புலிக்கொடியின் கண்ணியத்தை இனிமேலாவது புரிந்துகொள்வீர்!

கடந்த சில நாட்களாக பேசு பொருளாக இருந்த விடயம் சுமந்திரனுக்குக்கெதிரான கண்டன,எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றியதாக இருந்தது.சுமந்திரன் பொதுவாக தேசியத்தை நேசிக்கும் சக்திகளால் எவ்வாறு பார்க்கப்படுகிறார் என்பது இரகசியமான விடயமல்ல. ஆகவே இதில் சரி - பிழை என்பதற்கு அப்பால் சில விடயங்கள் உள்ளன. சிவா சின்னப்பொடி  தனது முகநூல் பக்கத்தில் 22.11.2021 அன்று குறிப்பிடத்தைப்போல புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் கோரிக்கை வலுவிழந்து விடும் என்று எச்சரிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது.

 புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் அந்தந்த நாட்டுச் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்பது தலைவரின் வேண்டுகோள்.கனடாவில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டோரில் எத்தனை பேருக்கு தலைவர் முன்னர் விடுத்த வேண்டுகோள் தெரிந்திருக்கும் என்று தெரியாது.அடுத்தது புலிக்கொடியை ஏந்திய நிகழ்வில் வெளிவந்த வார்த்தைப்பிரயோகங்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தின்  கனதியை புலிக்கொடியின் மகத்துவத்தைப் புரியாத நிலைப்பாடு இது.

 சுமந்திரனும் இந்த விடுதலைப் போராட்டத்தைப்  பயங்கரவாதம் என்றவர்.அதே போல மட்டக்களப்பு மாவட்ட எம்பியாக இருந்த அரியநேத்திரனும் பயங்கரவாதம் என்று நாடாளுமன்றத்திலேயே உரையாற்றியவர். அவர் புலம்பெயர் நாடுகளுக்கு வந்தால் இந்த அதி தீவிரவாதிகள் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது. தாங்கள் செய்வது துணிச்சலான நடவடிக்கை எனக்கருதும் இவர்களிடம் தலைவரின் இருப்புகுறித்த வெளிப்படையான நிலைப்பாட்டையும்  ஈழத் தமிழினம் எதிர்பார்க்கின்றது. தலைவரின் இருப்புக்குறித்த விடயத்தில் உண்மையை உரைத்த பலருக்கு துரோகிப்பட்டம் கட்டிய பிரபல கலாநிதி ஒருவர் அண்மையில்  பாவமன்னிப்பு கேட்பதைப்போல   ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

 "கூட்டிக் கொடுப்பவன்"என்று புலிக்கொடியை ஏந்திய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கத்தியது பாரம்பரியமாக புலிகள் பேணிவந்த கண்ணியத்தை தூக்கியெறியும் செயலாகும். எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தயவு செய்து புலிக்கொடியை ஏந்தாதீர்கள் என்பது களமாடிய மற்றும் மாவீரர் குடும்பத்தினரின் தாழ்மையான வேண்டுகோள்.

 புலிக்கொடிக்கு மட்டுமல்ல புலி இலச்சினை பொறித்த கடிதத் தலைப்புகளுக்கும்  மதிப்பளிக்க வேண்டும் (குறிப்பாக திருமணப் பதிவு)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post