும்போதெல்லாம் அவரோடு பழகி வந்தவள் பின்னர் உரிமையோடு உரையாடுவாள். அப்படி உரையாடும்போதே மேற்கண்டவாறு அவள் கூறியிருந்தாள்.

ஒருநாள் நான் திரு மாஸ்ரரிடம் சென்றிருந்தேன். சிறிது நேரத்தில் அவளும் அங்கு வந்தாள். அப்போது அவர் இவள் சொன்ன விடயத்தை எனக்குத் தெரிவித்தார். உடனே, “நீ வந்து படிக்கிறதெண்டா சரி; ஏன் 20 பெடியளை கூட்டிக் கொண்டு வாறதெண்டனீ?”, என மகளிடம் வினாவினேன்.

பெடியங்களில்லாட்டி என்னப்பா படிப்பு?”, என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்.

அவளது பதில் தலைமுறை இடைவெளியை எனது மனதில் உறைக்க வைத்தது. யாழ். திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரி, புனித திரேசா மகளிர் கல்லூரி என்று படித்து வந்தவள் தனியார் கல்வி நிலையங்களில்தான் மாணவர்களைக் கண்டிருப்பாள்.

***

எங்களது அப்பு பொல்லுப் பிடித்து வந்தாலும் ராஜகம்பீரம் அவரிடமிருந்தது. அவர் வந்து திண்ணையில் அமர்ந்தால் ஆச்சியோ அவர்களது பிள்ளைகளோ எதிர் திண்ணையிலகூட உட்கார மாட்டார்கள். பயபக்தி என்று சொல்லுமளவுக்கு மரியாதை. பேரப்பிள்ளைகளும் அப்படியே, இவ்வளவுக்கும் அவர் பெரிய அரச உத்தியோகத்தில் இருந்தவரல்ல. முருங்கனில் இருந்த அரிசி ஆலை ஒன்றில் இயந்திர இயக்குநராக இருந்தவர். பின்னாளில் எமது அண்ணியாகிய இவரது மகள் வயிற்றுப் பேர்த்திதான் இவருடன் திண்ணையில் இருந்து பேசக்கூடியவர். ஒரு ரீச்சரின் பாணியில், தான் பார்த்த சினிமா உட்பட பல்வேறு விடயங்களையும் விபரித்துக் கூறும்போது புன்னகையுடன் ரசித்துக் கேட்பார் அப்பு. ஏனையவர்களை பெயர் சொல்லிக்கூப்பிடும்போதுஓமப்பு... ஓமப்பு...” என்பார்களே தவிர, அவர் பிறப்பிக்கும் கட்டளைகள் தொடர்பாக எவரும் எதிர்த்துக் கதைக்க மாட்டார்கள். அவர் சொல்வதை நிறைவேற்றிவிட்டுத்தான் அடுத்த அலுவல் பார்ப்பார்கள்.

 

எங்களது காலத்தில் ஐயாவின் முன்னால் கதிரையில் இருக்குமளவுக்கு மாற்றம் இருந்தது. அப்போதும், எதிர்த்துக் கதைத்ததாக நினைவில்லை. எனது மகள்கள் இருவரும் எம்மை ஆட்டிப் படைத்தனர். கேள்விகளால் துளைத்தெடுத்தனர். ஒருமுறை வௌவால்கள் தொங்குவதைப் பார்த்த சங்கீதா, “ஏன் வௌவால் தலைகீழாத் தொங்குது?”, என்று கேட்டாள். “அவையின்ர அம்மா கொப்பில் இருக்கப் பழக்கேல்லஎன்று பதில் சொன்னேன். உடனே,“அப்ப சீச்சா என்ணெ்டு போகும்?”, என்று கேட்டாள். என்னிடம் பதில் இல்லை.

எம்மோடு இந்திய இராணுவ தடுப்பில் இருந்த இரத்தினம் மாஸ்ரர் என்றழைக்கப்படும் முன்னாள் போராளி பின்னர் வவுனியாவில் வணிக நிறுவனமொன்றை நடத்தி வந்தார். வருட ஆரம்பத்தில் நாட்குறிப்பு, நாட்காட்டிகளுடன் எமது இல்லத்துக்கு வந்த அவர் எம்மிடம் அவற்றை தந்துவிட்டுப் போகும் சமயத்தில் துவிச்சக்கர வண்டியில் சங்கீதா வந்தாள். அவளிடம் ஒரு நாட்குறிப்பு புத்தகத்தை வழங்கினார் இரத்தினம் மாஸ்ரர். கையெழுத்துப் போட முன்னர் ஏதோ எழுதிக் கொடுத்தார்.

