-பாரி
1977 பொதுத்
தேர்தலில் வட, கிழக்கு மற்றும்
புத்தளம் தொகுதிகளில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கைக்கான வாக்கெடுப்பாக அதனைப் பிரகடனப்படுத்தியது. மக்களிடம் வாக்குக் கேட்க வருவது இதுவே கடைசித் தடவையெனவும் பல இடங்களில் அறிவித்தார்கள்.
தொகுதி வாரியான தேர்தல் என்பதால் 16 ஆசனங்களைக் கைப்பற்ற முடிந்தது.
அதுவரை
ஆளும் கட்சியாக இருந்த சுதந்திரக் கட்சியால் 9 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்நிலையில், தனி நாட்டுக்கான வாக்கெடுப்பாக
பிரகடனப்படுத்திய கட்சி முழு இலங்கைக்குமான எதிர்க்கட்சித்
தலைமைப் பதவியை எப்படி வகிக்க முடியும் என்ற சந்தேகம் பலரிடமும்
இருந்தது. இதற்கு இந்தப் பதவியைப் பயன்படுத்தி அனைத்துலக நாடுகளிடமும் சென்று எமது கோரிக்கைக்கான ஆதரவு
கிடைக்கச் செய்ய முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன்
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கமும் அவரது துணைவியாரும் இங்கிலாந்துக்குப் பயணமாகினர்.
இங்கிலாந்தில் தலைவர் வெளுத்துக் கட்டுவார் என வாக்களித்த மக்களும்
ஊடகவியலாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு பற்றி
பயணம் முடிந்து வரும் அமிர்தலிங்கம் தம்பதியினரிடம் கேட்கத் துடித்துக் கொண்டிருந்தனர். திருமதி மங்கையற்கரசியிடம் “இந்தப் பயணம் எப்படி அமைந்தது”எனக் கேட்டனர். “மருமகள் ஞானசியாமளாவை பிரிந்து வருவதுதான் மிகக் கவலையாக இருக்கிறது" என அவர் பதிலளித்தார் என்று
வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டது. அப்போதுதான் புரிந்தது இவர்களின் மூத்தமகன் காண்டீபனின் திருமணத்துக்காகவே அங்கு சென்றனர் என்று.
திரு.
கஜேந்திரகுமார் ஒரு நாடு - இரு
தேசம் என முழக்கமிட்டாலும் இந்த
இரு தேசங்களிலும் உள்ள 24இற்கு மேற்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளின் தரத்தில் உள்ள எவற்றிலும் தனது
மகனை பிரசவிக்கக்கூடிய வசதிகள் இல்லை என எண்ணினார். தனது வாரிசு மாட்சிமை தங்கிய எலிசபெத் மகாராணியின் பிரஜையாகவே பிறக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். மறுதாரமாக
முடித்த மனைவியையும் வாரிசையும் பார்க்க அவர் அடிக்கடி செல்ல
வேண்டும் என்பதும் இயல்பானதே. ஆனால், இந்தப் பயணத்துக்கான செலவினை யார் பொறுப்பேற்பது? நடுங்கும்
குளிரில் உழைத்துத் தமிழ்த் தேசியத்துக்காக அள்ளிக் கொடுக்கும் புலம்பெயர் தேச மக்கள் சுகாஷ் பிரகடனப்படுத்திய தமிழினத்தின் கடைசித் தேசியத் தலைவருக்காகக் கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள்? பிச்சையெடுப்பதை தேசியத்துக்கான பயணமாக சித்திரிப்பார்கள் என்றுமே 'அகில இலங்கை' தமிழ் காங்கிரஸ் என்ற பெயரை விட்டுக்கொடுக்காத தேசியத்தின் விசுவாசிகள். அதற்காக எல்லோரும் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாதல்லவா. பிறக்கும்போதே கோடீஸ்வரராகப் பிறந்த கஜேந்திரகுமார் தனது
பிச்சைக்கான பயணத்தில் கேள்வி கேட்பவர்கள்மீது சீறிப் பாயும் காட்சியினை அண்மையில் ஊடகங்களில் காண முடிந்தது. கேட்கும்
கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியதுதானே? நீர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்ற கேள்வி எதற்கு? எத்தனையாயிரம் கோடி சொத்துகள் உங்களுக்கு இருக்கிறது என்றா கேட்டார்கள்? எல்லாம் பாட்டன் ஜீ. ஜீ.யின்
உதிரத்தின் வழியாக வந்த திமிர். “நன்றி
கெட்ட தமிழ்ச்சாதி”,
என்று திட்டியவரல்லவா ஜீ. ஜீ.
