மகனின் தலைமட்டும் கண்ட அன்னையை இழந்தது ஆரை. மண் !

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியைச் சேர்ந்த திருமதி பூபதி தியாகராஜா தனது 95 வது வயதில் 22.sebtember2023 அன்று இயற்கை எய்தினார். தமிழர் விடுதலைப் போராட்டவரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்த லெப். லக்ஷ்மனின் தாயார்  இவராவார். லெப்.லக்ஷ்மன் அவர்களின் வரலாற்றுக்குறிப்புக்கள் அடங்கிய கட்டுரை ஈழநாதம் நாளிதழில் வெளியாகியது. 1992 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் தொடர்பான கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்த தேசியத் தலைவர் அவர்கள்  லக்ஷ்மன் மற்றும் மேஜர் வேணு பற்றிய கட்டுரைகள் உணர்வுபூர்வமாக இருந்ததாகக்  குறிப்பிட்டார்.

 (இந்தக்  கலந்துரையாடலிலேயே அன்றைய மகளிர்  அரசியற்துறைப் பொறுப்பாளர் ஜெயா மாவீரர் நாளில் அவர்களின் பெற்றோரும் போராளிகளும் இணைந்து பாடக்கூடிய வகையில் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார்.அதுவே புதுவையண்ணாவால் இயற்றப்பட்டு இசைவாணர் கண்ணனால் இசையமைக்கப்பட்டு வர்ண ராமேஸ்வரன் குரலில் வெளிவந்த  பாடலாகும் )

தலைவர் குறிப்பிட்ட லக்ஷ்மன்பற்றிய கட்டுரை பின்னர் மாவீரர் பணிமனையினால் வெளியிடப்பட்ட  விழுதுகள் 01. புத்தகத்தில் இடம்பெற்றது. அதனை இங்கே தருகிறோம் (பத்திரிகைத் தாள் தடைஇருந்த காலத்தில் கோடுள்ள அப்பியாசப் புத்தகத் தாளில் இது அச்சிடப்பட்டது)

லெப். லக்ஸ்மன்

பெற்றோர்: தியாகராசா,   பூபதி

இயற்பெயர்: வரதராஜன்

முகவரி: ஆரையம்பதி- 01, மட்டக்களப்பு.

தோற்றம்: 07-10-1969

கல்வி: மட்டு/ஆரையம்பதி அரசினர் தமிழ்

கலவன் பாடசாலை

மட்டு / புனித மைக்கல் கல்லூரி. 10ஆம் வகுப்பு.

உடன் பிறந்தோர் திரவியநாதன்,

புஷ்பராணி, லோகராணி, அமிர்தராணி, ஜினேந்திரன், கனகராசா

போராளியாய்.   1984

மாவீரனாக  தாயகமண்ணில்:   03-09-1991

குறிப்பிடக்கூடிய தாக்குதல்கள்:

* கும்புறு மூலை முகாம் விசேட அதிரடிப்படையின் மீதான தாக்குதல். (ஏறாவூர் காவல் நிலையத் தாக்குதலுக்கு அனுசரணையாக)

* மட்டக்களப்பு - கரவெட்டியில் சிறீ லங்கா விசேட அதிரடிப் படையினர் மீதான தாக்குதல் (5-4-1986)

* கொக்கட்டிச்சோலையை முற்றுகையிட வந்த சிறீலங்கா படையினர் மீதான தாக்குதல்.

* வவுணதீவில் சிறீலங்கா விமானப் படையினரின் அவ்ரோ விமானம் மீதான தாக்குதல் (1986)

* மாங்கேணி இராணுவமுகாம் மீதான தாக்குதல் (05-07-1987)

* காத்தான்குடியில் இந்திய படையினரின் ரோந்து அணி மீதான தாக்குதல் (03.02.1988)

* மட்டு. புகையிரத நிலைய வீதியில் இந்திய படையினர் மீதான தாக்குதல் (1988)

* மட்டக்களப்பு காவல் நிலைய தாக்குதல் (11.06.1990)

* மயிலம்பாவெளியில் சிறீ லங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்* *மண்முனையில் சிறீ லங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்

* தமிழீழத்துக்கு வெளியே நிகழ்ந்த சில தாக்குதல்கள்.


