களநிலையை இனி எந்த வயதில் புரிந்து கொள்வீர் கனவான்களே?

காலம் பலரை எமக்கு அடையாளம் காட்டியது. அதுவும் சாதாரணமாக காட்டவில்லை அவர்கள் போர்த்திருந்த போலி போர்வையை இழுத்தெறிந்துவிட்டு துயிலுரித்து காட்டியது.

ஈழத்தில் வாழும் 10 இலட்சம் தமிழனையும் அவர்தம் அரசியல் பாதையையும் எங்கோ படுத்திருந்து கொண்டு செப்பனிட முடியாது. முடிந்தால் ஈழமண்ணிற்கு வாருங்கள். அவர்களோடு சேர்ந்து வாழுங்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் அதன் பிறகு வழிகாட்டுங்கள் ஐயாமாரே.

பல பச்சோந்திகள் எமக்கு முன்னே அணிவகுத்து நிற்கின்றன. அதை அடையாளம் கண்டுவிட்டோம் என எண்ணும் போது அது சட்டென நிறம் மாறிக்கொள்கின்றது. நீண்ட பொறுமையுடன் இந்த பச்சோந்திகளின் மாற்றங்கள் முழுவதையும் படித்தாகவேண்டி இருந்தது எமக்கு.

ஈழத்தமிழனின் உரிமைக்கான பயணப்பாதையின் இறுதி இடம் வரை எமது எதிரிகள் பதுங்கியே இருக்கின்றனர். அவர்கள் எமக்கு கைகொடுப்பது போல பாசாங்கு செய்துவிட்டு காலைவாருவார்கள். ஒருகையால் அணைப்பதுபோல் காட்டிக்கொண்டு மறுகையால் முதுகில் குத்துவார்கள். இவற்றை எல்லாம் நாம் நன்குணர்ந்து வைத்திருக்கின்றோம்.

அரசியல் தந்திரோபாயங்களை மட்டுமல்ல மூலோபாயங்களையும் விளங்கி கொண்டு செயலாற்றுதல் ஈழத்தமிழன் ஒவ்வொருவனதும் தலையாய கடமையாகும். எமது எதிரி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவன். 75 வருடகால அடக்கு முறையின் அனுபவத்தையும் கொண்டவன். அவனிடம் இருந்து தான் எமது உரிமையை பெறவேண்டும். அது வெறும் உசுப்பேத்தல்களால் நிகழ்ந்து விடும் என நாம் நம்பவில்லை. அறிவார்ந்த அரசியல் பொறிமுறையை நாம் கையிலெடுக்க வேண்டும்.

75 வருடங்களாக ஆண்டுவந்த அதிகாரபீடம் இப்போது தான் அதன் அத்திவாரத்தில் ஆட்டம் கண்டு நிற்கின்றது. எல்லாவற்றையும் சீர்செய்யும் வல்லமை பொருந்திய உலக நாடுகளும் எதிராளிகளிற்கு எதிராக இப்போது தான் பயணிக்கின்றார்கள். சொந்த மக்களே அவர்களை விரட்டியடிக்கின்றார்கள். எதிரிக்கு எல்லாபக்கமும் இப்படி ஒரு அடி இதற்கு முன் ஒருபோதும் விழவில்லை. கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாது எமக்கு கைகொடுப்பது போல் பாசாங்கு செய்து கொண்டு எதிராளிக்கு கை கொடுப்பவர்களும் எமது எதிரிகள் தான்.

எதிரி எதிரில் இருந்து தான் தோன்றவேண்டும் என்ற எந்த விதிமுறையும் இல்லை. அவன் எமக்கு அருகிலிருந்தும் எழுவான் எனும் எளிமையான உண்மையை நாம் அனுபவரீதியாக நன்கு உணர்ந்தவர்கள்.

ஈழத்தமிழனில் பாதிபேர் நிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து விட்டனர். இருக்கின்ற மீதியில் பாதியை நிலத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் எல்லாமே முடிந்து விடும்.

தலைவர் மீண்டும் வருவார் என கூறியதன் மூலம் நீங்கள் செய்தது.

1- ஆட்சியாளர்களிற்கு எதிராக கிளம்பிய சிங்கள மக்களின் அலையை அடிதலையாக மாற்றி எளிதில் அச்சப்படும் மனநிலை கொண்ட சிங்கள மக்களை அச்சமூட்டியுள்ளீர்கள்.

2- உறங்கு நிலையில் இருக்கும் இலங்கையின் இனவாதிகளை தட்டி எழுப்பிவிட்டுள்ளீர்கள்.

3-- நீக்கப்படவேண்டிய தறுவாயில் உள்ள பயங்கரவாத சட்டத்தை நீடித்து நிலைத்து வைத்திருக்க உதவியுள்ளீர்கள்.

4-- முழுமையாக விடுவிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள அரசியல் கைதிகளை சிறைக்குள்ளேயே முடக்கிவைக்க உதவி புரிந்துள்ளீர்கள்.

5-- 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர உதவியுள்ளீர்கள்.

6-- எழமுடியாது குப்புற வீழ்ந்து கிடக்கும் ஆட்சியாளர்களிற்கு எழுவதற்கு ஒரு துரும்பை கொடுத்துள்ளீர்கள்.

7-- ஈழமண்ணை விட்டு ஓடுவதற்கு சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் ஒரு பகுதியினரிற்கு அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள்.

8-- புலம் பெயர் தேசத்தில் இருந்து ஈழம் நோக்கி வரவிருந்த எத்தனையோ பேரை அங்கேயே தடுத்து வைத்துள்ளீர்கள்

எல்லாவற்றிற்கும் #மேலாக

 தலைவர் வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் எனும் பொருள்பட கூறியதன் மூலம்... சுயமாக, தன்னார்வமாக தமது உரிமையை ஐனநாயக வழியில் வென்றெடுக்க முயன்று கொண்டிருக்கும் ஈழத்து இளைய தலைமுறையை தாலாட்டு பாடி தூங்கவைத்துள்ளீர்கள்.

உங்களை போன்றவர்களை வரலாறு வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும் என்பது திண்ணம்.

முகநூல் மணிவண்ணன்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post