ஆனந்தபுர நாயகன் கேணல் நாகேஸ்!


15 வது ஆண்டு நினைவுப்பதிவு!

வண்ண வண்ண கனவுகளுடன் வாழ்க்கைப் பயணத்தை இருயிர்

ஓருடலாய்

நாம் தொடர்ந்தோம்.

கடமைகளோடு திருமணம்

கள்ளமில்லா பேரன்பு

கண்டது சிலகாலம்

என்னவென்று சொல்வது

உங்கள் அன்பை

இதயத்தில் கோவில் கட்டி ,

கொலு வைத்த  தெய்வம்  நீங்கள்.

விபரம் தெரிகின்ற

வேளையில்

விடுதலைப் புலியானேன்.

தமிழீழத்தை   நேசித்த எனை

கை பிடித்து

மனைவியாக்கினீர்.

திருமண வாழ்வில்நாம்

சந்திக்கும் காலங்கள்

மிகக் குறைவே.

கடமையின் பின் காதலென

அசைக்க முடியா உறுதியுடன்

அன்பால் மகிழ்வித்தீர்.

உங்கள் நினைவுகளை சுமந்து,                

வண்ணக் கனவுகளுடன்,

வாழ்திருந்தேன்.

அன்பை என்மீது அள்ளிச் சொரிந்தீர்கள்.

அன்னை போல் பாசம்

காட்டி எனை,

திக்குமுக்காட வைத்தீர்கள்.

மகிழ்வொன்றே மனதில்

நிலைக்க,

சிட்டு குருவி  போல

சிறகடித்துப் பறந்தேன்.

இனிமையான

 இல்லறத்தில் இனிதே

இரு மகவுகள்.

கால வெள்ளத்தில் நீந்தி

களிப்புடன்  

வாழ்ந்த வேளை,

சிறிலங்கா அரசின்

திமிரான   நடவடிக்கை

சமாதான உடன்படிக்கை

ரத்தாக

யுத்த  பூமியானது

தமிழீழம்.

யுத்த களம் செல்லும் நாளில்,

"கலங்காதே வெற்றி  அல்லது  வீரமரணம்

தாயின்றி போயின்

பிள்ளைகள் எதிர்காலம்

கருகிவிடும்.

தன்னிகரற்ற எம் அண்ணன் இருக்கையில்

கவலைப்பட தேவையில்லை

உங்களை அண்ணன் பார்ப்பார்"

அசைக்க முடியாத

நம்பிக்கையோடு ஒலித்த குரல்.என்னிடம்

கடைசியாக  சொன்ன

வார்த்தை  இதுதானே.

நயவஞ்சக சூழ்ச்சியால் திட்டமிட்ட சதியுடன்

சிறிலங்கா  அரசு

உலக நாடுகளின்

உதவியுடன் நடாத்திய

அராஜகப் போரில்

என்னவனே

நீர் வீரகாவியமானீர்

திசை தெரியா ஒடமாய்

திக்கு தெரியாமல்

இரு மகவுடன்

இருண்ட பாதையில்

நடந்தேன்.

நீங்கள் போகும் போது

கூறிய வார்த்தைகள் காதில் ஒலிக்கிறது.

ஆயிரம் உறவுகள்  அருகிருந்தும்,

அன்னியமாய்.

உணர்ந்தேன்.

கண்முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றுமாக பேசும்

மனிதமற்றவர்களுடன்

வாழ்வது சுலபமல்ல

எனினும், என் நீண்ட

நெடும் பயணம்

முடியவில்லை  தொடர்கிறது.

திரும்பிய திசை  ௭ங்கும்

தடைகள் பல வடிவில்.

வீரனின் மனைவி

கோழையல்ல.

விரும்பி ஏற்ற வாழ்வில்

மோதித்தான் பார்க்கிறேன் தினமும்.

உங்களிடம் வந்திடவே மனம் ஏங்குகிறது

சூழ்நிலை தடுக்கிறது

மகவுகள் எதிர்காலம்

கண்முன்னே தெரிய

நம்பிக்கை உள்ளவளாய் வாழ

முயல்கிறேன்

ஆன்மாவாய் அருகிருந்து

எனக்கான மனவலுவை

தந்திடுங்கள்

உங்களுக்காய் ஏங்கிடும்

உன்னவள். 

 உங்கள் நினைவுகளுடன்

                               கெங்கா.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post