தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியுமா?


நிலாந்தன்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடந்த இரண்டு ஊடகச்சந்திப்புகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால் கூட்டமைப்புக்குள் மட்டுமில்ல தமிழரசுக் கட்சிக்குள்ளும் குழப்பம் என்பதைத்தான்.

இரண்டு கடிதங்களை அனுப்பப்போய் கூட்டமைப்பு குழம்பிப் போயிருக்கிறது என்பது சரியா? இல்லை கூட்டமைப்பு ஏற்கனவே குழம்பித்தான் இருக்கிறது.

ஆனால் இந்த கடிதங்களால் அந்தக் குழப்பம் வெளிப்பட்டிருக்கிறது என்பதே உண்மை என கட்டுரையாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

அவரது கட்டுரையில் மேலும்,

கூட்டமைப்பு ஏன் குழம்பி காணப்படுகிறது? ஏனென்றால் அது ஒரு வலிமையான கூட்டாக இல்லை. அது இதுவரையிலும் பதிவு செய்யப்படாத ஒரு கூட்டு. அதற்கென்று பலமான ஒரு யாப்பு இல்லை. அதற்கென்று ஒரு பொது வங்கிக் கணக்கு இல்லை.

அதற்கு காரணம் என்ன? காரணம் மிகவும் எளிமையானது கூட்ட்டமைப்புக்குள் பெரிய கட்சியாகவும் பலமான கட்சியாகவும் காணப்படுவது தமிழரசுக் கட்சிதான். அக்கட்சி ஏனைய பங்காளிக் கட்சிகளை தனக்கு நிகராக கருதவில்லை.

கூட்டமைப்பை சட்டரீதியாக பதியத் தயாரில்லை என்பது தமிழரசுக்கட்சி ஏனைய பங்காளிக் கட்சிகளை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க தயாரில்லை என்பதுதான். அது ஒரு கள்ளக்காதல்தான்.

இதை இன்னும் கூர்மையாக சொன்னால் கூட்டமைப்புக்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. தமிழரசுக் கட்சியின் முதன்மைதான் பிரச்சினைகளுக்குப் பிரதான காரணம்.

கடந்த 12ஆண்டுகளில் தமிழரசுக்கட்சி ஏனைய பங்காளிக் கட்சிகளை பலவீனப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. பங்காளிக் கட்சிகளின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை பின்னர் தமிழரசுக்கட்சி தனக்குள் சுவீகரித்து விட்டது.

இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள் பிரமுகர்களாக தெரியும் ஒரு பகுதியினர் அவ்வாறு ஏனைய பங்காளிக் கட்சிகளின் மூலம் உள்ளே வந்தவர்கள் தான். இவ்வாறு தமிழரசுக் கட்சியானது பங்காளிக் கட்சிகளை மதிக்கவில்லை.

முடிவுகளை எடுக்கும்பொழுது பங்காளிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டுமுடிவுகளை எடுக்கவில்லை. இதில் தமிழரசுக் கட்சியின் முதன்மையை முதலில் கேள்விக்குள்ளாக்கியது கஜேந்திரகுமாரின் அணிதான்.

அந்த அணி கட்சிக்குள் இருந்து 2010ஆம் ஆண்டு வெளியேறியது. அவ்வாறு வெளிவருவதற்கு முக்கிய காரணம் கஜேந்திரகுமார் ஒரு பாரம்பரிய கட்சியின் வழித்தோன்றல் என்பதுதான்.

தமிழரசுக் கட்சியைப் போலவே தமிழ் காங்கிரஸும் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு மூத்த கட்சி. கஜேந்திரகுமார் அரசியலுக்கு வந்துதான் பிழைக்க வேண்டும் என்ற தேவை இல்லாதவர்.

எனவே அவருடைய அணி கொள்கையை முன்வைத்து கட்சிக்குள் இருந்து வெளியேறத் தேவையான அடித்தளத்தையும் பலத்தையும் துணிச்சலையும் கொண்டிருந்தது. அதன்பின் ஈபிஆர்எல்எப் வெளியேறியது.

அதன்பின் விக்னேஸ்வரன் வெளியேறினார். கடந்த தேர்தல் காலத்தில் ஸ்ரீகாந்தா போன்றோர் வெளியேறினர். எனவே தொகுத்துப் பார்த்தால் கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருக்குலைந்து கொண்டு போகிறதே தவிர அது மேலும் வளர முடியவில்லை.