லக்ஸ்மன்!

படுவான்கரை மண்ணில் மரணம் உன்னை அணைத்துக் கொண்டது என்ற செய்தி எமக்குக் கிடைத்தது. உயிரற்ற உடலிலிருந்து உனது தலையை வெட்டிக் கொண்டு சென்றார்களாம் என்பதைக் கேள்வியுற்றதும் விக்ரரின் நினைவுதான் வந்தது. விக்ரரைப் போலவே நீயும் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்திருக்கின்றாய் என்பதை உணர முடிந்தது.

மரணத்தால் உனது உடலை மட்டுமே எம்மிடமிருந்து  பிரிக்க முடிந்தது. உன் உணர்வுகள், உன்னோடு பழகிய அந்த  நாட்கள் இவையெல்லாம் படுவான்கரை வயல்களைப் போலவே என்றும் பசுமையானவை. அவற்றை  எம்மிடமிருந்து எப்படிப் பிரிக்க முடியும்? அரைக் காற்சட்டை அணிந்த சிறுவனாகஎன்னை எப்ப றெயினிங்குக்கு அனுப்புவீங்க?'' என்று காசி அண்ணாவின் சகோதரர் சந்திரன் அண்ணையை நீ நச்சரித்துக் கொண்டிருந்த நாட்களிலிருந்து எதிரிகளைக் கிலிகொள்ள வைக்கும் வீரனாக - மட்டக்களப்பு வாழ் மக்களின் நேசனாக நீ விளங்கிய ஏழு வருட காலத்தையும் நினைத்துக் கொள்கிறேன். சொட்டுச் சொட்டாக விழுந்த கண்ணீருடன் இம்மடலை உனக்கு வரைகிறேன். நான் நம்புகிறேன் - ஒவ்வொரு போராளியின் உள்ளுணர்வுகளுடன் ஒன்றிணைந்து இதனை நீ வாசிப்பாயென்று.

லக்ஸ்பிறே!

அப்படித்தான் உனக்கு நாங்கள் பெயர் வைத்தோம். அவ்வளவு சின்னப் பையன் நீ! காலப் போக்கில் லக்ஸ்பிறே என்ற பெயர் மறைய லக்ஸ்மனாக நீ பிரபல்யமானாய். 1984ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி அப்போதுதான் நீ எங்களுக்கு அறிமுகமானாய், எஸ். ரி. எவ், பொலிஸ் வருகிறார்களா என்றுபார்த்துச் சொல்லும் பணிதான் ஆரம்பத்தில் உனக்கு வழங்கப்பட்டது. உனது தோற்றம் எவரையும் சந்தேகப்பட வைக்காது என்பதால் இப்பணியில் உன்னை நாம் ஈடுபடுத்தினோம். இது தவிர்ந்த ஏனைய நேரங்களில் சந்திரண்ணையுடன் அட்டை போல் ஒட்டிக் கொள்வாய், "என்னை றெயினிங் காம்புக்கு அனுப்புங்கோ", என்று நீ அவரிடம் விடாப்பிடியாக நிற்கும்போது ''உனக்கு வயசு வரட்டும் பொறு" என்று நாங்கள் கூறுவோம். அப்போது உனது முகம் போகும் போக்கு! அது ஒரு தனிஅழகுதான். அக்காட்சியை நினைக்கும் போது, "தாயை நேசிக்க மீசை முளைக்கத் தேவையில்லை" என்ற கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

எப்படியோ பாடசாலை சீருடையுடனேயே உன்னை பயிற்சி முகாமுக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. பயிற்சி முகாமில் நீயும் சபேசனும்தான் சிறியவர்கள். இருவருமே ஒரே மாதிரியான குணாம்சத்தைக் கொண்டவர்கள். அமைதி, விசுவாசம், ஒழுக்கம் இவற்றுக்கு நீங்கள் உதாரணமாகத்  திகழ்ந்தீர்கள். பின்னாளில் உங்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டபோது ஓடிக் கொண்டிருந்த நீ களைத்து விழுவாய். அந்தக் கடுமையான பயிற்சியின் போதும் "கஷ்டமெண்டால் வீட்டுக்குப் போகலாம்" என்று கூறும்போது நீ மறுப்பாய். அடுத்தநாள் இன்னும் சிறப்பாக செய்ய முயற்சிப்பாய். உன் உடல் நிலை இதற்கு இடந்தராது. ஆனால், உன் உறுதி குலைந்ததை மட்டும் நான் காணவில்லை.

