பாராளுமன்ற உறுப்பினர் Dr.ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று ஆற்றிய கன்னி பாராளுமன்ற உரை…
இலங்கையின்
10வது பாராளுமன்றத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியாக
பேசுவதற்கு சந்தர்ப்பமளித்த, இலங்கைத்
தமிழ் அரசுக் கட்சிக்கும், வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
10வது பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அதிலும் குறிப்பாக தனிப்பெரும் கட்சியாக 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள தேசிய மக்கள்
சக்தி அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் 22 பெண் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும்,
நாட்டிலுள்ள விசேடதேவைக்குட்பட்டவர்களது பிரதிநிதியாக இங்கு வருகைதந்துள்ள கெளரவ உறுப்பினருக்கும் எனது விசேட வாழ்த்துக்கள்.
இங்கு
நாங்கள் எதிர்க்கட்சி என்ற பெயருடன் அமர்ந்துள்ளோம்,
ஆனாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முற்போக்கான செயற்பாடுகளுக்கும் நாம் உங்களுடன் இருப்போம். இவ்வாறான சூழலில் தான் இந்த நாட்டின் சாதாரண
தமிழ்பேசுகின்ற குடிமகனாக ஒருசில விடயங்களை சபையில் முன்வைக்கிறேன்.
எனக்கு
வயது 56, சிறுபராயத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் வளர்ந்தவர்கள் நாங்கள். எனது தந்தை ஒரு
பொதுநலவாதி, தனது வாழ்க்கை முழுவதும் தூய்மையான கம்யூனிசவாதியாக வாழ்ந்தவர். நான் அவரின் வளர்ப்பில்
வந்தவன், இன மத குல
வேறுபாடு எனக்கில்லை. ஆனால் இந்தநாட்டில் எண்ணிக்கையில் சிறுபாண்மையானவர்கள் அனைத்து விதத்திலும் இந்த நாட்டின் ஏனைய
மக்களுடன் சமனாக நடத்தப்படவில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்தவர்கள்,
அதனாலோ என்னவோ எமது நாட்டின் தேசியகீதத்தையும் தேசியக்கொடியையும் நாங்கள் மனதார விரும்பவில்லை,
ஆனால் மதிப்பளிக்கின்றோம்.
இந்த மனநிலை எனக்கு மட்டுமல்ல
எனது வயதையொட்டிய இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்களிற்கு உள்ளது, ஆனால் அதை வெளிப்படுத்தும்
சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலை ஏற்பட்டதையிட்டு பல சந்தர்ப்பங்களில்
நான் மனவேதனை அடைந்துள்ளேன்.
நான்
விரும்பும் தேசியகீதத்தையும் நான் விரும்பும் தேசியக்கொடியையும் எனது வாழ்க்கைக்காலத்திற்குள்
ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசினுடையது. நான் சொல்ல விளையும் விடயத்தை நீங்கள்
அனைவரும் புரிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில் சமாதானம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து
தொடங்கவேண்டும் என குறிப்பிட்டார். உண்மை, ஆனால் அதை எங்கிருந்து தொடங்கலாம் என்று
சிந்தித்தால் அது உங்கள் பக்கத்திலிருந்துதான்
தொடங்க வேண்டும் என நான் நினைக்கிறேன். எப்படி அதை தொடங்கலாம்?
யுத்தத்தால்
இறந்த உறவுகளை வணங்கும் நினைவேந்தலுக்கு நீங்கள் தடை போடவில்லை, அது உங்கள் நல்லெண்ணத்தை
காட்டுகிறது. அதேநேரம் பலநூற்றுக்கணக்கான
இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இன்று
இராணுவமுகாம் உள்ளது, அவ்விடத்தை விடுவிக்க நடவடிக்கை எடுத்து நல்லெண்ணத்தை காட்டுங்கள்.
அரசியல் கைதிகளை
விரைவில் விடுதலை செய்யுங்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு
மனச்சாட்சியுடன் விடையை தேடுங்கள், அதனூடாக உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள்.
மகாவலி - L
வலயத்தில் மூவின மக்களிற்கும் காணிகளை பகிர்ந்தளியுங்கள்.
ஏன் இதை இங்கு
சொல்கிறேன் என்றால் அதற்கு ஒரு காரணமுண்டு. ஜனாதிபதி தேர்தலில் எமது பகுதியில் 27 ஆயிரம்
வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தி அதே இடத்தில் பாராளுமன்ற தேர்தலில் 80,000 வாக்குகளை
பெற்றது. இரண்டு மாதகாலத்தில் எப்படி இது நடந்தது?
முற்போக்கான
பொதுவுடைமை தத்துவத்தை அடிப்படையாக கொண்ட இளம் ஜனாதிபதி நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளார்
என்ற காரணத்தினால்தான். ஜனாதிபதி தலைமையில் வரும் அரசாங்கம் நாட்டில் காணப்படும் இருமுக்கிய
பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் என்ற நம்பிக்கையில்தான்.