அவ்வாறு உருக்குலைந்து போவதற்கு அடிப்படை காரணம் தமிழரசுக் கட்சி எடுக்கும் முடிவுகள்தான். கடந்த 12ஆண்டுகளாக பங்காளி கட்சிகளும் கூட்டமைப்புக்குள் துருத்திக்கொண்டு தெரிந்த சிவகரன் விக்னேஸ்வரன் போன்ற ஆளுமைகளும் வெளியேறிய பின்னரும் கூட டெலோவும் புளட்டும் தொடர்ந்தும் கட்சிக்குள்ளேயே நிற்கின்றன.

இது குறித்து டெலோவின் மீதும் புளோட்டின் மீதும் விமர்சனங்கள் உண்டு. இப்பொழுதும்கூட கூட்டுக்குள் தங்களுடைய பேரத்தை அதிகப்படுத்துவதற்காகத்தான் இவ்விரண்டு கட்சிகளும் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு கடிதத்தை அனுப்பின என்ற குற்றச்சாட்டும் உண்டு.

ஆனால் இங்கே ஒரு அடிப்படை உண்மையை நாங்கள் பார்க்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக கூட்டமைப்பு உடைந்து கொண்டே போகிறது.அது வளரவில்லை. குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலில் அது அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது.

இதற்கு யார் காரணம்? கூட்டமைப்புக்குள் இருந்து பங்காளி கட்சிகளும் அதற்குள் துருத்திக்கொண்டு தெரிந்த ஆளுமைகளும் வெளியேறுவதற்கு என்ன காரணம்? அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த சிவகரன் கூறுவதுபோல வழிப்போக்கர்கள் அந்த கட்சியை கைப்பற்றியதுதான் காரணமா? அவர் வழிப்போக்கர் என்று யாரை கருதுகிறார்? சுமந்திரனையா? ஆனால் சுமந்திரன் தற்செயலாக கட்சிக்குள் வரவில்லை.

அவர் திட்டமிட்டு உள்ளே கொண்டு வரப்பட்டார். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் தமிழரசுக் கட்சி கூட்டமைப்புக்குள் தன் பிடியை பலப்படுத்துவது என்று முடிவெடுத்தது. அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியும் பெற்றது. இது முதலாவது.

இரண்டாவதாக கட்சியை புதிய திசையில் செலுத்துவது என்று சம்பந்தர் முடிவெடுத்தார். அப்புதிய செயல்வழி எதுவென்றால், எதிர்த்தரப்பின் ஒத்துழைப்போடு ஒரு தீர்வைப் பெறுவதுதான்.

ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் அரசியல் எனப்படுவது எதிர் தரப்பை அச்சுறுத்தும் ஒன்றாக,எதிர்த் தரப்பை தோற்கடித்து பணிய வைத்து ஒரு தீர்வைப் பெறும் செயல்வழியைக் கொண்டதாக காணப்பட்டது. மாறாக எதிர்த்தரப்பை பயமுறுத்தாமல் எதிர்தரப்பின் சம்மதத்தோடு ஒரு தீர்வை பெற வேண்டும் என்று சம்பந்தர் தீர்மானித்தார்.

அதுதான் அவருடைய தீர்வுக்கான வழி. அந்த வழியில் அவர் சிந்தித்த பொழுது அதற்கு வேண்டிய ஆட்களை உள்ளே கொண்டு வந்தார். அதில் முதன்மையானவர் சுமந்திரன். அந்த நோக்கத்தோடுதான் விக்னேஸ்வரனையம் கொண்டுவந்தார்.

ஆனால் விக்னேஸ்வரன் அவருக்கு எதிராக திரும்பி விட்டார். எனவே கூட்டமைப்புக்குள் அல்லது தமிழரசுக் கட்சிக்குள் நிகழும் மாற்றங்கள் எனப்படுபவை தற்செயலானவை அல்ல. அது ஒரு புதிய செயல் வழி. அது சம்பந்தரின் வழி.

அந்த வழியில் கட்சிகளைச் செலுத்த முற்பட்ட பொழுது முதலில் எதிர்ப்பை காட்டியது கஜேந்திரகுமார். அவர் கட்சியை விட்டு வெளியேறும் விதத்தில் நிலைமைகளை உருவாக்கியதன் மூலம் கூட்டமைப்பை முதல் கட்டமாக புலி நீக்கம் செய்தார்கள்.

