ஈழ மக்கள் விடிவுக்கான ஐந்தம்சக் கோரிக்கையை முன் வைத்து அறப்போர் வழியில் மேற்கொள்ளப்பட்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் அந்த இளம் பிஞ்சின் மனதில் கூட ஆழமான உணர்வலைகளை உண்டாக்கியிருந்தது. ஆனால் காந்தியத்தை பெரிதும் மதித்த இந்தியம் அந்தக் கோரிக்கைகளை நிராகரித்தது. "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...சுதந்திர தமிழீழம் மலரட்டும் " என்று இறுதி வரை முணு முணுத்தபடி திலீபன் அண்ணாவின் இன்னுயிரும் அவர் உடலை விட்டுப் பிரிந்தது. அவரின் உயிர்த்தியாகம் சிறுவர் முதல் பெரியோர் வரை உலகத்திலுள்ள தமிழர் அனைவரின் மனதையும் ஆழ ஊன்றிக் கலங்கடித்திருந்தது. அப்படித்தான் அந்தச் சிறுமி மதுவிழியின் பிஞ்சு மனதிலும் திலீபன் அண்ணாவின் உயிர்த் தியாகம் ஒரு ஆழமான உணர்வலையை உண்டாக்கி இருந்தது.
பத்து
வயதேயான மதுவிழி வீட்டின் ஒரு மூலைக்குள் இருந்து "அம்மா...நானும் திலீபன் அண்ணாவைப் பார்க்கப் போகோணும்...பக்கத்து வீட்டுக்காரர் எல்லோரும் போயினம்...அவையோட என்னையும் போக விடுங்கோ..." என்று தேம்பித்
தேம்பி அழுது கொண்டிருந்தாள். அப்பா கடைசி வரையும் விடமாட்டார் மது...அவர்ர குணத்தை மாத்த முடியாது..அழாதையம்மா..." என்று மதுவை அவளது அம்மா தேற்றிக் கொண்டு இருந்தார்.
அவளது
வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மினி பஸ்
வைத்திருந்தார். அதில் எல்லா அயலவர்களும் இணைந்து நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் நடைபெற்றுக் கொண்டிருந்த
திலீபன் அண்ணாவின் உண்ணா விரத நிகழ்வுக்குச்
செல்வதற்கு ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.
மினிபஸ் உரிமையாளர் வீட்டுச் சிறுமி கனியும் மதுவும் ஒரே
வகுப்பில் ஒரே பாடசாலையில் கல்வி
கற்கும் நண்பர்கள். கனி மூலம்
அவர்கள் திலீபன் அண்ணாவின் உண்ணாவிரத நிகழ்வுக்கு செல்வதைத் தெரிந்து
கொண்ட மது தனது தந்தையிடம்
தன்னையும் அவர்களுடன் அங்கு செல்ல அனுமதிக்குமாறு கேட்டிருந்தாள். ஆனால் அவளது தந்தை "நாங்கள் அவையோட பழகுறேல்லை...கண்ட ஆக்களோட போக
முடியாது...நீ பொம்பிளைப் பிள்ளை
அடக்க ஒடுக்கமாக வீட்டில இரு..." என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
நாட்டுப்பற்றுணர்வு மிகுந்து இருந்தும் சாதியத்திலும் வரட்டுக்
கௌரவத்திலும் மூழ்கிப் போயிருக்கும் ஒரு நடுத்தர யாழ்ப்பாணத்துக்
குடும்பம் தான்
அவளது குடும்பம். பக்கத்து வீட்டில் வசிக்கும் அவளது வயதையொத்த கூட சிறுவர்களுடன் கூட
இயல்பாக விளையாட, பழக
விட மாட்டார் அவளது தந்தை.
ஒன்றுமறியாத
பிஞ்சு வயதில் மது "அப்பா
ஏன் என்னை அவையளோட சேர விடுறார் இல்லை
" என்று அடிக்கடி
குழம்புவாள். தாயிடமும் போய்
அடிக்கடிக் கேட்பாள். தாயும் ஏதாவது காரணம் சொல்லி மழுப்பி விடுவார்.
இப்படித்தான்
இன்னுமொரு தடவை, திலீபன் அண்ணா வீரமரணமடைந்து இரண்டாவது வருடம், மதுவிழியின் வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய ரியுட்டெறி
(tutory) அதாவது உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான மாலை நேர கல்வி
பயிற்சி நெறிகள் நடைபெறும் கல்வி நிலையம் இருந்தது.
அங்கே கல்வி கற்கும் மாணவர்களும் போராளிகள் சிலரும் இணைந்து திலீபன்
அண்ணா பற்றிய கவிதைகள், பாடல்கள், பேச்சுகள் என கலை நிகழ்வுகளை
ஒழுங்குபடுத்தி நடாத்திக்
கொண்டு இருந்தனர்.
