மாவீரர் நினைவலைகள் பல்வேறு தகவல்கள் - பிரதீபராஜா !

விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான மாவீரர்களின் விவரங்களை தொகுத்து ஆவணமாக்க வேண்டும் என்ற முயற்சியில் முதன் முதலில் ஈடுபட்டவர் திரு. அன்ரன் மாஸ்டர் எனப்படும் சிவகுமார். இவர்தான் விடுதலைப் புலிகளின் முதல் மாவீரரான லெப் .சங்கர்  காயமடைந்த போது தமிழீழத்தில் இருந்து சிகிச்சைக்காக தமிழகத்திற்கு அழைத்துச் சென்றவர்.

அன்றிலிருந்து இவர் விடுதலைப் போரில் வீரச்சாவு அடைந்தவர்களின் விவரங்களை தொகுத்து வந்தார். இவர்

1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயக்கத்திற்கான  படைத்துறைப்  பணியகத்தினை (Military Office ) உருவாக்கி இயக்கத்தின் படைத்துறை மற்றும் பல்வேறு  வளர்ச்சிகளுக்கு  முன்னோடியாயிருந்தவர். விடுதலைப் புலிகளின்

பயிற்சி முகாம்களிலும் பிற பணியகங்களிலும்  பணிகளைதத் தொடங்க முன்னர் களப்பலியான மாவீரர்கள் மற்றும் சாவடைந்த பொதுமக்களுக்குமாக பொதுவான அகவணக்கம் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் .  வீரச்சாவடைந்த  மாவீரர்களின் தொகுப்பை  சகல விவரங்களுடன் ( சொந்த பெயர் , இயக்க பெயர் ,  வீரச்சாவு  அடைந்த சம்பவம் மற்றும் வீரச்சாவு அடைந்த தினம் என்பனவற்றை உள்ளடக்கிய ) ஒவ்வொரு நாள் காலையிலும் வீரவணக்கம் செலுத்தும் நடைமுறையை முதன் முதலில் தனது பணியக்தில் நடைமுறைப்படுத்தினார்.

இந்தப் பணியகத்தின் ஓர் அறையிலேயே தான் தேசிய தலைவர் அவர்களின் பணியகமும் அக்காலத்தில் அமைந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது .

இன்றைய நாட்களைப்போல் கணனி வசதிகள் அற்ற அந்த காலத்தில் பணியகத்தில் இருந்த தட்டச்சு இயந்திரத்தில்  தான் மாவீரர் விவரங்கள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டன. அன்றைய காலத்தில் படைத்துறை பணியகத்தின் தட்டச்சாளர்களாக கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் தேவர் அண்ணா ஆகிய இருவரும் பணிபுரிந்தார்கள்.

A3 அளவுடைய காகிதத்தை கிடையாக ( Land scape ) வைத்து தேவர் அண்ணாவினாலே அந்த மாவீரர் விவரங்கள் தட்டச்சு செய்யப்பட்டன.

ஆரம்ப நாட்களில் வீரச்சாவு அடைந்த சகல மாவீரர்களின் விவரமும் ஓவ்வொரு நாட்களிலும் வாசிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காலப்போக்கில் மாவீரர்களின் எண்ணிக்கை அதிகரித்த போது அவற்றை ஒவ்வொரு நாளும் காலையில் முழுமையாக வாசிப்பதற்கு நீண்ட நேரம் எடுப்பதனால் , மாவீரர் விவரங்கள் மாதங்கள் ரீதியாக தொகுக்கப்பட்டு அந்தந்த மாதங்களில் ஒவ்வொரு நாளும் வாசித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாளடைவில் நாட்டிற்காக தம்மை ஆகுதியாக்கியவர்களின் தொகை மேலும் அதிகரித்த போது நாளாந்த ரீதியாக வீரச்சாவு விபரங்கள் தொகுக்கப்பட்டு வாசித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.அக்காலத்தில்தமிழீழத்திலிருந்து தமிழகத்திற்கு தேசிய தலைவரை சந்திக்க வந்த பல்வேறு மாவட்ட மற்றும் பிராந்திய தளபதிகளுக்கும் மாவீரர்களின் தொகுப்பின் படிகள் / பிரதிகள் வழங்கப்பட்டன.