அடுத்த கட்டமாக கூட்டுக்குள் இருந்த ஆயுதப் போராட்டம் மரபில் வந்த கட்சிகளை மதிக்காமல் முடிவுகளை எடுக்கத் தொடங்கினார்கள். டெலோவுக்கும் புளோட்டுக்கும் இது இப்பொழுதுதான் தெரிகிறதா என்று ஏனைய கட்சிகள் கேட்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்துவிட்டது. அதுமட்டுமல்ல கூட்டமைப்பை விட்டு வெளியேறியவர்கள் வெல்லமுடியாது என்றுருந்த மாயையும் உடைக்கப்பட்டு விட்டது.

விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டார்கள். கிழக்கில் அரசாங்கத்தோடு நின்று வியாழேந்திரன் வெற்றி பெற்றுவிட்டார். எனவே கூட்டமைப்புக்குள் தொங்கிக் கொண்டிருந்தால் தான் வெற்றி பெறலாம் என்ற மாயையை அவர்கள் உடைத்து விட்டார்கள்.

இது டெலோவுக்கும் புளோட்டுக்கும் புதிய தெம்பை கொடுத்திருக்கலாம். தவிர கடந்த தேர்தலில் டெலோவுக்கு 3 ஆசனங்கள் கிடைத்தன. அந்த ஆசனங்கள் கூட்டமைப்பின் வாக்கு வங்கிக்கூடாக கிடைத்தவைதான் டெலோவுக்கு மட்டும் உரியவை அல்ல என்று தமிழரசுக்கட்சி நம்புகிறது.

டெலோ தனது பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அண்மைக்காலங்களில் டெலோவின் உத்தியோகபூர்வ பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் துருத்திக்கொண்டு தெரியும் அறிக்கைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

அந்த அறிக்கைகளில் சில கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுக்கு மாறானவைகளாக காணப்படுகின்றன. அதாவது டெலோ இயக்கம் தனது பேரத்தை வெளிப்படையாகக் காட்ட தொடங்கிவிட்டது.

அதன் அடுத்த கட்டம்தான் அந்த இயக்கமும் புளொட் இயக்கமும் இணைந்து கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தரப்புக்களோடு இணைந்து ஐநாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியமை ஆகும்.

இவ்வாறு மேற்படி இயக்கங்கள் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி முடிவெடுத்தமை என்பது இதுதான் முதற்தடவை அல்ல. கடந்த வடமாகாண சபையில் விக்னேஸ்வரனுக்கு ஆபத்து வந்த பொழுதும் அப்படி ஒரு முடிவை இந்த கட்சிகள் எடுத்தன.

இக்கடிதத்தின் விளைவாக தமிழரசுக்கட்சி வேறு ஒரு கடிதத்தை தனியாக அனுப்ப வேண்டி வந்தது. அது கூட்டமைப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்டிருந்தாலும்கூட நடைமுறையில் அது தமிழரசுக்கட்சியின் கடிதம்தான். ஒரே கூட்டுக்குள் இருந்தபடி இப்படி இரண்டு கடிதங்களை அனுப்ப வேண்டி வந்தமை என்பது கூட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை என்பதை காட்டுகிறது.

அக்கடிதத்தின் பின் நடந்த வாதப் பிரதிவாதங்களில் குறிப்பாக கடந்த சனிக்கிழமை நடந்த இரண்டு பத்திரிகையாளர் சந்திப்புக்களை வைத்து பார்க்கும் பொழுது அதிலும் குறிப்பாக கிளிநொச்சியில் நடந்த சிறிதரனின் ஊடக சந்திப்பை வைத்து பார்க்கும்பொழுது தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஐக்கியம் இல்லை என்று தெரிகிறது.

சிறீதரன் தெரிவிக்கும் கருத்துக்களின்படி ஐநா தொடர்பில் அவர் கட்சிக்குள் முன்வைத்த கோரிக்கைகளை சம்பந்தர் செவிமடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. கூட்டமைப்புக்குள்ளும் உட்கட்சி ஜனநாயகம் இல்லை.

தமிழரசுக்கட்சிக்குள்ளும் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. அதுமட்டுமல்ல இப்பொழுது பங்காளி கட்சிகளோடு இணைந்து கையெழுத்துப் போட்டிருக்கும் விக்னேஸ்வரனின் கட்சிக்குள்ளும் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு.