பயிற்சி முடிந்ததும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின்மீது தாக்குதல் மேற்கொண்டபோது அதை முறியடிக்க வரும் படையினரை தடுத்து நிறுத்தும் குழுவில் நீ இடம்பெற்றிருந்தாய். அதுவே, உனது முதல் களம், தொடர்ந்து குமரப்பாவுடன் படுவான்கரை மண்ணில் நீ செய்த சாதனைகள் பட்டியலிட முடியாதவை. அத்தாக்குதல்கள் உன்னை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இனங்காட்டின. பாலையடி வெட்டையிலிருந்து மண்முனைத்துறைவரை கண்ணி வெடிகள் வெடிக்கும் போதும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அந்நியப் படைகளின் சடலங்கள் ஏற்றப்படும்போதும் உனது பெயரையும் மக்கள் குசுகுசுத்துக்கொண்டனர். பின்னர் மட்டக்களப்பு நகருக்குள் உனது வேட்டொலிகள் கேட்டன. எங்கிருந்தோ வந்தவர்கள் ஊர்காவற்படை என்ற பெயரில் நகரில் காலடி எடுத்து வைத்தபோது ஒருநாள் தன்னந்தனியாக அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டாய். அவர்களில் இருவர் பலியாக ஏனையோர் தலைதெறிக்க ஓடினர். அதன் பிறகு சிங்கள ஊர்காவல் படை பொலிஸ் நிலையத்திலிருந்து வெளிவர ஆசைப்படவில்லை. அதைப் போலவே தமிழ் மக்களை வதைத்து வந்த முஸ்லிம் ஊர்காவற் படையினரின் எண்ணிக்கையை உனது துப்பாக்கி குறைத்தது. உனது தாக்குதலின் வேகம் - பலியானோர் தொகை என்பன எஞ்சியோரை சவுதி அரேபியாவிற்கும் ஓடவைத்தது.

இந்தியப் படைகளுடனான போர் தொடங்கியது. உனது திறமை மேலும் வெளிப்பட்டது. அன்றொரு நாள் நீ மண் அளைந்து. போளையடித்து விளையாடிய, உன்னால் நேசிக்கப்பட்ட அந்தப் பரமநயினர் கோயில் முன்றலில் இந்தியப் படைகளின் காலடி படுகிறது. உனது துப்பாக்கி வேட்டுகள் அவர்களைத் தடுத்து நிறுத்தின. பலியான சிப்பாயின் உடலை விட்டு அவர்கள். சிதறியோடினர். நீ அவர்களின் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றாய். இன்னொரு நாள் காத்தான்குடியில் வரிசையாக வந்து கொண்டிருந்த இந்தியப் படையினர் செல்லும் வரை காத்திருந்து கடைசியாக வந்த இந்திய ஜவான் மீது நீயும் சபேசனும் தாக்குதல் தொடுத்தீர்கள். உங்கள் துப்பாக்கி இயங்க மறுத்தது. அவனுடன் மல்லுக் கட்டினீர்கள், அவன் உன் கையைக்  கடித்தான், நீங்கள் அவனது துப்பாக்கியாலேயே அவனது வாழ்வை முடித்தீர்கள். கைப்பற்றப்பட்ட துப்பாக்கியுடன் திரும்பி வந்தீர்கள், இப்படியே பல தாக்குதல்கள்.

