தூக்குப் போடுவதா? விஷம் குடிப்பதா? தமிழரசு பொதுச் சபையினரின் நிலை!

 

சுடர்வன்

அண்மையில் சுமந்திரன் பற்றி ஒரு விசித்திரமான செய்தி வெளிவந்தது. கட்சியைக் கட்டுப்பாடாக வைத்திருப்பேன் என்று தலைமைக்குப் போட்டியிடும் சுமந்திரன் சொன்னார் என்பதே அது.

இலங்கை தமிழரசுக் கட்சி என்பதை அதே உச்சரிப்பு வரும் வகையில் (ஜே. வி. பி. என்பதன் சிங்கள உச்சரிப்பான ஜனதா விமுக்தி பெரமுன என்றிருப்பதுபோல) ஆங்கிலத்தில் இடம்பெறச் செய்யுமாறு 'கிளிநொச்சியில்' இருந்து சொல்லும் வரையில் பொதுவாக சமஷ்டிக் கட்சி (federal party) என்றே அழைக்கப்பட்டது என்பது இந்த ஜனாதிபதி சட்டத்தரணிக்குத் தெரியாததல்ல. கட்சியின் கழுத்தில் சுருக்கு மாட்டுவது போல காலியில்சமஷ்டி என்பது தேவையில்லை. மாகாண சபை முறைமையில் சிறுமாற்றம் செய்தால் போதும், எனக்கூறிய இவர் கட்சியைக் கட்டுப்பாடாக வைத்திருப்பேன் என்று சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது? ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலில் கரைச்சிப் பிரதேச சபையில் சுயேச்சையாக போட்டியிட்ட அணியினர் தாங்கள் சுமந்திரனின் வழிகாட்டுதலையே பின்பற்றுவோம் என்று சொன்னதை எந்த வழிமுறை என்று எடுத்துக்கொள்வது? இவர்கள் அனைவரின் முகங்களும் தமிழரசு கட்சி மூலமாகவே ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமாகின.

கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சி. . சிற்றம்பலம் போன்ற உணர்வாளர்கள் இருக்கையில் தேசியப் பட்டியில் மூலமாக இவரை தமிழரசு கட்சிக்குள் கொண்டுவந்தவர் சம்பந்தன் ஐயா. அவரையே செயல்பட முடியாதவர் எனக் காரணம் காட்டி எம். பி. பதவியிலிருந்து விலகச் சொல்லி வரம் கொடுத்த சிவனின் தலையில் கை வைக்க முயன்றவரல்லவா இவர். தந்தை செல்வாவை அவரது இறுதிக் காலம்வரை கொண்டாடியது தமிழினம். அவர் எப்படிச் செயல்பட்டார் என்பதையும் கண்ணால் கண்டவர்கள் எமது மக்கள்.

தலைவர் பிரபாகரன் அடிக்கடி சொல்லும் விடயம்தலைமைக்கு கட்டுப்பட்டு கட்டளையை ஒழுக்கமாக நிறைவேற்றும் சிப்பாயால்தான் எதிர்காலத்தில் ஆளுமைமிக்க தளபதியாக மிளிரமுடியும், என்பதுதான். அப்படிப் பார்த்தால் சுமந்திரனின் கடந்தகால வரலாறு, வாக்குறுதிகள் என்பனவற்றில் கீழ்ப்படிவு, நேர்மையைக் காணமுடியாது.

யாழ். மாநகர சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை முதல்வராக்குவது என்பது குறித்த கலந்துரையாடல் தேர்தலுக்குப் பின்பே இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தன்னிச்சையாக அங்கிருந்து வெளியில் வந்த சுமந்திரன்ஆனல்ட்தான் மேயர்என்று ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தார். பின்னர் இது தொடர்பாக கட்சித் தலைமையிடம் ஊடகவியலாளர்கள் வினாவெழுப்பியபோது, “அவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை, எனப் பதிலளிக்கப்பட்டது. தலையைப் பிய்த்துக்கொண்ட ஊடகவியலாளர்கள்தலைமையின் கருத்தை சுட்டிக்காட்டியபோது, “அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், ஆனல்ட்தான் மேயர், என்று திமிராகப் பதிலளித்தார். இத்தேர்தலில் போட்டியிட்டவர்களில் சொலமன் சூ சிறில்தான் கூடிய அனுபவம்மிக்க வேட்பாளர். இராசா விசுவநாதன் தலைமையில் கூட்டணியின்  ஆட்சி நடைபெற்றபோதே அங்கத்தவராக இருந்தவர். புலிகளின் நிர்வாக காலத்தில் யாழ். பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தலைமைப் பொறுப்பு உட்பட காத்திரமான பங்காற்றியவர்.