ஓரிரு நாட்களில் டிப்போ சந்தி வழியாக மாஸ்ரர் மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். மாஸ்ரர்... மாஸ்ரர்... என்று கைதட்டிக் கூப்பிட்டாள் சங்கீதா. இவளைக் கண்டு திரும்பி வந்தவரிடம் கேட்டாள், “டயரியில அன்பு மருகளுக்கு எண்டு எழுதித் தந்திருக்கிறீங்கள். ரெண்டு பெடியள வைச்சிருக்கிறியள் இதில் ஆரை எனக்குத் தரப் போறீங்கள்...?”

***

. பொ. . சாதாரண தர தேர்வின் இறுதிநாள் மாலையாகியும் இவள் வீட்டுக்கு வரவில்லை. விசாரித்ததில் இன்று தேர்வுக்கு வரும்போது பை கொண்டு வந்ததாகவும் அதற்குள் உடுப்புகள் இருந்தன என்றும் சக மாணவிகள் கூறினர். இரு நாள் தேடுதலின் பின் இளம்பரிதியை சந்திக்க முடிந்ததுஅவர், “இவள் இயக்கத்துக்குத்தான் வந்திருக்கிறாள்என்று கூறினார். தொடர்ந்து, “நாங்கள் என்ன செய்ய வேணுமெண்டு சொல்லுறீங்களோ அதைச் செய்யிறம், என்றார். பந்தை எனது பக்கம் எறிகிறார். இந்த விடயத்தில் நான் சொல்லப்போகும் பதில் எதுவாக இருந்தாலும் போராளிகள் மட்டத்தில் சுட்டிக்காட்டப்படும்.

நான் முதலில போராளியாத்தான் ஆனேன். பிறகுதான் அப்பா ஆகினேன், சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன். அதன்பின், போராளிகள் - குடும்ப உறுப்பினர் சந்திப்பு உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அதில்தான் அவளைச் சந்திக்க முடிந்தது. நடைபெற்ற கலை நிகழ்வொன்றிலும் அவள் பங்குபற்றினாள். பின்னர் தனது சகோதரியின் திருமண நிகழ்வுக்காக வந்திருந்தாள். அடுத்தடுத்த சந்திப்புகளின் பின், ஒருநாள் இவள் தனது முகாமுக்குப் புறப்பட்டாள். அப்போது ஒரு கடித உறையை என்னிடம் கையளித்தாள். “இதை தலைவர் மாமாவிட்டக் குடுங்கோ, என்றாள்.

தலைவருக்கென கடிதம் அனுப்பும் வழிமுறைகள் பற்றி இவளுக்குத் தெரியாததொன்றல்ல. என்னிடம் ஏன் தருகிறாள்? அதுவும் கடித உறை ஒட்டப்படவில்லை. அதாவது, தான் என்ன விடயத்தை எழுதியிருக்கிறேன் என்பதை நான் வாசிக்க வேண்டுமென விரும்புகிறாள் எனப் புரிந்து கொண்டேன். அவளை அனுப்பிய பின் நான் அந்தக் கடிதத்தை வாசித்தேன்.

தான் கரும்புலியாகப் போகப் போவதாகவும் அதற்கு அனுமதிக்குமாறும் வேண்டப்பட்டிருந்தது. இதனை வாசித்த பின் எனது எதிர்வினைகள் எப்படியிருக்கும் எனப் பார்க்க விரும்புகிறாள். அதாவது எனக்கு ஒரு சத்திய சோதனை வைக்கிறாள். ஒரு அப்பாவாக நான் நடந்து கொள்கிறேனா அல்லது போராளியாக முடிவெடுக்கிறேனா என சோதிக்கிறாள். நான் என்னிடம் ஒப்படைத்த கடிதத்தை உறையை ஒட்டியபின் அனுப்பி வைத்தேன். இயக்கத்தில் இணைய முயற்சித்த காலத்தில் எத்தனை சோதனைகளைத் தாண்டியிருக்கிறேன். இன்று நான் பெற்ற மகளே என்னை எடைபோடுகிறாள் என்று எண்ணினேன்