தனிப்பட்ட முறையில் விக்னேஸ்வரன் விட்டுக்கொடுப்புள்ள நெகிழ்ச்சியான ஒருவர். ஆனாலும் ஒரு கட்சியின் ஜனநாயக இதயத்தை எப்படி கட்டமைப்புகளால் பாதுகாக்க வேண்டும் என்ற தரிசனம் அவரிடம் இல்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதைப்போலவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள்ளும் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கும் விழுமியம் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அக்கட்சியின் முக்கியஸ்தராக இருந்த மணிவண்ணன் விடயத்தில் அது அதிகம் வெளிப்பட்டது.

எனவே தொகுத்துப் பார்த்தால் கடந்த 12 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான மிதவாத அரசியலில் தமிழ்க் கட்சிகள் உட்கட்சி ஜனநாயகம் பொறுத்து இப்பொழுதும் பாலர் வகுப்பில்தான் நிற்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

ஆயுதப் போராட்டத்தின் விளைவாக தென்னிலங்கையில் மிகப் பலமாக காணப்பட்ட இரண்டு பெரிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சிதைந்து விட்டன.

அக்கட்சிகளின் வழித்தோன்றல்களான புதிய கட்சிகள்தான் நாடாளுமன்றத்தை நிரப்புகின்றன. ஆயுதப் போராட்டம் தென்னிலங்கையில் இரண்டு பலமான பாரம்பரிய கட்சிகளையும் தோற்கடித்து விட்டது.

ஆனால் தமிழ்ப்பரப்பில் இரண்டு பாரம்பரிய மிதவாத கட்சிகளும் தொடர்ந்தும் அரங்கில் நிற்கின்றன.ஆயுதப்போராட்டம் உற்பத்தி செய்த கூட்டமைப்பு உடைந்து கொண்டே போகிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஒரு புதிய கூட்டை உருவாக்க முடியவில்லை.

ஜெனிவாவுக்கு கடிதம் எழுதிய ஐந்து கட்சிகளின் கூட்டும் இனிமேல்தான் தன்னைப் பலப்படுத்த வேண்டியிருக்கிறது. அங்கேயும் கூட டெலோவும் புளொட்டும் கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வந்து ஒரு மாற்று அணியை உருவாக்குமா என்பது சந்தேகம்தான்.

எனவே தொகுத்துப் பார்த்தால் நமக்கு கிடைக்கும் சித்திரம் என்னவென்றால் எந்த இரண்டு மிதவாத கட்சிகளின் தோல்விகளின் விளைவாக ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றதோ அதே மிதவாத கட்சிகள்தான் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அரங்கில் நிற்கின்றன.

ஆயுதப்போராட்டம் உற்பத்தி செய்த கூட்டமைப்பு தேய்ந்து கொண்டே போகிறது. அது ஒரு கட்டத்தில் தமிழரசுக் கட்சியாக சுருங்கக் கூடிய ஆபத்து தெரிகிறது. கடந்த 12 ஆண்டுகளாக கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட எல்லா குழப்பங்களுக்கும் காரணம் தமிழரசுக் கட்சிதான். கடந்த தேர்தலில் அக்கட்சி தன் ஏகபோகத்தை இழந்த பின்னரும் கூட அது கற்றுக்கொள்ளவில்லை.

அதன் தலைவராக காணப்படும் மாவை சேனாதிராஜா கட்சியைப் பலப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் சக்திமிக்கவரா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. தமிழரசுக்கட்சி பங்காளிக் கட்சிகளின் பலத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை இந்த கடிதங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன.

இதுவிடயத்தில் கூட்டமைப்புக்குள் பல்வகைமையை பேணி அதன் உட்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மூத்த கட்சி என்ற அடிப்படையில் தமிழரசுக்கட்சிக்கு உண்டு. கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் அதைச் செய்யவில்லை.

இனிமேலும் செய்வார்கள் என்று எப்படி நம்புவது?

இது விடயத்தில் ஆனந்தசங்கரி ஆருடம் கூறியிருப்பது போல தமிழரசுக்கட்சி அழிந்துவிடும் என்று உடனடிக்கு இக்கட்டுரை நம்பவில்லை.தந்தை செல்வா அவருடைய கடைசி காலத்தில் தமிழினத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இப்போதுள்ள நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழினத்தை மட்டுமல்ல தமிழரசுக் கட்சியையும் இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா?