புலிகள் பயங்கரவாதிகள் என்பதே சுமந்திரனின் அசைக்க முடியாத நிலைப்பாடு. கிளிநொச்சி நீதிமன்றில் தென்னிந்திய திருச்சபை தொடர்பான வழக்கொன்றிலும் அவரது கருத்து இவ்வாறாக இருந்தது. எனவே, சிறில் முதல்வராக வந்துவிடக்கூடாது என்பதற்காகவெளிநாட்டுப் பிரதிநிதிகள் வரும்போது எமது தேவைகள் குறித்து உரையாடக்கூடிய ஒருவரே மேயர், என்று கூறினார். அதாவது ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய அறிவு சிறிலுக்கு இல்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இந்த வேட்பாளர் பட்டியலில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸூம் இருக்கிறார். அப்படியிருக்க ஆனல்ட்தான் மேயர் என்று இவர் அறிவித்தமை அரியாலை மக்களை - குறிப்பாக அரியாலை கிழக்கு வட்டார மக்களை கடுப்பேற்றியது.

ஆனல்ட் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்தவர். விந்தன் கனகரட்ணம் யு. எஸ். ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்புப் பற்றி குறிப்பிடுகையில் இந்த முயற்சியின் பின்னணியில் சுமந்திரனே இருப்பது வெட்டவெளிச்சமாகியது. இறுதிப் போரின்போது நிகழ்ந்தது இனப்படுகொலையே என்ற பிரேரணையை வட மாகாண சபையில் கொண்டுவந்தவர் முதல்வர். இது நடைபெற்ற சில நாட்களிலேயே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது என்பதால் சுமந்திரன் யாருடைய நலனை முதன்மைப்படுத்துகிறார் என்பதற்கு வேறு விளக்கம் தேவையில்லை. இந்த நிலையில், தமிழர்கள் நிர்வாகம் செய்வதற்குத் தகுதியற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான செயல்பாடுகளை இவரது விசுவாசிகள் மேற்கொண்டனர். ஆட்சிக் காலம் முழுவதும் இந்தச் சதியை முன்னெடுத்த ஆனல்ட் மேயர் ஆசனத்தில் உட்கார அவர் முன்னால், துணைவேந்தர் பதவியில் இருந்த மோகனதாஸ் சாதாரண உறுப்பினராக இருப்பதா என எண்ணியவர்கள் அந்த நிலை ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பினர். உண்மையில் சைக்கிள் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட இளைஞர் அவரது செல்வாக்கால் வெற்றி பெற்றார் என்பதை விட சுமந்திரன் மீதான கடுப்பே இதற்குக் காரணம்.

நல்லாட்சி அரசின் காலத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமும் கவனத்துக்கு உரியது. இக்கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரோதான் பதிலளிக்க வேண்டும் - வாக்குறுதியளிக்க வேண்டும். அந்த விவகாரத்துக்குள் மூக்கை நுழைத்து வாக்குறுதியளிக்க இவருக்கென்ன அதிகாரமுள்ளது? எப்படியோ அந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதைத் தவிரவேறென்ன காரணம் உண்டு? கட்சித் தலைவர் தெரிவில் வாக்களிக்கப் போகும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் உறுப்பினர்கள் (பொதுவாக கிழக்கு மாகாணத்தவர்கள்) கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் இது.

பாராளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்று தொடர்பாக சிறீதரன், “சில விடயங்கள் தொடர்பாக சில நிபந்தனைகளை விதித்திருக்கிறோம். அதன் பின்னரே இது தொடர்பாக முடிவெடுப்போம்என்று கூறினார். உடனே சுமந்திரன், “அவ்வாறாக எந்த நிபந்தனையையும் நாம் விதிக்கவில்லை.”, என்று அறிவித்தார். அப்படியாயின் இவர் யாருடைய நலனை முதன்மைப்படுத்துகிறார். குறைந்தபட்சம் அரசியல் கைதிகளின் விடுதலையையாவது சாத்தியமாக்கியிருக்கலாமே?

