தியாக தீபம் திலீபனின் ஈகத்தின் பெறுமதியினையோ தமிழ்த் தேசியம் என்ற விடயத்தினையோ விளங்கிக்கொள்ளாமல் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியினர் கோமாளிக் கூத்துகளை நடாத்துவதையும் எமது போராட்டத்தினை புரிந்துகொள்ளாமல் ஒட்டுமொத்த தமிழினத்தையும் தலை குனியும் வகையில் தெருச் சண்டியர்கள்போல் நடந்து கொள்வதையும் சகிக்க முடியாமலுள்ளது.
மாற்றுக் கருத்துடையோருக்கு அஞ்சலி செலுத்துவதும் இறுதிச் சடங்கு போன்றவற்றில் கலந்துகொள்வதும் ஒரு நாகரிக சமூகத்தில் நடக்கும் விடயங்களே. எல்லாவற்றையும் 13ஆவது திருத்தத்தை ஏற்றோர்-எதிர்ப்போர் என்ற வாய்ப்பாட்டில் துரோகி – தியாகி என வகைப்படுத்தும் புதியதோர் ஒழுங்கைக் கொண்டுவரத் துடிக்கின்றனர். வடகிழக்குக்கு அப்பாலுள்ள எமது உறவுகள், தென்னிலங்கையிலுள்ள நடுநிலையானோர் எமது போராட்டத்தினையும், திலீபனின் தியாக வரலாற்றையும் அறியவிடாமல் திரைபோட முனைவது சிறுபிள்ளைத்தனமானது.
நினைவேந்தல் நிகழ்வுகளை உங்களது அரசியல் எதிரிகளைச் சாடும் களங்களாக மாற்றும் நடைமுறைகளைக் கைவிடுங்கள் என ஏற்கனவே கஜேந்திரகுமாரிடம் நான் நேரில் வேண்டுகோள் விடுத்திருந்தேன். எனது
வேண்டுகோளை ஏற்பதாக எனக்கு உறுதிமொழி வழங்கிய அவர் கிளிநொச்சியில் நடைபெற்ற
மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரைச் சாடி வெளியிட்ட கருத்துகளை
வலம்புரி பத்திரிகை வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து திலீபனின் நினைவேந்தலில் தமது அரசியல் எதிரிகளான முன்னாள் சகாக்களைச் சாடும் வகையில் சட்டத்தரணி சுகாஸ் கருத்துகளை வெளியிட்டபோது நிகழ்வின் ஏற்பாட்டாளரான பொன் மாஸ்டரிடம் எனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தேன். சுகாஸை நியாயப்படுத்தும் கருத்துகளைத் தான் பொன் மாஸ்டர் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒழுங்கின்படி மலர் வணக்கம் தொடங்கிய வேளை திலீபனுக்கு மாலை சூட்ட வரிசையில் நின்றேன். நீங்கள் பிறகு கலந்து மாலை போடுங்கள் என உத்தரவிட்டார் ஒருவர். நான் திரும்பச் சென்றேன். உடனே அங்கே வந்த ஜனநாயகப் போராளிகள் அமைப்பினர் என்னைக் கூட்டிக்கொண்டுபோய் மாலை சூட்ட வைத்தனர்.
அன்று என்னைத் தடுத்தவர்தான்
நேற்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் சந்திரசேகரிடம் தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்து எங்களை நாகரிகமற்ற மக்கள் கூட்டமாக வெளிப்படுத்த முனைந்தார், தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் அரசியல் அறமற்றவை. எதிர்காலத்தில் பொது நிகழ்வுகளை நடத்த முனைவோர் நிகழ்வின்
நோக்கத்தைத் திசைதிருப்புவோர் விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென வேண்டுகிறேன்.
மக்களின் மனநிலையை உணர்வுகளை விளங்கிக்கொண்டு கண்ணியமான முறையில் நடந்துகொண்டால்தான்
அடுத்த சந்ததியினர் அரசியல் கண்ணியத்தைக் கற்றுக் கொள்வர்.
கடந்த
சில வருடங்களாக ஒரு அணியினர் மாநகரசபைக்குச் சொந்தமான இடத்தில் உரிய கட்டணம் செலுத்தி
திலீபனின் வரலாறு - ஈகம் தொடர்பாக விடயங்களை அடுத்த சந்ததிக்குக் கடத்தவும், மூத்த
சந்ததிக்கு நினைவூட்டவும் முயன்றனர். அவர்களது
அரசியல் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். அவர்கள் செய்தது காத்திரமான பணி. இதனைத்
தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்நிலத்துக்குரிய வாடகைப் பணத்தை முன்னரே அகில இலங்கைத்
தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் யாழ். மாநகரசபையில் கட்டிவிட்டனர். கஜேந்திரகுமார் மூன்றாவது
தலைமுறைப் பணக்காரர் என்ற வகையில் பணத்தால் எதையும் தடுத்து நிறுத்த முடியும் என்று
நினைத்திருக்கிறார்போல் உள்ளது. மாநகரசபை நிலத்துக்கே இவ்வளவு கோளாறு பண்ண முனைந்த
கஜேந்திரகுமார் தமது குடும்பத்தினருக்குச் சொந்தக்காணிகள் விடயத்தில் பெருந்தன்மையைக்
காட்ட முனைவாரா? அது சூரியன் மேற்கே உதித்தாலும் சரிவராத விடயம். ஒரு தேசிய வாதியாகவோ,
மனிதாபிமானியாகவோ அவர் நடக்க முயற்சிக்கவில்லை என்பது வருத்தமளிக்கும் விடயம்.
