குருவிச்சைகளின் வண்டவாளங்களைப் புரிந்துகொள்வீர் பரமதேவாவே!


பரமதேவாவின் 37வது நினைவு நாள் (22.09.2021)

- வள்ளுவன் 

 

ஆயுதமுனையில் தாங்கள் நினைத்தத்தைச் சாதித்து விடலாம் என்றெண்ணிய படைத்தரப்பினருக்கும், சிங்களக் காடையர்களுக்கும் எதிராக தமிழரின் வரலாற்றில் பதிலடி கொடுத்து விரட்டியவர்கள் துறைநீலாவணை மக்கள்.தரப்படுத்தல் முதலான தமிழருக்கெதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து கிழக்கில் ஆயுதமேந்திய ஒரு விடுதலை இயக்கத்தை ஆரம்பித்த இராமலிங்கம் பரமதேவாவின் 37வது நினைவு நாள் இன்று.கிழக்கில் விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முதலில் களமாடி வீரச்சாவெய்தியவர்களாக இரா.பரமதேவாவினதும்  தம்பையா வாமதேவனினதும் பெயர்கள் பதியப்பட்டுள்ளன.

பயிற்சியினைத் தொடர்ந்து  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பின்னர் இவரது அம்மாவைச் சந்திக்கும் விடயமாக ஆராயப்பட்டது.  

காரணம் மட்டக்களப்பின் பிரதான படை  முகாமான கல்லடிக்கு அண்மையிலேயே இவரது சகோதரி வீட்டில் தாயார் வசித்து வந்தார்.அச் சமயம் "நான் விடுதலைப் போராட்டத்தில் இறங்கிய பின்னர் என்னை ஒரு கைதியாகவே அம்மா பார்த்திருக்கிறார். ஆகவே மட்டக்களப்பு மண்ணில் நடைபெறும் தாக்குதலொன்றில் பங்குபற்றி அதில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஒன்றுடன் தான் வீரனாக அம்மாவைப் பார்க்க விரும்புகின்றேன்" எனக் குறிப்பிட்டார் ராஜா (இரா.பரமதேவா)  

22.09.1984 அன்று (மட்டு. சிறையுடைப்புநிகழ்வுக்கு ஒரு வருடப் பூர்த்தியின் பின்) கழுவாஞ்சிக்குடி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடந்தது.சண்டையின் ஆரம்பத்திலேயே பரமதேவா காயமுற்றார்,ரவியும் (தம்பையா  வாமதேவன்- மகிழடித்தீவு) காயமடைந்தார்.இருவரையும் அதே இடத்தினுள் விட்டு விட்டு ஏனையோர் காவல் நிலைய வளாகத்தினுள் பிரவேசித்தனர். 

போராளிகள் எதிர் பார்த்ததுக்கு மாறாக நிலைமை இருந்தது. அதனால் திரும்ப வேண்டி இருந்தது. மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில்காயமடைந்திருந்த இரு போராளிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டியிருந்ததும் ஒரு காரணம்.கல்லாறைச் சேர்ந்த ஒரு போராளி பரமதேவாவைத் தூக்க முயன்றார்.அப்போது பரமதேவா "நானும் ரவியும் சைனட் உட்கொள்வதாக முடிவெடுத்து அப்படியே நடந்து கொண்டோம்.நான் பாரமானவன்; என்னை உங்களால் தூக்கிச் செல்ல முடியாது.நீங்கள் எல்லோரும் பத்திரமாக திரும்பிச் செல்லவேண்டும்.

அம்மாட்டச் சொல்லுங்கோ உங்கட மகன் சண்டையிலதான் செத்தானெண்டு; அண்ணர் புளொட்டில இருக்கிறதால பிறகு வேறமாதிரிக் கதைகள் வரும்" இவைதான் அவரது இறுதி வார்த்தைகள். அவரது உயிர்பிரியும்போது மரண பயத்தை  அவரிடத்தில் காணவில்லை.