இறுதி யுத்தத்தின் பின்னர் மக்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்க கருணாவும் இவரும் நாமலும் இணைந்து கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை தொலைக்காட்சியில் காணமுடிந்தது. இதன் பின்னர், மகசின் சிறைக்கு கைவீசம்மா கைவீசு என்று பாடாத குறையாக (வெறும் கையுடன் வந்து) அரசியல் கைதிகளுக்கு வகுப்பு எடுத்தார். “நான் அடிக்கடி கோத்தாவுடன் டின்னருக்குச் செல்பவன் உங்கள் விடுதலையை சாத்தியமாக்க என்னால் முடியும். எமது கட்சியின் சார்பில் உங்கள் விவகாரம் என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.”, என்று புழுகினார். அது மட்டுமல்லாது நீங்கள் வேறு எவரிடமும் உங்கள் விடயங்களை கொண்டுசெல்லாதீர்கள் எனவும் குறிப்பிட்டார்.

அநுராதபுரம் சிறைக்கு வந்த அப்போதைய கூட்டமைப்பு சிவசக்தி ஆனந்தனும், “உங்கள் விவகாரம் சுமந்திரனிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது அவருக்கு  வேலை கூடத்தானே?” என்று விளக்கமளித்தார். “ஓமோம் கிரிக்கெட் பயிற்சியெடுப்பது, களமாடுவது என்று வேலை கூடத்தான், என்று சொல்ல நினைத்தாலும் பொறுமை காத்தனர் அரசியல் கைதிகள். சுமந்திரனிடம் வழங்கிய அரசியல் கைதிகள் பற்றிய விபரம் அடங்கிய கடதாசி அவரது வீட்டு மேசைகள் துடைக்கத்தான் பயன்பட்டிருக்கும்.

மாவீரர் துயிலுமில்ல மண்ணில் கால் பதித்த எவருமே சுமந்திரனை எவ்வாறான தேர்தலிலும் ஏற்கமாட்டார்கள் என்பதனை வாக்களிப்பில் கலந்துகொள்ளவுள்ள பொதுச் சபை உறுப்பினர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

***    

இது சொந்தக் காசில் தனக்கே சூனியம் வைத்தவர் பற்றியது. தமிழரசுக் கட்சியின் வரலாறோ, தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் கனதியையோ புரியாத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சிறீதரனாகத்தான் இருக்க முடியும். மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்து நாடற்றவர்களாக்கும் பிரேரணை கொண்டுவரப்பட்டபோதே தமிழரசு கட்சி தோற்றம் பெற்றது. “இதேநிலைதான் நாளைக்கு எமக்கும், என்று சுட்டிக்காட்டினார் தந்தை செல்வா. தேசிய விடுதலைப் போராட்டத்தில்மலையக மக்களின் பங்கு காத்திரமானது. மாவீரர்களாகவும் மலையக த்தினர் உள்ளனர். இதை விளங்காமல் ' வடக்கத்தியான்' என்று ஒருவரைத் திட்டுவதென்றால் இது அவரது உள்ளுணர்வின் வெளிப்பாடுதான்.

தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் இஸ்லாமிய மக்கள் தொடர்பாகவும் இவர் தனது நல்லெண்ணத்தைக் காட்ட முயலவில்லை. இதில், இவரது விட்டேத்தியான போக்கும் திமிரும் கவலையளிப்பனவாக உள்ளன. சில விடயங்கள் தெரியாமலிருக்கலாம். ஆனால், மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போதாவது விளங்கிக்கொள்ள இந்த முன்னாள் அதிபரால் முடியாதுள்ளது.

2015ஆம் ஆண்டு தேர்தலில் 72 ஆயிரத்து 58 வாக்குகள் எடுத்தவருக்கு 2020 தேர்தலில் 35 ஆயிரத்து 884 வாக்குகள் என்ற நிலை வந்ததற்கு தலைமை தொடர்பான ஆளுமை இவருக்கு இல்லை என்பதைத் தவிர வேறெதனைக் குறிப்பிட முடியும்.

சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முன்னாள் போராளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, “இல்லை சுமந்திரன் எமக்குத் தேவை, அவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்துக்கு நிகரானவர், என்று அடம்பிடித்தார். இவருக்கு ஒன்றும் தெரியவில்லையோ என்று கேட்டவர்களுக்கு விபரம் புரிந்தவர்கள் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினர். “இவர் தன்னைத் தேசியத் தலைவர் என்று எண்ணுகிறார். தனக்கு ஆலோசகராக இருக்க சுமந்திரன் வேண்டும் என்பதால்தான் சுமந்திரன் வேண்டும் என்கிறார், எனப் புரிய வைத்தனர். கடந்த தேர்தலின்போது நடந்த விடயங்கள் திருமதி ரவிராஜூக்கு நடந்தவை பற்றியெல்லாம் விபரிக்கத் தேவையில்லை. வேலியில் போன ஓணானை எடுத்து.... என்ற நிலைதான் சிறீதரனுக்கு.