சிலகாலம் செல்ல இந்தியப்படையினரின் முற்றுகையின் போது நீ சயனைட் உட்கொண்டதாகவும் உன்னைச் சித்திரவதைகள் செய்து உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் உன்னைக் காப்பாற்ற இந்தியப் படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அறிந்தேன். அத்துடன் இந்தியப் படையினருடன் வந்த தேசத்துரோகியொருவனிடம் உன்னைச் சுட்டுவிடுமாறு நீ வேண்டிக்கொண்டதாகவும் அறிந்தேன். இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உனது விசுவாசம் எனக்குத் தெரிந்ததுதானே.

உனக்கு ஞாபகமிருக்கிறதா? நீ சிறுவனாக இருந்த போது ஒரு நாள் சந்திரண்ணாவுடன் கிரான் குளத்திலிருந்து சைக்கிளில் ஆரையம்பதிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது உனக்கு குப்பி வழங்கப்படவில்லை. ஐந்தாம் கட்டைச் சந்தி- கல்முனை, மட்டக்களப்பு வீதி வழியாக செல்லும் படையினரின் சகல வாகனங்களும் இந்தச் சந்தியில் தரித்து நின்று சிறிது நேரம் பயணிகளை  சோதனையிடுவது வழக்கம். அன்று நாங்கள் இந்தச் சந்தியை நெருங்கினோம். எதைக் காணக்கூடாது என நினைத்தோமோ அதைக்கண்டோம். எங்களை நெருங்கிய அந்த ஜீப் தனது வேகத்தைக் குறைத்தது. அக்காட்சியை நான் நன்றாகப் பார்த்தேன். குதிக்க முயன்ற சிப்பாய்களை தடுத்து நிறுத்திய அந்த அதிகாரி ஜீப்பைச் செலுத்துமாறு சாரதியிடம் சைகை காட்டியதை. எமது அன்றைய மனநிலையை உனக்கு உணர்த்தத் தேவையில்லை. இருவரும் ஒரே மனநிலையில்தானே இருந்திருப்போம்? ஜீப் கொஞ்சம் கொஞ்சமாக எமது கண்ணிலிருந்து மறைந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் நான்எங்கள் எல்லோரிட்டையும் குப்பியிருக்கு, நாங்கள் கடிச்சிருப்பம், லக்ஸ்பிறே! நீ என்னடா செய் திருப்பாய்" என்று கேட்டேன். அதற்கு நீ "சந்திரண்ணையோட வாயைக் கடிச்சிருப்பன்என்று சொன்னாய். அந்தச் சில கண நேரங்களில் நீ அந்த முடிவுதான் எடுத்திருந்தாய். அதனால்தான் உன்னால் இப்படிச் சொல்ல முடிந்தது. உனது பதிலைக் கேட்ட சந்திரண்ணைநல்ல வேளைதான் - லக்ஸ்பிறேட உயிரும் தப்பிச்சுது,  நம்மட வாயும் தப்பிச்சுதுஎன்றார். தொடர்ந்து எமது சிரிப்பொலியால் அந்தப் பகுதிப் பற்றை ளே குலுங்கின. என்ன இனிமையான நாட்களடா அவை!

பிடிபடும் வரை ஆரையம்பதி மக்கள் உன்னை எப்படிக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது ஏதோ ஒருவகை உணர்வு ஏற்பட்டது. இயல்பாகவே இராணுவ முற்றுகையில் இருந்து போராளிகளைக் காப்பாற்ற தமது முழுச்சக்தியையும் பயன்படுத்தும் ஆரையம்பதி மக்கள் உனக்காக நடுவீட்டுக்குள்ளேயே சுரங்கம் அமைத்து  உன்னைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். மிக நெருக்கடியான காலத்தில் மூன்று மாதங்கள் இந்தச் சுரங்கத்தினுள்ளேயே நீ கழித்திருக்கின்றாய் என்பதை அறிந்தபோது இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை மக்கள் காப்பாற்றி வரும்போது அந்தத் தகவலை எதிரியிடம் வழங்கியவனை.....

சித்திரவதைகள், சிறைவாழ்வு உன்னை புடம் போட்டன. எப்படியோ நீ விடுதலையானாய். தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உனது சாதனைப் பட்டியல் நீண்டது.