                                                                            ***

 இன்று அவரது 37வது நினைவுநாளில் அவரை மனதில் நிறுத்தி அவருடன் உரையாடுவோம்.மட்டு.அம்பாறையில் முதன் முதல் வீரச்சாவடைந்த உங்களையும் சேர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 47 கரும்புலிகள் உட்பட 3906 போராளிகள் மாவீரராகியுள்ளீர்கள்.இதே போல அம்பாறை மாவட்டத்தில் 12 கரும்புலிகள் உட்பட 838 போராளிகள் மாவீரராகி உள்ளனர்.நாங்கள் அறிந்தவரை இந்த இரு மாவட்டங்களிலும் புளொட் எதாவது தாக்குதல் செய்ததாக நினைவில்லை.மாலைதீவு நாட்டுக்கு கூலிப்படையாக சென்ற புளொட் ஏன் மட்டக்களப்பில்  தாக்குதல் நடத்த முடியவில்லை.அசோக் எனப்படும் யோகன் கண்ணமுத்து தங்களது பணி ஆட்சேர்ப்புத்தான் என்கிறார்.நீங்கள் சிறையில் இருந்த காலத்தில் இறைகுமாரன் உமைகுமாரனைப் படுகொலை செய்தது உமாமகேஸ்வரன் குழு. அச்சம்பவத்தைக்  கண்டித்து இந்த யோகன் கண்ணமுத்து தலைமையில் மட்டு. மாநகர சபை மண்டபத்தில் கூட்டம் நடந்தது.பிரதம பேச்சாளர் உங்கள் அண்ணன் இரா.வாசுதேவா. இப் படுகொலைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியே காரணம் என அவர் குறிப்பிட்டார். இது குறித்துக்  கருத்து வெளியிட்ட அமிர்தலிங்கம் சுட்டவர்களே  அஞ்சலிக்கிறார்கள் என்றார். 39 வருடம்கழித்து இப்போதான் யோகன் கண்ணமுத்து இதனைப் புளொட் தான் செய்தது என்பதை அரைமனத்துடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.இதற்கு தலைமை தாங்கியவர் சந்ததியார் என்பதை ஒப்புக்கொள்ள இன்னுமொரு 39 வருடம் தேவை.அதுவரை இவர் உயிரோடு இருக்க இறைவனை வேண்டுவோம்.நிச்சயமாக அதை இவர் ஒப்புக்கொள்ளும் போது நாங்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

களுவாஞ்சிக்குடியில் உங்களைத் தூக்க வந்த போராளி பின்னாளில் டெலோவுடனான மோதல் ஏற்பட்டபோது இந்த முடிவுடன் நான் உடன்பட முடியாது என்று கடிதமெழுதிக்கொடுத்து  விட்டு விலகிவிட்டார். இறைகுமாரன் உமைகுமாரனைக்  கொலைசெய்தது புளொட் தான் என்று பின்னரே தெரியவந்தது என்று சமாளிக்கும் யோகன் கண்ணமுத்து அப்போதே புளொட்டை விட்டு ஏன் விலகவில்லை.இவர்களுடைய நோக்கத்தில்  அறம் இல்லை.

 சுழிபுரத்தில் ஆறு மாணவர்களை படுகொலை செய்து ஆணுறுப்பை வெட்டி வாயில் வைத்து புதைத்தபோதும் இவர் கூடவே இருந்து கும்மியடித்தாரா? புளொட்டைப் பொறுத்தவரை அதில் கடைசி வடை - பாயசம் வரும் வரை காத்திருந்து உண்டு கழித்தவர்தான் இவர்.இதற்குள்  புலி விசுவாசம் - பிரபாகரன் விசுவாசத்தை விட்டு வெளியில் வந்து நடுநிலையாக நின்று விடயங்களை நோக்குங்கள் என்ற போதனை வேறு!  புளொட் விசுவாசத்தை விட கேவலமானதா புலிவிசுவாசம்? இதற்குள் புனைகதைகள் என்று கிண்டல் வேறு. பிரபாகரனின் தலைமையை ஏற்று 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாவீரர் ஆகியுள்ளனரே.

டெலோவுடனான மோதலையடுத்து விலகிய அந்தக் கல்லாற்றைச் சேர்ந்த முன்னாள் போராளி லண்டனில் ஒரு நிகழ்வில்கலந்துகொண்டிருந்தார். அங்கு இருந்த ஒருவர் புலிகள் நடவடிக்கைகளை நக்கல் அடித்துக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் பிரபாகரனின் ஒழுக்கம்பற்றி பேச முற்பட்டார். அப்போது உரத்து `stop` என்றார் அந்தப்போராளி. தொடர்ந்து "இவ்வளவு நேரமும் பேசப் பேச நான் பொறுமையாக இருந்தேன்.ஆனால் பிரபாகரனின் ஒழுக்கம்பற்றி கதைக்க உங்கள் ஒருவருக்கும் தகுதி இல்லை. அவரோடு கூட வாழ்ந்தவன் நான்" என்று சொன்னார்அந்தப்போராளி.  இதற்குப் பின்னர் சாப்பிட மட்டுமே வாய் திறந்தார்அதுவரை நக்கல் அடித்துக்கொண்டிருந்தவர்.சைகையாலும், கண்ணசைவினாலும் எல்லாம் நடந்தன.

