போய் வா தமிழே புலமைப் பித்தா ஈழப் போராளிகளின் கண்ணீர் அஞ்சலி!


ஐயா உனக்கு இரங்கல் கவியெழுத அடியேன் புலவனில்லை.

பொய்யே இல்லா புலிப்படை மறவர்

புகழை சொல்வது என் வேலை.

போனாய் நீயும் போனாய் என்று செய்தி வந்தது

அட புலமை எப்படிப் போகுமென்று கேள்வியானது.

பொய்யாய் இருக்கும் என்றால் தகவல் உண்மையானது

நாங்கள் புலமைப் பித்தன் ஐயாவை

இழந்தோம் பெரும் துயரமானது.

பித்துப் பிடித்த தமிழுணர்வே நீ

செத்துப் போனாயா?

விட்டுப் போக விருப்பின்றி இயமனும்

உன்னைக் கூட்டிப் போனானா?

ஈழத்தமிழர் உரிமைப் போரை

ஏற்றுக் கொண்டவரே

மானத்தமிழன் என்று பெயரெடுத்த

மான்புறு கவிமகனே.

எங்கள் தலைவர் இல்லை

உனக்காக தானும் கண்ணீர் சிந்தியழ.

தமிழே அமுதே உனைப்போற்ற

எங்கள் புதுவையுமில்லை பாடியழ.

ஏதோ எனக்குத் தோன்றுவதை

உனக்காய் இங்கு படைக்கின்றேன்

புலிப் படை வீரர்கள்

கண்ணீர் மழை சொரிவதை

வரியாய் தொடுக்கின்றேன்.

மரணம் உனக்கு இல்லை ஐயா

மண்ணுலகில் தமிழர் உள்ளவரை

கணமும் சாக மாட்டாய் நீ

கவியாய் இசைப் பாட்டாய் 

வாழ்வாய் நீ.

இது புலிகளின் அஞ்சலி

பூமாலை கீதாஞ்சலி.

இது விழிகளின் பெருமழை விடைதரும் உணர்வலை!

ஈழப் போராளிகள் அனைவரின் சார்பாகவும்.

 

  புதுவைதாசன்.

  ( .முல்லைமதி)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post