அந்தத் தொகுப்பை அடிப்படையாக வைத்தே மாவீரர் விவரங்கள் பின்னர் தொகுக்கப்பட்டன.

( 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மணலாற்றில் திரு ஆனந்தராஜா என்பவரால் எடுத்துவரப்பட்ட அடிப்படை கணனி ( Basic Computer ) ஒன்றில் இந்த தரவுகள் முதன் முதலில் கணனி உள்ளீடு செய்யப்பட்டன.)

**

ஆரம்பத்தில் தலைமறைவு இயக்கமாக விளங்கியது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். பகிரங்கமாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் படையினரோ, காவல்துறையினரோ சுற்றிவளைத்து சந்தேகப்படக்கூடிய எவரையும் கைது செய்ய முடியும். எனவே வீரச்சாவடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் முறையும் மிக அவதானத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது. முதல் மாவீரரான சங்கரின் வீரச்சாவுச் செய்தி முதலாம் ஆண்டு நினைவேந்தல் காலத்திலேயே வெளிப்படுத்தப்பட்டது. இவர் காயமடைந்த வீட்டுக்கு விரைந்த இராணுவத்தினர் திரு. திருமதி நித்தியானந்தன் நிர்மலா தம்பதியரை கைது செய்திருந்தனர். இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளின்போது சங்கரின் மறைவு பற்றிய செய்தியினை தமது விசாரணைக்கு ஆதாரமாக சுட்டிக்காட்டக்கூடும் என்று ஊகித்ததனால்தான் இவ்வாறு காலதாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் நிகழ்ந்த லெப். சீலன் - ஆனந்த் மற்றும் செல்லக்கிளியம்மான் ஆகியோரின் வீரச்சாவுச் செய்திகள் இரு கட்டமாக வெளியிடப்பட்டன. முதன் முதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை இக்காலத்தில்தான். கொள்கை ரீதியான சில பிரசுரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டபோதும் அவை அச்சிடப்பட்டவை) கையால் எழுதப்பட்ட இச்சுவரொட்டிகள் அனைத்தும் அரியாலை - நாயன்மார்கட்டு பகுதிகளிலேயே தயார்ப்படுத்தப்பட்டன.

தலைவரின் வழிகாட்டலிலும் அவர் தமிழகத்துக்குப் பயணமான பின்னர், களத்துக்குப் பொறுப்பாக இருந்த பண்டிதரின் தலைமையிலும்  இவ்வாறான அரசியல் பணிகளை மேற்கொண்டவருக்கு இங்கேதான் இப்பணிகளை மேற்கொள்ள முடிந்தது. இவரது நெறிப்படுத்தலில்  போராட்டத்தின்மீது விசுவாசமும் துடிப்பும் கொண்ட பல்வேறு கிராமங்களிலிருந்து இனங்காணப்பட்டவர்களை பணியில் ஈடுபடுத்தும் செயலில் நாதன் எனப்படும் கந்தையா பேரின்பநாதன் ஈடுபட்டார். (இவரே பின்னாளில் அனைத்துலக நிதிப் பொறுப்பாளராக விளங்கியபோது துரோகிகளால் பிரான்ஸில் சுட்டுக் கொல்லப்பட்டார். ) இப்பணிகளில் ஈடுபட்டோரில் ஒரு குழுவினரை மறு குழுவினருக்குத் தெரியக்கூடாது என்பதற்காக ஈச்சமோட்டை, கொழும்புத்துறை, அரியாலை, கலைமகள், சரஸ்வதி, நாயன்மார்கட்டு என்ற பெயர்களில் உள்ள சனசமூக நிலையங்களுக்கு வெவ்வேறு நேரங்களில் வரவழைத்து சுவரொட்டிகளைக் கையளித்து வந்தார்.எல்லா இடங்களுக்கும் இவ்வாறு துவிச்சக்கர வண்டியிலேயே சென்று வருவார். யாராவது ஒரு தரப்பு பொலிஸாரிடமோ, படையினரிடமோ பிடிபட்டு விட்டால் சங்கிலித் தொடராக அனைவரும் பிடிபட்டுவிடுவர் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