1 Comments

  1. தமிழரசுக் கட்சிக்குள் உட்கட்சி சனநாயகம் இல்லையா? கட்சியின் தேசிய மாநாடு, பொதுக்குழு, செயற்குழு மற்றும் அரசியல் குழு என பல மட்டத்தில் கொள்கை கோட்பாடு பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. உட்கட்சி சனநாயம் இருப்பதால்தான் சிவஞானம் சிறிதரன், சார்ல்ஸ் நிர்மலநாதன், கலையரசன் தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார்கள். அது சரி 22 கரட் (?) விக்னேஸ்வரனின் கட்சியில் உட்கட்சி சனநாயகம் இருக்கிறதா?
    ஒக்தோபர் 24, 2018 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் தேசிய முன்னணியின் தலைவராக தன்னைத்தானே நியமித்துக் கொண்டார். முறையான தேர்தல் (முன்மொழிந்து வழிமொழிந்து) ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இடம்பெறும்/ நடைபெறும் என்றார். ஆனால் எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை.
    அவருக்கும் சனநாயகத்துக்கும் வெகுதூரம் என்பது அவர் வட மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த போது பார்த்தோம். தன்னை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது ஒரு கங்கரூ விசாரணையை நடத்தினார். தனக்கு அதிகாரம் இல்லை என்பது தெரிந்தும் மீன்வள அமைச்சர் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தார். அதனால் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியிறங்கினார்.
    யூன்டிபி வட மாகாண விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ முன்வந்த அ.டொலர் 150 மில்லியன் (ரூபா 22500 கோடி) கோட்டை விட்டார். தனது மருமகன் நிமலனுக்கு அந்தத் திட்டத்தில் மாதம் அ.டொலர் சம்பளத்தில் சிறப்பு அதிகாரியாக நியமனம் கேட்டு அது மறுக்கப்பட்டதுதான் காரணம்.
    விக்னேஸ்வரன் ஒரு வெறும் குடம். மண்குதிரை. தான் உருவாக்கிய தமிழ்மக்கள் கூட்டணியின் தொடக்கக் கூட்டத்தில் பல உறுதிமொழிகளை அள்ளி வழங்கினார். அதி்ல் ஒன்று " போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புலம்பெயர் மக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் சுயசார்பு பொருளாதார நடவடிக்கைகளை ஏற்படுத்தி மீண்டும் அவர்களுக்கு வளமான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தும் பொருத்தமான ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்" என்றார். இன்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் அதைச் செய்தாரா? கனடாவில் அபிவிருத்தி என்று சொல்லி மக்களிடம் திரட்டிய கனடிய டொலர் 50,500 என்னவாயிற்று? எல்லாம் பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்ற கதைதான்.
    இந்தக் கட்டுரையாளர் விக்னேஸ்வரனுக்கு சிறிது காலம் பல்லக்குத் தூக்கியவர். சாமரம் வீசியவர். முகத்துக்கு ஒப்பனை பூசியவர்.
    "நான் இரண்டு ஆண்டுகளுக்குத்தான் முதலமைச்சராக இருப்பேன். அதன் பின் பதவி துறந்துவிடுவேன்"என்ற சொன்னவர் பதவியில் கடைசி வரை அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருந்தார்.
    சிறிகாந்தா - சிவாஜியின் தமிழ்த் தேசியக் கட்சி, அம்மையார் சசிதரன் அனந்தி கட்சி, இபிஆர்எல்எவ் கட்சி எல்லாம் டெட்டர்பாட் கட்சிகள். அதன் தலைவர்கள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டவர்கள். கஜேந்திரகுமார் தமிழ்த் தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறியது கொள்கை, கோட்பாடு தொடர்பானது அல்ல. அவர் ஒன்றும் கொள்கைக் குன்றல்ல.
    புலத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் அவரை பப்பாசி மரத்தில் ஏற்றினார்கள். அவ்வளவுதான்.
    முடிவாக தந்தை செல்வநாயகம் "தமிழ்மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் " என்று எப்போது சொன்னார்? எங்கு சொன்னார்? யாருக்குச் சொன்னார்? என்பதை யாராவது தெளிவுபடுத்த முடியுமா? தந்தையை செல்வநாயகம் பற்றி அறிவிலிகள் சொல்லும் அவதூறு இது. அவர் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழக்காத ஒருவர். 1952 இல் நடந்த தேர்தலில் தோற்றாலும் துவண்டு போகாமல் - மனவுறுதியைத் துறக்காமல் அரசியலில் நீடித்து இருந்தவர். கொண்ட கொள்கையை கடைசிவரை கைவிடாதவர்.

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post