யாழ்ப்பாணத்
தொகுதிக்கான தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட துரையப்பாவிடம் தோற்றுப் போனார் ஜீ. ஜீ., இலங்கைத்
தமிழரசுக் கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யும்போது தமது சின்னம் வீடு
என்றும் பதிந்து விட்டது. மெத்தப் படித்த ஜீ. ஜீ. கட்சியைப் பதிவு செய்யும் போது சின்னத்தைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார். இந்த
விசயத்தை அறிந்த துரையப்பா சுயேச்சையாகப் போட்டியிடும்போது "உங்களுக்கு
என்ன சின்னம் வேண்டும்? " என்று கேட்டபோது சைக்கிள் என்று சொல்லிவிட்டார். பின்னர் ஜீ. ஜீ. தமது
நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்யும்போது தேர்தல் அதிகாரிகள் அதே கேள்வியை கேட்டார்கள். சைக்கிள்தானே என ஜீ. ஜீ. சொன்னபோது "நீங்கள் திணைக்களத்தில் உங்கள் சின்னத்தைப் பதிவு செய்யத் தவறிவிட்டீர்கள். ஆதலால்
துரையப்பாவுக்கு அந்தச் சின்னத்தை வழங்கி விட்டோம்" எனப்
பதிலளித்தனர் அதிகாரிகள். தொடர்ந்து சர்ச்சை நீடிக்கவே இறுதியில் குலுக்கல் முறையில் யாருக்கு சைக்கிள் சின்னம் என்று முடிவெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முறையிலும்
துரையப்பாவுக்கே
சைக்கிள் சின்னம் என்று முடிவாயிற்று. அந்தத் தேர்தலின்
முடிவில் வாக்கு எண்ணிக்கையைத் திரும்பத் திரும்ப நடத்தச் சொன்னார் ஜீ. ஜீ., மூன்று
முறைக்கு மேல் திரும்ப எண்ணமுடியாது
என்ற அதிகாரிகள் துரையப்பாவுக்கே வெற்றி என அறிவித்தார்கள்.
அத்தருணத்திலேயே
கஜேந்திரகுமாரின் பாட்டானார் “நன்றி கெட்ட தமிழ்ச்சாதி”, என்று திட்டினார். பொதுவாக தந்தை குமார் பொன்னம்பலத்தின் குணாம்சங்களை விட பாட்டனார் ஜீ.
ஜீ.யின் குணங்களே கஜேந்திரகுமாரிடம்
உள்ளன. இல்லாவிட்டால் பிச்சையெடுக்கப் போன இடத்தில் ஏன்
இந்தத் திமிர்க் கேள்வி. குடுமி வைக்க வேண்டும் என முடிவெடுத்தால் மொட்டையடிக்கும்
ஆசையைக் கைவிட வேண்டும். மொட்டையடிக்க வேண்டும் என முடிவெடுத்தால் குடுமி
வைக்கும் நினைப்பை விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒரே நேரத்தில் இவரைப் பிச்சைக்காரராகவும் கோடீஸ்வர திமிருடன் உள்ளவராகவும் எப்படிப் பார்ப்பது?