காங்கேசன்துறைப் பகுதிக்கு சென்றகுழுவினர் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென பொலிஸாரின் ஜீப் வந்துவிட்டது. அனைவரும் பிடிபட்டனர். அதில் வந்த தமிழ் பொலிஸாரிடம் சுவரொட்டியில் என்ன எழுதியிருக்கிறது என்று பொறுப்பதிகாரி கேட்டார். வசனங்களோ புலிகளை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தும் வகையில் இருப்பதைக் கண்ணுற்ற அந்தத் தமிழர் அந்த இளைஞர்களில் இருவரின் கன்னத்தில் பலமாக அறைந்தார். “ரியூட்டறி போஸ்ரர் ஒட்டுறதெண்டா பகலில ஒட்டுறதுதானே? - ஏன்டா கள்ளர் மாதிரி ராவில திரியிறீங்கள்...? ஓடுங்கடாஎன்று உரக்கக்கூவி சாமர்த்தியமாக அவர்களை விரட்டிவிட்டார். இவ்வாறு விரட்டப்பட்ட இளைஞர்களில் இருவர் பின்னாளில் போராளிகளாகி மாவீரர்களாகிவிட்டனர். லெப். பிரசன்னா (இரத்தினம் சதானந்தன், திருவையாறு, கிளிநொச்சி, வீரச்சாவு 14.05.1985 - வில்பத்து காட்டில் படையினருடான மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு) மேஜர் டயஸ் (மயில்வாகனம் தவராசா, ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம் - 21.08.1989 பருத்தித்துறையில் இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவு.


முதலில் அம்பாறையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிளங்கியவர்) ஆகியோர்களே இவர்களாவர்.

அளவெட்டி முதலான இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியோரில் ஒருவரான செல்லையா தில்லைச்சந்திரன் (நாவலர் வீதி யாழ்.) நேரு என்னும் பெயரில் போராளியாகி ஆவரங்காலில் பண்டிதரை இலக்கு வைத்து 09.01.1985 மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீரச்சாவெய்தினார். இவ்வாறான பணிகளில் ஈடுபட்ட யாழ். கொழும்புத்துறையை சேர்ந்த கனகரத்தினம் செல்வகுமார் என்பவர் காந்தி என்ற பெயரில் போராளியாகி 23.12.1987 இந்தியப் படையினர் மேற்கொண்ட முற்றுகையின்போது மேஜர் முரளி முதலான மாவீரர்களுடன் ஆகுதியானார். இவருக்கு கப்டன் நிலை வழங்கப்பட்டது.

இந்த சுவரொட்டிகளைத் தயாரிக்கும் பணிகளுக்கு தமது குடும்பத்தினருக்குச் சொந்தமான வீடொன்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்தவர் பின்னாளில் பல வரலாற்றுச் சமர்களுக்கு தலைமை தாங்கினார்.


யாழ். கோட்டை, ஆனையிறவு பகுதிகளில் புலிக்கொடியை ஏற்றிய பிரிகேடியர் பானுவே இவராவார். இவரும் கிளிநொச்சி வரை சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் கொண்டுசென்றவர்களில் ஒருவர்.