கிட்டுவின் நினைவுநாளை முன்னிட்டு ஒரு கட்டுரை எழுதப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒருநாள் வந்தாள். அப்போது இடம்பெயர்ந்து தருமபுரத்தில் இயங்கிக் கொண்டிருந்தது ஈழநாதம். அவளுக்கு குறிப்புகள் கொடுக்க ஆயத்தமாகும்போது பாரிய சத்தத்துடன் எறிகணை ஈழநாதத்துக்கு சமீபமாக வெடித்தது. இவள் தனது துவிச்சக்கரவண்டியை முன்பக்கத்தில் விட்டிருந்தாள். இனி தாமதிக்க நேரமில்லை. “சைக்கிளை எடுத்துக் கொண்டு நெத்தலியாத்து பாலத்தின் முடிவுக்கு வாஎன்று சொல்லிவிட்டு நான் பயன்படுத்தும் பின்பக்கப் பாதையில் உள்ள மோட்டார் சைக்கிளை எடுக்கப் போனேன். தெரு நிறைய மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் போய்க்கொண்டிருந்தனர். இவளை மட்டும் காணவில்லை. சுமார் ஒரு மணித்தியாலம் சென்ற பின்னரே இவள் வந்தாள்.

ஒரு கடைக்குள்தான் எறிகணை வீழ்ந்து வெடித்துள்ளது. அங்கு ஒரு ஐயா படுகாயமுற்றார். அவரை தூக்க முயற்சித்தாள் முடியவில்லை. தெருவில் போனவர்களை அழைத்து ஈழநாதத்தின் வாகனம் ஒன்றில் ஏற்றி விசுவமடு மகா வித்தியாலயத்தில் இயங்கிய வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னரே வந்தாள். அன்று இரவு 7 மணியளவில் நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்தாள். அழுதுகொண்டிருந்த இவளை சமாதானப்படுத்தினேன். இவளது நண்பி யாராவது வீரச்சாவடைந்திருக்கலாம் என்று எண்ணினேன். ஒலிபெருக்கியில் சிறுபிள்ளை ஒன்றுக்கு இரத்தம் தேவை என அறிவித்திருக்கிறார்கள். தான் இரத்தம் கொடுக்கப் போகிறேன் என முகாமிலிருந்து புறப்பட்டு விசுவமடு சந்திக்கு சென்றிருக்கிறாள் இவள். இரத்த அழுத்தம் (Pressure) அதிகமாக இருந்ததால் இவளிடம் இரத்தம் எடுக்கமுடியவில்லை. எப்படியாவது இரத்தம் கொடுக்க வேண்டும். அந்தப் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என அழுதாள். இவளை அழைத்துக் கொண்டு போனேன். “கொஞ்சம் ஆறுதலாக பதற்றப்படாமல் இருங்கள், என்று கூறினார்கள் மருத்துவத்துறை போராளிகள். அதன்படி, அமைதியாக இருந்தாள். அதன் பின் பிறசர் பார்த்தார்கள். திருப்தி என்றதும் இரத்தம் எடுத்தார்கள். அப்பா என்றாலும் இரவில் முகாமுக்கு மோட்டார் சைக்கிளில் கூட்டிக்கொண்டு போகக்கூடாது எனக் கருதிய நான் சந்தியில் நின்று வந்த இயக்க வாகனம் ஒன்றில் அவளைக் கூட்டிக்கொண்டு போய் முகாமில் விட்டேன். அடுத்தநாள் விசுவமடு மகா வித்தியாலத்துக்கு சென்று முதல்நாள் தான் காப்பாற்றி அனுப்பிய ஐயாவுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்ததாக அவள் சொன்னாள்.