ஒழுக்கம் பற்றி இன்னொரு விடயம் உண்டு.

முன்னாள் புளொட் உறுப்பினர் வெற்றிச்செல்வன் எழுதிய  "1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்" என்ற தொடரின் 40ம் பகுதியைப் பார்ப்போம்."எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் வாமதேவனின் திறமையைப் பற்றிக் கூறினார்.அதாவது ஒரு ஊரில் பெண்கள் மிக மிகப் பத்தினியாக  வேறு ஆண்களை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள் என்று  பெயரெடுத்த அதே ஊரில் வாமதேவனை விட்டால் குறைந்தது 10  பெண்களையாவது பத்தினித் தன்மையை இழக்கச்  செய்துவிடுவார் என்று அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே கூறினார்"

உமாமகேஸ்வரனின் மனநிலை,ரசனை பற்றி விபரிக்க வேறு வார்த்தைகள் ஏன்? இப்படிப்பட்ட உமாமகேஸ்வரனின் தலைமையின் கீழ் தான் யோகன் கண்ணமுத்துவும்,செல்வியும் பெண் விடுதலை முதலான விடயங்களைக்  குறித்து புளொட் தோழர்களுக்கு விளக்கமளித்துள்ளனர். படிப்பது தேவாரம்; இடிப்பது சிவன்கோயில் போல உள்ளது.

1981ல்  ஒரு இளைஞர் பற்றி எமது தலைவரிடம் போராளி ஒருவர் குறிப்பிட்டார்.

அந்த இளைஞனின் திறமை,துணிச்சல் எல்லாவற்றையும் குறிப்பிட்ட பின் அவரது நடத்தையிலுள்ள குறைபாடுகளையும்  சொன்னார்.

இதற்குத்  தலைவர் "எனக்கு வல்லவர்கள் தேவையில்லை; நல்லவர்களே தேவை. நல்லவர்களை என்னிடம் தாருங்கள்; அவர்களை வல்லவர்களாக நான் உருவாக்கிக் காட்டுகிறேன்" என்றார்.

 உமாமகேஸ்வரனால்  வல்லவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களின் சாதனைகள் பற்றி வெற்றிச்செல்வனின் குறிப்புக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

புலி விசுவாசம் எப்படியானது, புளொட் விசுவாசம் என்ன என்பது பற்றி விளக்க வேறு விடயங்கள் தேவையில்லை.

தமிழில் ஒரு சொற்றொடர் உண்டு "கூந்தல் உள்ள சீமாட்டி கொண்டை போடுகிறாள்" என்பதே அது. கூந்தல் இல்லாதவள் என்ன செய்வாள்? இந்தக் கொண்டை என்னனென்ன விதமாக அசிங்கமாக உள்ளது என மணிக்கணக்காக வயிறெரிந்துபேசுவாள்.

புலிகளின் வீரம், ஈகம் பற்றி உங்களுக்கு விபரிக்கத் தேவையில்லை.கிழக்கின் தலைமையை ஏற்க தனியொரு இயக்கம் தொடங்குங்கள்; உங்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து தருகிறேன் என்று தலைவர் சொன்ன போது "உங்களுக்கும் எனக்குமான புரிந்துணர்வு என்பது நாளை என்னோடு சேர்பவர்களுக்கு இருக்குமென்று சொல்ல முடியாது. நாளை இது பெரும் ரத்தக்களரியில் முடியலாம். எனக்கு நீங்கள் சரியான தலைவராகத் தெரிகிறீர்கள். உங்கள் தலைமையினை  ஏற்று கிழக்கில் நான் போராடுகிறேன்" என்றுகூறினீர்கள்.

புனை கதைகள் என்று யோகன் கண்ணமுத்து எதனைக் குறிப்பிடுகிறார். கிழக்கில் தமிழீழ கழுகுகள் படை என்ற அமைப்பை உருவாக்கிய ராஜ்மோகனை புளொட் தான் கொன்றது என்று  சுட்டிக்காட்டுவதையா? இந்த ராஜ்மோகன் தந்தை செல்வாவையும் சந்தித்திருக்கிறார். 1977 பொதுத் தேர்தலின் போது இராஜதுரைக்காக மேடையேறி பரப்புரை செய்தவர்.  1976 ல் மட்டு.நாவற்குடாவில் அரச பேரூந்து ஒன்றை தீயிட்டகுற்றச்சாட்டில் தடுப்பில் இருந்தவர். இந்த செய்தி வந்த பத்திரிகையை  எவருக்கும் பகிரங்கமாக காட்டி விலாசமடிக்கவில்லை.1977ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இயக்கத் தேவைக்காக பழுகாமம் இலங்கை வங்கிக் கிளையில் நடைபெற்ற கொள்ளைக்கு தலைமை தாங்கியவர் . உண்மையில் ஒரு இயக்கத்துக்கு தலைமை தாங்கிவரை தமிழகத்தில் கொன்று புதைத்த வரலாறையா? 

