மனைவி ,பிள்ளையை `அனுப்பி விட்டு` கடமையில் மூழ்கிய நாட்கள்!

குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்தது அந்த ஒரு துண்டு நிலம், காற்று கந்தகப்புகையை நிரப்பி ஒவ்வொரு மூச்சிலும் கலந்து போனது.

இலட்சம் மக்களின்  அழுகைகளும்கெஞ்சல்களும், வெடியோசைகளின் அகோர சத்தத்தையும்  மேவி  எம் இதயங்களை பிளந்து கொண்டிருந்தது.

அந்த தற்காலிக மருத்துவமனை இயங்கிய முள்ளிவாய்க்கால் . . பாடசாலை வளாகம் முழுவதும் எண்ணற்ற மனிதர்கள் அனாதரவாகக் கிடந்தார்கள். காயமடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் கொண்டுவரப்பட்டுக் கொண்டேயிருந்தனர்,

உயிர்காக்கும் அவசர பணிகளையும்   மருத்துவ துறையினர் செய்து  கொண்டிருந்தனர்.

ஆனாலும் மடுவும் மலையும் போல மருத்துவபணியாளர்கள் எண்ணிக்கையிலும் குறைவாகவே இருந்தோம்.

இடிந்து கொட்டிக் கொண்டிருக்கும் ஒற்றைக் கட்டிடத்தில் இரவு, பகல் இன்றி அவசர சத்திர சிகிச்சைகளும் நடந்து கொண்டிருந்தன.

பல நாட்களாக நேரம் மிகவும் மெதுவாகவும், பாரமாகவும், பலவீனமாகவும் அந்த ஒரு துண்டு நிலத்திலே கழிந்து கொண்டிருந்தது.

பசி, தாகம், தூக்கம் அவ்வப்போது வந்து தாண்டவம் ஆடும், மீண்டும் காயமடைந்தவர்களின்  அழுகுரல்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு கடமை செய்யும் தைரியத்தை தந்துவிட்டிருந்தது.

அன்று (மே 13,2009) சூரியன் நன்றாக மறைந்து விட்டான்,

மருத்துவமனை மீது இரவின் சாயல் அப்பிக்கொண்டது.

 நானும் அமரொளியும்

ஒற்றை  இலாம்பு வெளிச்சத்தில் அடுத்த நோயாளியை தூக்கி சத்திரசிகிச்சை மேசையில் ஏற்றி விட்டு  பார்க்கின்றேன்... "தில்லை" பக்கத்தில் இருந்த அடுத்த சத்திரசிகிச்சை மேசையில் சிறு பிள்ளையை ஏற்றி மூச்சு எடுக்க கஸ்ரமாக இருந்தமைக்கான காரணத்தை கணிக்கின்றான்.

உடனடியாக என்னையும்  உதவிக்கு அழைக்கின்றான் இருவரும் அந்த குழந்தைக்கு நெஞ்சு காயத்திற்கு சிகிச்சை செய்யத் தொடங்கினோம்,

நான்  பேச்சை தொடுத்தேன் இடையில்   காணவில்லை

 "எங்க எஸ்கேப்(escape) ஆகிட்டிங்க தில்லை" என்று..

நானும் பார்தேன் அக்கா  கொஞ்சநேரம் ஆள்  இல்லை  சாப்பாடு ஏதும் கிடைத்ததா தில்லை அண்ணா என்றாள் ஏக்கத்துடன்  அமரொளி,

ஆனாலும் தில்லையின் பேர அமைதி எம்மை சங்கடப்பட வைத்தது, எப்போதும் என்ன சூழல் இருந்தாலும் வெடி வெடித்தாலும், பல் குழல் விழுந்தாலும் ஏட்டிக்குப் போட்டியாக பகிடி கதைகள் சொல்லும் தில்லையா இது என்ற  ஆச்சரியத்துடன் மங்களான வெளிச்சத்துக்குள் உன்னிப்பாய்  முகத்தை பார்க்கின்றேன் ....

முகம் மனித உணர்வுகளை தொலைத்து  சொல்ல முடியாத கிழிசலுடன் சடமாய்  கிடந்தது,

ஊகிப்பதற்கு முன்பே அவனே...

"தன் மனையாளும்  மகன் மருதனும் கொஞ்சம் முதல் கிழக்கால் விழுந்து வெடித்த  செல்லால் I   வங்கருக்குள்ளே சிதறிட்டினம் அதுக்குள்ள போட்டு மூடிட்டு வந்தன்......

அது தான் என்றான்"....

அப்போது அவன் கையில் இருந்த அவனது மகனின்  வயதை ஒத்த இன்னொரு பெண் குழந்தை மூச்சை சீராக இழுத்து விடுகின்றது

போன உயிர் வந்ததாக அந்த குழந்தையின் தாய் கை எடுத்து குடும்பிடுகிறாள்.... எதையும் உணராதவர்களாய்  நாங்கள் அடுத்த நோயாளியை நோக்கி ஓடினோம்...

நான் இப்போது  தில்லையை  நினைத்து பார்க்கின்றேன், எப்படி முடிந்தது அவனால் தன் மனைவி, மகனது இறப்பிற்காக அழுவதற்கு கூட அவன் நேரம் எடுக்க வில்லை அடுத்த உயிரை காப்பாற்ற அவன் வேக மெடுத்து வந்தான், அவன் உடல் முழுவதும் துயர் சுமந்த பாரத்துடன் அடுத்த அரை மணியில் எப்படி அவனால் கடமை செய்ய முடிந்தது, அதுவும் மருத்துவ பணி

இந்த உலகத்தில் இவ்வளவு அர்ப்பணிப்பு மிக்க மருத்துவசேவை எங்கேனும் நடந்திருக்குமா என்று எண்ணுகின்றேன்...

நானும் அன்று அருகில் இருந்த போதும் எந்த   ஆறுதல் வார்த்தையும்  கூறவில்லை, காலம் மருத்துவர்களின் ஒவ்வொரு நிமிடங்களிலும் பல உயிர்களை திணித்திருந்த நாட்கள் அவை (மே 2009)

தில்லை தியாக தீபம் திலிபன்  மருத்துவமனையின் மருத்துவரும்  சிறப்பு  மருத்துவப் போராளியும், இப்போ எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை... ஆனாலும் எழுத்துகளால் வரைய முடியாத அர்பணிப்புகள் ஒரு துண்டு நிலத்தில் நடந்து முடிந்தன, என்பதை நாம் சொன்னால் அன்றி யார் அறிவார்.......

என் எழுதப்படாத நாட்குறிப்பிலிருந்து..

மிதயா கானவி

12  am 28.04.23

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post