நாதன் மேற்கொண்ட பிரசுரங்கள் வெளியீடுகளை விநியோகிக்கும் பணிகளின்போது அவருடன் தொடர்பினை ஏற்படுத்திய ஒருவர் பின்னாளில் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரானார். திலீபனின் உண்ணாவிரதத்தின்போது பன்னிரு நாட்களும் அவருடன் கூடவே இருந்த ராஜனே இவராவார். புலிகளின் தொடர்பு கிடைக்காமல் தேடித் திரிந்தோரில்சிலர் சுவரொட்டிகளில் உள்ள வாசகங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டுபோய் தாள்கள், மைகள், தூரிகைகளை தமது சொந்த செலவில் வாங்கி சுவரொட்டியாக்கினர். ஆர்வமிகுதியால் இதனைச் செய்திருந்தாலும் தன்னிச்சையாக இவ்வாறு நடந்து கொள்ள அனுமதிக்க முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வாறு அனுமதித்தால் சமூகவிரோதிகள் தம்மைப் புலிகள் போலக் காட்டி தவறான செயலில் ஈடுபடக்கூடும் என எச்சரிக்கப்பட்டது. எனினும் ஆர்வ மிகுதியினால் இவ்வாறு நடந்துகொண்டோரில் ஒருவர் குயிலன் என்ற பெயரில் போராளியாக இணைத்துக்கொள்ளப்பட்டார். பயிற்சியின் பின் இந்தியாவிலிருந்து திரும்புகையில் மாதகல் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதலின்போது வீரச்சாவடைந்தார். (இராசரத்தினம் ரவீந்திரன் - வீரச்சாவு 03.09.1986)

விநியோகத்துக்காக நாதன் சுவரொட்டிகளை வைத்திருந்த வீட்டின் அம்மையார் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இரவு சுவரொட்டிகளை ஒட்ட குழுக்கள் புறப்பட்டவுடன், “பிள்ளையாரே! அம்மாளாச்சி எல்லாப் பிள்ளைகளும் சுகமாக வந்து சேரவேணும்என்று சொல்லிச் சொல்லிக் கும்பிட்டுக் கொண்டு இருப்பார். இதை அறிந்த இவரது மகன் தமது பணியை முடித்துத் திரும்பியவுடன் சாமி அறையின் வாசலில் நின்றுஎல்லாப் பிள்ளைகளும் வந்தாச்சுஎன்று உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கும் வரை அவரது வழிபாடு தொடரும்.

வீரச்சாவு தொடர்பான விடயங்களைக் குறிப்பிடும்போது ஆரம்பத்தில் அவரவர் சார்ந்த மதங்களைப் பொறுத்து இறுதிக்கிரியைகள்  மேற்கொள்ளப்பட்டன.  லெப். சங்கரின் வித்துடலுக்கு சமய முறைப்படி கொள்ளிவைத்து சிதையில் எரிக்கப்பட்டது. (கொள்ளிவைத்தவர் அப்பையா அண்ணா) முஸ்லிம் மாவீரரான உஸ்மான் - கிழங்கு என்பவரது வித்துடல் விதைப்பு யாழ். முஸ்லிம் மையவாடியில் மார்க்க முறைப்படி நடைபெற்றது. இங்கேயே கப்டன் பாரூக்கின் (கனீபா - அக்கரைப்பற்று)  வித்துடலும் விதைக்கப்பட்டது.

1990 ஏப்ரலில் ஏறாவூர் புன்னைக்குடா வீதியைச் சேர்ந்த றியாஸ் என்பவர் மாவீரரானார். இவரது வித்துடல் முஸ்லிம் மையவாடியிலேயே விதைக்கப்பட்டது. இந்திய இராணுவ காலத்தில் போராட்டத்தில் இணைந்து கொண்ட ஆளுமைமிக்க இந்த மாவீரரின் வித்துடலுக்கு 21 துப்பாக்கி வேட்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்தநிகழ்வில் அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் உரையாற்றினார். 