தேசியத் தலைவர் படகில் நின்ற ஒரு சமயம் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைக்கு எதனையோ காட்ட விரலை நீட்டும் புகைப்படம் மிகப் பிரசித்தம். அதைப்போல நெடுந்தீவுக்கு செல்லும் படகில் நின்று தானும் விரலை நீட்டி புகைப்படம் எடுத்து பகிரங்கமாகத் தானே தற்போதைய தேசியத் தலைவர் எனக் காட்ட முனைந்ததை சிறுபிள்ளை விளையாட்டு என மக்கள் எண்ணியதும் இவரது வாக்கு எண்ணிக்கை வீழ்ச்சிக்குக் காரணம். மலையக மக்கள் தொடர்பாக தனது நிலைப்பாடு மாறிவிட்டது என்பதை நிரூபிக்க இவர் முயற்சிக்கவில்லை. மலையகம் 200 அமைப்புடன் தனது நல்லெண்ணத்தைக் காட்ட முயற்சிக்கவில்லை. வெறுமையாக யாழ். - கிளிநொச்சி எம். பி. தான் என்று உணர்த்த முனைகிறார்.

*** 

அப்படியானால் யார்தான் தமிழரசுக் கட்சியின் தலைவராவது என்ற கேள்வி எழுகிறது. கட்சிக்குள் தகுதியானவர்கள் இருக்கிறார்கள்தான். அது சுமந்திரனோ, சிறீதரனோ இல்லை. பண்டிதர், திலீபன் போன்றவர்களுடன் பழகியவர்களும் இருக்கிறார்கள். இந்திய இராணுவ காலம் உட்பட காத்திரமான பங்களிப்பை கடந்த காலத்தில் செய்திருக்கிறார்கள். 100வீதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிர்வாகத் திறனுள்ளவர்களாகஇனங்காணப்பட்ட, போட்டிபோட்டு தலைமைக்கு வர ஆசைப்படாத தகுதியுள்ளவர்கள் உள்ளனர். அவர்களில் ஒவருரை தெரிவு செய்யலாம். இப்போது, போட்டியிடுபவர்கள் ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் என்ற விடயத்தை தமிழரசுக் கட்சியினர் மறந்துவிடக்கூடாது. சுமந்திரன் - சிறீதரன் என்ற வட்டத்தை விட்டு வெளியில் சிந்தியுங்கள்.

இது வெறும் கட்சி விவகாரம் அல்ல. இது இனத்துக்கான தலைமை என்பதுதான் யதார்த்தம். தமிழ் மாணவர் பேரவை தலைவராக இரு்நத சத்தியசீலன் சுமந்திரனே ஆதரிக்கிறாரே எனக் கேட்கலாம். அந்த அமைப்பில் அங்கம் வகித்த பிரபாகரன், ஜே. வி. பியினர் போல நாமும் படையினர், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களை கைப்பற்றலாம்தானே எனக் கேட்டார். அதற்கு இவர், “கைப்பற்றும் ஆயுதங்களை எங்கே வைப்பது, என்று கேட்டுத் தட்டிக்கழித்து விட்டார். மக்கள் மயப்படுத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை படிப்படியாக வளர்க்க முடியும் எனக் கற்பனை செய்யக்கூடத் தைரியம் இல்லாதவர்களின் கருத்தை எல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை நாங்கள். குறிப்பாக, தேர்தல் பரப்புரையின் இறுதிநாளின்போதுமயிலந்தனை படுகொலையில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினருக்காக நீதிமன்றில் முன்னிலையானவர் கஜேந்திரகுமார், என்று சுமந்திரன் சொன்னார். இது போக்கிரித்தனமான கூற்று. தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த அவகாசம் கஜேந்திரகுமாருக்கு இல்லை. தேர்தல் பரப்புரை முடிந்துவிட்டது. தமது தரப்பின் வெற்றிக்காக எதையும் செய்யக்கூடிய ஒருவருக்காக சத்தியசீலன் ஏன் வாதிடுகிறார் என அவரோடு சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும். ஏனெனில், இது தந்தை செல்வாவின் கட்சி. குள்ளத்தனமாக வழக்கின் வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் பொன்னம்பலத்தின் கட்சியல்ல.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post