ஒலிபெருக்கியிலிருந்து கேட்ட
நிகழ்ச்சிகளின் சத்தத்தால்
அதன்பால் ஈர்க்கப்பட்ட மதுவும்
அவளது தங்கையும் அம்மாவிடம் கேட்டால் அனுமதி கிடைக்காது என்று புரிந்து கொண்டு அம்மா,அப்பாவிற்குத் தெரியாமல் இரகசியமாக நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். அங்கே குந்தியிருந்து கொண்டு அடைக்கப்பட்டிருந்த வேலிகளின் இடைவெளிகளுக்கூடாக வெகு ஆர்வமாக ஏக்கத்துடன்
நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரண்டு
சிறுமிகளின் ஏக்கமான பார்வையை அவதானித்த போராளி ஒருவர் மதுவிழியை நோக்கி "தங்கச்சி...மைக்கில கவிதை வாசிக்கப் போறீங்களோ.... வாசிக்க விருப்பமெண்டா முன்பக்கக் கேற்றால
ஓடி வாங்கோ " என்றார். மதுவிழியும் அவளது தங்கையும் இதனால் அம்மா,அப்பாவிடமிருந்து வாங்கப் போகும் அடி, பேச்சு எல்லாவற்றினையும்
மறந்து கவிதை வாசிக்கும் ஆர்வத்தில் ஓடிச் சென்றார்கள். பதினொரு
வயதில் முதன்முதலில் ஒலிபெருக்கியில் மிகவும் அழகாகக் கவிதை வாசித்து போராளி
அண்ணாக்களினதும் மேல்வகுப்பு
அண்ணாக்கள்,அக்காக்கள் அனைவரினதும் பாராட்டையும் பெற்றாள் மதுவிழி. இந்த நிகழ்வே அவளுக்கு
எதிர்காலத்தில் கவிதை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் ஒரு போராளியாக
உருவாகுவதற்கும் உந்துகோலாக அமைந்தது.
கவிதையை
வாசித்து விட்டு பயந்து, பயந்து வீட்டுக்குச் சென்றனர் மதுவிழியும் தங்கையும். ஒலிபெருக்கியில் அவளது குரலைக் கேட்ட அம்மா கையில் நெல்லிக் கம்போட காளி ரூபத்தில் வாசலில்
காத்து நின்றார். "ஒரு பொம்பிளைப் பிள்ளையாக
வீட்டில் அடக்கவொடுக்கமாக இருக்காமல் ஆம்பிளைப்
பிள்ளைகள் மாதிரி இதென்ன கூத்து...கொப்பர் வந்து கேள்விப்பட்டார் எண்டாக் கொன்று போடுவார்
" என்று அம்மா அடிக்க வர மதுவிழி "இனி
அப்படிச் செய்ய மாட்டேன்..அம்மா அடிக்காதையுங்கோ...அம்மா அடிக்காதையுங்கோ" என்று வீட்டைச் சுத்தி ஓட..அம்மா துரத்தி துரத்தி அடிக்க..என்று கொஞ்ச நேரம் ஒரே களேபரம் தான்.
காலங்கள்
விரைந்தன. மதவிழியும் வளர்ந்து பெரியவள் ஆனாள். திலீபன் அண்ணாவின் கனவை நனவாக்க காலத்தின்
தேவை கருதி போராளியாக உருமாறினாள். அன்று பத்து வயதில் இடப்பட்ட
விதை விருட்சமாக முளைத்தது. போராட்ட வாழ்க்கையிலும் மதுவிழி கவிதைகள்,சிறுகதைகள் எழுதிப் பரிசில்கள் பெற்றாள். ஒரு போராளியாக சுதந்திர
தமிழீழத்துக்காக மக்களுக்கான பணியை முன்னின்று செய்தாள்.
பின்னர்
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதும் புலம்பெயர்ந்து சென்றாள். அங்கும் தொடர்ந்தும் தனது கொள்கையில் இருந்து
மாறாமல் எழுதுலகப் போராளியாக தனது பணியை நிலைநாட்டி
வருகின்றாள். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற திலீபன் அண்ணா
கண்ட கனவு நிச்சயம் ஒருநாள்
நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு...
"போராட்ட
வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறுவதில்லை".
தியாகி
திலீபனும், எமது மாவீரர்களும், எமது
மக்களும் எந்தப் புனிதமான இலட்சியத்துக்காகத் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தனரோ
அது நிச்சயம் ஓர் நாள் ஈடேறும்.
-நிலாதமிழ்.
Post a Comment