ஆதிமாந்தன் அதிகம் சாப்பிட்டது புலால் உணவே! வேட்டையுடன் உணவு சேகரித்தலும் வழக்கிலிருந்திருந்தாலும் வேட்டையாடப்படும் விலங்குகளின் இறைச்சியே ஆதி மாந்தனின் முகன்மையான உணவு. இது உலகளாவிய நிலைமை.
நாம்
நேரடியாகத் தமிழரிடம் வந்தால் சிந்துவெளி அகழ்வாராய்ச்சி முதல் சங்க இலக்கியங்கள் வரைச்
சொல்வதும் `புலால் உணவே தமிழரின் முகன்மையான
உணவு` என்பதனையே!
பின்னர் (பொது
ஆண்டு இரண்டாம் நூற்றாண்டளவில்) சமண மதமே புலால்
உண்ணாமையினை வலியுறுத்துகின்றது. இக் காலப்பகுதியில் வைதீகம் (இன்றைய இந்து) புலால்
மறுப்புப் பற்றிப் பேசாதது மட்டுமன்றி, யாகங்களிலேயே மாட்டிறைச்சி உட்படப் பல வகையான இறைச்சிகள்
ஆகுதியாக்கப்பட்டதோடு, யாகம் செய்த பார்ப்பனர்களே
இறைச்சி உண்டும் வந்தனர்.
விவேகானந்தரே பின்வருமாறு
கூறுவார் "நான்
சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க
வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu who does not eat beef) – (சான்று-தொகுதி-3-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்’பில் பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை).
திருநாவுக்கரச நாயனார் மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் பக்திநிலையினை போற்றியுள்ளார். “சங்கநிதி பதுமநிதி” என ஆரம்பிக்கும் தேவாரத்தில் 6வது வரியில்” ஆவுரித்து தின்றுழலும் புலையரையும் “ வைதீக மதத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார். (சான்று- சங்கநிதி பதுமநிதி தேவாரம், அப்பர் ). அதே போன்று கண்ணப்ப நாயனார்{இறைச்சி படைத்தல்}, அதிபத்த நாயனார் { மீன் பிடித்துப் படைத்தல்} புராணங்களும் நாம் அறிந்ததே!
கோயில்களில் நந்திக்கு முன்னருள்ள பலிபீடம் முன்பு விலங்குகளைப் பலியிட்ட சடங்கின் நினைவாகவே இன்றுமுள்ளதாக மறைமலை அடிகள் கூறியுள்ளார்.
அது
போன்றே தேங்காய் உடைத்தல், எலுமிச்சம் பழம் வெட்டுதல் என்பன
கூடப் பலியிடல் மரபின் மாற்றமடைந்த வடிவங்களே!
இன்னமும்
அடுக்கலாம், விரிவஞ்சி நிறுத்துகின்றேன். இவை அனைத்தையும் ஏன்
பட்டியல் இட்டேன் எனில் சைவ சமயத்துக்கு என ஒரே தொடர்ச்சியான உணவுப் பழக்கம் இருந்ததில்லை.
சமணம் கழுவிலேற்றப்பட்ட பின்னரும் சமணத் துறவிகள் மக்களிடையே பெற்றிருந்த செல்வாக்கினை சைவ-வைணவ நெறிகளால்
உடனடியாகப் போக்க முடியவில்லை. அந்த நிலையிலேயே வைதீக மத குருக்களாக இருந்த பார்ப்பனர் முதலில் புலால் உண்ணாமையினைப்
புதிதாகக் கைக்கொள்ளுகின்றனர்;
அதாவது சமணத்துறவிகள் போலத் தாமும் புலாலைத் தவிர்த்து மக்களின் மனதில் இடம் பிடிக்கப் பார்க்கின்றனர்.
அவர்களைப் பார்த்து ஏனைய சிலரும் புலால்
உணவினைத் தவிர்க்கின்றனர். இதுதான் வைதீகம் புலால் மறுத்த வரலாறு. இதன் பின்னர் கூட
புலால் அல்லாத உணவானது `மரக்கறி உணவு` என்றே அழைக்கப்பட்டது.
இயல்பாக அமைந்தது `கறி` உணவு , அதிலிருந்து
வேறுபடுத்திக் காட்ட அமைந்த சொல்லே `மரக்கறி` {கறி என்பது மிளகினைக்
குறித்தது, மிளகு அதிகம் சேர்க்கப்படுவது புலாலுக்கே என்பதால் மிளகின் பெயரான `கறி` புலாலையும் குறித்தது.
இன்றும் `கறி சோறு` என்பது
இறைச்சியுடனான சோற்றினையே குறிக்கும்}.
மரக்கறி உணவுக்கு முதலில் சமயப் பெயர் இட்டது கூட `சைவம்` அன்று,
அதனைச் செய்ததும் சமணமே, சமணம் மரக்கறி உணவுக்கு இட்ட பெயர் `ஆருகத
உணவு` என்பதாகும் {ஆருகதம் என்பது சமணத்தின் மற்றொரு பெயராகும்}. ஆருகத உணவினைத் திரிந்த வடிவில் ஆரத
உணவு / ஆருத உணவு என்று
அழைப்போருமுள்ளனர். சமணம் தனது பெயரினை மரக்கறி
உணவுக்கு வைத்ததனைப் பார்த்துச் சைவமும் பிற்காலத்தில் படி எடுத்துக் கொண்டது
( Copied ). மரக்கறி உணவினைச் `சைவ உணவு` என அழைத்தது 18ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியிலேயே!
இன்றும்
கூட வைணவர்கள் மரக்கறி
உணவினை `வைஷ்ணவ்` உணவு {Vaishnav food} என அழைப்பதையும்
காணலாம்.
சைவ சமயத்தார்
நாளையே மீனை ஏற்றுக் கொண்டால்
அது சைவ உணவாகிவிடும். இன்றும் கூட மேற்கு வங்கத்தில் மீனினை `கடற் புஷ்பம்` எனச் சொல்லிப் பார்ப்பனர் கூட உண்ணுகின்றனர்.
எனவே
அங்கு போல இங்கும் மீனை
ஏற்றுக்கொண்டால், அன்று முதல் `மீன்` `சைவ
உணவு` ஆகலாம்.
"மீன் சைவ உணவாகலாம், ஆனால் ஒரு போதும் மரக்கறி உணவாகாது".
`Vegetarian food` என்பதனைக்
குறிக்கத் தமிழில் சரியான சொல் `மரக்கறி` உணவே. `சைவம்` என்பது பொருந்தாத சொல். இன்றும் கூட சைவ சமயத்தில்
மிகப் பெரும்பான்மையானோர் புலால் உண்பவர்களாக இருக்க, எவ்வாறு மரக்கறி உணவினைச் `சைவ உணவு` என்பது.
மேலும் மதத்தின் உணவு முறை மாறினால்....
எனவேதான்
மரக்கறி என்ற சொல்லே `Vegetarian food` இனைக் குறிக்கச் சரியான சொல். வேகன் [ Vegan ] என்றொரு உணவுப் பழக்கமும் (பால் போன்றவற்றையும் தவிர்க்கும்
முறை) இப்போது உலகில் பெருகி வருகின்றது, அதனைத் தமிழில் `அருளுணவு`எனலாம்.
தகவல்:
இலங்கநாதன் குகநாதன்
Post a Comment