இதில் முதலாவது விடயம் பளை வைத்தியசாலை தொடர்பானது, இரண்டாவது பச்சிலைப்பள்ளி பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த எரிபொருள் நிலையம் தொடர்பானது.
பளை பிரதேச
வைத்தியசாலையின் விரிவாக்கத்துக்கான காணி போதாமல் இருந்தது.
ஆகவே வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஜீ.ஜீ. பொன்னம்பலம் குடும்பத்தின் காணியினைப் பெற்றுக்
கொள்வதற்காக வைத்தியசாலையினர் (அபிவிருத்திச் சங்கம் உள்பட) ஒரு முயற்சியை மேற்கொண்டனர்.
அதற்காகத் தொடர்பு கொண்டபோது அந்தக் காணி DRO முருகேசம்பிள்ளையின்
மாமனார் முத்தையாவின் காணி என்று கூறப்பட்டது. முருகேசம்பிள்ளை, முத்தையா, ஜீ.ஜீ.பொன்னம்பலம்,
குமார் பொன்னம்பலம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எல்லாம் வேறு
வேறு ஆட்களல்ல. ஒரே குடும்பத்தினர். வாரிசுகள். ஆகவே பொதுமக்கள் நலன்கருதி ஒரு
சிறு காணித்துண்டை அன்பளிப்பாக வழங்குமாறு உரியவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு அவர்கள் சொன்ன பதில், இந்த (பளை) மருத்துவமனை இருக்கின்ற காணியே தங்களுடையதுதான்
என்றார்கள்.
இந்தப் பதிலைக் கேட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினரும் அபிவிருத்திச் சபையினரும் ஒரு கணம் திகைத்துப்போய் விட்டனர். இருந்தாலும் தம்மைச் சுதாகரித்துக்கொண்டு, அப்படியென்றால், அதற்கு அத்தாட்சியான ஆவணம் – உறுதி உங்களிடம் இருக்கும் அல்லவா. அதைத் தாருங்கள் பார்ப்போம் என்றனர். அதை எடுத்து வருகிறோம் என்றவர்கள் பின்னர் ஒருபோதுமே அங்கே வந்ததில்லை. இப்பொழுது அந்தக் காணி வேறு ஒரு தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பச்சிலைப்பள்ளி ப.நோ.கூ. சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் பளை நகரத்தில் 1971 இலிருந்து இயங்கி வந்தது. யுத்தத்தின்போது
அந்த நிலையம் முற்றாகவே அழிந்து விட்டது. மீள்குடியேற்றத்தின்போது அந்த இடத்தில்தற்காலிகமாக அது இயங்கியது.
ஆனாலும் அதை மீளப் புனரமைத்து
இயங்க வைக்க வேண்டியிருந்ததால், தற்போதைய எரிபொருள் அமைப்புக்கு ஏற்றவாறு புதிய முறையில் விரிவாக்க வேண்டியிருந்தது. அத்துடன், முந்திய காணி உரிம உடன்படிக்கை
(லீஸிங்) காலத்தை 30 ஆண்டுகளாக நீடித்துத் தருமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரியது. அதுதான் தற்போதைய நடைமுறையுமாகும். எனவே இதற்கான கோரிக்கையை
காணி உரித்தாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குடும்பத்தோடு பேசியபோது, ஏற்கனவே நிலுவையிலிருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை முதலில் தருமாறு கேட்டனர். அதன்படி சங்க நிர்வாகம் அந்தப்
பணத்தைச் செலுத்தியது. பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், கஜேந்திரகுமார் குடும்பத்தினர் சொன்ன பதில், வேண்டுமானால் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யலாம். அதற்கு மேல் முடியாது என.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிபந்தனை 30 ஆண்டுகள் என்று நன்றாகத் தெரிந்து கொண்டும் அவர்கள் இந்தப் பதிலைச் சொன்னதால் சங்கத்தினால் அந்த இடத்தில் எரிபொருள் நிலையத்தை இயக்க முடியவில்லை. பின்னர் சங்கம் வேறு இடங்களைத் தெரிவு செய்து தற்போது புதிய இடமொன்றில் எரிபொருள் நிலையத்தை இயக்கி வருகிறது.