மாவட்ட
அபிவிருத்தி சபைகளை அமைக்கும் முடிவை ஜே, ஆர் அரசு முன்வைத்த போது
கூட்டணி அதனை ஆதரித்தது. இதனால்
தமிழ் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்த இளைஞர்களுக்கும் கட்சித் தலைமைக்குமி டையில் முரண்பாடு
ஏற்பட்டது. இளைஞர்களை சமாளிக்கும் விதமாக "தமிழீழத்துக்கான எமது பயணத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை ஒரு தங்குமடம்"
என்று விளக்கமளித்தார் மானிப்பாய் தொகுதி எம் பி தருமலிங்கம் (சித்தாத்தனின் தந்தை ). தங்குமடங்கள் வேண்டாம் ; தமிழீழம் தான் வேண்டும்
என வாதிட்டனர் இளைஞர்கள்.ஒரு சமயம் அமிரிடம்
தொடர்ச்சியாகக்
கேள்விகள் கேட்டார் உமைகுமாரன் (இவர் பின்னர் புளொட்டினால் இறைகுமாரனுடன் சேர்த்துப் படுகொலை செய்யப்பட்டவர்) இவரின் கேள்விகளால் கடுப்பேறிய அமிர் "உன்ரை விசர்க் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை" என்றார். உடனே உமைகுமாரன் "ஓம்
ஐயா! உங்களுக்கு ஓட்டுக்கு மேல இருக்கிறவங்கள இறக்கவே
நேரம் போதாது" என்றார். "(மொறட்டுவை
பல்கலைக்கழகத்தில் சில வசதிகளைக் கோரி
கூரைமீது ஏறியிருந்து போராட்டம்
நடத்தினர்மாணவர்கள். எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் ஏணி
வைத்து கூரையில் ஏறி மாணவர்களுக்கு அரசு
சார்பில் சில வாக்குறுதிகளை வழங்கி
போராட்டத்தை முடித்து
வைத்தார் அமிர்) அன்று உமைகுமாரனிடம் அமிர் கடுப்பேறி
சினந்ததுபோலவே இன்று கஜேந்திரகுமாரும் லண்டனில் கேள்வி கேட்டவர்மீது சினக்கிறார்.
கட்சி செல்வுக்கென்றும் மாவீரர் நாள் போன்றவற்றுக்காகவும் தொடர்ந்து புலம்பெயர் தேசத்தவரிடம் கையேந்தும் இந்தக் குபேரரின் வண்டவாளம் அம்பலமாகும்வரை இந்தக் கோளாறுகளைத் தவிர்க்க முடியாது. திலீபனின்
நினைவேந்தலை முன்னெடுத்து வந்த ஜனநாயகப் போராளிகளிடம்
அட்டைபோல் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டு பின்னர் நாங்களே இந்த நாளின் ஏகபோக வாரிசுகள் என்று அடம் பிடிப்பதற்கும் டொலர், யூரோ, ஸ்ரேர்லிங் பவுண்ஸ்கள்தான் காரணம்.
***
தற்போது
அன்னை பூபதியின் நினைவேந்தல் காலம். 1988இல் இவர் உண்ணாநோன்பிருந்த
காலத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடி இருந்தபோதும் மக்கள் இப்போராட்டத்துக்கு ஆதரவாகவே இருந்தனர். பின்னாளில் பிரதியமைச்சராக விளங்கிய பசீர் சேகுதாவூத் முஸ்லீம் அன்னையரை அணி திரட்டி ஏறாவூரில் அன்னை பூபதியின் கோரிக்கைக்கு ஆதரவாக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த
அன்னையரின் தலைகளை உடைத்தனர் அப்போது இந்திய இராணுவத்துக்கு எடுபிடிகளாக விளங்கிய ஈ. பி. ஆர். எல். எவ். உறுப்பினர்களான ஏறாவூரைச் சேர்ந்த சந்துரு ,பன்குடாவெளியைச் சேர்ந்த ராஜலிங்கம் முதலானோர்.
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின்போது எல்லாச் சம்பவங்களும் நினைவில் இருந்தாலும் இரா. துரைரத்தினத்தை எந்தக் காலத்திலும் மீள இணைத்துக்கொள்ளக்கூடாது என்ற ஒரே நிபந்தனையுடன்
இவர்களை சேர்த்துக்கொண்டனர் புலிகள். காத்தான்குடியைச் சேர்ந்த ரிபாயா என்ற
முஸ்லிம் யுவதியை கைது செய்து கொண்டு
போனார் இரா. துரைரத்தினம். இந்த
யுவதி காணாமல் போகச் செய்யப்பட்டார். பின்னர் வட, கிழக்கு மாகாண
சபை அவைத் தலைவராக இருந்த ராம். ராஜகாரியர் தனது முகநூலில் இந்த
யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டார் என்று குறிப்பிட்டார். ரிபாயாவுக்கு இந்த அவலம் நேர்ந்த
வாவிக்கரை ஈ. பி. ஆர்.