தனது தம்பி சங்கர் எறிகணை தாக்குதலில் உயிரிழந்தபோது (வயது 16) வந்த இவள், “ஏனம்மா மார்க்கண்டேயரைப்போல ஒருபிள்ளை வேணும் எண்டு கடவுளிடம் கேட்டிருக்கலாமே, என அழுதாள். அந்த வயதிலும் விரல் சூப்பும் பழக்கமுள்ள சங்கர் அந்த நிலையிலேயே உயிரிழந்திருந்தான். அவன் துடிக்கவில்லை எனப் புரிந்தது. துடித்திருந்தால் வாயிலிருந்து விரலை எடுத்திருப்பானே. அவனை இழந்து 19ஆம் நாள் (26. 04. 2009) இவளையும் இழந்தோம். விமானத் தாக்குதலில் இவளைப்  பறிகொடுத்தோம். அன்று காலை ஈழநாதத்தைச் சேர்ந்த எல்லைப்படை வீரனான சுகந்தன் முதலானோரின் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ஒரு போராளி இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் விதைக்கப்படும் கடைசி வித்துடல்கள் இவை. இன்றிருக்கும் நிலை நாளை இராது. போக்குவரத்தை தடை செய்யக்கூடும் இராணுவம் எனறார். இவளது வித்துடலை கொண்டுவந்த ராஜன் கல்விப் பிரிவினரிடம் மேற்குறித்த விடயத்தை சொன்னேன்.

கரும்புலியாகப் போகும் இவளது விருப்பம் ஏற்கப்படவில்லை என அவர்கள் கூறினார்கள். “நான் மட்டும் புதிய துயிலும் இல்லத்துக்கு வருகிறேன். ஒழுங்கு செய்தததும் எனக்கு அறிவியுங்கள், என்றேன். சம்மதித்தார்கள். பகல் வரை அவர்கள் வரவில்லை. எனவே, வித்துடல்களை அடுக்கி வைத்திருக்கும் இடத்துக்குப் போனேன். அங்கிருந்து இவளது வித்துடலைக் கொண்டு போய் விட்டார்கள் என்றனர். புதிய இடம் எதுவென்று எவருக்கும் தெரியாது. வித்துடலுக்கு மண்போடும் பாக்கியம்கூட எனக்குக் கிடைக்கவில்லை. அன்றைய களநிலைமை அப்படி. சில நாள் கழித்து கலை பண்பாட்டுக் கழகத்திலிருந்த கனெக்ஸின் (கனகரத்தினம்) வித்துடல் விதைக்கப்படும் என்று ஓரிடத்தை குறிப்புச் சொன்னார்கள். அங்கு போனபோதுதான் இவள் விதைக்கப்பட்ட இடத்தில் பெயர் பலகை இருந்தது. அந்த இடத்தில்தான் தற்போது மாவீரர் நாளில் மலர்தூவி அஞ்சலிக்கிறோம்.

பொதுவாக எல்லா துயிலும் இல்லங்களையும் அழித்து விட்டார்கள். எனது விடுதலையும் கேள்விக்குறியாயிற்று. புனர்வாழ்வு கிடைக்காது என்பதும் உறுதியாயிற்று. இந்த நிலையில் ஜனாதிபதி கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்திருப்பதாக செய்தி வந்தது. இதனால், பயன் கிடைக்கிறதோ,இல்லையோ எனது கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கருதினேன். இந்த ஆணைக்குழு 30.12.2010 அன்று பூஸா முகாமுக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகின. எனவே, எனது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் எனக் கருதினேன். அதில், “எனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்எனவும் எழுத்துமூலம் கொடுக்கத் தீர்மானித்தேன். 26.12.2010 அன்று முகாம் பொறுப்பதிகாரியிடம் இந்த ஆணைக்குழு முன்னிலையில் எனது கருத்துகளை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்தேன். இவ்வாறு வேண்டுகோள் விடுத்த எவரையும் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க அனுமதிக்கவில்லை. தாங்களாகத் தெரிவு செய்த சிலரை கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்களது சட்டைப் பையில் எழுத்துமூலமாகக் கடிதங்கள் ஏதாவது இருக்கிறதா எனவும் சோதனையிட்டார்கள். 19.01.2011 அன்று இந்த முகாமுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அடங்கிய குழு பூஸாவுக்கு வந்தது. இவர்களை சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.