கரும்புலியான பெண்போராளி ஒருவர் தனக்கான  வாய்ப்பை நல்லூர்த் திருவிழா காலத்தில் வழங்க வேண்டுமென எதிர்பார்த்தார்.கச்சான் கடலை விற்று வாழ்க்கையை நடத்தும் தனது தாயாரின் கையில் அந்தக் காலத்தில்தான் பணம் புழங்கும். தனது தோழிகள் நினைவுநாளில் தனது வீட்டுக்கு வரும்போது தாயாரால் சாப்பாடு கொடுத்து உபசரிக்க முடியும் என குறிப்பிட்டார். இவ்வாறான விடயங்கள் யோகன் கண்ணமுத்துக்கு புரியுமா?

 தண்ணீரில் கால் வைக்கப் பயந்தவன்  நீச்சலின் படிமுறைகள், உத்தி பற்றி விளக்கமளிப்பது போலத்தான் யோகன் கண்ணமுத்துவின் பிரச்சாரங்கள் அமைந்திருந்தன போல் உள்ளது. மட்டு ஆஸ்பத்திரிக்கு அண்மையில் இருந்த புளியமரத்தடியில் நாலு இளைஞர்களுக்கு  தமது இயக்கத்தில் 500 பேர் இருப்பதாக கதையளந்ததும் இதைக்கண்ணுற்ற  டாக்டர் கருணாகரன் இவரது வண்டவாளங்களை அவிழ்த்து விட்டதைதான்  புனைகதை என்கிறாரா என்பது தெரியவில்லை.அந்த வகுப்பில் கலந்துகொண்ட ஒருவர் இப்போது இணையத்தளமொன்றைத் நடத்தி வருகிறார்.

இதே போல `மண்டை கழண்ட மேதகு`என்று குறிப்பிடுகிறார் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும் புளொட்டின்முன்னாள் சித்தாந்த வாதியான  ஞானம் என்பவர்.  இவர் கௌரி மனோகரி என்றும் இரு புலி மாவீரரின் சகோதரியெனவும் எழுதுவார்.மறுபக்கம் ஆணாக நின்று  புலிகளை எதிர்ப்பதொன்றே அவரது அரசியலாகக் காட்டுவார். யுத்தம் இவர்களுக்குப் பழக்கம் இல்லாதது. இரு பகுதியும் ஆயுதத்துடன் நின்ற சமர் செய்வது வேறு; ஆயுதமில்லாத அப்பாவிகளை படுகொலை செய்வதென்பது வேறு; வெருகலில் நடந்தது படுகொலையென நினைவேந்தல் செய்வார்.

மே 18 ,மாவீரர் நாள், திலீபன் நாளுக்கு  அனுமதி கிடைக்காது. ஆனால் இந்த ஏற்பாட்டுக்கு கிடைக்கும். போதாக்குறைக்கு நல்லூர் கந்தசாமி கோயிலை இடித்து விட்டு மலசல கூடம் கட்ட வேண்டும் என்று கூறும் இன்னொரு சித்தாந்த வாதியும் யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வை நடத்துவார்.எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இதுவும் கடந்து போகுமென்று போகிறோம் மனப் பாரத்தைப் வேறு  யாரிடம்  இறக்கி வைப்பது? குருவிச்சைகள் எல்லாம்  மரத்தின் தகுதி பற்றி விளக்கமளிப்பதுபோலத்தான் உள்ளது  யோகன் கண்ணமுத்து ஞானம் போன்றோரின் தத்துவங்கள்.

இவற்றைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை உமது ஆன்மா எமக்கு வழங்கட்டும்.

ஏனெனில் அன்றே புளொட்டை சரியாக கணித்து வைத்திருந்தவர் நீங்கள். அதனால் தான் அண்ணா புளொட் டிலா இருக்கிறதால வேறுமாதிரி கதைகள் வரும் என்று சொன்னீர்களே அதுதானே உங்கள் இறுதி வாசகம் .



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post