எல். எவ். முகாம் பின்னர் பணிமனையாக இயங்கியது . இறுதி
யுத்தத்தின் முடிவில் சுரேஷ் பிறேமச்சந்திரன் செய்த முதல் விடயம் இரா. துரைரத்தினத்தை மீள
இணைத்துக் கொண்டதுதான். இப்போது அன்னை பூபதி நினைவுநாட்களில் பத்மநாபாவின் சிலையை திறந்துவைத்துள்ளார் அவர். இக்கூட்டில் இருக்கும் ஜனநாயகப் போராளிகளின் நிலைப்பாடு என்னவெனத் தெரியவில்லை.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது காங்கிரஸ், ஈ. பி. ஆர். எல்.. எவ். இணைப்பு ஏற்படும்போல இருந்தது. ஆதலால் இவர்களது இயக்கத்தில் இருந்து உயிரிழந்தோரையும் மாவீரராக ஏற்றுக் கொள்வதாக அர்த்தப்படுத்தும் விதத்தில் கஜேந்திரகுமார் தனது கட்சியினர் ஏகமனதாக முடிவு எடுத்ததாக அறிவித்தார்.
சைக்கிள்
சின்னத்தில் போட்டியிட ஈ. பி.ஆர்.
எல். எவ். மறுத்ததாலும் புலம்பெயர்
தேசத்தில் இருந்து கிடைக்கும் யூரோ, டொலர், ஸ்ரேர்லிங் பவுண்ஸ் குறைந்துவிடும் என்ற அச்சத்தாலும் இக்கூட்டு
ஏற்பட முடியவில்லை. எல்லாவற்றையும் மறைக்க இவர்கள் மண்டையன் குழுவினர் என்று திட்டித் தீர்த்தனர் காங்கிரஸினர். 2004இல் இதே மண்டையன் குழுவுடன் ஒரே பட்டியலில் போட்டியிட்டதை மக்கள் மறந்து விட்டனர் என நினைத்தனர் காங்கிரஸினர்.
***
எந்த
மரத்துக்குக் கீழ் ஞானோதயம் வந்ததோ
தெரியவில்லை. இதுவரை “போராடி எதைக் கண்டோம்”,
என அலுத்துக்கொள்கிறார் அரச ஊழியரான தமிழரசுக்
கட்சியின் பதில் செயலர் ப. சத்தியலிங்கம். அகிம்சை வழியிலும் ஆயுதப் போராட்டத்தாலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என அலுத்துக் கொள்கிறார்.
எங்களது நினைவுக்கு எட்டியவரை இந்த இரு வழிகளிலும் எந்தக் காலத்திலும் போராட்டத்தின் பங்காளராக இவர் இருந்ததில்லை. ஒரு மலடியோ, திருநங்கையோ
பிரசவ வலியின் வேதனையை வெளிப்படுத்திய மாதிரித்தான் இவரது அலப்பறை உள்ளது. இவரது மாவட்டத்தில் ஈ. பி. டி.
பி. சார்பில் ஒருவர் எம். பியான விரக்தியில்தான்
இவரது சலிப்பு தெரிகிறது. எனவே அகிம்சைப் போராட்டத்தை
நடத்திய தந்தை செல்வாவின் நினைவு கூரும் நிகழ்வுகளிலும் ,மாவீரர் நாட்கள், திலீபன் நினைவுநாள் போன்றவற்றிலும் பங்குபற்ற என்னை அழைக்காதீர்கள்; இலங்கையின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தின்படி பிரிவினைக்கு எதிராக சத்தியப் பிரமாணம் செய்தவன்
நான் என்பதே
அவர் விடுக்கும் மறைமுக செய்தி. ப. சத்தியலிங்கத்தின் இந்த நிலைப்பாடு தமிழரசில் பலருக்கு உள்ளூர உடன்பாடானதுதான். அதனால், பகிரங்கமாக எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. கட்சித் தலைமைக்கு போட்டியிடுபவர்கள் உட்பட.
மொத்தத்தில் றிவேர்ஸ் கியரில்தான் பயணிக்கிறது தமிழ்த் தேசிய அரசியல்.
Post a Comment