முதலாவதாக இந்த
நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சனைக்கான
தீர்வு, இரண்டாவதாக பொருளாதார பிரச்சனைக்கான தீர்வு.
முதலாவது
பிரச்சனைக்கு தீர்வுகாணாமல் இரண்டாவதற்கு முழுமையான தீர்வொன்றை காணமுடியாது. ஜனாதிபதி அவர்கள் தனது உரையில் அரசியல்
தீர்வு தொடர்பாக பேசவில்லை என எமது உறுப்பினர்கள்
சொன்னாலும் இரு தினங்களுக்கு முன்னர்
அவரை சந்தித்தபோது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லென்னத்தை
வெளிக்காட்டினார்.
கெளரவ
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் புதிய அரசியல் யாப்பின் வரைபு தயாரிக்கப்பட்டபோது வழிநடத்தல் குழுவில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியினர் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
அந்த
முயற்சி தொடரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து முன்செல்ல நாங்கள் தயாராகவே உள்ளோம்.
பொருளாதார
பிரச்சனை ஏற்பட காரணமென்ன?
⁃ இடம்பெற்ற
யுத்தம்
⁃ நாட்டின்
வளங்களையும் இந்த நாட்டிற்கு உள்ள
சந்தர்ப்பங்களையும் பிரதிபலிக்கும் பொருளாதாரக் கொள்கை இன்மை
⁃ ஆட்சியாளர்களினதும்
சகபாடிகளினதும் ஊழல்,
துஸ்பிரயோகம், வீண்விரயம்
யுத்தம்
முடிவிற்கு வந்து 15 வருடங்களாகிவிட்டது
⁃ வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
⁃ மொத்த
தேசிய வருமானத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு எவ்வளவு?
இன்று
எமது மக்களின் பொருளாதாரம் மிக நலிவடைந்துள்ளது.
⁃ 15,000 மேற்பட்ட
முன்னாள் போராளிகளும் 75,000 விசேட தேவைக்குட்பட்டோரும் உள்ளனர்
⁃ பெண்
தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் உள்ளனர்.
அதாவது
சமூகத்தில் 1/3 பகுதியினர் ஏனையவர்களின் உதவியின்றி சுயமாக எழுந்துநிற்கமுடியாதவர்கள்.
எனவே
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார மீட்சித்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டிய பொறுப்பு இந்த அரசிற்குள்ளது. அதற்கான
முயற்சியில் உங்களுக்கு கை கொடுக்க நாங்கள்
உள்ளோம்.
தொடர்ந்தும்
நிவாரணத்தை நம்பி வாழும் மற்றவர்களில் தங்கிவாழும் சமூகத்தை உருவாக்காதீர்கள். அரசாங்கத்தாலும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களாலும்
நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதாரத்திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள், அவற்றில் வெற்றியடைந்த திட்டங்கள் எத்தனை?
தமது
சொந்த உழைப்பில் வாழும் சமூகத்தை கட்டியெழுப்ப பொருளாதார திட்டங்களை தீட்டுங்கள். பாழடைந்த குளங்களை புனருத்தாரணம் செய்து விவசாயக்காணியற்ற குடும்பங்களிற்கு குறைந்தது 2 ஏக்கர் வயல் காணிகளை வழங்குங்கள்.
இவ்வாறான
திட்டங்கள் வெற்றியடைய நாமும் உங்களுடன்
சேர்ந்து உழைக்க ஆயத்தமாக உள்ளோம்.
சர்வதேச
சட்டத்திற்கு முரனாக ஆட்கடத்தல்காரர்களால் கடத்திச்செல்லப்பட்டு ரஸ்ய ராணுவத்தில் பலவந்தமாக
இனைக்கப்பட்டுள்ளதாகவும்
அவர்களை விடுவித்துதருமாறும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அவர்களது உறவுகள் கோரிக்கை விட்டுள்ளார்கள். இது தொடர்பாக நடவடிக்கை
எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன்
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலும் சில வார்த்தைகள் சொல்ல
எண்ணுகிறேன். திட்டமிடப்படாத கட்டுமானங்களும், வடிகால் அமைப்பு சீரின்மையும் அனுமதியற்ற கட்டிட நிர்மானங்களும் வெள்ளமேற்பட முக்கிய காரணங்களாகும். பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இங்கும் சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.
இறுதியாக
நாங்கள் இந்த நாட்டின் பூர்வ
குடியாக, ஒரு தேசிய இனமாக
எங்களின் அடையாளங்களை பேணிக்கொண்டு ஒரு பன்முகத்தன்மை உள்ள
வளமான நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்.
நன்றி
Post a Comment