மன்னார் மாவட்டத் தளபதியாக விளங்கிய லெப். கேணல் விக்ரரர் மற்றும்  நாயுடு ஆகிய மாவீரர்களின் வித்துடல்கள் ஆட்காட்டிவெளியில் பொதுமக்களின் சவக்காலையிலேயே விதைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவெய்திய ஆரையம்பதியை சேர்ந்த மாவீரர் ஒருவரின் சிதைக்கு கிட்டு கொள்ளிவைத்தார். தாவடியில் விமானத் தாக்குதலில் வீரச்சாவடைந்த நாவலப்பிட்டியை சேர்ந்த லூக்காஸ் என்ற மாவீரரருக்கும் இன்னொரு போராளியே கொள்ளிவைத்தார். தம்மை வெளிப்படுத்த முடியாத காலத்தில் வீரச்சாவெய்திய லெப்.செல்லக்கிளியம்மானின் வித்துடல் இரகசியமாக ஓரிடத்தில் விதைக்கப்பட்டது. இதேபோல இந்திய இராணுவத்தின் காலத்திலும் சிலரை எரிக்காமல் விதைக்க வேண்டியேற்பட்டது.

பின்னர் துயிலும் இல்லங்களை அமைக்க ஏற்பாடு செய்வது என்ற முடிவுக்கு வந்த பின்னர் ஒரு மேடையில் வித்துடல் வைத்து  எரிக்கப்பட்டது. அக்காணொலியை கண்டபின்னரே எரிப்பதனை விட விதைப்பதுதான் பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்தார் தலைவர். இது சகல சமயத்தவருக்கும் பொதுவானது என்று முடிவாயிற்று, சமாதான காலத்தின் பின் முகமாலை முன்னரங்கில் வீரச்சாவெய்திய இராமநாதபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடல் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. இதேபோல ஆழஊடுருவும் படையினரின் தாக்குதலில் வீரச்சாவெய்திய மட்டக்களப்பைச் சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடலும் இதே துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. மகன் கட்டளைத்தளபதியாக முதன்மைச்சுடரேற்றிய அதே மேடையில் இரு மாவீரர்களின்  (பிரிகேடியர் தீபன், லெப்கேணல் ஹில்மன்) தந்தையாக இறுதி யுத்தத்தின் பின்னர் திரு வேலாயுதபிள்ளை அவர்கள் நின்று பிரதான சுடரை ஏற்றிய வரலாறும் இதே துயிலுமில்லத்தில் நிகழ்ந்தது. சிங்களப் பெண்மணியின் வாரிசுகளின் வித்துடல் முழங்காவில் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட வரலாறும் உண்டு. இவ்வாறாக மாவீரர் தொடர்பான பல்வேறு வகையான தகவல்கள் உண்டு.

வரலாறு தெரியாமல் மன்னாரில் நாம் ஏற்கனவே வித்துடல்களை விதைக்கும் மரபைக் கொண்டிருந்தோம் என்றும் மணலாற்றில் நாம் முதன்முதலில் விதைக்கும் மரபைத் தொடங்கினோம் என்றும் தாங்களும் குழம்பி மாவீரர் குடும்பங்களையும் குழப்பும் வீண் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று விநயமாக வேண்டுகிறோம்.  செல்லக்கிளியம்மானின் வித்துடல் தனியே ஓரிடத்தில் விதைக்கப்பட்டது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகின்றோம்.

தங்கள் தங்கள் பிள்ளைகளின் நினைவிடத்தில் மாவீரரின் பெற்றோர் சுடரேற்றி மனப்பாரத்தை இறக்கி ஏதோ ஒருவகையில் சாந்தியடைய வைக்க எந்தவகையில் உதவலாம் என நாம் கூடிச் சிந்திப்போம். எமது பிள்ளைகள் களத்தில், முகாமில் எவ்வளவு நட்புடன் பழகியிருப்பார்களோ அதற்குக் குறையாத வகையில் மாவீரர் குடும்பங்கள் உணர்வில் ஒன்றிக் கலந்திருப்போம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post