இவ்வளவுக்கும்
பளையின் DRO வாக ஒரு காலம்
முருகேசம்பிள்ளை இருந்த காலத்தில் தமக்கான உடமையாக்கப்பட்ட காணிகளே பளை நகரத்தில் கஜேந்திரகுமார்
குடும்பத்தின் சொத்துகளாக உள்ளன. தமது குடும்பத்தின் சொத்துக்கள்
விடயத்தில் பொதுநலனைக் கருத்திற்கொள்ளாத, யுத்த காலத்தில் இயங்க முடியாத எரிபொருள் நிலையக் குத்தகையை கறாராக அறவிட்டவர்தானா. காணி விடுவிப்பு தொடர்பாக
அறிவிப்புகளையும் போராட்டங்களையும் நடாத்துகிறார்?
எப்படியோ திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது அங்கேயிருந்தவர்களில் பெரும்பாலும் நான் மட்டுமே நாட்டில் இருக்கிறேன்.
அதுபோலவே திலீபனுக்கான நினைவுத் தூபியை அமைக்க தனித்துத் தீர்மானம் எடுத்துச் செயற்படுத்தி முடித்த திரு. சி.வி.கே.
சிவஞானம் அவர்களையும் இவர்கள் இதே தூபியடியில் அவமதித்து
வரலாற்றில் கறுப்புப் பதிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
திலீபனின்
நினைவுகளைக் கடத்தும் பணிகளை தடுத்து நிறுத்தும் சில்லறைத்தனமான முயற்சியைத் தடுத்து நிறுத்தும் வகையில் மாநகரசபைக்கு இவர்கள் செலுத்திய கட்டணத் தொகையை உண்டியல் மூலம் சில்லறையாகப் பெற்று இவர்களிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தேன். இவர்களின் சில்லறைத்தனமான செயலுக்கு சில்லறையாகவே கொடுக்கலாமென்றும் இம்முயற்சியை பளை வைத்தியசாலை முன்றலில் ஆரம்பிக்கவும் முடிவெடுத்திருந்தேன். காலம்
தாழ்த்தியேனும் முன்னைய ஏற்பாட்டாளர்களையே கண்காட்சியை அமைக்க அரைகுறையாகவேனும் சம்மதித்ததையடுத்து இம் முயற்சியைக் கைவிட்டேன்.
ஏற்கனவே வடமாகாண சபையின் உறுப்பினர்களின் கொடுப்பனவில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நிதி வழங்கப்பட்டிருந்தது. இதில் உடன்பாடில்லாத ஈ.பி.டி.பி உறுப்பினர் தவராசா
எனது பணத்தைத் திருப்பித் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் காட்சிதொலைக்காட்சியில்ஒளிபரப்பாகியிருந்தது.
தமிழ்த்தேசியத்துக்குச்
சோதனையான இந்த விடயத்தைக் கிழக்கிலங்கைப்
பல்கலைக்கழக மாணவர்கள் சவாலாக ஏற்று உண்டியல் குலுக்கி ஒவ்வொருவரிடமும் தலா ஒரு ரூபாய்
மூலம் சேகரித்த பணத்தைத் தவராசாவின் வீட்டு வாசலில் தொங்கவிட்டனர். தற்போது இரண்டு நாட்களின் பின்னராவது அரை மனதுடன் கண்காட்சி
நிகழ்வுக்கு சம்மதித்துள்ளனர் இவர்கள். இல்லாவிட்டால் உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட சில்லறையை கஜேந்திரகுமார் வீட்டு வாசலிலோ, தமிழ்க்காங்கிரஸ் கட்சிப் பணிமனை முன்றலிலோ கட்டித் தொங்கவிட்டிருப்பேன்.
கிழக்கிலங்கைப்
பல்கலைக்கழக மாணவர்கள் வடகிழக்கு இணைந்த தாயகம் என்று உணர்ந்தமாதிரி இவர்கள் உணரவில்லை. அதனால்தான் தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த பதவியை கிழக்குக்கு மறுத்தனர். எப்படியோ 13ஆம் திருத்தச் சட்டத்தை
ஏற்ற அரசின் அமைச்சர்களாக இருந்த சந்திரசேகரன், ஆறுமுகம் தொண்டமான், ஹக்கீம் போன்றோர் கிளிநொச்சிக்கு வருகைதந்த விடயங்ளையும் அவர்கள் கௌரவமாக நடத்தப்பட்டமை பற்றியும் வரலாறு தெரிந்த யாராவது தமிழ்க்காங்கிரஸ் கட்சியினருக்குச் சொல்லி வையுங்கள். எதிர்வரும் காலங்களிலாவது திலீபன் நினைவேந்தலை கௌரவமாக நடாத்த ஒத்துழைக்குமாறு இவர்களை வேண்டிக்கொள்ளுங்கள்.
Post a Comment