25.04.2011 அன்று நீதிமன்று மூலம் CRPஇற்கு அனுப்பப்பட்டேன். பொதுவாக வழக்குத் தாக்கல் செய்யப்படுவோரையே அங்கு அனுப்புவார்கள். 03.05.2011 மற்றும் 10.05.2011 இல் நீதிவானிடம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு எனது கருத்துகளை எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும் என்றேன். அதனை கைவசம் வைத்துள்ளேன் என்றேன். நீதிபதி, “சிறைச்சாலையின் பொறுப்பில் நீங்கள் இருப்பதால் அவர்களின் முத்திரை பொறிக்கப்பட்ட தாளிலேயே இதனை எழுதி அனுப்புங்கள்என்றார். அதனை வாங்கி ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு சிறை அதிகாரிகளைப் பணித்தார். அதற்கிணங்க அவர்களின் தாளில் எழுதி அவர்கள் மூலம் அனுப்பி வைத்தேன். பூஸாவில் இருந்தபோது கொழும்புக்கு கொண்டு போய் என்னிடம் விசாரணை நடத்திய அசங்க (5.04.2011), நிசாந்த சந்திரசேகர (12.04.2011) முதலான ASPகளிடமும்நான் ஜனாதிபதி ஆணைக்குழுவை சந்திக்க வேண்டுமெனவும் எனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை வேண்டும் என வலியுறுத்த சந்தர்ப்பம் அளிக்க வேண்டும், எனவும் வலியுறுத்தினேன்.

வைத்தியசாலையில் இன்சமாம் உல் ஹக் (19.04.2011) நீல் பெர்னாண்டோ (20.04.2011) ஆகிய அதிகாரிகளிடம், “இது எனது பிள்ளைகளை இழந்த மாதம் அவர்களுக்கு மத ரீதியான சடங்குகளை செய்ய முடியாததால் மன அழுத்தத்தில் உள்ளேன், எனக் குறிப்பிட்டேன். அதனை ஏற்று அவர்கள் வைத்திய அறிக்கை சமர்ப்பித்தனர்.

எனது மகளை நினைக்கையில், எந்த மகனை எனக்கு தருவீர்கள் என்று அவள் கேட்ட இரத்தினம் மாஸ்ரரையும் அவரது இரு ஆண் பிள்ளைகளையும் அவரது சகோதரி, சகோதரர் முதலானோரையும் 1990இல் இவள் பிறக்க முன்னர் இவளது தாய் மாமன் சிவபாலனையும் எம்மிடமிருந்து பிரித்தது விமானத் தாக்குதலே என்பதும் குறிப்பிட வேண்டியுள்ளது. அத்துடன், நினைவுகூரலுக்காக எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.

ஆனால், மாவீரர் கௌரவிப்பிலும் திலீபனின் நினைவேந்தலிலும் அடுத்தவரை திட்டும் களமாக நினைவேந்தல்களைகொச்சைப்படுத்துகின்றனர். முள்ளிவாய்க்காலில் நின்றுகொண்டு இது அழுவதற்கான இடமல்ல என்கிறார்கள். பொதுவாக நினைவேந்தல் குழுக்களால் நினைவுகூரப்படும் இடங்களை கட்சிப் பணிமனைகள்போல காட்ட முயற்சிக்கிறார்கள். கடந்த முறை சுடரேற்ற வந்தமைக்கும் தற்போதுள்ள நிலைமைக்குமான சம்பவங்களை நினைவேந்தல் இடங்களில் நின்று வாய்மொழியாகவோ, மனதோடோ பரிமாறிக் கொள்ள நினைக்கின்றனர் உறவுகள். அந்த அமைதியை நாராசம்போல் அடுத்த கட்சியினரைத் திட்டும் களமாக மாற்றவேண்டாம் என மன்றாட்டமாக கேட்கின்றனர். தயவு செய்து எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் தமிழ் பேசும் உறவுகளே.

கண்ணில் இருந்து வெளிரும் நீர்தான் வெளியுலகுக்குத் தெரிகிறது. இதயத்திலிருந்து வெளிரும் இரத்தத்தை எவர் உணர்வர்? மீண்டும் வலியுறுத்துகிறோம். எங்களை நிம்மதியாக அழத்தானும் விடுங்கள்...!

அறிவிழி அப்பா

நன்றி - கனடா உலகத்தமிழர்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post