உன்னை எத்தனை தடவைதான் மரணம் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. மட்டக்களப்பு நகரில் ஒரு துரோகிக்கு தண்டனை வழங்கச் சென்றபோது அவனது காவலர்கள் பின்னால் வந்து அடித்தனர். நீ மயங்கினாய். உனது கை உடைந்தது. சம்பவத்தை அறிந்த இந்தியப்படை அந்த இடத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டிருக்கும்போதே உனது நண்பர்கள் இருவர் வந்துஎதிரிகளைத் தாக்கி அந்தத் தீவிலிருந்து உன்னை ஆற்றின் வழியாக தோணி மூலம் கொண்டு வந்தனர். (எப்படியோ அத்துரோகி உனது கையினாலேயே மாண்டான்)  இன்னொரு தடவை துரோகிகளின் ரவை ஒன்று உன் காலைத் துளைத்தது. ஆனால், இப்போது மட்டும் மரணம் உன்னை முத்தமிட ஏன் சம்மதித்தாய். சிறையிலிருந்து மீண்டதும் தாழங்குடாவில் சிறீ லங்கா படையினரின் கவசவாகனம் ஒன்றைத் தகர்த்தாய். மண்முனைத்துறையில் தேசத்துரோகிகளையும் சிறீ லங்கா படையினரையும் ஒழித்துக் கட்டினாய். பல பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் பங்கேற்றாய், தமிழீழத்திலும் தமிழீழத்துக்கு வெளியிலும் நீ செய்த சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தச் சம்பவங்களின் தொகுப்பு தமிழீழம் மலர்ந்த பின் மட்டுமே வெளிக்கொணரக் கூடியவை.

இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது பாடவிதானமாக அமையக்கூடிய உன் வாழ்வின் சில பக்கங்கள் மட்டுமே.

லக்ஸ்மன்! நீயும் நாங்களும் திரிந்த மண்ணை மீண்டும் மிதிக்கும்போது எங்களுக்கும் கவசமாயிருந்த கன்னாப் பற்றைகளும் எங்களைத் தாங்கிச் சென்ற தோணிகளும் நாங்கள் பிரிந்திருந்த காலத்தில் நீ செய்த சாதனைகளை - உன்னை நேசித்த மக்களைப் பற்றி எனக்கு கதைகதையாகக் கூறக் காத்திருக்கின்றன. அப்போது மீண்டும் எமது நினைவுகளை - உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம். அதுவரை தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

அன்புடன்  உனது  முஅறிவன்

***

சிறீலங்கா இராணுவத்தினருடன் டெலோ இயக்கத்தினர்.இணைந்து செயற்பட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும்.டெலோவின் மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் விளங்கிய கோவிந்தன் கருணாகரனின் கட்டளைப்படி03.09.1991 அன்று இரவு லக்ஷ்மன் மீது பதுங்கியிருந்து மேற்கொள்ளப்பட்ட   தாக்குதலில் இவர் வீரச்சாவடைந்தார். இவரது தலையை டெலோவினர் வெட்டிக்கொண்டு போய் "உன்னுடைய மகனின் தலையைப் பார்" என்று இந்த அன்னையிடம் காட்டி தமது `வீரப் பிரதாபத்தை` வெளிப்படுத்தினர். இவ்வளவு கொடுமையையும்,அவலத்தையும் சந்தித்த லக்ஸ்மனின் அன்னையை இன்று ஆரையம்பதி மண் இழந்து நிற்கிறது.

ஒரு கர்ப்பிணியை ப்  பார்த்து "வயிறுக்குள்ள என்ன புலிக்குட்டியா? எனக்கேட்டு சுட்டு கொன்ற சம்பவமும்  இதே ஆரையம்பதியில் நிகழ்ந்துள்ளது இந்தக் கர்ப்பிணியின் தந்தையையும் அண்ணனையும் ஏற்கெனவே இவர்கள் படுகொலை செய்திருந்தனர்.இவ்வாறான பாதகங்களை செய்ய உத்தரவிட்டவருக்கு மணி விழாவாம்; நூல் வெளியிடாம். இன்னும் எத்தனை கூத்துக்களை நாம் காணப் போகிறோமோ? 

 

 



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post